Daily Archives: மார்ச் 19th, 2010

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?

செய்தித்தாள்கள், டி.வி., இன்டர்நெட் என எல்லாவற்றிலும் இடம்பிடிக்கும் முக்கியச் செய்தியாக `புவி வெப்பமயமாதல்’ உருவெடுத்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, தினமும் புவி வெப்பமடைவது குறித்த அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவ்வளவு ஏன்? பட்டிமன்றங்களில் தொடங்கி பட்டிதொட்டி வரை இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. ஆனால், தீர்வுதான் கிடைத்தபாடில்லை.

பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்? சந்தேகமேயில்லை. மனிதர்களாகிய நம்முடைய செயல்களினால் தான் பூமி வெப்பமடைகிறது. நாம் பயன்படுத்துகின்ற பொருட்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், அதிகபடியான வெப்பம் போன்றவை பூமியை சூடாக்குகின்றன.

`சரி, இதைத் தடுப்பதற்கு வழியே இல்லையா?’. இருக்கிறது. அதை நம்முடைய அன்றாட வாழ்வில் நடைபெற்று வரும் ஒரு சிறிய சம்பவத்தின் முலம் அறிந்து கொள்ளலாம்.

நம்முடைய வீட்டில் தோசை சுடுவதை பார்த்திருப்பீர்கள். தோசை சுட்டபின், சூடாக இருக்கும் தோசைக்கல்லை எடுத்து ஓரமாக வைத்துவிடுவர். காரணம், அரைமணி நேரமாக அடுப்பில் இருந்த கல்லின் சூடு குறைய, குறைந்தது மேலும் அரைமணி நேரமாவது ஆகும். இதே தத்துவம் தான் பூமிக்கும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சூரிய வெப்பத்தால் சூடாகும் பூமி, மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவின் குளிர்ச்சியால் தன்னுடைய சூட்டைத் தணித்துக் கொள்கிறது.

இதெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு வரைதான். இப்போது நாம் இரவினில் பூமியைக் குளிர அனுமதிக்கின்றோமா? கிடையவே கிடையாது. எத்தனை தெருவிளக்குகள், ஏர்கண்டிஷனர்கள், வாகனங்கள், அனல் மின் நிலையங்கள், சாட்வேர் நிறுவனங்கள் இரவில் வெப்பத்தை உமிழ்கின்றன. இப்படி இருக்கும்போது பூமி எப்படிக் குளிர்ச்சியடையும்? ஏற்கனவே பகலில் உள்ள வெப்பம் வெளியேற வழியில்லாமல் அதிகரித்துக் கொண்டல்லவா போகிறது?

ஒவ்வொரு நாளும் மிகுந்த கஷ்டத்துடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரோ, ஏழைகளோ புவி வெப்பமடைவதற்குக் காரணமல்ல. குளி ருட்டபட்ட காரில் வந்து, குளி ருட்டபட்ட அறைகளில் அமர்ந்து புவி வெப்பமடைவதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் `அறிவு ஜீவி’களும், ஒருவருடைய பயன்பாட்டிற்காக இரண்டு கார்கள் வைத்திருக்கும் `பகட்டு பணக்காரர்’களுமே இதற்குக் காரணம்.

இதற்குத் தீர்வு எங்கு தான் இருக்கிறது? என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு தனிமனிதனிடமும் அதற்கான தீர்வு உள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி, தனிமனிதனுக்கான வசதிகளும் பல்கி பெருகிவிட்டன. இந்த வசதிகளை பயன்படுத்துவதன் முலம் நாம் வெளியிடும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே, இந்த வசதிகளை குறைவாக பயன்படுத்தினால், வெப்பத்தின் அளவு கட்டுபடுத்தபடும். அதற்காக எந்த வசதியையும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. தேவையானபோது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பக்கத்துத் தெருவில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளிலோ அல்லது காரிலோ செல்வதற்கு பதில் நடந்து செல்லலாம். இதனால் உடலுக்கு நன்மை கிடைப்பதுடன், எரிபொருள் சிக்கனம், புவி வெப்பமடைவதைத் தடுத்தல் போன்ற பயன்களும் கிடைக்கின்றன. இதுபோன்ற சின்னச் சின்ன தியாகங்களின் முலமே நம்முடைய புவி வெப்பமடைவதைத் தடுக்க முடியும். எனவே, புவி வெப்பமடைவதைத் தடுப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனும் மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சியாகும்.

புத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை

இங்கிலாந்து பல்கலைக்கழகம் மனிதர்களின் முளைத்திறன் (ஐ.க்யூ பவர்) குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அப்போது பழக்க வழக்கங்களுக்கும், ஐ.க்யூ. திறனுக்கும் உள்ள தொடர்பை சோதித்தபோது புத்திசாலிகள் ஏமாற்றுவதை விரும்புவதில்லை என்று தெரியவந்தது.

ஆயிரக்கணக்கான டீன் ஏஜ் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆய்வின்போது அனுபவ அடிப்படையில் சோதிக்கப்பட்டனர். அப்போது புத்திசாலிகள் (அதிகமான ஐ.க்யூ. திறன் பெற்றிருந்தவர்கள்) பிறரை ஏமாற்றும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் திறந்த மனதுடன் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும், மற்றவர்களில் இருந்து விதிவிலக்காக அவசியமற்றவற்றை ஒதுக்குபவர்களாகவும் இருந்தனர். பாலியல் ரீதியிலும் விதிவிலக்காகவே உள்ளனர்.

இந்த விஷயங்களில் புத்திக்கூர்மையுள்ள பெண்களுக்கு சம்பந்தமில்லை. அவர்களிடம் இருந்து சாதகமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

புத்திக்கூர்மை உடையவர்கள் எண்ணங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று புதுமையான சிந்தனை உடையவர்களாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திறந்த மனப்பான்மை உடையவர்கள் மற்றும் நாத்திகவாதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.