Daily Archives: மார்ச் 21st, 2010

தமிழகம் மழை பெற, மேற்கு தொடர்ச்சி மலை காக்கப்பட வேண்டும்

உலகமே ‘ஓசோன்’ ஓட்டையால் வெப்பம் அதிகரிப்பதை எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இயற்கை வளம் நிறைய பெற்ற நாம் அதை உணர்ந்துள்ளோமா என்பது சந்தேகமே. அடர்ந்த மரங்களால், பரந்த வனங்களை வெட்டி வீழ்த்தியதே, தட்ப வெப்ப நிலை தடுமாற்றத்திற்கு காரணம் என யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. உணர்ந்திருந்தால் விண்ணுயர்ந்த மரங்களையும், விலைமதிப்பில்லாத உயிரினங்களையும் கொல்வதையே தொழிலாக கொண்டிருப்போமா? தமிழகத்தின் மழை பொழிவுக்கும், வளம் செழிக்கவும் காரணமான மேற்கு தொடர்ச்சி மலையில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன.

வாழ்க்கை பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் இந்த வனவளம் பற்றி, ‘வைல்ட் டிரஸ்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் ஆலோசகர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது: மேற்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1600 கி.மீ., பரப்பளவு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 8 சதுர கி.மீ., இத்தொடரில்தான் கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என பல நதிகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள உயர்ந்த சிகரங்கள் ஆனைமுடி (2695 அடி), தொட்டபெட்டா (2637). பலதரப்பட்ட தாவரங்கள், முட்புதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இங்கு உள்ளன. இலையுதிர்காடுகள், ஊசியிலை காடுகள், அடர்காடுகள், சோலை காடுகள், பசுமைமாறா காடுகள் என உயிரினங்களின் வாழ்விடங்களும் உள்ளன. இம்மலைத் தொடரில் ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களில் 1000 முதல் 9 000 மி.மீ., அளவு மழை பொழிகிறது. 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இங்கு 4000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன. இதில் 56 வகை தாவரங்கள் வேறெங்கும் இல்லாத வகையில், இம்மலைத் தொடரில் மட்டுமே காணப்படுகின்றன. 1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதம் இங்கு மட்டுமே உள்ளவை. 63 சதவீத மரவகைகள் இங்குள்ளன.

விலங்குகளை பொறுத்தவரை, பாலூட்டி வகைகள் 120; நீர்நில வாழ்வன 121; 600 வகை பறவைகள்; ஊர்வனவற்றில் 157 வகை; மீன் இனங்களில் 218 வகை இங்கு வாழ்கின்றன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய ‘கூரை மன்னி’, மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன. இந்தியாவில் உள்ள ஒரே ஒரு வகை யானை, இங்கும் உள்ளது. காட்டுப் பன்றி, கீரி, நீர்நாய், மரநாய் போன்ற இனங்களைச் சேர்ந்த 31 வகைகளில் 12 இங்கு உள்ளன. 15 வகை பூனை இனங்களில் ஐந்து வகை இம்மலைத் தொடரில் உள்ளது. உலகளவில் உள்ள 4 வகை கழுதைப் புலி வகையில் ஒரு வகை இங்குள்ளது. ஆறுவகை நரி, நாய், ஓநாய் போன்றவற்றில் ஐந்து வகை இங்குள்ளன. நான்கு வகை கரடிகளில் ஒன்று, இரண்டு வகை முயல்களில் ஒன்று இங்குள்ளது. இந்தியாவில் உள்ள 15 குரங்கு வகைகளில் ஐந்து இங்கு உள்ளன. 218 மீன்வகைகளில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன.

மலைவளம் காப்போம்: இந்த மலைவளம் காக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். நல்ல அழகிய சுற்றுப்புறச் சூழலுக்கு இது அத்தியாவசியம். தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமா? அதற்கும் மலைவளமே காரணம். மலைவளம் நன்றாக இருந்தால்தான் அனைத்து உயிரினங்களும் சமநிலையில் இருக்கும். புல், பூண்டு முதல் விலங்குகள் வரை உயிரின பரவல் முறையாக இருந்தால்தான், உயிரின இயக்கமும் முறையாக இருக்கும். மரங்கள் வளரும். மழை கிடைக்கும். இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் நிறைந்துள்ளன. மிளகு, அரிசி, காட்டு மஞ்சள், முருங்கை போன்ற மலைத் தொடர்பான இயற்கை தாவரங்கள் உள்ளன. இதுபோன்ற தாவர வகைகளின் ‘ஜீன்’ பிரித்து தரமான தாவரங்களை உருவாக்கி, மனிதனுக்கு தேவைப்படும் வகையில் அவற்றை பயன்படுத்தலாம்.

காடுகளுக்கான பிரச்னைகள்: இதுபோன்ற மலைவளம் நிறைந்த பகுதி யில் மனிதர்கள் வேட்டையாடுகின்றனர். விதிமுறைகளை புறந்தள்ளி விலங்கு, பறவை, தாவரங்களை அழிக்கின்றனர். காட்டுத் தீயை உருவாக்கி வனப்பகுதியையே வறட்சிப் பகுதியாக்கி விடுகின்றனர். எழிலார்ந்த பகுதிகளில் சுற்றுலா தலங்களையும், கல்வி நிறுவனங்களையும் ஏற்படுத்தி காட்டு வளத்தையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகின்றனர். பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைகின்றன. மண்வள மேம்பாடு, உயிரின பரவல் தடுக்கப்படுகிறது. புதிய, புதிய வழித்தடங்களை அமைப்பதால் வன உயிரினங்கள் நடமாட்டம் தடுக்கப்படுகிறது. இயற்கையான சூழலில் இணைந்து வாழவேண்டிய விலங்குகள், வனத் தீவுக்குள் தனியாக காலந்தள்ளுகின்றன. இதனால் விலங்குகள் வாரிசுகளை உருவாக்குவதில் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் சுற்றுச் சூழ்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும். நாளடைவில் தட்பவெப்ப நிலையும் பாதித்து, எதிர்கால சந்ததிகளுக்கு இன்னல் பல விளைவிக்கும். இதை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

என்ன செய்யலாம்? காடுகள், அவற்றின் வளம், பயன் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், சுற்றுச் சூழல் மேம்பாட்டு குழுக்களை ஏற்படுத்த வேண்டும். காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மூலம் இதை சாத்தியமாக்கலாம். விலங்குகள் உண்ணாத தாவரங்களை பயிரிடலாம். விடுதிகளில், வீடுகளில் விறகு பயன்பாட்டை குறைத்து, ‘பயோகாஸை’ அதிகரிக்க வேண்டும். அதற்கு மானியம் தருவதை அதிகரிக்க வேண்டும். காட்டை நம்பியுள்ள மக்களுக்கு வேறு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் உள்ள மாநில அரசுகள் ஒன்றிணைந்து வன விலங்குகளை காக்கவும், மரங்கள் வெட்டுவதை தடுக்கவும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

செல்லப் பெருச்சாளி!

எலி என்றாலே எல்லாருக்குமே கிலி ஏற்படுவது இயற்கைதானே! வீட்டில் எங்காவது பார்த்தால், அதை விரட்டும் வரை தூக்கமே வராது; அதிலும், பெருச்சாளி என்றால் கேட்கவே வேண்டாம்; இப்படி இருக்கும் போது, பெருச்சாளியை வீட்டில் செல்லமாக வளர்க்கின்றனர் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது.
நம்மூரில் செல்ல நாய் வளர்ப்பது போல, அமெரிக்காவில் டைபல்டோஸ் என்ற பெண், பெருச்சாளியை, ஒரு குழந்தையை போலவே வளர்த்து வருகிறார். தினமும், அது அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை.
நான்கு அடி நீளமுள்ள இந்த பெருச்சாளியின் பெயர் கேப்ளின் ரவுஸ்; பார்ப்பதற்கு சிறிய செம்மறி ஆடு போல இருக்கிறது. இதன் எடை 125 கிலோ.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் புடா என்ற கிராமப்புற பகுதியில் இதற்காக தனி எஸ்டேட் வாங்கி, அதில் டைபல்டோஸ் குடும்பம் குடியேறியது. அங்கு, பெருச்சாளிக்காக தனியாக தங்குமிடம், சுற்றித்திரிய தோட்டம், நீச்சல் குளம் என்று எல்லாவற்றையும் உருவாக்கினர்.
டைபல்டோஸ் , அவர் கணவர் , மகள் கோரல் ஆகியோர், சில ஆண்டு முன் வெனிசுலா நாட்டுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள வனவிலங்கு பூங்காவில் தான் இத்தகைய ராட்சத பெருச்சாளியை கண்டனர். அந்த பெருச்சாளியின் சாதுர்யமான நடவடிக்கைகளை, செய்யும் குறும்புகளை பார்த்து வியப்படைந்தார் கோரல்.
வீடு திரும்பியபின், ‘எனக்கு எப்படியாவது அந்த பெருச்சாளியை வாங்கிக்கொடும்மா’ என்று நம்மூர் குழந்தைகள், நாய், பூனைக்காக நச்சரிப் பது போல பிடிவாதம் செய்தார். அதற்காக, அமெரிக்காக முழுவதும் தேடி அலைந்தார் டைபல்டோஸ். ஆனால், எவருக்கும் இது பற்றி தகவல் தெரியவில்லை. இறுதியாக, பிராணிகள் இன விருத்தி செய்து, வளர்த்து விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை சந்தித்தார். அவரிடம் விசாரித்தபோது, ‘என்னிடம் இருக்கிறது; யாருமே வெறுக்கும் தோற்றத்துடன் உள்ள அதை நீங்கள் தான் கேட்கிறீர்கள்’ என்று கூறினார். உடனே அதை விலைக்கு வாங்கி விட்டார் டைபல்டோஸ்.
இதுபற்றி டைபல்டோஸ் கூறியதாவது:
பிறந்து 11 நாள் ஆகியிருந்த நிலை யில், அதை வாங்கி வந்தேன்; இப்போது இரண்டு ஆண்டாகிவிட்டது. எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டது அந்த செல்ல பெருச்சாளி.
நான் எங்கு சென்றாலும், அதை நாயை அழைத்துச் செல்வதை போல காரில் அழைத்துச் சென்று விடுவேன். இருக்கையில் சமர்த்தாக உட்கார்ந்து வரும்; எந்த பிரச்னையும் யாருக்கும் கொடுத்ததில்லை.
தினமும், அதற்கு மீன் உணவு வகைகளை செய்து தந்தாக வேண்டும்; அதிலும், மீன் நூடுல்ஸ் என்றால் அதற்கு கொள்ளை பிரியம். காலையில், வாக்கிங் போய் வந்தபின், சில மணி நேரம் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும். அதன் பின் சாப்பிட்டு விட்டு, பள்ளிக்கு மகளுடன் காரில் கிளம்பிவிடும். பள்ளியில் இருந்து திரும்பும் வரை, காரில் அது இருக்கும்.
நான் தூங்க சென்றால், அதுவும் படுத்துவிடும்; நான் நொறுக்குத்தீனி சாப் பிட்டால் அதற்கும் தர வேண்டும். வாக்கிங் போகும் போது, என் தோழிகளுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது. இப்போது அவர்களுக்கும் பழகிவிட்டது!
— இவ்வாறு மகிழ்ச்சி பொங்க கூறினார் டைபல் டோஸ். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லபிராணிகளுடன் பயணிக்க…

செல்லபிராணிகளான நாய், பூனை போன்றவற்றை பயணத்தில் உங்களுடன் அழைத்துச் செல்வதற்கு முன்பே அவற்றின் உடல் பயணத்திற்கு தேவையான அளவில் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பிராணிகள் நல மருத்துவரின் முலம் உறுதிசெய்து கொள்வது நல்லது. மேலும் அதற்குரிய தடுப்பூசிகள் மற்றும் சான்றிதழ்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சுற்றுலாவிற்கு செல்வதற்கு முன்பே உங்கள் செல்லபிராணியை கார் பயணத்திற்கு படிபடியாக பழக்கபடுத்த வேண்டும். நீண்ட தூர கார்பயணம் என்றால், 5 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவளிப்பதை நிறுத்திவிடுங்கள். எப்போதும் கொடுக்கக்கூடிய வழக்கமான உணவு வகைகளையே கொடுங்கள். நாயை காரில் கூட்டிச் செல்லும் போது, அதை சீட்பெல்ட்டுடன் இணைக்கும் `ஹார்னெஸ்’ எனப்படும் சாதனத்தையோ, தனிக்கூடையோ பயன்படுத்தலாம். அல்லது காரின் பின்புறத்தில் அதற்கான இருக்கையைத் தயார் செய்து கொடுக்கலாம். பயணத்திற்கு இடையில் அவ்வப்போது வாகனத்தை நிறுத்தி, அதற்குத் தேவையான தண்ணீர் வழங்கி அதை சற்று ஓய்வெடுக்க வைக்கலாம். அதன் கூண்டில் உங்கள் வாசனையுடன் கூடிய துணி அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைக்கலாம். காரை விட்டு வெளியே இறங்கி செல்லும் போது, நாயை நன்றாக கட்டி விட்டு செல்ல வேண்டும். இதற்காக காற்று வசதியுடன் கூடிய விண்டோ இணைப்புகள் உள்ளன. அதை வாங்கி பயன்படுத்தலாம். நெரிசல் மிகுந்த இடங்களில் அல்லது பெட்ரோல் பல்க் உள்ள இடத்தில் நாயை அவிழ்த்து விடாதீர்கள். வெப்பம் அதிகமாக உள்ள சூழலில் காரில் இருக்க வைக்காதீர்கள். நிழலிலேயே காரை நிறுத்தவும். அதிக குளிர்ச்சியாக இருக்கும் போதும் 5 அல்லது 10 நிமிடங்களுக்கு மேல் நாயை தனியாக காரில் விட்டு விட்டு செல்லாதீர்கள். உங்கள் நாய் ஜன்னலுக்கு வெளியே தலை முழுவதைம் நீட்டிக் கொண்டு வர அனுமதிக்காதீர்கள். அதனால், கண் பாதிப்புகளும், விபத்துக்களும் ஏற்பட வாயப்புள்ளது. பயணம் முழுவதும், அதனிடம் அமைதியாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.