செல்லப் பெருச்சாளி!

எலி என்றாலே எல்லாருக்குமே கிலி ஏற்படுவது இயற்கைதானே! வீட்டில் எங்காவது பார்த்தால், அதை விரட்டும் வரை தூக்கமே வராது; அதிலும், பெருச்சாளி என்றால் கேட்கவே வேண்டாம்; இப்படி இருக்கும் போது, பெருச்சாளியை வீட்டில் செல்லமாக வளர்க்கின்றனர் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது.
நம்மூரில் செல்ல நாய் வளர்ப்பது போல, அமெரிக்காவில் டைபல்டோஸ் என்ற பெண், பெருச்சாளியை, ஒரு குழந்தையை போலவே வளர்த்து வருகிறார். தினமும், அது அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை.
நான்கு அடி நீளமுள்ள இந்த பெருச்சாளியின் பெயர் கேப்ளின் ரவுஸ்; பார்ப்பதற்கு சிறிய செம்மறி ஆடு போல இருக்கிறது. இதன் எடை 125 கிலோ.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் புடா என்ற கிராமப்புற பகுதியில் இதற்காக தனி எஸ்டேட் வாங்கி, அதில் டைபல்டோஸ் குடும்பம் குடியேறியது. அங்கு, பெருச்சாளிக்காக தனியாக தங்குமிடம், சுற்றித்திரிய தோட்டம், நீச்சல் குளம் என்று எல்லாவற்றையும் உருவாக்கினர்.
டைபல்டோஸ் , அவர் கணவர் , மகள் கோரல் ஆகியோர், சில ஆண்டு முன் வெனிசுலா நாட்டுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள வனவிலங்கு பூங்காவில் தான் இத்தகைய ராட்சத பெருச்சாளியை கண்டனர். அந்த பெருச்சாளியின் சாதுர்யமான நடவடிக்கைகளை, செய்யும் குறும்புகளை பார்த்து வியப்படைந்தார் கோரல்.
வீடு திரும்பியபின், ‘எனக்கு எப்படியாவது அந்த பெருச்சாளியை வாங்கிக்கொடும்மா’ என்று நம்மூர் குழந்தைகள், நாய், பூனைக்காக நச்சரிப் பது போல பிடிவாதம் செய்தார். அதற்காக, அமெரிக்காக முழுவதும் தேடி அலைந்தார் டைபல்டோஸ். ஆனால், எவருக்கும் இது பற்றி தகவல் தெரியவில்லை. இறுதியாக, பிராணிகள் இன விருத்தி செய்து, வளர்த்து விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை சந்தித்தார். அவரிடம் விசாரித்தபோது, ‘என்னிடம் இருக்கிறது; யாருமே வெறுக்கும் தோற்றத்துடன் உள்ள அதை நீங்கள் தான் கேட்கிறீர்கள்’ என்று கூறினார். உடனே அதை விலைக்கு வாங்கி விட்டார் டைபல்டோஸ்.
இதுபற்றி டைபல்டோஸ் கூறியதாவது:
பிறந்து 11 நாள் ஆகியிருந்த நிலை யில், அதை வாங்கி வந்தேன்; இப்போது இரண்டு ஆண்டாகிவிட்டது. எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டது அந்த செல்ல பெருச்சாளி.
நான் எங்கு சென்றாலும், அதை நாயை அழைத்துச் செல்வதை போல காரில் அழைத்துச் சென்று விடுவேன். இருக்கையில் சமர்த்தாக உட்கார்ந்து வரும்; எந்த பிரச்னையும் யாருக்கும் கொடுத்ததில்லை.
தினமும், அதற்கு மீன் உணவு வகைகளை செய்து தந்தாக வேண்டும்; அதிலும், மீன் நூடுல்ஸ் என்றால் அதற்கு கொள்ளை பிரியம். காலையில், வாக்கிங் போய் வந்தபின், சில மணி நேரம் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும். அதன் பின் சாப்பிட்டு விட்டு, பள்ளிக்கு மகளுடன் காரில் கிளம்பிவிடும். பள்ளியில் இருந்து திரும்பும் வரை, காரில் அது இருக்கும்.
நான் தூங்க சென்றால், அதுவும் படுத்துவிடும்; நான் நொறுக்குத்தீனி சாப் பிட்டால் அதற்கும் தர வேண்டும். வாக்கிங் போகும் போது, என் தோழிகளுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது. இப்போது அவர்களுக்கும் பழகிவிட்டது!
— இவ்வாறு மகிழ்ச்சி பொங்க கூறினார் டைபல் டோஸ். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: