Daily Archives: மார்ச் 23rd, 2010

மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை படிக்கும் வகையிலான கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது: கம்ப்யூட்டரால், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும். இதற்காக, பத்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. இவர்களுக்கு சில பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது, பேப்பர் கப்பில் காபி அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய, சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது. அதன் பின், அவர்கள் என்ன பார்த்தனர் என்பதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர் கருவி மூலம் மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட மாறுதல்களை வைத்து, அதன் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த எலக்ட்ரிக்கல் தகவல்களை, அதற்கென உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் நினைவு கூர்ந்ததை, 50 சதவீதம் துல்லியமாக வெளிப்படுத்தப் பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜிமெயில் – உங்களின் எக்ஸ்ட்ரா டிரைவ்

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம். ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.
ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.
இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.
இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.
புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.
மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் பிரவுசருக்கு http://www.viksoe.dk/ code/gmail.htm என்ற முகவரியைக் காட்டவும்.இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.
இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.
லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் ‘Preserve Filenames’ என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.
இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.
முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.

மேதாவி முட்டாள்!

முட்டாள்களில் பல வகை உண்டு. இவர்களில் மிகமிக மோசமான முட்டாள் யார் தெரியுமா? மேதாவி முட்டாள்! தாம்தான் பெரிய அறிவாளி என்ற நினைப்பில் பெரியோர், ஆசிரியர்கள் என எவரிடமும் எந்த மரியாதையும் இல்லாமல் இவர்கள் அலட்டுவார்கள்; கேலியும் கிண்டலும் செய்வார்கள்!
அந்த ஊரில் இப்படியொரு மேதாவி முட்டாள் இருந்தான். ஒருமுறை ஓட்டலுக்குச் சென்றிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்தவர் இரண்டு இட்லியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உடனே மிஸ்டர் மேதாவி, இவருக்கு ரெண்டுதான் ராசியான நம்பர் போல… என்றான். பக்கத்து டேபிளில்.. இட்லி, பொங்கல், வடை என ஆர்டர் செய்து சாப்பிட்டவர்களைப் பார்த்து, செரிமானம் ஆகறதுக்கு வயித்துல மிஷின் ஏதும் ஃபிட் பண்ணி இருப்பாங்களோ? என்று நக்கல் அடித்தான்.
இவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார் ஓட்டல் முதலாளி. நேரே இவனிடம் வந்து, தம்பி வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க? என்று கேட்டார். இவன் எட்டு இட்லி என்றான்.இதைக் கேட்ட முதலாளி, அதெப்படி? முதல் இட்லி உள்ளே போனதுமே வெறும் வயிறு“கற அந்தஸ்து போயிடுமே?! என்று மடங்கினார்.
குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக குபுக்கெனச் சிரித்த மிஸ்டர் மேதாவி, அடடா… இப்படியும் மடக்கலாமோ? என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்!
வழியில் கையேந்தி பவன்… ஆட்டோ டிரைவர் ஒருவர் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்ற மேதாவி, ஆமாம்… உன்னால வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிட முடியும்? என்று கேட்டான். ஆறு என்றார் டிரைவர். உடனே மேதாவி முட்டாள் என்ன சொல்லியிருப்பான்…?
அதுதான் இல்லை! டிரைவரிடம் ரொம்ப ஸ்டைலாக, ச்சே… நீ மட்டும் எட்டுன்னு சொல்லியிருந்தா, இந்நேரம் உன்னை மடக்கியிருப்பேன் என்றானாம்!
முட்டாள்களின் பரிகாசம் – கேலியில் இருந்து தப்பிக்க, விசாலமான எண்ணமும் பரந்தமனமும் இருந்தால் போதும். இதற்கு புத்தகங்கள் பெரிதும் உதவும். புதிய மனிதர்களை சந்திக்கவும் அவர்களுடன் பழகவும் செய்ய வேண்டும். வேற்று மொழி, வேறு கலாசாரம் ஆகியவற்றை அறிந்துகொள்ள, பயணங்கள் மேற்கொள்ளலாம். பயணங்கள் மனதை விசாலமாக்கும் என்கின்றனர் முன்னோர்!
வாகன – போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே புனித யாத்திரை மேற்கொண்டனர். காடு – மலை கடந்து, குளிரில் நடுங்கி, உணவே கிடைக்காத நிலையிலும் பல நாட்கள் பல மாதங்கள் நடந்து ஆலயத்தை அடைந்து ஸ்வாமியை தரிசித்தனர். இறைவனை தரிசித்ததும் கிடைக்கிற பேரமைதி. இந்த யாத்திரையிலேயே கிடைப்பதை உணர்ந்து சிலிர்ந்தனர் இதனை உள்வாங்கிக் கொள்ளாமல் பலரும் புனித யாத்திரை செல்கின்றனர். அப்படி யாத்திரை சென்று திரும்பியவரிடம், அப்புறம்… பயணம் எப்படி இருந்துச்சு? என சாதாரணமாகக் கேட்டார் அவருடைய நண்பர்.
அவ்வளவுதான் புலம்பித் தீர்த்துவிட்டார் மனுஷன். அட ஏம்பா கேக்கறே? அந்த ஸ்டேட்காரன் பேசற பாஷை புரியவே மாட்டேங்குது. மூணு வேளையும் எப்படிடா சப்பாத்தியையே சாப்பிடுறாங்க… நம்மால முடியாதுப்பா! என்று தொடங்கியவர். புலம்பலை நிறுத்தவே இல்லை.
யாத்திரையைவிட பாஷையும், இறைவனை விட சப்பாத்தியும் முக்கியமாகிவிட்டது நண்பருக்கு!

உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட்

கூகுள் தரும் வசதிகள் பலவற்றில் இமெயிலுக்கு அடுத்தபடியாக, பலரின் விருப்பமாக இருப்பது யுட்யூட்தான். இதில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய அல்லது நமக்குப் பிடித்த வீடியோ கிளிப்களை இதில் அப்லோட் செய்து அனைவரும் பார்க்கும் வண்ணம் பதிக்கலாம்.
நீங்கள் யு–ட்யூப் தளம் சென்று தேடிப் பார்த்தால், நாம் டிவி சேனல்களில் பார்க்கும் பல வீடியோ காட்சிகள் பதிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். திறமையான ரசிகர்கள் பலர், பிரபல திரைப்படங்களின் பாடல் காட்சிகளுக்கான பாடல்களில் மாற்றம் செய்து தங்களுக்குப் பிடித்த வகையில் அமைத்து வெளியிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
பலர் தங்கள் குழந்தைகளின் வீடியோ கிளிப்களை அனைவரும் காணும் வகையில் அமைத்திருப் பதனையும் காணலாம். இங்கு இந்த யு–ட்யூப் அக்கவுண்ட்டை எப்படிக் கையாளலாம் என்று பார்ப்போம்.
முதலில் கூகுள் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலே, யு–ட்யூப் அக்கவுண்ட் அமைத்துக் கொள்ள முடியும். இவற்றை அமைத்தவுடன் யு–ட்யூப் தளம் சென்று உங்கள் அக்கவுண்ட் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே அக்கவுண்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள Account என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
அடுத்து இடது பக்கத்தில் ஒரு பிரிவு ‘Overview’ எனத் தலைப்பிட்டு இருப்பதனைக் காணலாம். இந்தப் பிரிவின் கீழ் உங்கள் அக்கவுண்ட்டை, வசதிப்படி வைத்துக் கொள்ள பல ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலில் Profile Setup என்பதில் தொடங்கலாம். இதில் கிளிக் செய்தால் நீங்கள் ‘About Me’ என்ற ஒரு புதிய பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு உங்கள் யூசர் நேம் அடிப்படையில் ஏதேனும் ஒரு படத்தை அப்லோட் செய்திடலாம். உங்களைப் பற்றி விவரிக்க ஏதேனும் தகவல்களைப் பதியலாம். உங்களுக்கென ஓர் இணைய தளம் இருந்தால், அதனை அங்கே எழுதி வைக்கலாம். கூடுதலாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள், பிடித்தவை, பிடிக்காதவையும் பதியலாம்.
அடுத்ததாக ‘Customize Homepage’. இங்கு நீங்கள் யு–ட்யூப் தளத்தில் நுழைகையில் என்ன என்ன காட்டப்பட வேண்டும் என்பதை வரையறை செய்திடலாம். மூன்றாவது டேப் ‘Playback Setup’ இங்கு உங்கள் இணைய இணைப்பின் தன்மைக்கேற்ப, நீங்கள் பார்க்கும் யு–ட்யூப் வீடியோக்கள் எந்த தன்மையில் காட்டப்பட வேண்டும் என்பதனை வரையறை செய்திடலாம்.
அடுத்தது ‘Email Options’ இங்கு உங்களின் ஜிமெயில் முகவரி குறித்து அமைக்கலாம். உங்களின் வேறு ஒரு முகவரியையும் பயன்படுத்தலாம். யு–ட்யூப்பில் இருந்து எத்தனை மெயில்கள், எப்படி அனுப்பலாம் என்பதனை இங்கு செட் செய்திடலாம்.
ஐந்தாவதாக நாம் காண்பது ‘Sharing and Privacy’ ஆகும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் அதிகக் கவனத்துடன் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்திலும் பல லட்சக்கணக்கானவர்கள் யு–ட்யூப் தளத்தை நாடுகின்றனர். Search and Contact Restriction என்பதன் கீழ் நீங்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் உங்களுக்கு செய்திகள் அனுப்பவும், உங்கள் வீடியோ கிளிப்களைப் பார்க்கவும் அனுமதிக்கலாம். இதற்கு உங்கள் ஜிமெயில் முகவரி அவர்களிடம் இருக்க வேண்டும். என்பதனை நீங்கள் இயக்கி அமைத்தால், நீங்கள் அண்மையில் பார்த்த யு–ட்யூப் தளங்களை, உங்கள் நண்பர்களும் பார்க்கலாம் Recent Activity என இங்கு தரப்பட்டிருப்பதுவும் அதைப் போன்றதுதான். நீங்கள் அண்மைக் காலத்தில் யு–ட்யூப் தளத்தில் மேற்கொண்ட செயல்பாடுகளை, மற்றவர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பைத் தரும்.
அடுத்து நீங்கள் யு–ட்யூப் தளத்தில் ப்ளாக் என்னும் சிறிய வலை மனை அமைப்பதாக இருந்தால் ‘Blog Setup.’ என்னும் இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி Add a Blog என்பதில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிளாக் தயாராகிவிடும். ஏழாவதாகக் கிடைக்கும் Mobile Setup என்பதனைக் கிளிக் செய்து, செட் செய்வதன் மூலம், உங்களால் உங்கள் மொபைல் போனிலிருந்து போட்டோக்களை அப்படியே நேராக யு–ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திட முடியும்.
இறுதியாக ‘Manage Account’ என்ற பிரிவில் உங்கள் அக்கவுண்ட் நிர்வாகத்தை நீங்கள் கவனிக்கலாம். உங்கள் பாஸ்வேர்டை மாற்றலாம்; ஏற்கனவே செட் செய்த தனிப்பட்ட தகவல்களை நீக்கலாம். ஏன், உங்கள் அக்கவுண்ட்டையே குளோஸ் செய்திடலாம். எனவே கவனமாக இதனைக் கையாண்டு உங்கள் தனிப்பட்ட தேடுதல்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகான மனைவியை தேர்ந்தெடுக்கும்போது…

அனிதாவுக்கு 30 வயது இருக்கும். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயும் ஆகிவிட்டாள். ஆனாலும், தோற்றத்தில் கல்லூரி மாணவி போலவே `சிக்’கென்று காணப்படுவாள்.

ஆனால், அவளது கணவர் ராமையாவோ அவளுக்கு நேரெதிர். இவரது அழகுக்கும், அவளது அழகுக்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும், நல்லபடியாகத்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென்று ராமையாவுக்கு இவள்மீது சந்தேகம். நாட்கள் செல்லச் செல்ல சந்தேகம் அதிகமானது.

அன்று அவள் வேலைக்குச் சென்றபோது, அவளுக்கு தெரியாமலேயே பின்தொடர்ந்து சென்றார். வீட்டுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது கழுகு பார்வை பின்தொடர்ந்தது.

பஸ் நிறுத்தத்தில் அவள் நின்று கொண்டிருந்தபோதே சில ஜொள்ளர்கள் அவளை `ஜொள்’ விட்டனர். இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாஸ் அணிந்திருந்தாள் அனிதா. இடது பக்க தோளில் `ஹேன்ட் பேக்’ தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் கல்லூரி மாணவியாகத்தான் இருப்பாள் என்று கணித்த சில இளைஞர்கள், அவளிடம் ஐ லவ் யூ… சொல்ல எண்ணி, அதற்கான முன்னோட்ட முயற்சிகளில் ஈடுபட அவளுக்கு அருகில் வந்தனர்.

இதையெல்லாம் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த ராமையா, அவள் ஏறிய பஸ்சிலும் ஏறிக்கொண்டு, ஒரு ஓரமாக அமர்ந்து அவளை கண்காணித்தார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் அவளால் கணவன் பின்தொடர்வதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பஸ்சுக்குள் ஓரமாக ஒதுங்கி நின்ற சில சபலங்கள் கூட, அனிதாவை பார்த்ததும் அவளை நெருங்கி வந்து நின்று கொண்டனர். டிரைவர் எபோது பிரேக் போடுவார்… எப்போ அவளை உரசலாம்… என்று காத்திருந்தனர். அதற்கான வாய்ப்பு கிடைத்தபோது உரசிக் கொண்டு மகிழ்ந்தனர்.

அந்தநேரம் டிப்டாப்பான ஒரு இளைஞன் பஸ்சில் ஏற, அனிதாவை பார்த்ததும் அவன் புன்னகைத்தான். பதிலுக்கு இவளும் லேசாக சிரித்து வைத்தாள். இதையும் கவனித்துவிட்டார் ராமையா. `இவன் யாராக இருப்பான்? ஒருவேளை திருட்டுக்காதலனாக இருப்பானோ..?’ என்று கூட சந்தேகித்தார்.

இப்போது அவன் அனிதாவை நெருங்கி வந்து நின்றான். அவன், தன்னுடன் பணிபுரியும் சக ஊழியன் என்பதால் ஒன்றிரண்டு வார்த்தைகளை பேசிவிட்டு திரும்பிக் கொண்டாள். ஆனால், ராமையாவின் பார்வைக்கு அவன் சந்தேகத்துக்குரியவனாகவே தெரிந்தான். அடுத்த பஸ் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டார்.

அன்று இரவு அலுவலகம் முடிந்து, வீட்டுக்கு திரும்பி வந்த அனிதாவை, `இனி வேலைக்கு செல்ல வேண்டாம்` என்று தடை விதித்துவிட்டார் ராமையா. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களுக்குள் பிரச்சினைகள் அதிகமானது. சிலநேரங்களில் மனைவியை கை நீட்டி அடித்தும் விட்டார்.

அதன்விளைவு… அவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்று விட்டாள்.

– இப்படி ராமையா போன்று அழகான மனைவியை தேடிபிடித்து வாழ்க்கை துணைவியாக்கி, மனைவியின் அந்த அழகாலேயே தங்களது வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளும் கணவன்மார்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி விட்டது.

முதலில் அழகுக்காக ஆசைபடும் அவர்கள், அந்த அழகாலேயே சந்தேகத்தையும் தாங்களாகவே வரவழைத்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் மனைவியின் மீது மட்டும் சந்தேகம் வந்துவிட்டால் அந்த சந்தேகம் எப்போது தோன்றியதோ, அப்போது முதல் வாழ்க்கையே நரகமாகிவிடும். அவள் ஆடை அணிந்து கொள்வதில் இருந்து… அவள் வெளிபடுத்தும் சிரிப்பு வரையில்… எல்லாமே சந்தேகமாகத்தான் தெரியும்.

இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது கணவன்மார்கள் என்ன செய்யலாம்? முதலில் சந்தேகம் என்ற வார்த்தையையே உங்கள் மனதில் இருந்து தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களவள், ஏதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருந்தால், அவன் அவளுடன் தொடர்பு உள்ளவனாக இருப்பானோ..? என்ற மனநிலைக்கு வருவதையே தவிர்த்து விடுங்கள். அவள் அவனிடம் ஒரு தங்கை என்கிற முறையில் பேசலாம். அல்லது நட்பாகக் கூட இருக்கலாம். சந்தேகத்தின் முதல் படி, நீங்கள் பார்க்கும் பார்வை தான். அழகான மனைவியை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. அவளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, அவளது அழகால் அவளை எந்த சூழ்நிலையிலாவது சந்தேகிப்போமா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது அவசியம். `என் அழகான மனைவியை நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்’ என்று 100 சதவீதம் நீங்கள் நம்பினால் மாத்திரமே உங்கள் விருப்பபடி அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது இப்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அப்படிபட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு ஆண் நண்பர்கள் அறிமுகம் கிடைக்கத்தான் செய்யும். `என்னைத் தவிர வேறு எந்த ஆணிடமும்  பேசக்கூடாது’ என்று மனைவியை நிர்பந்திக்கவும் முடியாது; அப்படி செய்யவும் கூடாது. மீறி நிர்பந்தம் செய்தால், அடுத்த கேள்வியாக, `என்னை நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?’ என்று உங்கள் மனைவி கேட்டுவிடுவாள். இது தேவையா? நீங்கள் சந்தேகப்படுவது உங்கள் மனைவிக்கு தெரிந்துவிட்டாலே அவள் மிகவும் நொந்துபோய் விடுவாள். அதுவரை, உங்களிடம் ஆசைஆசையாய் அவள் பேசி வந்திருந்தாலும் கூட, உங்களது சந்தேக பார்வைக்கு பிறகு அவளது போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துவிடும். முதலில் உங்களிடம் அதிகம் பேசுவதை குறைபாள். மகிழ்ச்சியான விஷயங்களைக்கூட உங்களிடம் பகிர்ந்து கொள்ள பயப்படுவாள். முடிந்தவரை உங்கள் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவளது அழகை ஆராதனை செய்யுங்கள். அவள் பேசும் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேளுங்கள். உங்களவள் எப்பொழுதாவது பியூட்டி பார்லருக்கு புறப்பட்டால், `நீயே நடமாடும் பியூட்டி பார்லர்தானே?  ஏன் பியூட்டி பார்லருக்கு போக வேண்டும்?’ என்று கேட்டு ஐஸ் வையுங்கள். அவ்வப்போது அவளுக்கு பிடித்த ஆடையை வாங்கிக்கொடுத்து, `இந்த ஆடையில்  ஐஸ்வர்யாராயையே மிஞ்சி விட்டாயே…’ என்று கேட்டு குளிர்வியுங்கள். இதுபோன்ற உங்களது செல்லச் சீண்டல்கள் அடிக்கடி தொடரட்டும். உங்களது எண்ணங்கள் இப்படிச் சென்று கொண்டிருந்தால், அங்கே சந்தேகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். எல்லாவற்றைம்விட முக்கியமாக, உங்களவளிடம் நீங்கள் ஒரு நல்ல கணவனாக மட்டுமின்றி எப்போதும் ஆதரவாய் இருக்கும் நண்பனாகவும் பழகுங்கள். `உனக்காகவே நான், எனக்காகவே நீ’ என்று அடிக்கடி சொல்லுங்கள். எப்பேர்பட்ட அழகியாக உங்கள் மனைவி இருந்தாலும், குட்டி போட்ட பூனையாக உங்களையே சுற்றிச் சுற்றி வருவாள்.

சிறுநீர் சிக்கலை நீக்கும் அற்புத மூலிகை கோபுரந்தாங்கி


சிறுநீரில் சிக்கலா?
வெயில் காலத்தில் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். கடும் உழைப்புள்ளவர்களும், அலைச்சல் உள்ளவர்களும் அன்றாட அளவைவிட கூடுதலாக அருந்த வேண்டும். பொதுவாக 60 கிலோ எடை உள்ள ஒருவர் 3 முதல் 4 லிட்டர் நீரை அருந்தவேண்டுமென மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, திராட்சை, பப்பாளி, இளநீர், எலுமிச்சை ஆகியவற்றை அடிக்கடி உட் கொள்ள வேண்டும். உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் காரத்தன்மையுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், மசாலா உணவுகள், சுத்தமில்லாத திரவ, திட உணவுகள், செயற்கை நிறங்கள் மற்றும் மணத்தால் செய்யப்பட்ட துரித உணவுகள் மற்றும் ஆயத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீர்ப்பாதையில் சிக்கல் உண்டாகிவிடும்.
சிறுநீர்ப்பாதையில் அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவதில் உடல் ரீதியான காரணங்களைவிட திரவ பரிமாற்றத்தில் ஏற்படும் கோளாறு காரணமாகவே பெரும்பாலான தொல்லைகள் உண்டாகின்றன. இதனால் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போதும், கழித்த பின்பும் உறுப்பில், அடிவயிறு, முதுகில் வலி, சிறுக சிறுக அடிக்கடி சிறுநீர் செல்லுதல் மற்றும் உடல் எப்பொழுதும் காய்ச்சலாக இருப்பதுபோன்ற உணர்வு, குமட்டல், வாந்தி ஆகியன உண்டாகும். சிறுநீரகத்தின் நீர் பெருக்கு திறனை அதிகரித்து, சிறுநீரை அளவுக்கதிகமாக பிரித்து, நுண்கிருமிகள் மற்றும் உப்புகள் தேங்காவண்ணம் காத்து, சிறுநீர் சிக்கலை நீக்கும் அற்புத மூலிகை கோபுரந்தாங்கி.
அன்ட்ரோகிராபிஸ் எகியாயிடஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அகன்தேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வெப்ப பகுதிகளிலே அதிகம் வளருகின்றன. எக்கியோடினின் என்ற பிளேவன் மற்றும் எக்கியாயிடின் போன்ற வேதிச்சத்து நிறைந்துள்ள இந்த தாவரம் சிறுநீரை பெருக்கி, சிறுநீர் சிக்கலை நீக்கும் ஆற்றலுடையது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்துவர சிறுநீர் நன்கு வெளியேறும். எரிச்சல் குறையும்.
உலோக மற்றும் உப்பு கற்களை கரைக்கும் ஆற்றலுடையதால் சித்த மருத்துவத்தில் பற்பங்கள் மற்றும் செந்தூரங்கள் தயாரிக்க உலோகசுத்திக்கு பயன்படுகிறது. அடிக்கடி சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களால் பாதிக்கப்படுபவர்கள் கோபுரந்தாங்கி கசாயத்தை 10 முதல் 15 நாட்கள் குடித்து வரலாம்.

வெயிலில் அலையாதீங்க! சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல

* சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல
* முன்னெச்சரிக்கை மிக முக்கியம்
உடலுக்கு வெப்பம் தேவை; அதுவே, அளவுக்கு மீறும் போது, வியர்வையாகவோ, தோல் வழியாகவோ வெளியேறி விடும். ஆனால், அதையும் மீறி வெப்பம் தாக்கும் போது, உடல் திணறிப்போய்விடும்.
இப்படிப்போகும் போது, உடலில் உள்ள வெப்பம் 41 செல்சியஸ் டிகிரியை தாண்டி விடும் போது தான் ஆபத்து காத்திருக்கிறது. அது தான் ‘சன் ஸ்ட்ரோக்’ ஆரம்பம். அந்த நிலையில், உடலில் நீர் வற்றிப்போகிறது; வெப்பம் அதிகரிக்கிறது. அதனால், உறுப்புகள் பாதிக்கின்றன; விளைவு, உச்சகட்டமாக மரணம் தான்.வெயிலுக்கு மரணம் என்று படிக்கிறோமே தவிர, எதனால் மரணம் என்பதை பெரும்பாலோர் உணருவதில்லை. விழிப்புணர்வு இருந்தால் பலிகளை தவிர்க்கலாம்.
தலைசுற்றல், வாந்தியா?
இதற்கு அறிகுறிகள் பல உண்டு; தொடர்ந்து, வெயிலில் அலைந்து கொண்டிருப்பவர்கள், அதிலும் வயதானவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, காய்ச்சல் போல உணர்வர்; தண்ணீர் மேல் தண்ணீர் குடிப்பர். ஆனால், வெப்பம் தாங்க முடியாது.
இது மட்டுமின்றி, வாந்தி, மயக்கம் ஏற்படும்; சோர்வு வரும்; படுக்கலாம் என்றால் தலை சுற்றும். கிறுகிறுப்பு தொடர்ந்து இருக்கும். சில சமயம், மாரடைப்பு போல, பெரும் வலி இருக்கும். தசைப்பிடிப்பு வெடிப்புகளும் ஏற்படும்.
திணறும் மூச்சு
உடலில் வெப்பம் ஏறிய நிலையில், வியர்வை வராது; மூச்சு திணறும்; உடலில் ஆங்காங்கு சிவந்து போகும். தடிப்பும், வெடிப்பும் ஏற்படும். எதிலும் கவனம் போகாது; இது தான் உச்சகட்டம்; உடனே டாக்டரிடம் போய்விடுவது தான் நல்லது.
உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை வெளியேற்ற போதுமான நீர்ச்சத்து தேவை. அப்படி இருந்தால் தான் தோல் வழியாக வியர்வையாக வெளியேறும். இல்லாவிட்டால், வெப்பம் தங்கி விடும்.இந்த நிலையை தான் தண்ணீர் வற்றிப்போய் விட்டதாக கருதுகிறோம். தண்ணீர் வற்றி விட்டால் சன் ஸ்ட்ரோக் வருவது நிச்சயம்.
யாருக்கு வரும்?
பெரும்பாலும் வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கு வரும். வெயிலிலேயே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வரும். அதனால், அவர்களை வெயிலில் அலைய விடாமல் செய்தால் தவிர்க்கலாம்.
இதய, சர்க்கரை, சிறுநீரக நோய்க்காக மருந்து சாப்பிடுவோர் , வெயிலில் போகவே கூடாது; அப்படி போனால், தற்காத்துக்கொள்வது நல்லது; அவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ வரும் வாய்ப்பு அதிகம்.
முதல் உதவி என்ன
வெயிலில் மயக்கம் அடைந்தோ, கிறுகிறுத்தோ போவோரை கண்டால், அவர்களை, நிழலில் மல்லாந்து படுக்க வைத்து, உடலை குளிர்ப்படுத்த வேண்டும்; தண்ணீர் தெளிக்க வேண்டும். பின், உடலில் இருந்து வியர்வை வெளியேற, அவர் அருகே மின்விசிறியை வைத்து காற்று வர வைக்க வேண்டும்.
தொடை இடுக்கு, கைகள் இடுப்பு, கழுத்து பக்கவாட்டு பகுதிகளில் ஐஸ் ‘பேக்கிங்’ வைக்கலாம்; அப்படி செய்தால், உடல் வெப்பம் 100 பாரன்ஹீட் டிகிரிக்கு குறையும்.அவருக்கு உப்பு – தண்ணீர் கரைசலை தரலாம்; இப்போது ‘எலக்ட்ரால்’ கரைசல் கடைகளில் விற்கப்படுகிறது. அதை தந்தால் அவர் உடல் வெப்பம் குறைந்து விடும்.

98.3 ஐ தாண்டக்கூடாதுங்க!
* நம் உடல் வெப்பம் 98.3 செல்சியஸ் டிகிரியாக இருக்க வேண்டும். இதை தாண்டினால், முதலில் காய்ச்சல்; அடுத்து ‘சன் ஸ்ட்ரோக்’ தான்.
* உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல், தலைசுற்றல், கிறுகிறுப்பு, வாந்தி வரும். பெண்களுக்கு முகப்பரு வரவும் இது தான் காரணம்.
* வெயில் காலத்தில், அதிக தண்ணீர் குடிப்பதுடன், காபி, டீயை குறைத்து, தர்பூசணி சாப்பிடலாம்; அது போல, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களின் ஜூஸ் குடிக்கலாம்.
*பசலைக்கீரை உட்பட பச்சைக்கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதுபோல கேரட்டும் நல்லது.
*கோடை காலத்தில் அடிக்கடி உணவில் வெள்ளரி சேர்க்க வேண்டும்; தனியாகவும் சாப்பிடலாம்.
*வயிற்றுப் பிரச்னைகளுக்கு தயிர் நல்லது: முகத்தில் சுரசுரப்பு போகவும் அதை தடவலாம்.
*கொழுப்பு, ஜங்க் புட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்தால், தோல், முகம் வெயிலில் பாதிக்காமல் இருக்க செய்யலாம்.

வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் டெக்ஸ்ட் செலக்ட் செய்திடப் பல வழிகள் உள்ளன. பொதுவாக நாம் மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட் தொடக்கத்தில் வைத்துப் பின் ஷிப்ட் கீ அழுத்தியவாறே, டெக்ஸ்ட் முடிவு வரை இழுத்து தேர்ந்தெடுப்போம். இதுவே பல பக்கங்களுக்கு நீண்டால் என்ன செய்வது? கஷ்டம் தான்; இடையே எங்காவது மவுஸ் கர்சர் விடுபட்டாலோ அல்லது ஷிப்ட் கீ விடுபட்டாலோ, சிரமம் தான். ஆனால் இந்த சிரமத்தைத் தவிர்க்கும் வழியும் உள்ளது. அடுத்த முறை எத்தனை பக்கங்களுக்கு டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
முதலில் எங்கு டெக்ஸ்ட் தொடங்குகிறதோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் சற்று கீழாகக் கர்சரை இழுக்கவும். தொடக்க நிலையில் உள்ள சில வரிகள் தேர்ந்தெடுக்கப்படும். பின் கர்சரை விடுவித்து எந்த இடம் வரை டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அந்த பக்கத்திற்குச் செல்லவும். அங்கு சென்று தேர்ந்தெடுக்கப்படும் டெக்ஸ்ட் முடியும் இடத்தில் கர்சரை வைத்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்துக் கொண்டு கர்சரை வைத்திடவும். ஆஹா! டெக்ஸ்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாயினும், தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனைக் காணலாம்.
டேபிள் செல்களைப் பிரித்தலும் சேர்த்தலும்
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்கிய பின்னர், அதில் அருகேயுள்ள செல்களை இணைத்து ஒன்றாக்கலாம். இதற்கு Merge Cells என்ற கட்டளை உதவிடுகிறது. இவ்வாறு இணைத்த செல்களை, பின்னால் எப்படிப் பிரிப்பது என்று இங்கு காணலாம்.
1. முதலில் இணைத்து ஒன்றாக்கிய செல்லில் பாய்ண்ட்டரைக் கொண்டு செல்லவும்.
2. பின் டேபிள் மெனுவில் இருந்து Split Cells என்ற கட்டளைப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது இணைத்த செல் மீண்டும் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த செல்களின் அகலம் மற்ற செல்களிடமிருந்து சற்று வேறுபட்டிருக்கும். இவற்றை நாமாக அட்ஜஸ்ட் செய்திடலாம். இணைந்த செல்களை Tables and Borders டூல்பார் மூலமாகவும் பிரிக்கலாம்.
1. View மெனுவிலிருந்து Toolbars ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
2. இனி டேபிளுடன் டூல்பாரும் தெரியும்படி, டாகுமெண்ட் மற்றும் டூல்பாரை அட்ஜஸ்ட் செய்திடவும்.
3. டூல்பாரில் உள்ள Draw Table என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு பென்சில் போலத் தோற்றமளிக்கும். மவுஸ் கர்சர் தான் இப்போது ஒரு பென்சில் போன்ற தோற்றத்திற்கு மாறிவிடும்.
4. இதனைப் பயன்படுத்தி, டேபிளில் செல்லுக்கான கோடுகளை வரையவும். ஒவ்வொரு செல் கோட்டிலும் கிளிக் செய்து இழுக்கலாம். இழுத்து தேவையானது கிடைத்தவுடன் கர்சரை விட்டுவிடலாம். பின் செல் நாம் இழுத்தபடியான கோட்டுடன் அமைக்கப்பட்டுவிடும்.
5. இவ்வாறு வரைந்து முடித்தவுடன், மீண்டும் Draw Table டூலில் கிளிக் செய்திடவும். அல்லது எஸ்கேப் கீயை அழுத்தவும். இது டிராயிங் வகையில் இருப்பதை மூடும்.
6. பின் வேலை முடிந்தவுடன் Tables and Borders டூல்பாரை மூடவும்.
வேர்ட் டேபிளில் வரிசைகளை நகர்த்த
வேர்ட் டாகுமெண்ட் இடையே சில டேட்டாவைத் தெளிவாகக் காட்ட, டேபிள் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உருவாக்கி முடித்த பின்னரே, முதல் முதலாக உள்ள படுக்கை வரிசை ஐந்தாவதாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? நான்காவது வரிசைக்கு அடுத்து ஒரு காலி வரிசை உருவாக்கி, பின் முதல் வரிசை டேட்டாவினை கட் செய்து, உருவாக்கிய வரிசையில் பேஸ்ட் செய்வீர்கள், இல்லையா? இத்தனை வேலைகள் எதற்கு? எளிதான வழி ஒன்று இருக்கிறது.
1. எந்த வரிசையை நகர்த்த வேண்டுமோ, அந்த வரிசையில் ஏதேனும் ஒரு செல்லில் கர்சரைக் கொண்டு சென்று வைத்திடவும். ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்த வரிசைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், ஷிப்ட் அழுத்தி அனைத்து வரிசைகளையும் தேர்ந்தெடுக்கவும்.
2. பின் ஷிப்ட்+ ஆல்ட்+ அப் அல்லது டவுண் ஆரோ (Shft+Alt+Up/Down) கீகளை அழுத்தவும். உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசை அல்லது வரிசைகள் நகரத் தொடங்கும். அவற்றை வைக்க வேண்டிய இடம் வந்தவுடன் அப்படியே விட்டுவிடவும். எவ்வளவு எளிதாக நகர்த்திவிட்டீர்கள்!
வேர்ட் டிப்ஸ்
வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஸ்பேஸ் பயன் படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.

கர்வத்தை அழிக்கும் ராமமந்திரம்! (ஆன்மிகம்)

சிலர் பக்திப்பூர்வமாக, ‘ராமா’ என்பர். வேறு சிலரோ, ஏதாவது தவறு செய்து விட்டால், தலையில் அடித்தபடியே, ‘ராமா ராமா’ என்பர். தொனி தான் மாறுபடுமே தவிர, ராம மந்திரத்தை எப்படிச் சொன்னாலும், அதற்குரிய பலன் கிடைக்கும்; குறிப்பாக, ராம மந்திரம் கர்வத்தை அழிக்கும் சக்தியுடையது.
ராமாயணத்தில் பலவகை உண்டு. அதில் ஆனந்த ராமாயணம் என்பதும் ஒன்று. இதில் ஒரு காட்சி —
இலங்கையில் சீதையை சந்தித்த பின், திரும்பிக்கொண்டிருந்த ஆஞ்சநேயர், வானில் பறந்தபடியே நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அசை போட்டார். கடல் தாண்டிச் சென்றது, ராவணனின் மகனைக் கொன்றது, ராவணனையே நேரில் சந்தித்தது, இலங்கைக்கு தீ வைத்தது, வடிவங்களை சுருக்கியும், நீட்டியும் சீதையைக் கண்டுபிடித்தது போன்ற தான் செய்த செயல்களை நினைத்த வுடனேயே கர்வம் அவரைத் தொற்றிக் கொண்டது. ‘என்னை விட பலசாலி யார் உண்டு?’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டே பறந்தார்.
வழியில் தாகம் எடுத்தது. மகேந்திர கிரி என்னும் மலை அப்போது கண்ணில் பட்டது. அந்த மலையில் நீர்நிலை ஏதாவது இருக்கலாம் என வட்டம் போட்டு பார்த்தார்; கண்ணில் ஏதும் படவில்லை. ஓரிடத்தில் ஒரு முனிவர் இருப்பது புலப்பட்டது. அவர் முன்னால் இறங்கியவர், தண்ணீர் இருக்குமிடத்தைக் காட்டும்படி கேட்டார்.
முனிவர் பேசவில்லை; ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினார். ஆஞ்சநேயர் அவர் முன்னால், தன்னிடமிருந்த ராமனின் முத்திரை மோதிரம், சீதையின் சூடாமணி ஆகியவற்றை வைத்துவிட்டு போனார். அப்போது ஒரு குரங்கு வந்து, அங்கிருந்த சூடாமணியையும், முத்திரை மோதிரத்தையும் அருகில் இருந்த முனிவரின் தீர்த்தச்செம்புக்குள் போட்டுவிட்டது.
ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்தார்; பொருட்களைக் காணாமல் முனிவரிடம் கேட்டார். முனிவர் செம்பை நோக்கி கையை நீட்டினார். அதை ஆஞ்சநேயர் பார்க்க அதனுள் ஏராளமான முத்திரை மோதிரங்கள் கிடந்தன.
‘இவை எப்படி இதனுள் வந்தன? எல்லாம் ஒன்றுபோல் உள்ளதே… இதில் என்னுடையதை எப்படி கண்டுபிடிப்பேன்?’ என்றதும், முனிவர் பதிலளித்தார்.
‘வானரனே… இதற்கு முன் பலமுறை பெருமாள், ராமாவதாரம் எடுத்துள்ளார். அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் வருவார்; என் முன்னால் வைப்பார். என் தீர்த்தச் செம்பிற்குள் அதை ஒரு குரங்கு தூக்கிப் போட்டு விடும். இவை எல்லாமே ராமனுக்குரியவை தான்…’ என்றார்.
ஆஞ்சநேயர் வெட்கிப்போனார். ‘அப்படியானால், பல யுகங்களில் பல ஆஞ்சநேயர்கள் இதே சாதனையைச் செய்துள்ளனரே… நான் மட்டுமே செய்ததாக கர்வம் கொண்டேனே…’ என வருந்தினார்.
எவ்வளவோ முயன்றும் மோதிரத்தைக் கண்டுபிடிக்க இயலாமல், ஊர் திரும்பினார். ராமனிடம் தன் அனுபவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.
அப்போது ராமனின் அருகில் அதே தீர்த்தச் செம்பு இருந்தது; உள்ளே பார்த்தால் அனுமன் கொண்டு சென்ற முத்திரை மோதிரம் கிடந்தது. ‘இதெப்படி இங்கே வந்தது?’ என்றதும், ‘ஆஞ்சநேயா… என் பக்தனான உன் மனதில் கர்வம் தோன்றியவுடனேயே நான், நீ வந்த பாதையில் முனிவர் போல் அமர்ந்திருந்தேன். உன் கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன். ‘ராம’ மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததால், உன் கர்வம் நீங்கிற்று!’ என்றார்.
ராமபிரானின் பிறந்தநாளான ராமநவமியன்று நம்மிடமுள்ள துளியளவு கர்வம் கூட அகல ஸ்ரீராமனை வேண்டுவோம்.