டென்ஷனும்… ரத்த அழுத்தமும்..!

சிலர் எப்போதும் சிரிக்கவே மாட்டார்கள்… சிடுசிடுவென இருப்பார்கள். சிலர் எப்போதும் பரபரப்பாக… படபடப்பாக காணப்படுவார்கள். இதற்கு காரணம் ரத்தக் கொதிப்பு அல்லது ரத்த அழுத்தம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒருவருக்கு ரத்த அழுத்தமானது தொடர்ச்சியாக 120/80 மி.மீ. பாதரச அளவிற்கு மேல் இருந்தால், அந்த உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படும்.

முதுமைக்கேற்ப ரத்த அழுத்தம் உயரும் என்பது தவறு. குழந்தைப் பருவத்திலிருந்து சுமார் 18 வயது வரை, வளர்ச்சிக்கேற்ப ரத்த அழுத்தமும் உயரும். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் அவர்களது வயதிற்கேற்ப அல்லாமல் உயர்ந்து இருந்தால், அந்த ரத்த அழுத்தங்களும், ரத்தக் கொதிப்பிற்கான அழுத்தங்களாக கருதப்படும்.

ரத்தக் கொதிப்பிற்கு எந்த வயதினரும் ஆட்படலாம். இதற்கு வயது விதிவிலக்கே கிடையாது. கடுமையான உடல் உழைப்பை தொடர்ந்து செய்து வரும் ஆசிய, ஆப்பிரிக்க நாட்டு மக்களிடமும், அங்குள்ள முதியவர்களிடமும் ரத்தக் கொதிப்பு என்பது குறைவு! ஆனால் இன்றைக்கு மிதமிஞ்சிய உணவு, கொழுப்பு சத்து மற்றும் உப்புச் சத்து நிறைந்த உணவுகளை பெருமளவில் சாப்பிடுவோருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

அதோடு மட்டுமின்றி, உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கும் மன உளைச்சலோடு வாழ்கின்ற சூழ்நிலையில் உள்ளவர்களிடமும் ரத்தக்கொதிப்பு பெரும்பாலும் காணப்படுகிறது.

சீரான அழுத்தத்தோடு இதயத்திலிருந்து ரத்தம் வெளிப்படுவதால் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் திசுக்களுக்கும் ரத்தம் பரவலாக கிடைக்க ஏதுவாகிறது. அப்படி சீரான அழுத்தத்தோடு தொடர்ச்சியாக ரத்தம் பாய்ந்தால்தான் திசுக்கள் சீராக இயங்க முடியும். உடலில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ரத்த அழுத்த அளவுகளும் மாறுபடக் கூடியது. மிகவும் குறைந்த அளவு ரத்த அழுத்தமும், உயர்ந்த ரத்த அழுத்தமும் உடலின் நலத்திற்கு ஏற்புடையதல்ல.

ஆரம்பக் காலக்கட்டங்களில் மாறுபட்ட அளவுகளைக் காட்டிடும் ரத்த அழுத்தமானது, மன உளைச்சல், பதற்றம், பீதி, அச்சம், கோபம், திடீரென செய்யும் கடுமையான உடற்பயிற்சி, கடும் உடல் உழைப்பு, கடும் குளிர் போன்ற நிலைகளின் போது எதிர்பார்ப்பை விட, உயர்ந்தே காணப்படும்.

இப்படி உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படும் ரத்த அழுத்தமானது, நாளடைவில் நிலையானதாகி உயர் ரத்த அழுத்த அளவுகளிலேயே நிலைத்து விடும்.

ரத்த அழுத்த நிலைகளில் மாறுபட்ட அளவுகள், உயர்ந்தும், தாழ்ந்தும் இருப்பினும் உரிய பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் முறையாகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்வது நல்லது.

பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கான, ரத்தக் கொதிப்பிற்கான காரணம் எளிதில் புலப்படுவதில்லை. இந்த வகையில் 95 சதவீத அளவு வரையில் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் அடங்குவர்.

காரணத்தை கண்டறிய முடியாத ரத்த அழுத்தம் உடையவர்களின் பெற்றோர் மற்றும் முன்னோர் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள். அதிலும், அவர்களில் பெரும்பாலானவர்களிடம், உயர் ரத்த அழுத்தம் உண்டாவதற்கான மனநிலையில் உடல் செயல்பாடுகளும், மன வளமும் இயற்கையில் அமைந்திருப்பதை பெரும்பாலும் காணமுடியும்.

இப்படிப்பட்டவர்களிடம் மன உளைச்சல் அதிகமாக இருக்கும். அடிக்கடி கோபம் முட்டிக் கொண்டு வரும்.

இவர்களால் அமைதியான வாழ்க்கை வாழமுடியாது. நாம் சாப்பிடும் உணவில் அதிகளவில் உப்பைச் சேர்த்துக் கொள்வதால், ரத்த நாளங்களை முறுக்கேறச் செய்து ரத்த அழுத்தம் உயரும் என்பது அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்தினை அதிகமாக உடையவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என அறியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

One response

  1. thankyou for your information

%d bloggers like this: