திருமணத்தடை நீக்கும் நந்தீஸ்வரர்

மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அலைந்து திரிந்தும் உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ சரியான வரன் அமைய வில்லையா? அப்படியென்றால், நீங்கள் வந்து வழிபட வேண்டிய ஆலயம் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் ஆலயம்.

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவபெருமானே நந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார். பிருங்கி முனிவருக்கு அவர் நந்தி உருவத்தில் காட்சித் தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்குள்ள மலையில் இந்த பிருங்கி முனிவர் தவமிருந்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அதனாலேயே இந்த பகுதி `பிருங்கிமலை’ என்று அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் இன்றைய `பரங்கிமலை’யாக மாறிவிட்டது.

இந்த பகுதி ஆதம்பாக்கம் என்று அழைக்கப்படுவதற்கும் காரணம் சொல்கிறார்கள்.

ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவிலை கட்டிய சோழ மன்னர்களில் ஒருவனான `ஆதணி’ என்பவனின் பெயராலேயே இந்த ஊர் `ஆதணி’ என்று அழைக்கப்பட்டது. அதுவே, நாளடைவில் இன்றைய `ஆதம்பாக்கமாக’ மாறிவிட்டது என்கிறார்கள்.

இத்தலத்து இறைவன் நந்தீஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு திசை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்க… இறைவி ஆவுடைநாயகி தென்திசை நோக்கியவாறு அருள்கிறார்.

சுந்தர விநாயகர், நாகதேவதை, விஷ்ணு, பைரவர், சந்திரன், தட்சிணா ர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களும் இங்கு தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

இந்த கோவிலுக்கும், புகழ்பெற்ற திருவொற்றிர் வடிவுடையம்மன் கோவிலுக்கும் பண்டைய காலத்தில் நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றிர் ஆலய நித்திய பூஜைக்கு தேவையான புஷ்பங்களை பெறவும், அதற்காக பூச்செடிகள் சாகுபடி செய்யவும் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் சார்பில் மானியமாக நிலம் கொடுக்கப்பட்ட தகவல் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது.

ரோஜாப்பூ வழிபாடு

திருமணத்தடை நீங்க வைக்கும் விசேஷ தலமாக இந்த கோவில் அமைந்துள்ளதால், திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்வதை காண முடிகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள் வந்து 2 ரோஜாப்பூ மாலையை சிவன், நந்திக்கு சாற்றி வழிபட்டால் போதும். திருமணத்தடை நீங்கி, அவர்களது திருமணம் விரைவில் சிறப்பாக நடந்து முடிந்துவிடும் என்கிறார்கள்.

மேலும், கல்வி, திறமைக்கு ஏற்ற வேலை உள்ளிட்ட பக்தர்களின் எல்லா வேண்டுதல்களும் இங்கே வந்து வழிபடுவதன் மூலம்

நிறைவேறுகின்றன.வள்ளி-தெய்வானையுடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை வழிபட்டால், குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

சிவபெருமானுக்கு உரிய எல்லா விசேஷ தினங்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கோவிலுக்கு வந்து செல்ல சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.

%d bloggers like this: