Daily Archives: மார்ச் 26th, 2010

உதடு அசைந்தால் போதும்…நவீன செல்போன்

உதடு அசைந்தால் போதும்… இதுவும் நவீன செல்போன் பற்றிய செய்தி தான். பொது இடங்களில் செல்போனில் பேசுபவர்களில் சிலர் உரக்கப்பேசி ஊரைக்கூட்டி விடுவார்கள். அவர்களின் அந்தரங்க தகவல்களை பிறர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலையின்றி சத்தம் போட்டு பேசுவார்கள்.

இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தை ஜெர்மனியில் உள்ள காரல் ஸ்ரூகி தொழில்நுட்ப நிலையம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி உங்கள் உதடு அசைவை வைத்தே நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து எதிர்முனைக்கு உங்கள் குரலில் தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோ மையோகிராபி எனப்படும் தொழில்நுட்பம் மூலம் இது இயங்குகிறது. முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம்.

இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

இனி மவுன மொழியில் பேசலாம்.

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்…

அளவாகப் பேசுபவர்களே மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். இது தொடர்பாக அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். மகிழ்ச்சியாக இருப்பவர்கள், மகிழ்ச்சியற்றுக் காணப்படுபவர்கள் இவர்களின் உரையாடல்களில் உள்ள வேறுபாடுகள் குறித்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் `எலக்ட்ரானிக்கலி ஆக்டிவேட்டட் ரெக்கார்டர்’ என்ற கருவி பொருத்தப்பட்டது.

இந்தக் கருவி ஒருவரின் உடலில் 4 நாட்கள் பொருத்தப்பட்டிருந்தது. அப்போது 12.5 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உரையாடலை 30 விநாடிகள் பதிவு செய்து கொள்ளும். இப்படியாக 20 ஆயிரம் பதிவுகள் செய்யப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைவரும் வசதியானவர்கள், நல்ல ஆளுமைத் திறனுடையவர்கள்.

ஆய்வு முடிவில் சில புதுமையான தகவல்கள் வெளியாகின.

* வசதியாக வாழ்பவர்கள் குறைந்த நேரத்தையே தனிமையில் செலவிடுகிறார்கள். அனேக நேரங்களில் மற்றவர்களுடன் பேசுகிறார்கள்.

* இவர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான நேரத்தை தனிமையிலும், 70 சதவீத நேரத்தை மற்றவர்களுடன் பேசியும் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பொருள் பொதிந்த விஷயங்களை கூறுபவர்களாகவும், மற்றவர்களுடன் பேசும்போது மூன்றில் ஒரு பங்காக அளவைக் குறைத்தும் பேசுகிறார்கள்.

பெண்களுக்கு பிடித்த ஆண்கள்

காதலிக்கும் பெண்கள் இப்போதெல்லாம் ஆண்களின் வெளித்தோற்றத்தை பார்ப தில்லை. இயல்பு மாறாமல் யதார்த்தமாக பழகுகிறானா என்று தான் முதலில் பார்க்கின்றனர். ஒருவனது இயல்பை ஒரு பெண் விரும்ப ஆரம்பித்துவிட்டால், அவனை வெறுக்க மாட்டாள். இயல்பைத் தொலைத்து விடுவதால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகின்றன.

இன்றைய காதலன் அதிக நேரம் காதலியிடம் பேசுகிறான். அவள் நம்மை விட்டு விலகி விடக்கூடாது என்ற பயம் தான் இதற்கு காரணம். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டாலே செல்போனில் அதிகமாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு பதிலாக, காதலிக்கு அவ்வபோது குறுந்தகவலை அனுபுங்கள். `குட்மார்னிங்’, `ஹாய்’ என்று நீங்கள் அனுப்பும் சாதாரண வார்த்தைகள் கூட அவளுக்கு உங்களின் மீது அளவுகடந்த பாசத்தை ஏற்படுத்தும்.

உங்கள் காதலி உங்களுக்கு பிடித்த வகையில் தோடு, செயின், வளையல் போன்ற வற்றை அணிந்து வரும்போது அந்த அழகை பாராட்ட சிறிதும் தயங்கக் கூடாது. சிறு மாற்றம் தெரிந்தாலும் கூட அதை கண்டுபிடித்து பாராட்டி விட வேண்டும். உங்களது நடை, உடை பாவனை ஆகியவற்றில் அவள் குறை கண்டுபிடித்தாலும் நீங்கள் பதிலுக்கு அவளிடம் குறை கண்டு பிடிக்கக்கூடாது. அவள் உங்களை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றுவதற்காகத் தான் இவ்வாறு குறை சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களால் முடிந்த அளவிற்கு உங்கள் காதலிக்கு சிறு சிறு உதவிகளை செய்து கொண்டே இருங்கள். செய்யும் உதவிக்காக அவள் உங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவள் மறந்து போய்விடும் சூழலில் உள்ள சிறு விஷயங்களைக் கூட நீங்கள் நினைவூட்டுங்கள்.

உங்கள் காதலியை பற்றிய உண்மையான விவரங்கள் அவளது வீட்டிற்குச் செல்லும் போது தான் தெரியவரும். உங்களுக்குத் தெரியாத அவளது நடவடிக்கைகள், கருத்துக் கள், நம்பிக்கைகள் போன்ற இயல்பான குணங்கள் அங்கு தான் வெளிப்படும். அவளது குடும்பத்தில் உள்ளவர்களை பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது நலனையும் விசாரிங்கள்..

அறுசுவை உணவும்… அருமருந்தும்…!

ஆரோக்கியமும், நோயும்… நாம் உண்ணும் உணவை பொறுத்தே அமைகின்றன. தவறான உணவுகளை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, அதனால் உடம்பில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து நோய்கள் உடம்பை தாக்குகின்றன.

பழங்காலத்தில் உணவு உண்ணுவதை ஒரு பூஜை போல் கருதினார்கள். சூரியன் உதயமான பின்னர் ஒருமுறையும், சூரியன் மறைந்த பின்னர்

ஒருமுறையும் உணவு சாப்பிட்டனர். இடையில் காபி, டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை அவர்கள் சாப்பிடவில்லை. பலகாரங்கள், படங்களை ஏதாவது ஒரு பண்டிகையின் போது சமைத்து உண்டார்கள்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சாப்பிடும் எண்ணை பலகாரங்கள் ஜீரணிக்க… தீபாவளி லேகியம் சாப்பிட்டனர். நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்காவிட்டால் தான் பல நோய்கள் நமக்கு வருகின்றன.

நாம் சாப்பிடும் தவறான உணவு முறைகளால்தான் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத்தான் வள்ளுவர், உணவின் பெருமைகளையும், தவறான உணவினால் வரும் நோய்களையும் விளக்கமாக கூறியுள்ளார். மேலும் நாம் சாப்பிடும் உணவானது நமது மனச் செயல்பாட்டையும் நிர்ணயிக்கிறது.

அமைதியான வாழ்க்கைக்கு சாத்வீக குணம் நிறைந்த உணவுகளும், உணர்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு ரஜோ குணம் நிறைந்த உணவுகளும், அறியாமையில் முழ்குவதற்கு தமோ குணம் நிறைந்த உணவுகளும் காரணமாகின்றன என்று ஆயூர்வேதத்தில் கூறப்படுகிறது.

இயற்கையில் நமக்கு இரண்டு நோய்கள் உண்டு. அது பசி, நீர்வேட்கை. இதில் பசியை தணிப்பதற்கு உணவு மருந்தாகவும், நீர் தாகத்தைத் தணிக்கும் மருந்தாக தண்ணீரும் உள்ளன. பழங்காலத்தில் மனிதன் பலவிதமான உணவுகளையும், மாமிசங்களையும் மற்றும் காய்கறி, கனிகளையும் சாப்பிட்டு வாழ்ந்தான் என்றாலும், அவனுடைய உடல் உழைப்பு அனைத்தையும் சமன் செய்தது. இயற்கையைச் சார்ந்தே மனிதனுடைய உணவு அமைந்திருக்கிறது. உடம்பு உயிரைத் தாங்க வேண்டுமெனில் அதற்கு உணவு வேண்டும். இன்றைக்கு உணவு முறைகள் மாறிவிட்டன.

நமது நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான உணவு வகை இருந்து வருகிறது. வடக்கே கோதுமையை உண்கிறார்கள். சோறு மற்றும் காய்கறிகளையும் சில இடங்களில் சாப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவில் கோதுமை, சோளம், ராகி, கம்பு இவற்றால் செய்த ரொட்டி, அடை போன்றவை முக்கிய உணவு.

கர்நாடக மாநிலத்தில் நெல், சோளம், கம்பு, தினை, ராகி, சாமை முதலியவற்றை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரிசியும், சோளமும் முக்கிய உணவு என்றாலும் நாம் அரிசியை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.

சிறந்த உணவை சரியான வேளையில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், மனதில் புத்தி சாமர்த்தியமும், நற்பண்புகளும் உண்டாகின்றன. எந்த நோயும் அணுகாது. ஆயர்வேதத்தில் உணவுகள் அனைத்தும் அறுசுவையை அடிப்படையாக கொண்டுள்ளன. அறுசுவை பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பிறந்தது முதல் உடலுக்கு இனிப்புச் சுவை ஏற்றதாக இருக்கிறது. பொதுவாக இனிப்புச் சுவை உடலுக்கு பலத்தை அளிக்கும். எலும்புருக்கி நோயாளிகளுக்கு நல்லது. உடலை பருக்கச் செய்யும்.

புளிப்புச் சுவை பசியைத் தூண்டும். இருதயத்திற்கு நல்லது. ருசியை உண்டாக்கும். உஷ்ணவீரியம் உடையது. உவர்ப்பு பசியைத் தூண்டும். வேர்வையை உண்டாக்கும். அதிகமாக உப்பை சேர்த்தால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்.

கசப்புச் சுவை கொழுப்பை வற்ற வைக்கும். மலம், சிறுநீரை குறைக்கும். எளிதில் ஜீரணமாகும். குளிர்ச்சியானது, தொண்டையை சுத்தம் செய்யும்.

காரம் தோல்தடிப்பு, வீக்கம், தொண்டை நோய் ஆகியவற்றை போக்கும். கொழுப்பை உலரச் செய்யும். துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களைக் குறைக்கும். ஆனால் எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்பைக் குறைக்கும்.

ஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்

ஒவ்வொரு இலையிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை :
மரம்,செடி,கொடிகளின் இலைகளின் உருவங்களில் (நீள,அகலம்) தான் எவ்வளவு வேறுபாடு. கருவேல மரத்தின் மிகச்சிறிய இலைகள் ஒன்று அல்லது இரண்டு மில்லி மீட்டர் நீள அகலம் கொண்டவை. தேக்கு மரத்தின் இலைகள் அவற்றைக் காட்டிலும் நூறு மடங்குப் பெரியவை. வாழை இலைகள் ஆயிரம் மடங்குப் பெரியவை. எல்லா இலைகளிலுமே ஒரு உணவுத்தொழிற்சாலை உள்ளது. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (க்ளோரோஃபில்) சூரிய ஒளியிலிருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றிலுள்ள கரியமில வாயு மற்றும் வேரிலிருந்து உறிஞ்சப்ப்பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் ( மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம்.
சத்து தண்டுப்பகுதி வழியாக செடி மரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.நெல்மணிகள், கரும்பின் இனிப்பு, மாம்பழம், முந்திரி, பாதாம், பாகற்காய் எல்லாவற்றுக்குமே இந்த உணவுதான் ஆதாரம்.
இந்த உணவு உற்பத்தித் திறன் காரணமாகத் தாவரங்கள் தாமும் வாழ்ந்து ஏனைய உயிரினங்களையும் ஆடு, மனிதன் உள்பட வாழ வைக்கின்றன.

ஒவ்வொரு இலையிலும் ஓர் ஏர்கூலர் மற்றும் நுரையீரல் :
சர்க்கரை அல்லது மாவுச்சத்தின் உபரிப் பொருளாக ஆக்சிஜன் (பிராண வாயு) இலைகளின் அடிப்பகுதியின் மேற்பரப்பில் உள்ள ஸ்டோமேட்டா என்றழைக்கப்படும் செல்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
கூடவே சற்று உபரி நீரும் ஆவியாக வெளியேறுகிறது. இதன் காரணமாகவே நாம் வெயில் பொழுதில் மரத்தடியில் நாம் ஒதுங்கும்போது புத்துணர்வு பெறுகிறோம், குளிர்ச்சியும் உண்டு.
இதே ஸ்டோமேட்டா செல்கள்தான் ஒளிச்சேர்க்கை நிகழாக சமயங்களில் சூரியஒளி இல்லாத பகல்பொழுதிலும், இரவு நேரங்களிலும் ஏனைய உயிரினங்களைப் போல காற்றைச் சுவாசிக்கின்றன.
அதாவது காற்றிலுள்ள பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அதனால் இரவு நேரங்களில் மரத்தடியில் இளைப்பாறும்போது புத்துணர்வு தோன்றாது.

புளிய மரமும், பேயும் :
கொஞ்சம்கூடக் காற்றின் அசைவு இல்லாத சமயங்களில் பெரிய அடர்ந்த புளியமரம் போன்ற மரத்தடியில் உறங்கினால் உங்களைப் பேய் அடித்துக் கொல்லும் வாய்ப்பு உண்டு என்றே பாமர மக்கள் நம்புகிறார்கள்.

அதன் அறிவியல் அடிப்படையிலான விளக்கம் :
காற்று அசைவு இல்லாவிடினும் இலைகள் சுவாசிக்கும்போது வெளியேறும் கரியமிலவாயு காற்றைவிடச் சற்று கனமானது. கரியமில வாயு காற்றில் சாதாரணமாக 0.5 விழுக்காடுதான் உள்ளது. இரவு நேரங்களில் அதுவும் காற்றின் சலனம் இல்லாவிடில் மரத்தடியில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிப்பதால் நமக்கு மூச்சு அடைக்கும். உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களின் உயிரை எடுப்பது இந்தப் பேய்தான்.
ஒவ்வொரு மரத்திலும், பொறியியல் கட்டிடக்கலை தொழில்நுட்பம் ( எஞ்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர்):
ஆஸ்திரேலியா நாட்டில் வளரும் சில தைல மரங்கள் (யூக்கலிப்டஸ்) 300 அடி உயரம் வளரக் கூடியவை. அமெரிக்க கண்டத்தில் வளரும் சேக்கோவியா மரங்கள் 400 அடிக்கும் கூடுதலாக வளர்கின்றன. அவற்றை நாம் பார்த்ததில்லை.
நாம் பார்த்துள்ள, பார்த்து வரும் பெரியபுளியமரம் அல்லது வேப்பமரங்கள் 60-70 அடி உயரம் வளர்கின்றன. 20-30 அடி உயரம் உள்ள தடிமனான அடிமரம் பிறகு அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் கிளைகள், கொப்புகள், அவற்றில் வளரும் இலைகள், காய்க்கும் காய்கள், பழங்கள் எல்லாம் 60-7- டன்களுக்கு மேல் எடை கொண்டவை. காற்றுக்கும் வளைந்து கொடுத்து அதே சமயம் உறுதியாக நிற்பவை.
இந்த ஒட்டுமொத்த எடையைப் பூமிக்கடியில் வேர்கள் ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போல் தாங்கிக் கொள்கின்றன. அடிமரத்திலிருந்து பிரியும் கிளைகள், கோப்புகள் எல்லாமே ஒரு கணிதம்.- குறிப்பாக ஜியோமிதி கணித அடிப்படையில் பிரிந்து செல்கின்றன. அதாவது கட்டிடக்கலை வல்லுநர் திட்டமிடுவதுபோல மரமும் ஒரு திட்டத்துடன்தான் கிளைகளைப் பரப்புகிறது.
அதே சமயம் இலைகளுக்குப் போதுமான அளவில் சூரிய ஒளி கிடைப்பதையும் உறுதி செய்து கொள்கிறது. அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்ட ஒளிச்சேர்க்கை உணவு தயாரிப்பு எல்லாமே நிகழ முடியும்.

எக்ஸெல் பார்மட்டிங் காப்பி

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். அதில் நீங்கள் அமைத்த சார்ட் மிகச் சிறப்பான வண்ணங்களில், அழகான தேர்ந்தெடுத்த எழுத்துக்களால் அமைந்த சொற்களில், வெவ்வேறு அம்சங்கள் அழகாகப் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டுவிட்டது. அதனைப் பார்த்து நீங்களே உங்கள் வேலைத்திறன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள். ஏனென்றால் பல மணித்துளிகள் செலவழித்துச் செய்த அமைப்பு அது. அதே அமைப்பில் மற்ற சார்ட்களும் அமைய வேண்டும் என்பதே உங்கள் விருப்பம். அதற்காக ஒவ்வொரு சார்ட்டிற்கும் இதே நேரத்தினை நீங்கள் செலவழிக்க வேண்டியதில்லை. இந்த பார்மட் விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் தயாரிக்கும் புதிய சார்ட்டிலும் அப்படியே அமைக்கப்பட எளிய வழி ஒன்றை எக்ஸெல் தருகிறது.
1. முதலில் எந்த சார்ட்டின் பார்மட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ, அதனைத் திறக்கவும். அந்த சார்ட்டை காப்பி செய்திடவும்.
2. அடுத்து எந்த சார்ட்டில் இந்த பார்மட் வழிகள் அனைத்தும் அமைக்கப்பட வேண்டுமோ, அதனைத் திறக்கவும். இனி Edit மெனு திறக்கவும். அதில் Paste Special பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Format பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் OK கிளிக் செய்திடவும்.
3. இரண்டாவது சார்ட்டில், முதல் சார்ட்டில் இருந்த அனைத்து பார்மட் வழிகளும் பின்பற்றப்பட்டு, நீங்கள் விரும்பும் வகையிலான தோற்றத்தினைக் காட்டும்.

டைனோசர் நாடு இந்தியா

6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பூமியில் டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. பிரமாண்ட பல்லி இனமான இவைகளைப் பற்றி இப்போதும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவில் டைனோசர் குட்டியை பிடித்து தின்ற நிலையில் இறந்த அனகோண்டா பாம்பின் புதை படிவங்கள் கிடைத்தன.

இதையடுத்து டைனோசர்கள் அதிகமாக வாழ்ந்த நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் டைனோசரின் தடயங்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது. 1828ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ அதிகாரி வில்லியம் ஸ்லீமேன் என்பவர் இந்த படிவங்களை கண்டுபிடித்தார். ஜபல்பூரில் கண்டெடுக்கப்பட்ட இது என்னவென்று தெரியாமல் இருந்துவந்தது. 1859ம் ஆண்டு இந்த இனத்துக்கு டைடானோசரஸ் இன்டிகஸ் என்று பெயரிடப்பட்டது.

அதன்பிறகு இந்தியாவில் டைனோசரின் புதை படிமங்கள், முட்டை ஓடுகள், நன்கு வளர்ச்சி அடைந்த முட்டைகள், சாணங்கள், காலடித் தடங்கள் என பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன. கடந்த 1981ம் ஆண்டு குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் ஒரு புதை படிவம் கிடைத்தது. அதை நீண்ட காலமாக ஆராய்ந்தபிறகுதான் டைனோசரை அனகோண்டா வேட்டையாடியதன் புதைபடிவம் என்று உறுதியானது.

சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த புவியியல் கணக்கெடுப்பு குழு (ஜி.எஸ்.ஐ.), இங்கு கிடைத்துள்ள புதைபடிவங்களை ஆராய்ந்து அதன் சிறப்பை குறிக்கும் வகையில் இந்தியாவை டைனோசர் நகரமாக அறிவித்தது. இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் டைனோசரஸ் முட்டைகள் கிடைத்துள்ளன. இவற்றில் 10 ஆயிரம் முட்டைகள் குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் கிடைக்கப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவம் பார்த்த பேரரசி!-ஆன்மீகம்


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாத்தான்குளம். ஒரு காலத்தில் இந்த ஊருக்கு திருமலைக்கொழுந்துபுரம் என்று பெயர். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு, அழகம்மாள், அமராவதி என இரண்டு மகன்கள் இருந்தனர்.
ஆண் வாரிசு இல்லாததால் மகன்களை ஆண்மக்களைப் போலவே வளர்த்தார் மன்னர். காலங்கள் ஓடின. இளவரசிகள் பருவ வயதை அடைந்தனர். மூத்த மகளுக்கு வரன் தேடத் துவங்கினார் மன்னர். ஆனால், விதியோ வேறு விதமாக பயணித்தது.
கொடுங்கோலன் ஒருவன், திருமலைக்கொழுந்துபுரம் மக்களை ரொம்பவே கொடுமைப்படுத்தி வந்தான். ஒரு நாள்.. குதிரையில் வந்து கொண்டிருந்தவன், இளவரசி அழகம்மாளைக் கண்டு, அவளது அழகில் மயங்கினான். இவனை அடைந்தே தீருவது என முடிவு செய்தான். நாளடைவில் அழகம்மாளும் அவனை விரும்பத் துவங்கினான். அதேநேரம், தந்தை எதிர்பாரோ… என்ற பயமும் அவளுக்குள் இருந்தது. எவரும் அறியாதபடி இருவரும் சந்தித்துப் பேசி வந்தனர். தங்கை அமராவதிக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும்.
இவனின்றி நமக்கு வேறு வாழ்க்கை இல்லை என உறுதியுடன் வாழ்ந்த அழகம்மாளுக்கு ஒரு தருணத்தில் கொடுங்கோலனின் சுயரூபம் தெரிந்தது; அதிர்ந்து போனாள் அழகம்மாள். ச்சே… இவனையா விரும்பினோம்; இவனுக்காகவா சகலத்தையும் விட்டு வரத் துணிந்தோம் என்று கலங்கினாள். எனினும் மனதைத் தேறறியபடி, காதலனை நல்வழிப்படுத்த முனைந்தாள். ஆனால், அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. காதலனை திருத்தவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவித்தவள், அரண்மனையிலேயே முடங்கிப் போனாள். ஒருநாள் அரண்மனையில் இருந்து கிளம்பியவள், ஊருக்கு வெளியே உள்ள புனிய வனத்துக்குச் சென்று குழி தோண்டினாள். அதனுள் இறங்கி அமர்ந்து ஜீவ சமாதியானாள்! சகோதரியின் முடிவை அறிந்து பதறி ஓடி வந்த அமாராவதியும், அருகில் உள்ள குளத்தில் இறங்கி உயிரை விட்டாள்.
இதையறிந்த ஊர்மக்கள், குளக்கரையில் திரண்டு கதறினர். இளவரசியின் சாவுக்கு காரணம் கொடுங்கோலனே என எண்ணியவர்கள், அவன் மீது ஆவேசம் கொண்டனர். அவனைக் கொள்வது என்று முடிவு செய்தவர்கள், அவன் வரும் வழியில் மிகப்பெரிய பள்ளம் ஒன்றை வெட்டி இலைதழைகளைப் போட்டு மூடிவைத்தனர்.
வழக்கம்போல் அந்த வழியே குதிரையில் வந்த கொடுங்கோலன், பள்ளம் இருப்பதை அறியாமல் குதிரையுடன் உள்ளே விழுந்தான். அந்தப் பள்ளத்திலேயே வைத்து அவனை அடித்துக் கொன்றனர் ஊர்மக்கள்!
சாத்தான்குளத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஊர் விஜயாபதி. தற்போது சாத்தான்குளத்தில் வசக்கும் குறிப்பிட்ட இனத்து மக்கள், அந்தக் காலத்தில் விஜயாபதியில் வசித்தனராம். அவர்களில் மூதாட்டி ஒருவரின் கனவில் தோன்றிய அழகம்மாள், வனத்துக்குள் கன்னிதெய்வமாக இருக்கிறேன். நீயும் உன் வாரிசுகளும் வனத்தில் எனக்கு ஆலயம் எழுப்பி வழிபாடுகள். நீங்கள் இங்கே இருப்பதை விட மிகச் செழிப்பாக உங்களை வாழ வைக்கிறேன் என்று வாக்கு தந்தாளம்.
இதில் நெகிழ்ந்து போன மூதாட்டி சொந்தபந்தங்களுடன் சாத்தான்குளத்துக்கு வந்து சேர்ந்தான். கனவில் அழகம்மாள் குறிப்பிட்ட அந்தப் புளிய வனத்தின் ஓரிடத்தில், லேசான வெடிப்பு தெரிந்தது. அந்த இடத்தை தோண்டி பார்க்க… அழகிய சிலை ஒன்று கிடைத்தது! உடனடியாக அந்த இடத்தில் பனை ஓலையால் குடிசை வேய்ந்து சிறு கோயில் அமைந்து, அம்மன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர்.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்… கர்ப்பிணி ஒருத்தி அழகம்மன் கோயில் வழியே சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தான். திடீரென பிரசவ வலியெடுக்க அலறித் துடித்தாள். அருகில் பனைமரம் ஒன்றில் பதநீர் இறக்கிக் கொண்டிருந்தவரிடம் உதவிகேட்டாள். அவரோ அருகில் இருந்த கோயில் குடிசையைக் காட்டி அந்தக் குடிசைக்குள் சென்று படுத்துக்கொள் என்று குறும்புத்தனமாகச் சொன்னாராம்! அதன்படி குடிசைக்குள் சென்றவள் அதிர்ந்தாள். அது கோயில் என்பதை உணர்ந்தவள், கோயிலுக்குள் பிரசவித்தால் தீட்டாகிவிடுமே என அவள் கலங்கினாள். அந்த வேளையில் பயப்படாதே! உனக்கு நானே பிரசவம் பார்க்கிறேன் என்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாளாம் அழகம்மன். அவ்வளவுதான்.. அப்படியே மயங்கிச் சரிந்தாள் அந்தப் பெண்மணி.
மீண்டும் அவள் கண்விழித்தபோது அருகில் அழகிய ஆண் குழந்தை இருப்பதைக் கண்டாள். மெள்ள எழுந்து குழந்தையை நெஞ்சில் அணைத்தபடி வெளியே வந்தாள். கோயிலை திரும்பிப் பார்த்தாள். அவ்வளவுதான்… அந்தக் கோயில் மொத்தமும் தீப்பிடித்து எரிந்தது. அதே நேரம் பனை மரமும் முறிந்து விழ பதநீர் இறக்கிக் கொண்டிருந்தவரும் கீழே விழுந்து இறந்தார்.
கோயில் எனத் தெரிந்தும் கர்ப்பிணியை கோயிலுக்குள் போகச் சொன்ன குற்றத்துக்காக அவரை பலி வாங்கியதுடன் பிரசவம் பார்த்ததில் தீட்டவாகிவிட்டதால், கோயிலையும் தீக்கிரையாக்கிவிட்டாள் அழகம்மன் என ஊரே பேசியது. பிறகு கோயில் புதுப்பிக்கப்பட்டதாம்! சாத்தான்குளம் பகுதியில் உருவான முதல் கோயில் இதுதானாம். மிகவும் சிறியதாக இருந்த கோயிலை சமீபத்தில் விரிவுபடுத்தி கும்பாபிஷேகம் செய்துள்ளனர். கருவறையில் பத்து கரங்களுடன் சூலாயுதம் ஏந்தியபடி காட்சி தருகிறாள் அழகம்மன். அருகில் உற்ஸவ விக்கிரகம். முன் மண்டபத்தில் ராஜகன்னி, சப்தகன்னிகள், ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீகௌமாரி, சண்டிகேஸ்வரி, வைஷ்ணவி, விநாயகர், பிராம்மினி, நர்த்தன கணபதி ஆகியோரை தரிசிக்கலாம். கோயிலுக்கு எதிரேயுள்ள மண்டபத்தில் பேச்சியம்மன், பிரம்ம சக்தி, சுடலைமாடன், மாடத்தி மற்றும் பனையடியார் உள்ளனர்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழாக்கள் ஏதுமில்லை எனினும் நவராத்திரி பத்து நாட்களும் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம்தான்! தினமும் ஓர் அலங்காரத்தில் காட்சி தருவாள் அழகம்மன். 11ஆம் நாள் சப்பரத்தில் ஏறி வீதியுலா வருகிறாள் அம்மன்!
தமிழ்மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று அழகம்மன் சந்நிதியில் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெறுகிறது. அழகம்மன் சைவக் கடவுளாக விளங்குவதால், இங்கே பலியிடுவது இல்லை. திருமணத்தடை, குழந்தை பாக்கியம் விரும்புவோர் இங்கு வந்து பிரார்த்திக்க… அனைவருக்கும் அருள்கிறாள் அழகம்மன்! இன்றும் சாத்தான்குளம் பகுதியில்…அழகு அழகன், அழகம்மாள், அழகப்பன் என வீட்டுக்கு ஒருவரையேனும் பார்க்கலாம். இதுவே அழகம்மனின் அருளுக்குச் சாட்சி!