பிரசவம் பார்த்த பேரரசி!-ஆன்மீகம்


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாத்தான்குளம். ஒரு காலத்தில் இந்த ஊருக்கு திருமலைக்கொழுந்துபுரம் என்று பெயர். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு, அழகம்மாள், அமராவதி என இரண்டு மகன்கள் இருந்தனர்.
ஆண் வாரிசு இல்லாததால் மகன்களை ஆண்மக்களைப் போலவே வளர்த்தார் மன்னர். காலங்கள் ஓடின. இளவரசிகள் பருவ வயதை அடைந்தனர். மூத்த மகளுக்கு வரன் தேடத் துவங்கினார் மன்னர். ஆனால், விதியோ வேறு விதமாக பயணித்தது.
கொடுங்கோலன் ஒருவன், திருமலைக்கொழுந்துபுரம் மக்களை ரொம்பவே கொடுமைப்படுத்தி வந்தான். ஒரு நாள்.. குதிரையில் வந்து கொண்டிருந்தவன், இளவரசி அழகம்மாளைக் கண்டு, அவளது அழகில் மயங்கினான். இவனை அடைந்தே தீருவது என முடிவு செய்தான். நாளடைவில் அழகம்மாளும் அவனை விரும்பத் துவங்கினான். அதேநேரம், தந்தை எதிர்பாரோ… என்ற பயமும் அவளுக்குள் இருந்தது. எவரும் அறியாதபடி இருவரும் சந்தித்துப் பேசி வந்தனர். தங்கை அமராவதிக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும்.
இவனின்றி நமக்கு வேறு வாழ்க்கை இல்லை என உறுதியுடன் வாழ்ந்த அழகம்மாளுக்கு ஒரு தருணத்தில் கொடுங்கோலனின் சுயரூபம் தெரிந்தது; அதிர்ந்து போனாள் அழகம்மாள். ச்சே… இவனையா விரும்பினோம்; இவனுக்காகவா சகலத்தையும் விட்டு வரத் துணிந்தோம் என்று கலங்கினாள். எனினும் மனதைத் தேறறியபடி, காதலனை நல்வழிப்படுத்த முனைந்தாள். ஆனால், அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. காதலனை திருத்தவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவித்தவள், அரண்மனையிலேயே முடங்கிப் போனாள். ஒருநாள் அரண்மனையில் இருந்து கிளம்பியவள், ஊருக்கு வெளியே உள்ள புனிய வனத்துக்குச் சென்று குழி தோண்டினாள். அதனுள் இறங்கி அமர்ந்து ஜீவ சமாதியானாள்! சகோதரியின் முடிவை அறிந்து பதறி ஓடி வந்த அமாராவதியும், அருகில் உள்ள குளத்தில் இறங்கி உயிரை விட்டாள்.
இதையறிந்த ஊர்மக்கள், குளக்கரையில் திரண்டு கதறினர். இளவரசியின் சாவுக்கு காரணம் கொடுங்கோலனே என எண்ணியவர்கள், அவன் மீது ஆவேசம் கொண்டனர். அவனைக் கொள்வது என்று முடிவு செய்தவர்கள், அவன் வரும் வழியில் மிகப்பெரிய பள்ளம் ஒன்றை வெட்டி இலைதழைகளைப் போட்டு மூடிவைத்தனர்.
வழக்கம்போல் அந்த வழியே குதிரையில் வந்த கொடுங்கோலன், பள்ளம் இருப்பதை அறியாமல் குதிரையுடன் உள்ளே விழுந்தான். அந்தப் பள்ளத்திலேயே வைத்து அவனை அடித்துக் கொன்றனர் ஊர்மக்கள்!
சாத்தான்குளத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஊர் விஜயாபதி. தற்போது சாத்தான்குளத்தில் வசக்கும் குறிப்பிட்ட இனத்து மக்கள், அந்தக் காலத்தில் விஜயாபதியில் வசித்தனராம். அவர்களில் மூதாட்டி ஒருவரின் கனவில் தோன்றிய அழகம்மாள், வனத்துக்குள் கன்னிதெய்வமாக இருக்கிறேன். நீயும் உன் வாரிசுகளும் வனத்தில் எனக்கு ஆலயம் எழுப்பி வழிபாடுகள். நீங்கள் இங்கே இருப்பதை விட மிகச் செழிப்பாக உங்களை வாழ வைக்கிறேன் என்று வாக்கு தந்தாளம்.
இதில் நெகிழ்ந்து போன மூதாட்டி சொந்தபந்தங்களுடன் சாத்தான்குளத்துக்கு வந்து சேர்ந்தான். கனவில் அழகம்மாள் குறிப்பிட்ட அந்தப் புளிய வனத்தின் ஓரிடத்தில், லேசான வெடிப்பு தெரிந்தது. அந்த இடத்தை தோண்டி பார்க்க… அழகிய சிலை ஒன்று கிடைத்தது! உடனடியாக அந்த இடத்தில் பனை ஓலையால் குடிசை வேய்ந்து சிறு கோயில் அமைந்து, அம்மன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர்.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்… கர்ப்பிணி ஒருத்தி அழகம்மன் கோயில் வழியே சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தான். திடீரென பிரசவ வலியெடுக்க அலறித் துடித்தாள். அருகில் பனைமரம் ஒன்றில் பதநீர் இறக்கிக் கொண்டிருந்தவரிடம் உதவிகேட்டாள். அவரோ அருகில் இருந்த கோயில் குடிசையைக் காட்டி அந்தக் குடிசைக்குள் சென்று படுத்துக்கொள் என்று குறும்புத்தனமாகச் சொன்னாராம்! அதன்படி குடிசைக்குள் சென்றவள் அதிர்ந்தாள். அது கோயில் என்பதை உணர்ந்தவள், கோயிலுக்குள் பிரசவித்தால் தீட்டாகிவிடுமே என அவள் கலங்கினாள். அந்த வேளையில் பயப்படாதே! உனக்கு நானே பிரசவம் பார்க்கிறேன் என்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாளாம் அழகம்மன். அவ்வளவுதான்.. அப்படியே மயங்கிச் சரிந்தாள் அந்தப் பெண்மணி.
மீண்டும் அவள் கண்விழித்தபோது அருகில் அழகிய ஆண் குழந்தை இருப்பதைக் கண்டாள். மெள்ள எழுந்து குழந்தையை நெஞ்சில் அணைத்தபடி வெளியே வந்தாள். கோயிலை திரும்பிப் பார்த்தாள். அவ்வளவுதான்… அந்தக் கோயில் மொத்தமும் தீப்பிடித்து எரிந்தது. அதே நேரம் பனை மரமும் முறிந்து விழ பதநீர் இறக்கிக் கொண்டிருந்தவரும் கீழே விழுந்து இறந்தார்.
கோயில் எனத் தெரிந்தும் கர்ப்பிணியை கோயிலுக்குள் போகச் சொன்ன குற்றத்துக்காக அவரை பலி வாங்கியதுடன் பிரசவம் பார்த்ததில் தீட்டவாகிவிட்டதால், கோயிலையும் தீக்கிரையாக்கிவிட்டாள் அழகம்மன் என ஊரே பேசியது. பிறகு கோயில் புதுப்பிக்கப்பட்டதாம்! சாத்தான்குளம் பகுதியில் உருவான முதல் கோயில் இதுதானாம். மிகவும் சிறியதாக இருந்த கோயிலை சமீபத்தில் விரிவுபடுத்தி கும்பாபிஷேகம் செய்துள்ளனர். கருவறையில் பத்து கரங்களுடன் சூலாயுதம் ஏந்தியபடி காட்சி தருகிறாள் அழகம்மன். அருகில் உற்ஸவ விக்கிரகம். முன் மண்டபத்தில் ராஜகன்னி, சப்தகன்னிகள், ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீகௌமாரி, சண்டிகேஸ்வரி, வைஷ்ணவி, விநாயகர், பிராம்மினி, நர்த்தன கணபதி ஆகியோரை தரிசிக்கலாம். கோயிலுக்கு எதிரேயுள்ள மண்டபத்தில் பேச்சியம்மன், பிரம்ம சக்தி, சுடலைமாடன், மாடத்தி மற்றும் பனையடியார் உள்ளனர்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழாக்கள் ஏதுமில்லை எனினும் நவராத்திரி பத்து நாட்களும் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம்தான்! தினமும் ஓர் அலங்காரத்தில் காட்சி தருவாள் அழகம்மன். 11ஆம் நாள் சப்பரத்தில் ஏறி வீதியுலா வருகிறாள் அம்மன்!
தமிழ்மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று அழகம்மன் சந்நிதியில் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெறுகிறது. அழகம்மன் சைவக் கடவுளாக விளங்குவதால், இங்கே பலியிடுவது இல்லை. திருமணத்தடை, குழந்தை பாக்கியம் விரும்புவோர் இங்கு வந்து பிரார்த்திக்க… அனைவருக்கும் அருள்கிறாள் அழகம்மன்! இன்றும் சாத்தான்குளம் பகுதியில்…அழகு அழகன், அழகம்மாள், அழகப்பன் என வீட்டுக்கு ஒருவரையேனும் பார்க்கலாம். இதுவே அழகம்மனின் அருளுக்குச் சாட்சி!

%d bloggers like this: