பேரின்பம் பெற… (ஆன்மிகம்)

மனம் எதில் எல்லாமோ ஈடுபடுகிறது; அப்படி ஈடுபடும் எல்லா விஷயங்களுமே மனதை திருப்தி செய்து விடுகிறதா என்று பார்த்தால், அதுதான் இல்லை. இதை விட இன்பமானது இன்னொன்று இருக்கிறதா என்று தேடுகிறது. இப்படி எத்தனை நாள் எதைத் தேடுவது? பிரச்னை தான். ஆனால், பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, பகவத் தியானத்தில் திளைத்து விட்டால், அந்த பரமாத்ம சொரூபத்தை தியானிக்க ஆரம்பித்து விட்டால், மனம் வேறு எதிலுமே செல்லாது; வேறு எதையுமே விரும்பாது. இது ஞானிகளுடைய அனுபவம். இதையே பரமானந்தம் என்கின்றனர். இந்த ஆனந்தம் எப்படி இருக்குமென்று கேட் டால் சொல்லத் தெரியாது! அனுபவித்தால் தான் தெரியும். இப்படிப்பட்ட பரமானந்தத்தை அனுபவிப்பவர்கள் மற்ற சிற்றின்பங்களை பற்றி சிந்திக்கவும் மாட்டார்கள்; அதில் ஈடுபடவும் மாட்டார்கள்.
கிணறு மட்டும் உள்ள ஊரில் இருப்பவன் கிணற்று நீரைக் கொண்டு தான் திருப்தியடைய முடியும். ஆனால், நதி நீர் உள்ள இடத்தில் இருப்பவன் நதி நீரைத் தான் விரும்புவான். அதுபோல அஞ்ஞானத்தில் உள்ளவன் உலக இன்பங்களிலேயே திருப்திபடுகிறான். ஞானியாக உள்ளவன் பேரின்பத்தையே நாடுகிறான்; பேரின்பத்திலேயே திருப்தியடைகிறான். இப்படி உலக சுகங்களை விட்டு, தியானம், தவம் மூலம் பேரின்ப நிலையை அடையவே மகான்கள் முயன்றிருக்கின்றனர். பட்டினத்தாரும், பத்ரகிரியும், சகல செல்வங்களையும், சுகங்களையும் துறந்து சன்னியாசிகளாகி, பேரின்பம் எய்தனர் என்பது சரித்திரம்.
முற்காலத்தில் அரசர்கள் எல்லாரும், பிள்ளைக்கு வயது வந்ததும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, மரவுரி தரித்து கானகம் சென்று தவம் செய்து நற்கதி பெற்றனர். அவர்களெல்லாம் சிற்றின்ப வீட்டை விட்டுப் பேரின்ப வீட்டை அடையச் சென்றனர்; அடைந்தனர்.
நாம், இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு சின்ன வீட்டில் குடியிருந்து, ஓடி, ஆடி சம்பாதித்து, எதையெல்லாமோ சாப்பிட்டு, காலங்கழிப்பதையே சுகம் என்று நினைக்கிறோம். ஆனால், பேரின்ப வீட்டின் சுகம் எப்படியிருக்கும் என்பது அனுபவப் பூர்வமாகத் தெரியாவிட்டாலும் பெரியோர், வேத சாஸ்திர புராணங்கள் சொல்வதன் மூலமாகவாவது யோசித்துப் பார்ப்பதுமில்லை; அதை அடைய முயற்சி செய்வதும் இல்லை.
முப்பத்தியிரண்டு பிளாட்கள் கொண்ட ஒரு அபார்ட்மென்ட் கட்டடத்தில் ஓரு பிளாட் வாங்கி, அந்த ஒரு பிளாட்டில் குடும்பம் நடக்கிறது; இதையே பெரிய இன்பமாக நினைக்கிறான்.
வாசலில் ஒரு பிச்சைக்காரன், ‘எட்டடி குச்சுக்குள்ளே கந்தைய்யா எத்தினி நாளிருப்பேன்?’ என்று பாடிவிட்டு, கையிலிருந்த கட்டையை டர்…ர்…ர் டர்…ர்… என்று அடிக்கிறான். ஒரு பெரியவர், உள்ளேயிருந்து வருகிறார். இவர் கிராமத்தில் பெரிய வீட்டில் வாழ்ந்தவர். டவுனில் பையன் பிளாட் வாங்கி குடித்தனம் நடத்துகிறான்; சில நாள் தங்கிவிட்டுப் போகலாம் என்று வந்திருந்தார். இவர் வெளியில் வந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு ஐம்பது பைசா போட்டார்!
அவனைப் பார்த்து, ‘நீ சரியாக பாடவில்லை. அதனால், ஐம்பது பைசாதான்; சரியாக பாடியிருந்தால் ஒரு ரூபாய் போட்டிருப்பேன்!’ என்றார். அவனுக்குப் புரியவில்லை… ‘எப்படி பாடியிருக்க வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு பெரியவர், ‘எட்டடிக் குச்சுக்குள்ளே கந்தைய்யா… எத்தினி பேரிருப்போம் முருகைய்யா… எத்தினி பேரிருப்போம்!ன்னு பாடணும்…’ என்று பாடிக் காட்டினார். அவனுக்கும் அது சரியென்றுபட்டது. அதாவது, இந்த சிறிய வீட்டையும், இந்த அற்ப சுகத்தையுமே பெரிதாக நினையாமல், அந்த பேரின்ப வீட்டையும், பேரின்ப சுகத்தையும் அடையவே மனிதன் பாடுபட வேண்டும், அடைய வேண்டும் என்றனர்; முடியுமா பாருங்கள்.

%d bloggers like this: