கோடை விடுமுறை தொடங்கியாச்சு! சுற்றுலா பிளான்

கோடை விடுமுறை தொடங்கியாச்சு! கிட்டத்தட்ட அனைவருமே எங்கேயாவது சுற்றுலா அல்லது சொந்த ஊர் என்று வெளியூர் செல்ல திட்டமிடுவார்கள். விடுமுறை கொண்டாட்டம் என்பதில் பயணம் தான் பிரதானம். அப்படி பயணம் செய்யும் போது கவனமாக இருந்தால்… பயணம் கலக்கமின்றி கலகலப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை! அதற்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டால் போதும்.   எத்தனை பேர், எங்கெங்கு போகி றீர்கள்? என்பதை எல்லோரும் சேர்ந்து முடிவெடுங்கள். அந்த இடங்களுக்கு போய், வரும் செலவு பட்ஜெட்டுக்குள் வருகிறதா? என்பது மிக முக்கியம். பயணம் செய்யும் நாட்களில் வீட்டு பெண்களுக்கு `பர்சனல்’ பிரச்சினைகள் உள்ளதா? என்பதை தெரிந்து அதற்கேற்ப சுற்றுலாவை திட்டமிடுவது நல்லது. பஸ், ரெயில், விமானம் எதில் பயணம் என்று முடிவெடுத்த பின்னர், உடனடியாக பயண ஏற்பாடுகளை தொடங்கி விடவும்.   வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் உங்களோடு கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஒருவர் பொறுப்பாக கவனித்து வந்தால் பதட்டம் இருக்காது. இதனால் எந்த பொருளும் `மிஸ்’ ஆகாது. பயணத்தில் நேரம் தவறாமை மிகவும் முக்கியம். குடும்பத்துடன் செல்லும்போது உங்களுக்காக… மற்ற அனைவருமே காத்திருக்கும் சூழல் கசப்பை ஏற்படுத்தும். நெருங்கிய உறவுகளுடன் செல்லும்போது செலவுகளை பகிர்ந்து கொள்வது நல்லது.   சுற்றுலாத் தலங்களில் கூடுமான வரைக்கும் பணத்தை அதிகமாகக் கையில் வைத்திருக்காமல், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டில் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். திருட்டு மற்றும் தொலைந்து போவதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கலாம். பணம் தொலைந்தால், தேவையில்லாத அலைச்சலையும் பிரச்சினையைம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உடைமைகள், குழந்தைகள் மீது எப்போதும் கவனம் தேவை.   பஸ், ரெயில் நிறுத்தங்களில் கிடைக் கும் பொருட்கள் பெரும்பாலும் மிகச் சிறந்த உணவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் வயிற்றுக் கோளாறு போன்ற சிக்கல் ஏற்படலாம். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளும் வரலாம். அப்படி உடல் நலக் குறைவால் சுற்றுலா சந்தோஷமும் குறையக்கூடும். குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரும் எண்ணை பதார்த்தங்களை தவிர்த்தால் பயணம் ஜாலியாக இருக்கும்.   வீடு கட்ட, கல்யாணம் நடத்த… கல்விக்கு என வங்கிக் கடன் தருவதை அறிவீர்கள். அதேபோல் சுற்றுலாவுக்கு லோன் தருகிறார்கள் தெரிமா? இது `டிராவல் லோன்’ என்ற பெயரில் வழங்கபடுகிறது. கூடுமானவரையில் லோன்களை தவிர்க்கலாம். பணம் அவசியம் என்ற பட்சத்தில் கிரெடிட் கார்டில் லோன் எடுப்பதை விட, பர்சனல் லோன் எடுப்பது நல்லது. ஏனென்றால், பர்சனல் லோனுக்கு வட்டி குறைவு. அதேபோல் டிராவல் இன்சூரன்ஸ் எடுப்பதும் நல்லது.   சுற்றுலா மற்றும் வெளியூர் செல்லும்போது நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், பத்திரங்கள் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்து விட்டுச் செல்லுங்கள். பட்டுபுடவை, வெள்ளி பாத்திரங்களை நெருங்கிய உறவினர் வீட்டில் கொடுத்து விட்டு செல்லலாம். அதேபோல் நீங்கள் வெளியூர் செல்லும்போது உங்கள் ஏரியா கூர்க்காவிடம் வீட்டை அடிக்கடி நோட்டம் பார்க்கச் சொல்லுங்கள். மேலும் காவல் நிலையத்திலும் பெட்டிஷனாக எழுதிக் கொடுப்பது நல்லது.   சுற்றுலாவில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குடிநீர். தண்ணீர் முலம் நிறைய வியாதிகள் பரவ வாய்ப்புள்ளதால், கொதிக்க வைத்த நீரை எடுத்துச் செல்வது நல்லது. இல்லாவிட்டால் `வாட்டர் கேன்களில்’ தண்ணீரை கொண்டு செல்லலாம். பயணத்தில் வயிறு சரியில்லை என்றால் சோடா குடிக்காமல், இளம்சூட்டில் நீர் அல்லது பால் குடிப்பது நல்லது. முடிந்தவரை அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை அளவோடு சாபிட்டால் பயணத்தில் பிரச்சினை தலை காட்டாது.   சுற்றுலா தலங்களில் `இது சூப்பர்… அது அப்படி..’ என்று சொல்வதை நம்ப வேண்டாம். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே என்ன ஸ்பெஷல்? என்பதை முன்பே அறிந்து கொள்ளவும். ஊட்டி சாக்லேட், ஏற்காடு அன்னாசி என ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் உணவு பொருட்களை அங்கேயே சாப்பிட்டால்தான் நல்ல ருசியோடு இருக்கும். நம்ம ஊரில் மலிவாக கிடைக்கும் பொருளை, பெருமைக்காக சுற்றுலா தலத்தில் அதிக விலைக்கு வாங்க வேண்டாம்.

%d bloggers like this: