Advertisements

லட்சுமி வாசம் செய்ய…

புதுமனை கட்டியாகிவிட்டது. காம்பவுண்டு சுவர் எடுத்து வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், ‘லட்சுமி நிவாஸ்’ என்று எழுதி பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தமாம். மகாலட்சுமி நான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் விபரமாக சொன்னதாக உள்ளது. அந்த விபரத்தை நாமும் தெரிந்து கொள்வோமா?
லட்சுமி தேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளவனும், வேலை செய்து கொண்டிருப்பவனும், கோபமில்லாதவனும், தெய்வ பக்தியுள்ளவனும், நன்றி மறவாதவனும், புலன்களை அடக்கியவனும் போன்ற சத்வ குணமுள்ளவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.
மனதில் பயனைக் கருதாமல் தர்மத்தை அனுஷ்டிப்பவனிடமும் தர்மம் தெரிந்து, அதன்படி நடப்பவர்களிடமும், காலத்தை வீணாக்காதவர்களிடமும், தியானம் செய்வதையும், தத்துவ ஞானத்தை விரும்புபவர்களிடமும், பசுக்கள், வயோதிகர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன்.
பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, தானியங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளில் நான் வசிக்கிறேன்.
அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், பெரியோருக்கு பணிவிடை செய்தும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடம் நான் வசிக்கிறேன். பண்டங்களைக் காப்பாற்றாமல் வீணடிப்பவர்களும், கோபமுள்ளவர்களும், தேவதைகள், பெரியோர் இவர்களை பூஜிக்காமலும், மரியாதை செய்யாமலும் உள்ள பெண்களிடம் நான் வசிப்பதில்லை. கணவனுக்கு எதிராகவோ, விரோதமாகவோ இருக்கும் பெண்களிடம் நான் வசிப்பதில்லை.
சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும் நான் வசிப்பதில்லை. எப்போதும் படுத்திருப்பவளும், வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும்போது தொம், தொம்மென்று அவல் இடிக்கிற மாதிரி ஓசை வரும்படி பெண்கள் நடக்கும் வீடுகளிலும் நான் வசிப்பதில்லை.
வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும், அன்னங்களும் அன்றில் கூடுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பிய, சிம்மம், யானைகளால் கலக்கப்பட்ட நதிகளில் நான் வசிக்கிறேன்.
யானை, சிறந்த ரிஷபம், அரசன், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன்.
தினமும் காலத்தில் அக்னிஹோத்ரம் செய்யப்பட்டு, தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படும் வீடுகளில் நான் வசிக்கிறேன். நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளவர்கள் ஆகியோரிடமும் வசிக்கிறேன். ஸ்ரீமத் நாராயணனிடத்தில் முழு அன்பு செலுத்துபவர்களுடன் நான் வசிக்கிறேன்.
என்னிடத்தில், எவர் பக்தியுடன் இருக்கிறாரோ, அவர் புண்ணியம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் பெறுகிறார் என்று சொல்லி முடித்தாள்.
இதையெல்லாம் கவனமாக படித்துப் பார்த்து, லட்சுமி தேவியின் அருள் பெறவும், நம் வீடுகளில் அவள் வாசம் செய்யவும் முயற்சிக்கலாமே! வெறும் போர்டு போட்டு விட்டால், அவள் வந்து விடுவாளா?

Advertisements
%d bloggers like this: