வேர்ட் டிப்ஸ்-6.4.2010

டாகுமெண்ட் இணைக்க:
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், சில நேரங்களில் ஒரு டாகுமெண்ட் உள்ளாக, இன்னொரு டாகுமெண்ட்டை இணைக்க விரும்புவீர்கள். முழுவதுமாக கட் அண்ட் பேஸ்ட் அல்லது காப்பி அண்ட் பேஸ்ட் செய்யலாம் என்கிறீர்களா? இதில் எங்கேனும் சிறிய தவறு ஏற்பட்டால் டெக்ஸ்ட் சின்னபின்னமாகிவிடும். பின் எப்படி இணைப்பீர்கள்? இதற்கெனவே வேர்ட் ஒரு வழி தருகிறது. டாகுமெண்ட்டில் INCLUDETEXT என்ற பீல்டை உருவாக்கி விட்டால் போதும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலாவதாக, டாகுமெண்ட்டை இணைக்க வேண்டிய இடத்தில் field braces உருவாக்கும் அடைப்புக் குறிகளை அமைக்கவும். இதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டாம். ஜஸ்ட், கண்ட்ரோல் + எப்9 (Ctrl+F9) அழுத்தினால் போதும்.
2. இந்த பீல்டு அடைப்புக் குறிகளுக்குள்ளாக INCLUDETEXT என்ற சொல்லை அமைத்து, பின் அதனை அடுத்து ஒரு ஸ்பேஸ் விட்டு, இணைக்க வேண்டிய டாகுமெண்ட் பெயரை அமைக்கவும். எடுத்துக்காட்டாக நீங்கள் Myfile.doc என்ற டாகுமெண்ட் பைலை இணைக்க வேண்டும் என்றால், உங்களுடைய மூல டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் அடைப்புக்குறிகளும், உள்ளே அமைக்கப்படும் டெக்ஸ்ட்டும் – {INCLUDETEXT ‘MyFile.Doc’} – என்றவாறு அமையும்.
உடன் F9 அழுத்தி பீல்டை அப்டேட் செய்திட்டால், டாகுமெண்ட் இணைக்கப் படும். இந்நிலையில் நீங்கள் விரும்பிய டாகுமெண்ட் இணையாமல், ஏதேனும் ஓர் எர்ரர் மெசேஜ் கிடைக்கிறதா? உடனே சரி பாருங்கள். நீங்கள் உங்கள் டாகுமெண்ட் பைலுக்கான பெயரைச் சரியாக, அதன் டைரக்டரி வழிகளுடன் அமைத்திருக்கிறீர்களா என்பதனை செக் செய்திடவும். நீங்கள் அமைக்கும் டாகுமெண்ட்டும், இணைக்கப்படும் டாகுமெண்ட்டும் ஒரே போல்டரில் இருந்தால் பைலுக்கான டைரக்டரி பெயர் அமைக்க வேண்டியதில்லை. வேறு வேறு போல்டர் அல்லது டைரக்டரிகளில் இருந்தால், அதற்கான பாத் சரியாக அமைக்க வேண்டும். எனவே தவறு இருந்தால், சரி செய்திடவும். புள்ளிவிபரமும் நேரமும்
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி, அதனைப் பலமுறை எடிட் செய்திருக்கிறீர்கள். சில நேரம் மற்றவர்களிடம் அலுத்துக் கொள்வீர்கள். இந்த டெக்ஸ்ட்டை எத்தனை தடவை தான் திருத்துவது! என்று. அல்லது எவ்வளவு நேரம் இதை சரி செய்திட செலவு செய்திருப்பேன் தெரியுமா என்று மற்றவர்களிடம் சொல்வீர்கள். யாராவது ஒருவர் எவ்வளவு நேரமப்பா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? முறைத்துப் பார்ப்பீர்களா?
தேவையே இல்லை. வேர்ட் டாகுமெண்ட் பைல் இது மட்டுமின்றி இன்னும் பல தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, கணக்கிட்டு பதிந்து வைக்கிறது. டாகுமெண்ட் பைல் எந்த நாளில் உருவானது, என்று எடிட் செய்யப்பட்டது, மொத்தம் எத்தனை நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டது என்ற புள்ளிவிபரங்களை உடனுடக்குடன் அமைத்துக் கொள்கிறது. இந்த விபரங்களைக் காண வேண்டுமென்றால், டாகுமெண்ட் திறந்திருக்கும்போதே, பைல் மெனு கிளிக் செய்து, அதில் திறக்கப்பட்ட பைல் பட்டியல் மேலாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். உடன் பைல் பெயர் இணைந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த சிறிய விண்டோவில் ஐந்து டேப்கள் காட்டப்படும். அதில் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற டேப்பில் கிளிக் செய்தால், எப்போது பைல் உருவாக்கப்பட்டது, எப்போது கடைசியாக திறக்கப்பட்டது, எடிட் செய்யபட்டது என்ற விபரங்கள் காட்டப்படும். அதன் கீழாக யார் அதனை சேவ் செய்தது என்று யூசர் நேம் காட்டப்படும். மொத்தம் பைலை எடிட் செய்த நேரம் எவ்வளவு என்று நிமிடங்களில் காட்டப்படும். அத்துடன் பக்கங்கள் எத்தனை, பாராக்கள் எவ்வளவு, வரிகளின் எண்ணிக்கை, சொற்கள், அவற்றை உருவாக்கிய எழுத்துக்கள், ஸ்பேஸ் இணைந்த கேரக்டர்கள் என அக்கு வேறு ஆணி வேறாக என்று சொல்லும் வகையில் புள்ளி விபரங்கள் கிடைக்கும்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள் நீங்கள் எவ்வளவு நேரம் ஒரு பைலை உருவாக்க எடுக்கிறீர்கள் என்று கணக்கு போட்டு அதற்கான கட்டணம் தருவார்கள். அவர்களுக்கு இந்த புள்ளி விபரங்கள் தான் அடிப்படையாக அமையும்.
எவ்வளவு நேரம் மொத்தம் ஒரு பைலை எடிட் செய்தீர்கள் என்று அறிய ப்ராப்பர்ட்டீஸ் சென்று தான் அறிய வேண்டும் என்பதில்லை. உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டிலேயே அதனை இணைக்கும் வசதியையும் வேர்ட் தருகிறது. இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.
1. டாகுமெண்ட்டில் எங்கு இந்த எடிட்டிங் டைம் (Editing time) காட்டப்பட வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும்.
2. Insert மெனுவில் Field என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.பீல்டு டயலாக் பாக்ஸ் (Field dialog box) காட்டப்படும். இதில் காட்டப்படும் Categories என்ற பட்டியலில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு கிடைக்கும் பீல்டுகளில் EditTime என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.OK கிளிக் செய்து மூடவும். இனி நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் எடிட் செய்த நேரம் நிமிடங்களில் காட்டப்படும்.

%d bloggers like this: