Advertisements

மூலிகை கட்டுரை -கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!

கோடைக்காலம் தொடங்கியவுடனே வெயிலின் கொடுமை வியர்வை முதல் சிறுநீர் வரை பல தொல்லைகளை உண்டாக்கி நம்மை வாட்ட தொடங்கிவிடும். நாம் உண்ணும் உணவுகள் செரிமான மண்டலம் மூலமாக செரிக்கப்பட்டு, குடலுறிஞ்சிகள் மூலமாக உறியப்பட்டு, கல்லீரலுக்கு சென்று சுத்திகரிக்கப்பட்டு, சிறுநீரகத்திற்கு சென்று
கழிவுகள் வெளியேற்றப்பட்டு, இருதயத்திற்கு செல்கின்றன. இவற்றில் குடலுறிஞ்சிகளும், கல்லீரலும், சிறுநீரகமும் சரிவர இயங்காவிட்டால் ரத்தத்தில் தங்கியுள்ள உப்புகளும், வேண்டாத தாதுக்களும் சிறுநீரகத்தின் உட்புறம் தங்கி, கற்களாக மாற ஆரம்பிக்கின்றன.
நாம் உண்ணும் உணவிலுள்ள சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், ஆக்சலேட், யுரேட், நைட்ரேட், அமினோ அமிலங்கள் மற்றும் இதர உலோக உப்புகளின் கலவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகின்றன. இவை பெரும்பாலும் பால், பால் சார்ந்த உணவுகள், பயறு வகைகள், கொழுப்பு நிறைந்த வறுத்த உணவுகள், அமில உணவுகள், மது, ஊறுகாய், சாக்லேட், காளான், காலிபிளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், தண்டுக்கீரை, காபி, டீ, மாமிசம், கருப்பட்டி, வெல்லம், செயற்கை துரித உணவுகள், சாயங்கள் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் அதிக விதைகள் நிறைந்த தக்காளி, திராட்சை ஆகியவற்றில் சிறுநீரக கற்களை அதிகப்படுத்தும் உப்புகள் சமச்சீரற்ற விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளன. ஆகவே கற்களின் தன்மையை அறிந்து மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பதோ அல்லது குறைந்தளவில் உட்கொள்ளுவதோ நல்லது.
ஒவ்வொருவரும் தினமும் 3 லிட்டர் நீர் அருந்துவது அவசியமாகும். அதுமட்டுமின்றி தினமும் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறதா என்பதையும் கவனமாக பார்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம். கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, உடல் சேர்வில்லாமல் வெளியேற்றும், அனைவரும் உட்கொள்வதற்கு ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும்.
சிட்ரஸ் சைனன்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூட்டேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த பெரிய மரங்கள் தென்கிழக்கு ஆசியப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டுள்ளன. சமஸ்கிருத நூல்களில் ஆரஞ்சுப் பழத்தை பற்றிய குறிப்புகள் ஏராளமாக காணப்படுகின்றன. சைனா ஆப்பிள் என்ற வேறு பெயராலும் வழங்கப்படும் ஆரஞ்சுப் பழங்களில் சிட்ரஸ் ஆரன்டியம் என்ற வகை சற்று கசப்புத் தன்மையுடையது. 100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி கிடைப்பதால் கோடைக்காலத்தில் சக்தி இழப்பை தடுக்க ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தலாம். சுண்ணாம்பு சத்து சேர்ந்த கற்கள் சேரவிடாமல் தடுக்க சிட்ரேட் அதிகமுள்ள ஆரஞ்சுப் பழத்தை உட்கொள்வதால் சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு அதிகரித்து, யூரிக் அமில மற்றும் சுண்ணாம்பு கற்கள் தோன்றுவது தடுக்க படுகிறது. ஆரஞ்சு பழத்திலுள்ள பொட் டாசியம் சிட்ரேட் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது. தையமின், ரிபோபுளோவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின் பி6, போலேட், அஸ்கார்பிக்அமிலம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகமாக காணப்படுவதால் சற்று அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.
இதன் தோலின் உட்பகுதியிலும் சுளைகளுக்கு இடையிலும் காணப்படும் நார் போன்ற பகுதி பித் என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் காணப்படும் சினபெரிகன், என்-மெத்தில் தைரமின் ஆகியன கோடைக்காலத்தில் ஏற்படும் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, திரவ இழப்பால் குறைந்துவிட்ட ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மையுடையன.
ஆரஞ்சுப் பழத்தை தோல் நீக்கி, பிழிந்து, சாறெடுத்து, சமஅளவு நீர் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று நாட்கள் தினமும் காலை முதல் இரவு வரை உட்கொண்டு வர சுண்ணாம்பு சத்து சேர்ந்த சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும். இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைக்க இந்த முறை வலியுறுத்தப்படுகிறது. ஆரஞ்சுப் பழச்சாறை உட்கொள்ளும் போது புரத உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

Advertisements
%d bloggers like this: