Advertisements

Daily Archives: ஏப்ரல் 9th, 2010

சிடியில் எழுதுகிறீர்களா? கவனம் தேவை

பிளாஷ் டிரைவ்கள் அதிகம் பயன்படுத்தப் பட்டாலும், இன்னும் சிடி, டிவிடி பயன்பாடு முற்றிலும் மறையவில்லை. பல சாதனங்களில் நாம் சிடிக்களையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பாதுகாப்பான பயன்பாட்டினை சிடிக்கள் தருகின்றன. மேலும் இவற்றை எந்த வகையான டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கூடுதல் சிறப்பு.
சிடிக்களைப் பொறுத்தவரை, அதில் டேட்டாக்களை எழுதுகையில்தான் அதிகக் கவனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. உங்களுடைய கம்ப்யூட்டரில் சிடி அல்லது டிவிடியில் பைல்களை எழுதுகையில் பிற புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால் அவற்றை நிறுத்துவது நல்லது. ஒரே நேரத்தில் பலவகை புரோகிராம்களை இயக்குவது தான் இன்றைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு என்றாலும் மல்ட்டி மீடியா அம்சங்கள் அதிகமாகக் கொண்ட இன்டர்நெட் தளங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் சிடி / டிவிடிக்களில் எழுதுவது பாதிக்கப்படலாம். எனவே இன்டர்நெட் தொடர்பினையே நிறுத்திவைப்பது நல்லது. அதே போல சிபியு பயன்பாட்டினைக் குறைத்திட உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களையும் நிறுத்தி வைப்பது நல்லது. இல்லை என்றால் நிச்சயமாக பபர் அன்டர் ரன் என்ற பிரச்னை சிடி எழுதும் பணியில் எதிர்கொள்ள நேரிடும். கூடுதல் இயக்கங்கள் சிடியில் எழுதுவதைத் தடுக்காது என்றாலும், பல சிக்கல்கள் ஏற்படுவதை நிறுத்தும்.
2. நீங்கள் பயன்படுத்தும் பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பினைத் தந்துள்ள நிறுவனத்தின் இணைய தளம் சென்று அதில் புதியதாக ஏதேனும் டிரைவர்கள் போட்டிருந்தால் அவற்றை இறக்கிப் பதிந்து கொள்வது நல்லது.
3. சிடி / டிவிடிக்களில் பைல்களை எழுத வெவ்வேறு பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்து வது நல்லது. விண்டோஸ் தொகுப்பில் ஒன்று இணைந்தே கிடைக்கிறது. இது தவிர இலவசமாக பல கிடைக்கின்றன. அவை :
* Acoustica http://www.acoustica.com/

* Nero http://www.nero.com/

* NTI Software http://www.ntius.com/

* Roxio http://www.roxio.com/

இவை சிடிக்களிலும் கிடைக்கின்றன. இவற்றையும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது. எது உங்களுக்கு எளிதாகவும் உகந்ததாகவும் தோன்றுகிறதோ, அவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம்.
4. ஒரு சிடி / டிவிடியில் எழுத அது தாங்கிக் கொள்ளும் அதிக பட்ச வேகம் என்னவென்று அந்த சிடியில் இருக்கும். அதைக் காட்டிலும் சிறிது குறைவான வேகத்தில் பைல்களை எழுதவும். இவ்வாறு எழுதும் வகையில் உங்களின் பர்னிங் சாப்ட்வேர் அமைக்கப்படும் வசதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
5. உங்களுடைய பர்னிங் சாப்ட்வேரில் அன்டர் ரன் பாதுகாப்பு உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். சிடி / டிவிடியில் தகவல் எழுதப்படுகையில் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாத போது தான் இந்த அன்டர் ரன் பிரச்னை வரும். இதனைச் சமாளித்திடும் நிலையில் பர்னிங் சாப்ட்வேர் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிடி / டிவிடி கரப்ட் ஆகிவிடும்.
6. பல பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல்களை எழுதி முடித்த பின்னர் தகவல்கள் சரியாக எழுதப்பட்டுள்ளனவா என சோதித்து அறியும் டேட்டா வெரிபிகேஷன் என்னும் வழிமுறை தரப்பட்டிருக்கும். இதன் மூலம் எந்தவிதமான பிழைகளும் இல்லாமல் சிடி/டிவிடிக்கள் எழுதப்பட்டுள்ளனவா என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். இருப்பினும் இது 100% உறுதிதானா என்பதனை உறுதியாகக் கூற முடியாது. நாட்கள் செல்லச் செல்ல இவை பயனற்றுப் போக வாய்ப்புண்டு. எனவே பைல்களை பேக்கப் எடுப்பதாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி / டிவிடி காப்பிகள் எடுப்பது நல்லது. அல்லது வேறு ஹார்ட் டிஸ்க்குகளில் பதிந்து வைப்பதுவும் நல்லது.
7. மொத்தமாக சிடி/டிவிடிக்களை சொற்ப விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவது அந்த நேரத்திற்கு காசை மிச்சம் பண்ணும். ஆனால் காசைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள தகவல்கள் அடங்கிய பைல்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே நல்ல நிறுவனங்களின் பெயர்களில் வரும் சிடி/டிவிடிக்களையே பயன்படுத்தவும்.
8. சிடியில் எழுதி முடித்த பின் ஐ.எஸ்.ஓ. பைல் குறித்து ஒரு கேள்வி கேட்கப்படும். நாம் இது என்ன என்று அறியாமலேயே தவிர்த்துவிடுவோம். ஒரு சிடி / டிவிடியில் உள்ள அனைத்து பைல்களின் அடங்கலை ஒரு தோற்றமாகத் தரும் பைல் ஐ.எஸ்.ஓ. பைல் ஆகும். பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகள் இந்த பைல்களை நேரடியாக எடுத்துக் கொண்டு அப்படியே சிடி / டிவிடிக்களில் எழுதும் திறன் கொண்டவை. ஒரு சிடி /டிவிடி யில் உள்ள தகவல்களை இன்டர்நெட் வழியே தருவதற்கு இந்த வகை பைல்கள் ஏற்றவை. எடுத்துக் காட்டாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இந்த வகையிலேயே இன்டர்நெட் வழி தந்தது. பைல்களைச் சுருக்குவதற்கு ZIP மற்றும் RAR போன்ற பைல்கள் இருந்தாலும் இவற்றை விரித்துப் பின்னர் தான் சிடி/டிவிடிக்களில் பதிய முடியும். ஆனால் ஐ.எஸ்.ஓ. பைல்களை பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளே விரித்துப் பதிந்து கொடுக்கும்.

Advertisements

பால் குடிக்கும் பழக்கம் வேணும்!

குழந்தை பருவம் முதல் சிறுவர் பருவம் வரை அனைவரும் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். இந்த பருவத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கு பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. அதே நேரம் பெரியவர்களானதும், பால் குடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், 30 வயதுக்கு மேல் பால் குடிப்பது அவசியம். இந்த பருவத்தில், எலும்பு தேய்மானம் போன்றவற்றை தவிர்ப்பதற்காக போதுமான கால்சியம் சத்தை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
மக்கள் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிட துவங்கும் போது, பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை தான், முதலில் தவிர்க்கின்றனர். இதற்கு பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்துவிடும், அலர்ஜி ஏற்படும் என்று பல்வேறு காரணங்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. அதில், ‘வைட்டமின் சி’ மற்றும் இரும்புச் சத்து ஆகியவற்றை தவிர, பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன.
கால்சியம் சத்திற்கு பால் குடிப்பது முக்கியம்:
இயல்பான ரத்த அழுத்தம், ரத்தத்தின் திடத்தன்மையை சீராக வைத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பராமரிக்க, போதுமான அளவு கால்சியம் சத்து <உடலில் இருப்பது அவசியம். இது, மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் குடல் புற்றுநோய் ஆகியவை வராமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 1,000 மி.கி., கால்சியம் ஒரு பெண்ணுக்கு தேவை. ஒரு கப் ஆடை நீக்கப்பட்ட பாலில் 300 மி.கி., கால்சியம் நிறைந்துள்ளது.
பால் சாப்பிட சிறந்த முறை:
சைவ உணவு சாப்பிடுபவர்கள், பால் குடிப்பது மிகவும் முக்கியம். ஆனால் 2 வயதுக்கு பின், குறைந்த கொழுப்பு நிறைந்த பால் குடிக்க வேண்டும். தற்போது வர்த்தக ரீதியாக, கொழுப்பு குறைக்கப்பட்ட, கொழுப்பு நீக்கப்பட்ட மற்றும் பாலாடை நீக்கப்பட்ட பால் என, பல்வேறு வகையான குறைந்த கொழுப்பு நிறைந்த பால் கிடைக்கின்றன.
பால் பொருட்கள் ஒவ்வாமை உடையவர்கள், கால்சியம் சத்து அதிகம் நிறைந்த சோயா, சோயா பால், பச்சை காய்கறிகள், எள், சூரியகாந்தி பூ விதைகள், கசகசா, பாதாம் மற்றும் பிற பருப்பு வகைகள், கேழ்வரகு மற்றும் கீரைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

தினசரி குடிக்க வேண்டிய பாலின் அளவு
வயது அளவு
4 -9 வயதுடைய குழந்தைகள் 2 கப் முதல் 3 கப்
10-16 வயது 3 கப் முதல் 4 கப்
பெரியவர்கள் 2 கப் முதல் 4 கப்
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் 3 கப் முதல் 4 கப்
குறிப்பு: ஒரு கப் பால்= 250 மி.லி.,

வித்தியாசமான முருகப்பெருமான்

அழகு கடவுளான முருகப்பெருமானுக்கு `கதிரேசன்’ என்ற பெயரும் உண்டு. இந்த பெயரில் அவர் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற திருத்தலம்தான் இலங்கையில் உள்ள கதிர்காமம்.

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் கதிர்காமம் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் வடிவம் என்ன என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது. அந்த முருகன் சன்னதியின் கதவில் காட்சித்தரும் திரைச்சீலையில் மட்டும் மயில் மீது வள்ளி-தெய்வானையுடன் காட்சித் தருகிறார். இதுபோன்று இன்னும் பல திரைச்சீலைகளையும் இங்கு காண முடிகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த கதிர்காம கதிரேசனின் சன்னதி திறக்கப்படுகிறது. மற்ற காலங்களில் சன்னதியில் திரையிடப்பட்டே பூஜைகள் நடைபெறுகின்றன.

நாம் தைப்பூசம், விசாகம், கந்தசஷ்டி விழாக்களை வெகு விமரிசையாக கொண்டாடும் அதேநேரத்தில், இங்கு ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவே சிறப்பாக நடைபெறுகிறது.

ஆடி அமாவாசையில் ஆரம்பிக்கும் இந்த திருவிழா அடுத்த பவுர்ணமி வரை நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் யானையின் மீது ஒரு பெட்டியை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். அந்த பெட்டியில் முருகப்பெருமானுக்கு உரிய யந்திரம் வைக்கப்பட்டிருக்கும்.