Daily Archives: ஏப்ரல் 11th, 2010

புகை மூளைக்குப் பகை!

புகைப் பழக்கம் கொடியது. புற்றுநோய், இதய வியாதி என பல பாதிப்புகளை ஏற்படுத்தும். புகைப்பது மூளைத் திறனையும் பாதிக்கும் என்கிறது புதிய ஆய்வு.

ஏபர்டீன் பல்கலைக்கழகம் புகைப்பழக்கம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரம் பேர் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த வயதுடைய இளைஞர்களுக்கு சராசரியாக முளையின் ஐ.கியூ. திறன் 101 வரை இருக்க வேண்டும். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த ஐ.கியூ. திறன் நாளுக்கு 0.5 அளவு குறைந்து வருகிறது. இதனால் அவர்கள் விரைவில் முளை பாதிப்பை அடைகிறார்கள். ஆய்வில் புகைப்பழக்கம் உடையவர்கள் 7 புள்ளிகள் ஐ.கியூ. திறனை இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் சரியான முடிவெடுப்பதில் தவறுகிறார்கள். மேலும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவது, ஆரோக்கியமற்ற
உணவு களை உண்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஆய்வில் 28 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டுக்கு குறையாமல் புகைக்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

அதேபோல் 1947-ம் ஆண்டில் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீண்டும் சோதித்துப் பார்த்ததில் அவர்களின் உடல் செயல்பாடுகள் மற்றவர்களைவிட கவலை அளிப்பதாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

4 ஜி மொபைல்கள்!

நாம் இப்போதுதான் முன்றாம் தலைமுறை தொழில்ட்பமான `3ஜி’ மொபைல் அறிமுகத்தில் இறங்கி இருக்கிறோம். அதற்குள்ளாக அமெரிக்காவில் `4ஜி’ மொபைல்கள் அறிமுகமாகிவிட்டன.

3ஜி மொபைலில் முகம் பார்த்து பேசும் வசதி சிறப்புக்குரியது. அதேபோல 4ஜி மொபைல் என்றால் கம்ப்யூட்டர்- இன்டர்நெட் உலகம்தான் சிறப்பு. அடுத்த தலைமுறை முழுக்க முழுக்க இந்த தொழில்நுட்பத்தில்தான் இயங்க இருக்கிறது.

அமெரிக்காவின் ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் நிறுவனம் இந்த 4ஜி மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது 4.3 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது. ஐபோன்களைவிட அளவில் பெரியது. 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது. 33 ஜி.பி. தகவல்களை சேமித்து வைக்க முடியும்.

இன்டர்நெட் மையம்போல் செயல்படும் இந்த 4ஜி மொபைலில் ஒரே நேரத்தில் 8 இணையதளங்களை பயன்படுத்த முடியும். விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்த செல்போன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நீங்கள் சொந்த வீடு வாங்கும்போது அல்லது கட்டும்போது, சொந்தத் தேவைக்கு, முதலீடாக, பணவீக்கத்துக்கு எதிரான அரணாக என்று எந்த நோக்கத்துக்காக வாங்குகிறீர்களோ அதன் அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று கடந்த வாரம் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சி…

`ஓய்வு கால’ இல்லமாக…

பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் நிம்மதி அளிக்கும் தலமாக இருக்கும்வகையில் வீடு வாங்குவோர் இருக்கிறார்கள். அவ்வாறு வீடு வாங்குவோர், நெரிசலான பகுதியிலிருந்து தங்கள் வீடு விலகியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தற்போது கட்டுமானப் பணியில் உள்ள, கட்டுமானம் முடிவதற்கு அதிக காலமாகும் என்று கூறப்படுகிற குடியிருப்புத் திட்டங்களில் நீங்கள் கவனம் செலுத்தலாம். இந்த வகை தேவையில் நீங்கள் மேலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: குறிப்பிட்ட பகுதி, அமைதியாக, பிரச்சினைகள் இல்லாததாக இருப்பது. மருத்துவ வசதிகள் அமைந்திருப்பது. நடைப்பயிற்சி, மெல்லோட்டத்தில் ஈடுபவதற்கான பூங்கா, தோட்ட வசதிகள் இருப்பது.

வாரயிறுதியைக் கழிக்கும் இடமாக…:

வாரயிறுதியை வசதியாகச் சென்று கழிப்பதற்காக இரண்டாவது வீடு வாங்குவது என்ற எண்ணம் இந்தியா முழுவதும் பரவலாக வளர்ந்து வருகிறது. வாரத்தின் 6 நாட்களும் ஓடி ஓடி உழைத்த பிறகு நகர நெருக்கடி, சந்தடியிலிருந்து விலகி, அமைதி, பசுமையில் கழிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலை நெருக்கடி காரணமாகத் தற்போது பல நாள் விடுப்பு எடுப்பதெல்லாம் கடினமாகி வருகிறது. எனவே நகரத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள இரண்டாவது வீட்டில் வாரயிறுதி விடுப்பைக் கழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அது சில மணி நேர பயண தூரத்தில் இருந்தால் நல்லது என்ற எண்ணம் உள்ளது.

இந்த வகை வீட்டுத் தேவையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: நல்ல இடவசதி உள்ளதாக இருக்க வேண்டும். சுற்றுப்புறம் பசுமை சூழ்ந்ததாக இருந்தால் நல்லது. சந்தடியில்லாத அமைதியான பகுதியாக இருக்க வேண்டும். மனநெருக்கடி, அழுத்தத்தைப் போக்குவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் நன்றாக நேரத்தைக் கழிப்பதற்கான இடவசதி இருக்க வேண்டும்.

`காணாமல் போகும்’ 20 ஆயிரம் ருபாய்!- இந்திய நுகர்வோர்

இந்திய நுகர்வோர் பொதுவாகச் சிக்கனவாதிகளாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்தியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமும் 383 ருபாயை எப்படிச் செலவழித்தோம் என்று `அறியாமலே’ செலவழித்து விடுகிறார்கள். ஓராண்டில் இவ்வாறு ஒருவர் செலவழிக்கும் மொத்தத் தொகை 20 ஆயிரம் ருபாய் என்கிறது ஓர் ஆய்வு.

அந்த சர்வதேச அளவிலான ஆய்வில் மொத்தம் 12 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர்களில் இந்தியர்கள் ஆயிரம் பேரும் அடக்கம்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் `புதிரான செலவு’, அதாவது கணக்குத் தெரியாத செலவு குறித்துக் கேட்கப்பட்டது.

அப்போது, 18 முதல் 24 வயதைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஆண்டுக்கு 24 ஆயிரம் ருபாயை கணக்குத் தெரியாமல் செலவழிப்பதாகக் கூறினர். இது சராசரியான `கணக்குச் சொல்ல முடியாத’ செலவை விட 20 சதவீதம் அதிகமாகும்.

ஆய்வில் பதிலளித்தவர்கள், தாங்கள் கடைக்குச் செல்லும்போது அதிகமாக தெரியாமல் செலவழித்துவிடுவதாகக் கூறினர். உணவு, அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும்போது 60 சதவீதம், நொறுக்குத் தீனிகள் வாங்கும்போது 36 சதவீதம், `சும்மா’ ஷாப்பிங் செல்லும்போது 29 சதவீதம், வெளியே சாப்பிடுவதில் 28 சதவீதம் என்று செலவழித்து விடுவதாகக் கூறினர்.

`கிரெடிட் கார்டு’ என்றில்லாமல் பணம் கொடுக்கும் சின்னச் சின்னச் செலவுகளில் கணக்குத் தெரியாமல் போய்விடுவதாக 73 சதவீத இந்தியர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

தூக்கம் வரலியா?

தூக்கம் வராமல் நாம் தவிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம். தானாக தூக்கம் வந்துவிடும். ஐந்து, பத்து நிமிடம், முச்சுபயிற்சி செய்யலாம். இதிலும் தூக்கம் வராவிட்டால், சாதிக்காய் பவுடரை வெதுவெதுப்பான பாலில் போட்டு குடிக்கலாம்.

எப்போதும் `ஏசி’அறையிலேயே முடங்கி இருப்பவரா? பகலில் நல்ல வெயிலில் கொஞ்சமாவது நடமாடினால் தான் இரவில் சூப்பர் தூக்கம் வரும். சூரிய வெளிச்சம் படும் போது தான் உடலில் வைட்டமின் `டி’ சேர்கிறது. இது தான் தூக்கம் தடைபடாமல் வருவதற்கு மிகவும் முக்கியம். இது போல, தூங்கப் போகும் முன் `டிவி’ பார்க்கக்கூடாது; தூக்கம் வரவில்லையெனில் எழுந்து வீட்டுக்குள் மெதுவாக நடக்கலாம். கண்டிப்பாக தூக்கம் வரும். படுக்கை அறையில் முடிந்தவரை காற்றோட்டம் இருப்பது நல்லது.

குணத்தை மாற்றும் உணவு (திருமுருக கிருபானந்த வாரியார்)

மனிதனுக்கு குணங்கள் மூன்று. சத்துவ, ராஜஸ, தாமத குணங்கள்தான் அவை. இந்த மூன்று குணங்களும் உணவினாலேயே அமைகின்றன.

அவல், பொரி, அப்பம், பழம், பால், தேன் போன்ற உணவுகள் சத்துவ குணத்தை வளர்க்கின்றன. சாந்தம், அன்பு, அடக்கம், பொறுமை, கருணை போன்றவை சத்துவ குணத்தால் வருகின்றன.

காரம், புளி, ஈருள்ளி வெங்காயம், முள்ளங்கி போன்ற உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன. கோபம், டம்பம், வீண் பெருமை, அகங்காரம் போன்றவை இந்த ராஜஸ குணத்தால் வருகின்றன.

பழையது, புண்ணக்கு, மாமிசம் போன்ற உணவுகள் தாமத குணத்தை வளர்க்கின்றன. தூக்கம், சோம்பல், மயக்கம் போன்றவை தாமத குணத்தால் வருகின்றன.

– இப்படிச் சொல்பவர், திருமுருக கிருபானந்த வாரியார்.