Daily Archives: ஏப்ரல் 16th, 2010

`கிரிமினல்’களை காட்டிக்கொடுக்கும் கிருமிகள்

தந்திரமாக செயல்பட்டு தப்பிவிடுவதில் குற்றவாளிகள் சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களை கைரேகை மற்றும் பிற அங்க அடையாளங்களை வைத்து கண்டுபிடிப்பது சிரமம். அவர்களை எளிதில் அடையாளம் காண புலனாய்வுக்குழுவினர் புது வழியை கண்டுபிடித்துள்ளனர்.

நுண்ணுயிரிகளான கிருமிகள் குற்றவாளிகளை காட்டிக்கொடுப்பதில் உதவும் என்பதே அந்த கண்டுபிடிப்பு. ஒருவரின் உடலில் பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. கண், முக்கு, குடல் என ஒவ்வொரு பகுதியில் வாழும் நுண்ணுயிரிகளும் வெவ்வேறு வகையாகவும், விதவிதமான பண்புகளையும் கொண்டவையாக இருக்கின்றன.

சாதாரண தொடுதலிலும் இந்த கிருமிகள் இடம் பெயருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அங்கேயே அழியாமல் நிலைக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு மனிதனின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளும் வித்தியாசமாக இருக்கின்றன.

எனவே இதைக் கொண்டு புலனாய்வு செய்ய முடியும் என்று கொலரோடா (அமெரிக்கா) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர். அவர்களது ஆய்வில் 70 முதல் 90 சதவீத அளவில் குற்றவாளிகளை அடையாளம் காணலாம் என்று தெளிவானது.

`பேக்டீரியல் ஜெனிடிக் சிக்னேச்சர்` எனப்படும் இந்த முறை, எளிதில் பயன்தரும் புதிய புலனாய்வு முறையாக எதிர்காலத்தில் வரப்போகிறது.

நேரம் தவறாமை

காந்தியடிகள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடும் பழக்கம் உடையவர். அவர் தான் ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி விடுவார். அவர் நடக்கும் நடையின் வேகத்திலேயே அவரது சுறுசுறுப்பு தெரியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற அவர் ஒரு நிமிடம் தாமதித்து வந்ததற்காக அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஒருமுறை நெப்போலியன் தம்முடைய தளபதிகளை விருந்திற்கு அழைத்தார். குறிபிட்ட நேரத்திற்குள் அவர்கள் வராததால் அவரே தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில், தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக அறையின் உள்ளே நுழைந்தனர். உடனே சாப்பிட்டு விட்டு எழுந்த நெப்போலியன், “தளபதிகளே! சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. வாருங்கள், நாம் இனி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் போருக்குச் செல்வோம்” என்றார். அப்புறமென்ன, அன்று முழுவதும் தளபதிகள் பட்டினி தான்.

“குறிப்பிட்ட செயலை செய்து முடிப்பதிலோ, ஒரு குறிப்பிட்ட சந்திப்பை நிறைவேற்றுவதிலோ முழுகவனம் செலுத்தாதவன் ஒருபோதும் மதிக்கபட மாட்டான். அவன் வாழ்விலும் வெற்றி பெற மாட்டான்” என்கிறார், டாக்டர் பீட்ச் என்ற மேலைநாட்டு அறிஞர்.

குறித்த நேரத்திற்குள் குறித்த வேலையைச் செய்து முடிக்கும் போது தான் பிறர் நம் மீது நம்பிக்கை கொள்வார்கள். தம்முடைய நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த ஒருவர் தாமதித்து வந்ததற்கு தன்னுடைய கடிகாரத்தை நொடிச்சாக்காக கூறியதும், ” உன் கிளாக்கை மாற்று. இல்லையேல், நான் உன்னை மாற்றி விடுவேன்” என்றார், வாஷிங்டன்.

ஒரு வேலையை செய்வது ஒரு விதையை விதைப்பது போலாகும். உரிய காலத்தில் விதைத்தால் தான், உரிய காலத்தில் அறுவடை செய்யமுடியும்.

ஆசை… கோபம்… களவு… காமம்

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் `நியாயம் எது? நீதி எது? தர்மம் எது?’ என்பது சரியாகத் தெரியவில்லை. அதனால் தான் மனிதர்களிடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. ஒருவனுக்கு, தான் என்ன சொல்கிறானோ அது தான் சரியென்று படுகிறது. மற்றொருவனுக்கு அவன் என்ன சொல்கிறானோ அதுவே சரியென்று தோன்றுகிறது. ஆனால், இருவருக்குமே எது சரியென்று தெரியவில்லை. அதனால் தான் அவர்களுக்குள் கோபம் ஏற்படுகிறது.

இந்த கோபம் `உண்மை என்ன’ என்று அறியாமல் ஏற்படுவதால் `அறியாமல் வரும் கோபம்’ என்றும் கூறலாம்.

உதாரணமாக, ஒரு குழந்தை முகம் பார்க்கும் அழகிய கண்ணாடியை உடைத்து விடுகிறது. உடனே, குழந்தையை பார்த்து, `உனக்கு அறிவில்லையா?’ என்று திட்டுகிறீர்கள், கோபப்படுகிறீர்கள். நீங்கள் அவ்வாறு குழந்தையிடம் கோபப்படும்போது நீங்கள் திட்டும் வார்த்தைகள் வேண்டுமானால், அதற்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அது உங்கள் முகபாவத்தை வைத்து நீங்கள் கோபப்படுகிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து விடும். அதனால் குழந்தை உங்களைக் கண்டாலே பயப்பட ஆரம்பிக்கும்.

உங்களை பார்க்கும் போது, நீங்கள் திட்டும் காட்சி தான் அதன் நினைவிற்கு வரும். அதனால், நீங்கள் முதலில் குழந்தையின் கையில் அவ்வாறு உடையக்கூடிய பொருளைக் கொடுத்திருக்கவே கூடாது. அப்படி கொடுத்திருந்தாலும் அதை குழந்தை உடைக்காத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை என்று எண்ண வேண்டும். குழந்தையின் கைகளுக்கு எட்டாதவாறு, அந்த பொருளை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அத்தனை பாதுகாப்பையும் தாண்டி அந்த பொருளைக் குழந்தை உடைத்து விட்டாலும் கூட, அந்த குழந்தையிடம் கோபத்தைக் காட்டாமல், அதற்கு புரியவைக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறை கோபம் வரும் போதும், அந்த நேரத்தில் கோபப்படுவதால் உண்டாகும் பலன் என்ன என்று சிந்தித்து பார்க்கவேண்டும். தான் நினைப்பது எல்லாமே சரி என்பது தான் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயமாகிறது. அதைச் செய்வதற்கு தான் அனைவரும் ஆசைபடுகின்றனர். யாருக்கும் தெரியாமல் அதைச் செய்த பின் தங்கள் செய்த தவறை மறைக்க அதை நியாயபடுத்தி பேசுகின்றனர். அல்லது பிரமாதமாக ஒன்றும் தெரியாதது போல் நடிக்க ஆரம்பிக்கின்றனர். இதனால், உண்மையாக நடந்து கொள்பவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு செயலை `எப்படி செய்தால் அதில் வெற்றி பெற முடியும்’ என்று தெரியவேண்டும். செய்ய முடிந்தால் தான் அதைபற்றி சிந்திக்க வேண்டும். முடியவில்லை என்றால், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து முயற்சி செய்யும் போது அதற்கு ஒரு `முடிவுநிலை’ ஏற்படும். அதைத் தான் `அறிவு’ என்று சொல்கிறார்கள்.

எந்த ஒரு செயலையுமே பொதுநோக்கு பார்வையில் இருந்து சிந்தித்து பார்த்து, ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். நமக்கு நம் செயல்களே நன்றாகத் தெரிவதால், அதையே மீண்டும், மீண்டும் செய்யாமல் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போது தான் நம் மனம் சீக்கிரமாக ஒருமுகப்படும். அதனால், புதிய ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும். அப்படி நடக்க முடியவில்லை என்றால், நம் மனம் எப்போதும் போல், கடந்த கால தவறுகளை பற்றியே சிந்தனை செய்து துக்கபட்டுக் கொண்டே இருக்கும். ஆசை, கோபம், களவு, காமம் போன்ற எல்லா துன்பம் தரும் செயல்களிலும் இதே போன்ற வழிமுறைகளைக் கையாளும் போது, கல்வி, செல்வம், வீரம், தொழில் என்று சகலவசதிகளும் கிடைக்க பெற்று வாழ்க்கை பிரகாசமாகி விடும்.

கூகுள் ஷாப்பிங் டூல்

புதிது புதிதாய் ஏதாவது ஒரு வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது கூகுளின் சிறப்பாகும். அண்மையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கான ஒரு எளிய டூலை தன் தளத்தில் வழங்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் விலையைப் பல விற்பனை மையங்கள் தரும் விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம். இந்த ஒப்பிட்டுக் காட்டும் வேலையைகூகுள் மேற்கொண்டு உங்களுக்கு வழங்குகிறது. அத்துடன் உங்கள் தேவை மற்றும் எதிர்பார்க்கும் விலையையும் இதில் வரையறை செய்திடலாம்.
இதுவரை இது போன்ற விலை ஒப்பிட்டுப் பார்த்துக் காட்டும் வசதி அமெரிக்க மற்றும் ஐரோப்பியாவின் சில நாடுகளில் மட்டுமே கூகுள் வழங்கி வந்தது. இதன் மூலம் வாங்க விரும்பும் பொருள்கள் குறித்த தகவல்களையும் விலைகளையும், ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தளங்களிலிருந்து கூகுள் தருகிறது. இந்த ஷாப்பிங் டூலைப் பயன்படுத்த கூகுளின் இந்திய தளமான http://www.google.co.in என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். பின் நீங்கள் வாங்கிட விரும்பும் பொருள் குறித்து தேடல் கட்டத்தில் சொற்களை அமைக்கவும். எடுத்துக்காட்டாக மொபைல் போன் ஒன்று வாங்க வேண்டும் என்றால் Mobile Phone என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது தேடல் முடிவுகள் கிடைக்கும். இந்த தேடல் முடிவுகளுக்கு மேலாக ‘Show Options …’ என்று ஒரு லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பக்கத்தில் ‘Shopping’ என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இதில் பல ஆப்ஷன்களை நாம் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக விலை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை அமைக்கலாம். அமைத்துத் தேடினால், அந்த விலைக்குள் கிடைக்கும் பொருட்கள், முகவரி உட்பட தளங்களுக்கான லிங்க்குகள் கிடைக்கும். மிகப் பெரிய அளவில் இந்த விபரங்கள் கிடைப்பதால், நாம் பொறுமையாக அலசி ஆய்வு செய்து பொருட்களுக்கு ஆர்டர் செய்திடலாம். ஆனால் கூகுள் இந்த ஷாப்பிங் டூலினை மிகக் கஷ்டப்பட்டு தேடும் அளவில் வைக்காமல், எளிதாக அமைத்திருக்கலாம்.

முக்கனி…

பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். நாம் தினமும் காய்கறிகள் கீரைகள்போன்றவற்றை சமைத்துதான் சாப்பிடுகிறோம். இவற்றில் சில சத்துக்கள்சமைக்கும்போது அழிந்து விடுகின்றன. ஆனால் சமைக்காத பொருளான பழங்களில்உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. வளரும்குழந்தைகள் கர்ப்பிணிகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவதுபழங்கள் தான்.

பழங்களில் தான் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

இத்தகைய பழங்களில் முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழையின் மருத்துவ பயன்களை அறிவோம்.

இந்த முக்கனிகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும். இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும்.

மாம்பழம்

ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம்தென்னிந்தியா தான். தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்அதிகம் விளைகிறது. ஆந்திராவிலும் அதிகம் விளைகிறது.

மாம்பழம் பொதுவாக கோடைக் காலத்தில் அதிகம் விளையும். நன்கு கனிந்தமாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது.

100 கிராம் மாம்பழத்தில்

நீர்ச்சத்து – 76.0 கிராம்

நார்ச்சத்து – 0.6 கிராம்

தாதுப் பொருள் – 0.4 கிராம்

கொழுப்பு – 0.4 கிராம்

புரதம் – 0.5 கிராம்

மாவுப்பொருள் – 17.0 கிராம்

சுண்ணாம்புச் சத்து – 13 மில்லி கிராம்

இரும்புச் சத்து – 1.2 மில்லி கிராம்

கரோட்டின் – 2740 தஞ்

எரிசக்தி – 72. கலோரி

தையமின்-0.8 மி.கி

நியாசின் – 0.8 மி-கி

ரைபோஃபிளேவின் – 0.08 மி.கி

வைட்டமின் சி – 16.0 மி.கி.

மாம்பழத்தின் மருத்துவப் பயன்கள்

· காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன் ஒரு ஸ்பூன் நெய்யும், 1 ஸ்பூன் தேனும் கலந்து அருந்திவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் புண்குணமாகும்.

மேற்கண்ட முறைப்படி அருந்தி வரும் நாட்களில் மலம் அதிகளவு வெளியேறினால் தேனை இரட்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம்,.

· மாம்பழத்தின் சாறுடன், தேன், குங்குமப் பூ, ஏலக்காய்த் தூள், பச்சைகற்பூரம் இவைகளை சிறிதளவு சேர்த்து அதில் காய்ச்சிய பாலைக் கலந்து இரவுஉணவுக்குப்பின் அருந்தி வந்தால் இதயம் பலப்படும்.

· சிறு குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்டப்பின் மாம்பழம் கொடுப்பது நல்லது.மாம்பழத்தை நெய்யில் தடவிக் கொடுப்பது மிகவும் நல்லது. இரவில் பாலும்கொடுத்து வந்தால் குழந்தை கொழுகொழுவென்று வளரும்.

· இரவு உணவின் அளவைக் குறைத்து மாம்பழத் துண்டுகளை சாப்பிட்டு பால் அருந்தினால் உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் கூடும்.

· மாத விலக்கு சீராக இல்லாத பெண்கள் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் அதைபாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு சீராகும்.

· இரவு உணவுக்குப்பின் மாம்பழச் சாறு சாப்பிட்டு வந்தால் முகம் பளபளக்கும்.

· மலட்டுத் தன்மையைப் போக்கி ஆண்மையை அதிகரிக்கும்.

· புளிப்பு மாம்பழச் சாறு 100 மி.லி. அதனுடன் 50 கிராம் நெய் இரண்டையும்கலந்து ஒரு சட்டியில் ஊற்றி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடேற்றிஇறக்கிக் கொள்ளவும். காலை, பகல் உணவோடு ஊறுகாய்க்குப் பதிலாகசேர்த்துக்கொண்டு வந்தால் உணவு எளிதில் சீரணமாகும். நரம்பு தளர்ச்சிநீங்கும்.

நீரிழிவு நோய் கொண்டவர்கள், சொறி, சிரங்கு உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது .

பலாப்பழம்

பலாப்பழத்தின் தாயகம் இந்தியாதான். முக்கனிகளில் இரண்டாவது கனியாகும்.

வெளியில் கரடுமுரடான முட்களுடன் காணப்படும் பெரிய பழமாகும். உள்ளே மஞ்சள் நிறத்தில் சுளைகளாக காணப்படும்.

100 கிராம் பழத்தில்

வைட்டமின் ஏ – 150 மில்லி கிராம்

வைட்டமின் பி – 6 மி.கி

வைட்டமின் சி – 6 மி.கி

இரும்புச் சத்து – 0,5 மி.கி.

சுண்ணாம்புச்சத்து – 20 மி.கி

கலோரி – 88 மி.கி

புரதம் – 1.9 கிராம்

தாது உப்புக்கள் -0.9 கிராம்

சர்க்கரைச்சத்து – 19.8 கிராம்

அடங்கியுள்ளன

பலாப்பழத்தின் மருத்துவப் பயன்கள்

· பலாப்பழத்தை நேரடியாக உண்பது நன்கு சுவையாக இருக்கும். ஆனால் அவ்வாறுஉண்ணாமல் பலாப்பழத்தை தேன், நெய், சர்க்கரை சேர்த்து உண்பது நல்லது.

· பலாப்பழச் சுளைகளை நெய்விட்டு வதக்கி உட்கொண்டால் உடல் வலுவடையும்.

· பலாச் சுளைகளை தேனில் நனையவிடுங்கள், சிறிது நேரம் கழித்து சிறிதுநெய்விட்டு கலக்கவும். மீண்டும் சிறிது நேரம் ஊறவைக்கவும். மாலை வேளையில்இதனை சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்பட்டு எப்போதும் மனம்புத்துணர்வுடன் காணப்படும்.

· பலாச் சுளைகளுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்எளிதில் சீரணமாகும். இருமல் கட்டுப்படும். நாவறட்சி நீங்கும். களைப்புமுற்றிலும் நீங்கும்.

பலாச் சுளைகளை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மண்சட்டியில் போட்டு அதில்பாலை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது தேனையும்,நெய்யையும் கலந்து ஏலக்காய் தூளையும் சேர்த்து அருந்தினால் சுவையாகஇருப்பதுடன் உடலுக்கு நலத்தையும் கொடுக்கும். இரத்தம் விருத்தியாகும்.நரம்புகளுக்கு வலு உண்டாகும். உடல் நன்கு வளர்ச்சிகாணும். காச நோயாளிகள்,வாத நோயாளிகள், பித்த நோயாளிகள் பால் கொடுக்கும் தாய்மார்கள்,மலச்சிக்கல் உள்ளவர்கள் பலாப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம்

முக்கனிகளில் மூன்றாவது கனிதான் வாழை. எந்தக் காலத்திலும் கிடைக்கும்பழமாகும். உலக மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில்வாழைப்பழத்திற்குத்தான் முதலிடம்.

வாழைப்பழம் சமய விழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பழத்தில்பலவகைகள் உள்ளன. நாட்டு வாழைப்பழம், மலை வாழை, பச்சை வாழை, பேயன் வாழை,செவ்வாழை, நாவரை வாழை, மொந்தன் வாழை, கற்பூரவல்லி வாழை, நேந்திரன் வாழை,ரஸ்தாளி வாழை, சர்க்கரை வாழை, கதலி வாழை, சிங்கன் வாழை, மட்டி வாழை என பலவகைகள் உண்டு. இதில் எல்லா வகை பழங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

வாழைப்பழத்தில்

உண்ணத் தகுந்தவை – 71 %

புரதம் – 1.2 கிராம்

சர்க்கரை சத்து – 27.2 கிராம்

சக்தி – 116 கலோரி

சுண்ணாம்புச் சத்து – 17 மி.கி,

இரும்பு சத்து – 0.9 மி.கி

வைட்டமின் சி – 7 மி.கி

பாஸ்பரஸ் – 36 மி.கி

வாழைப்பழத்தின் மருத்துவப் பயன்கள்

· வயிற்றப்புண் ஏற்பட்டால் சரியாக சாப்பிட முடியாமல் தவிப்பார்கள்.இவர்கள் முறையாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் நீங்கும்.

· மூல நோய் உள்ளவர்கள் வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.

இரவு உணவுக்குப்பின் ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மூல நோய் தணியும்.

· நீண்ட நாட்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஆணும், பெண்ணும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பேறு கிடைக்கும்

· பழுத்த நேந்திரம் பழத்தை இட்லி சட்டியில் வைத்து இட்லி அவிப்பதுபோல்அவித்து எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் நெய் கலந்து சாப்பிட்டால்மெலிந்த உடல் தேறும்.

· உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவதுஇரவு உணவுக்குப் பதில் 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பைகுறையும்.

முக்கனி லேகியம்

நன்கு கனிந்த மா, பலா, வாழை பழங்களை எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி மண்பாத்திரத்தில் இட்டு குலுக்கி அதனுடன் தேன் கற்கண்டு கலந்து இலேகியமாக்கிசாப்பிட்டு வந்தால் முக்கனிகளின் சத்துக்கள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். முக்கனிகளில்மருத்துவப் பயன்கள் அனைத்தும் உடலுக்கு வலு தருவதாகும். இவற்றை சாப்பிட்டுநீண்ட ஆயுளைப் பெறுவோம்.

மாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு

அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.

ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.

அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.

தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா… என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்.  உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம்  என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.

அப்பாடா… தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.

`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று…  அவனை நீ சாப்பிடு. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.

அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.

சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.

`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும்.  கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால்,  உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன். உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை  கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும்.  உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.

தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது. நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.

அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை.  இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன். இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே…’ என்றது.

`தவறு செய்துவிட்டோமே…’என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.

மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.

பல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.

தவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான்! பெற்றத் தாயிடம் கோபப்படவா? தாரத்திடம் கோபப்படவா? என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.

நம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க…’ என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.

பெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?   முதலில் மாமியார்களுக்கு… மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள். `நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்’ என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள். பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள். நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள். மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள். பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல. அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள். நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.
இனி, மருமகள்களுக்கு…

டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.

எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்’ என்று சொல்லி பாருங்கள். `மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.

வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான். அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.

சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.

வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள். அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.

மருதாணிப் பூ

முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல. மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும்.