விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைக் காட்டிலும் மேலதிகமான பணம் படைத்த அமைப்பாக இருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த வாரியத்தின் தலைவர் பதவியை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளை முறியடித்துக் கைப்பற்றினார். அப்போதே இந்திய கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்பதை மீறி, வேறு தளங்களுக்குத் தாவிவிட்டது.இப்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், ஐபிஎல் போட்டியில் கொச்சி அணிக்கான ஏலத்தில் தலையிட்டார் என்பதும், இதில் ரூ.70 கோடி அளவுக்கான பங்குகளை, அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும், சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணிக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம் வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்கிறது என்பதையும், ஐபிஎல் போட்டிகளில் அரசியல்வாதிகள் இன்னும் பலபேர் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பதையும் இது உறுதிப்படுத்தி இருக்கிறது.சசி தரூர் தன் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் மறுத்துப் பேசியிருப்பதும், இது குறித்து விசாரித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் அறிவித்திருப்பதும், அமைச்சர் சசி தரூரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்திருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகிய இவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் கேட்க வேண்டியதாக இருக்கிறது. இப்போது, ஐபிஎல் டிவென்டி20 விளையாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாபம் கிடைப்பதால், இதில் அரசியல்வாதிகள் தற்போது பினாமி பெயர்களில் நுழைவது ஆச்சரியமளிக்கவில்லை. இவர்கள் வெளிப்படையாகத் தகராறைத் தொடங்கியது ஏன் என்பதில்தான் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.சசி தரூர் தன் காதலிக்கு இலவசமாக கொச்சி அணியிலிருந்து 18 சதவீதம் பங்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகப் புகார் எழுப்பியுள்ள, ஐபிஎல் கமிஷனர் லலித் மோடிக்கு, உண்மையிலேயே யார் உரிமையாளர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் என்றால் இதை ஏலம் எடுப்பதற்கு முன்பாகவே உறுதி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.கொச்சி அணி ஏலம் எடுக்கப்படும் நாள் திடீரென தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஏலம் மார்ச் 21-ம் தேதி நடைபெற்றாலும் அதற்கான ஒப்பந்தம் ஏறக்குறைய 20 நாள்கள் கழித்து, ஏப்ரல் 10-ம் தேதிதான் கையெழுத்தாகியுள்ளது.சாதாரண ஏலக்கேட்பு நிகழ்ச்சி அல்லது டெண்டரில்கூட குறைந்தபட்ச டேவணித் தொகை செலுத்தவும், தங்களது முகவரி, வருமான வரி செலுத்திய ஆதாரங்கள், தங்களுக்குள்ள சொத்து மதிப்பின் விவரம் எல்லாவற்றையும் படிவத்தில் குறிப்பிட்டு ஆக வேண்டும். பினாமியாகவே இருந்தாலும்கூட அவரது பெயர், முகவரி இடம்பெற்றாக வேண்டும். இவை எதையுமே சரிபார்க்காமல், ஏலம் நடத்தி, ஏலத்தில் பங்கேற்றவருடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டு, இப்போது இந்த பிரச்னையைக் கிளப்புவது ஏன்? ஏலக் கேட்பு ஆவணங்கள் கொடுத்தவர்களுக்கும்கூட உரிமையாளர்கள் யார் என்று தெரியாது என்று இப்போது நல்லபிள்ளையாகப் பேசுவது ஏன்?ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் யார்யார் என்ற நிருபர்கள் கேள்விக்கு மோடி இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஏலத்திலிருந்து விலகிக்கொண்டால் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு 50 மில்லியன் டாலர் பணம் தருவதாக லலித் மோடி பேரம் பேசினார் என்று ரெண்டஸ்வஸ் செயல் அலுவலர் சைலேந்திர கெய்க்வாட் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை மோடி மறுத்துள்ளார்.ஐபிஎல் போட்டிக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுப்பதே நாகரிகமான செயலாக இல்லை. கிரேக்க அரசில் அடிமைகளை விலை கூவுவதுபோல, வீரர்களை ஏலத்தில் எடுப்பதே அந்த விளையாட்டின் தரத்தைக் குறைத்து வியாபாரமாக்கியது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக விளையாட்டுத் தேதிகளை தள்ளி வைக்காமல், தென்ஆப்ரிக்காவில் ஐபில் போட்டிகளை நடத்தியபோதும், இவர்கள் பணத்தில்தான் குறியாக இருக்கிறார்கள், இவர்களுக்கு விளையாட்டைவிடப் பணம் தான் முக்கியம் என்பதும் அப்பட்டமானது. அந்த நேரத்திலாவது இந்திய அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் வழக்கம்போல இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததால், அரசின் தலையீடு அல்லது கண்காணிப்பு எதுவுமே இல்லாமல் விருப்பம் போல செயல்பட்டு வந்தார்கள். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து, எந்த உழைப்பும் இல்லாமலேயே ஒரு கூட்டம் மிக எளிதாக, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்றால் அதை இந்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் என்றால்… இதன் பின்னணியில் என்னென்ன ரகசியங்கள் இருக்கின்றனவோ!ஐபிஎல் நடத்தும் டிவென்ட்டி20 ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை நடத்துகிற, ஏலத்தில் பங்கேற்கும் அமைப்புகள், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாத நிலையில் இதை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும்?சசி தரூர் மீதான புகாரை விசாரிப்பது மட்டுமன்றி, ஐபிஎல் போட்டியில் இதுவரை ஏலம் எடுத்த அமைப்புகளின் பங்குதாரர் அனைவரது விவரங்களையும் வெளியிடுவதோடு, இவர்களது லாபக் கணக்குகளையும் வருமான வரி மற்றும் தணிக்கைத் துறைக்கு உட்படுத்துவதாக நடவடிக்கை அமைய வேண்டும். இப்பிரச்னை எழுந்தவுடன் வருமான வரித் துறையினர் ஐபிஎல் அலுவலகத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. கிரிக்கெட் ஆட்டம் சூதாட்டமாக மாறிவிட்டது. முன்பு அதன் பெயர் பெட்டிங். இப்போது ஐபிஎல்! லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விட்டோம், சூதாட்டத்தை மக்கள் நலன் கருதித் தடை செய்து விட்டோம் என்று கூறும் அரசு, இந்த சூதாட்டக் கொள்கைக்குத் தடை விதிக்கத் தயங்குவதேன்? ஆட்சியாளர்களுக்கும் பங்கு போகிறதா என்ன?

நன்றி- தினமணி

%d bloggers like this: