‘கிரக வேட்டை!’

அமெரிக்காவின், ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் லேட்டஸ்ட் வேட்டை எது தெரியுமா? ‘கிரக வேட்டை!’
ஆம், விண்வெளிப் பாதையில் பூமி போல கிரகம் உள்ளதா, அங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா என்று பல ஆண்டாக நடத்தி வரும் ஆராய்ச்சி தான் என்றாலும், இப்போது தான், இந்த கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது; அந்த கிரகத்தில் தடங்கள் பதிவு இருக்கிறது என்றெல்லாம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
விண்வெளியில், பூமி போல ஒரு கிரகம் இருக்கிறதா, பல கிரகங்கள் இருக்கின்றனவா, அங்கு வசிப்பிட இயற்கை சூழல் இருக்கிறதா என்பதை முக்கிய குறிக்கோளாக எடுத்துக்கொண்டு, ‘நாசா’ விஞ்ஞானிகள் அனுப்பியது தான், ‘கெப்லர்’ விண்வெளி ஆய்வு டெலஸ்கோப்.
இந்த டெலஸ்கோப், சமீபத்தில் மெகா கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. ‘நாசா’ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில், இது அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
சூரிய மண்டலத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கில் பெயரில்லா கிரகங்கள் சுற்றிய படி உள்ளன; இதில், புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட புதிய ஐந்து கிரகங்கள், வியாழன் (ஜூபிடர்) கிரகத்தை விட, பல மடங்கு பெரியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பல நூறு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் சில நட்சத்திரங்களை சுற்றியபடி தான் கிரகங்கள் உள்ளன. எரிமலைகளை விட தகிப்பவை; தங்கத்தையும் கூழாக்கி விடும் அளவுக்கு வெப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கெப்லர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ள ஐந்து புதிய கிரகங்கள் பெயர்கள்… ‘கெப்லர் 4பி, கெப்லர் 5பி, கெப்லர் 6பி, கெப்லர் 7பி, கெப்லர் 8பி, என்று பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில், ஒவ்வொன்றிலும் மூவாயிரம் பாரன்ஹீட் (1650 செல்சியஸ்) வெப்பம் உள்ளது.
இவற்றில், ‘கெப்லர் 7பி’ கிரகம், பூமிக்கு அருகே, மிகவும் இயற்கை வளம் மிக்கதாக கருதப்படுகிறது. ‘மனித வாழ்வுக்கு இடமிருக் கிறதா என்று தெரியவில்லை என்றாலும், எதிர்காலத்தில் தெரிய வரலாம்!’ என்பதே விஞ்ஞானிகள் நம்பிக்கை.
கெப்லர் டெலஸ்கோப்பின் குறிக்கோள், விண்வெளியில் பாறை மிகுந்த, தண்ணீர் உள்ள கிரகத்தை கண்டுபிடிப்பது தான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனுப்பப்பட்ட இந்த டெலஸ்கோப், முதல் ஆறு வார ஆய்வில் பல புதிய கிரகங்கள் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது.
வெப்பக்கதிர்களை வைத்துத்தான் கிரகங்கள் பற்றிய தகவல்களை உறுதி செய்ய முடிகிறது. அதனால், எதிர்காலத்தில், வெப்பக் கதிர்களை அளக்கும் சக்தி வாய்ந்த நவீன டிஜிட்டல் அளவைகளை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம் என்று அமெரிக்க நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
கெப்லர் டெலஸ்கோப், இன்னும் மூன்றரை ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்குள், முடிந்தவரை புதிய உலகங்களை கண்டுபிடித்து விட வேண்டும் என்பது தான், ‘நாசா’ விஞ்ஞானிகளின் கனவு.
சூரிய மண்டலத்தை சுற்றிய நட்சத்திரப் பாதையில் இதுவரை சமீப காலமாக 32 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து கிரகங்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டுகிறது.
இந்த கிரகங்களின் அளவு பூமியை விட, ஐந்து மடங்கு அதிகம் என்றாலும், அங்கு தண்ணீர், பாறைகள் உள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.
பல வகை நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றை சுற்றியபடி இந்த கிரகங்கள் உள்ளன. இவற்றில், 60 சதவீத கிரகங்கள், பூமியை போல இருப்பதற்கான அறிவியல் சார்ந்த அறிகுறிகள் உள்ளன. அதனால், வேற்று கிரக மனிதர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

%d bloggers like this: