Advertisements

பழங்களால் ஏற்படும் அலர்ஜிகள்!

`பழங்கள் சாப்பிடலாமா?’ என்று ஒருவர் கேட்டால் `இதென்ன அபத்தமான கேள்வி?’ என்றுதான் பதில் வரும். பழம் என்றாலே நமக்கு உடனே தோன்றுவது ஆரோக்கியம்தான். அன்றாடம் பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் காக்கும். உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும். நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்துகள், தாது உப்புகள் ஆகியவற்றை அள்ளி வைத்திருக்கின்றன பழங்கள்.

எல்லாம் சரி. ஆனால் பழங்கள் சில `பகீர்’களை ஏற்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிமா?

`பழ அலர்ஜி’ என்ற ஒன்று உண்டு. பிற ஒவ்வாமைகளை போல இதுவும் படுத்தி எடுத்துவிடும்.

பழ அலர்ஜியா… அப்படி ஒன்று உண்டா என்கிறீர்களா?

ஆமாம். சிலரது உடம்பு சிலவகை உணவுகளை ஏற்றுக்கொள்வது இல்லை. அவற்றில் பழங்களும் அடக்கம். சிலருக்கு பப்பாளி ஒத்துக்கொள்ளாது, சிலருக்கு திராட்சை ஒத்துக்கொள்ளாது, சிலருக்கு ஆப்பிளும் கூட!

நமது உடம்பு, பழ அலர்ஜியை எந்த அளவு தாங்குகிறது என்பதை பொறுத்து `ரியாக்ஷன்கள்’ உடனேயோ, தாமதமாகவோ வெளிப்படலாம். ஆக, ஒரு பழம் உங்களுக்கு ஒவ்வாமைத் தன்மையைக் காட்டினால் அதை புறக்கணித்து விட்டு, ருசியாக இருக்கிறது, பிடித்திருக்கிறது என்று புகுந்து விளையாடி விடாதீர்கள். மற்ற ஒவ்வாமைகளை போலவே பழ ஒவ்வாமையும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

காரணங்கள் என்ன?

`பழ அலர்ஜி’க்கு மரபணு ரீதியாக, பராம்பரிய அடிப்படையிலான காரணங்கள் இருக்கலாம்.

வைரஸ் கிருமித் தொற்று போன்ற சில நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு உடம்பானது `பிரக்டோஸை’ ஏற்காமல் அதை வெளியே தள்ள பார்க்கும். பெரும்பாலான பழங்களில் `பிரக்டோஸ்’ அதிகளவில் உள்ளது. அதை உடம்பு ஏற்காதபோது பழத்தை ஏற்காதது மாதிரி தெரிகிறது.

அடுத்தது, காலநிலை மாற்றம். காலநிலை மாறுபடும்போது சில பழங்களைச் சாப்பிடுவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பருவமழைக் காலத்தின்போது திராட்சை அல்லது `சிட்ரஸ்’ அளவு அதிகமுள்ள பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் சில நோயாளிகளுக்கு அறிவுரை கூறுவது இதனால்தான். சுற்றுபுறச் சூழலில் ஏற்கனவே சில நோய்த்தொற்றுகள் இருக்கும்போது, சில பழங்கள் அதை வேகபடுத்தக் கூடும்.

சிலவேளைகளில் பழங்களில் இருந்து அதிகமாக வெளிபடும் வேதிபொருட்கள் செரிமான அமைப்பை அதிகமாகச் செயல்பட வைத்து, ஒவ்வாமை நிலைமைக்குத் தள்ளலாம்.

அறிகுறிகள்

பழ ஒவ்வாமையின் அறிகுறிகள் என்னென்ன? அரிபு, தொடை வீக்கம், வாந்தி, வாந்தி உணர்வு, வயிற்றில் சங்கடம், உதடு வீக்கம், உடம்பில் தடிப்பு, சிவத்தல், வயிற்று போக்கு, உச்சபட்சமாக ஆஸ்துமா, அதிலும் மோசமாக மரணம் கூட!

என்ன செய்வது?

ஒருவருக்கு அன்றாட உணவில் அவசியமானவை தான் பழங்கள். உங்களுக்கு ஒரு பழம் ஒவ்வாமையை ஏற்படுத்துவது உறுதியானால், அந்த பழத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பை நீங்கள் தகுந்த மாற்று உணவால் சரிபடுத்த முன்வர வேண்டும்.

பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, அதை சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஒவ்வாமைத் தன்மைகள் வெகுவாகக் குறைகின்றன. எனவே பழத்தை `பேக்கிங்’ செய்து அல்லது பதப்படுத்திச் சாப்பிடுவது மோசமான யோசனை அல்ல. அதன் முலம், குறிபிட்ட பழத்தால் கிடைக்கும் சத்துகளை நீங்கள் இழக்க மாட்டீர்கள். ஆனால் அதை விட நல்லது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் பழத்தை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவது. அதற்கு பதிலாக நீங்கள் மாற்று உணவுகளை நாடலாம்.

பழங்களின் தோலில் படிந்துள்ள பூச்சிக்கொல்லிகளும், விவசாய வேதிபொருட்களும் கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே பழத்தின் தோலை உரித்துவிட்டால் சில வேளைகளில் பிரச்சினை தீர்ந்துவிடும்.

பழம்தானே என்று அலட்சியமாக இல்லாமல், அதிலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பிரச்சினை இல்லை!

Advertisements
%d bloggers like this: