Daily Archives: ஏப்ரல் 25th, 2010

மரகதச் செல்விக்கு மணக்கோலம்! (ஆன்மிகம்)-ஏப்., 25 மீனாட்சி கல்யாணம்!கண் போல் பக்தர்களைப் பாதுகாக்கும் அங்கயற்கண்ணி மீனாட்சிக்கு திருக்கல்யாண திருவிழா மதுரையில் கோலாகலமாக நடக்கிறது. விச்சாவதி எனும் பெண்மணி, அன்னை பராசக்தியின் பக்தையாக விளங்கினாள். அம்பாளை தன் மகளாகக் கருதி, சேவை செய்து வந்தாள். தாயும், தந்தையுமில்லாத, ஆதியும், அந்தமும் இல்லாத அந்த பராசக்தியும் அவளது தாய்மை உணர்வைப் பாராட்டி, அவளுக்கு காட்சி தந்தாள். அவள் வேண்டும் வரம் கேட்டாள்…
‘தாயே! உன்னை இப்பிறவியில் என் கற்பனை மகளாகக் கண்டேன். இன்னொரு பிறவியில் நீ நிஜமாகவே என் மகளாக பிறக்க வேண்டும்…’ என்றாள். அன்னையும் அந்த வரத்தை அருளினாள்.
மறுபிறவியில் விச்சாவதி, சோழமன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாகப் பிறந்தாள். இவளை மலையத்துவஜ பாண்டியனுக்கு மணம் முடித்து வைத்தனர். இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் பாண்டியன். யாக குண்டத்தில் மூன்று வயது குழந்தையாக தோன்றினாள் அம்பாள். அவளுக்கு தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தனர். இவளுக்கு, ‘தடாத நங்கை’ என்று பெயர் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில், ‘தடாதகை’ என மருவியிருக்கலாம். ‘தடா’ என்றால், மாறுபட்டது, வித்தியாசமானது என்று பொருள். ஆம்… தடாதகை மற்ற பெண்களைப் போல் அல்லாமல் மூன்று தனங்களுடன் பிறந்தாள். எனவே, இந்தப்பெயர் அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். அவளது கண்கள் மீன்களைப் போல் நீண்டிருந்தன. எனவே, அவள், ‘அங்கயற்கண்ணி’ என்ற சிறப்பு பெயர் பெற்றாள்.
தங்கள் மகளுக்கு இத்தகைய ஓர் நிலை ஏற்பட்டது கண்டு பெற்றோர் வருந்தினர். ஆனால், அசரீரி தோன்றி, ‘இவளை திருமணம் செய்து கொள்ள யார் தகுதியானவரோ, அவர் இவள் முன்னால் வரும் போது இந்த தனம் மறைந்து விடும்…’ என்றது. இதனால், அவர்கள் திருப்தியடைந்தனர்.
வீரத்திலும், கலைகளிலும் சிறந்து விளங்கிய அவளிடமே ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான் மலையத்துவஜன். மகாராணியான தடாதகை பிராட்டி, மீன் தன் கண்களால் குஞ்சுகளைக் கண்காணிப்பது போல, தன் மக்களைக் கருணையுடன் பாதுகாத்தாள். இதனால், ‘மீனாட்சி’ என்ற திருநாமம் அவளுக்கு ஏற்பட்டது.
பதவியேற்ற மீனாட்சி, உலகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர எண்ணி, எல்லா திசைகளுக்கும் சென்றாள். அப்பகுதியை ஆட்சி செய்தவர்களெல்லாம் தங்கள் ராஜ்யத்தை ஒப்படைத்தனர். பூலோகத்தை தன் ஆளுகைக்கு கொண்டு வந்த அவள், கைலாயத்தை நோக்கி விரைந்தாள். சிவகணங்களையெல்லாம் அடக்கினாள். நந்திதேவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் சிவபெருமானிடம் முறையிட்டார்.
சிவபெருமான் தேரிலேறி அவள் முன் வந்தார். தன் வசீகர பார்வையை அவள் மேல் படரவிட்டார். மற்றவர்களைக் கண்டு மனம் தளராத மீனாட்சி, இவரைக் கண்டதும் ஏனோ நாணமடைந்தாள். அவளது மூன்றாவது தனம் மறைந்தது. மீனாட்சியுடன் சென்ற அமைச்சர் சுமதிக்கு மட்டுமே தனத்தின் ரகசியம் தெரியும். அவர் மீனாட்சியிடம் அதுபற்றி எடுத்துரைத்து, ‘இவரே உங்களைக் கைப்பிடிக்க வந்தவர்!’ என்றார்.
பின்னர் மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தேவலோகமே சூழ சிறப்பாக நடந்தது.
அன்னையின் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசித்து மகிழ்வோம்.

இந்தியன் பினாமி லீக்… : நேற்று சசி தரூர், இன்று லலித் மோடி, நாளை…?

Front page news and headlines today

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக, வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, கடைத் தெரு என, எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல்., பற்றித் தான் பேச்சு. சென்னை அணிக்கு கோப்பை கிடைக்குமா, மும்பை தான் இந்த முறை வெற்றி பெறும், சச்சின் இந்த வயதிலும் அசத்தலாக விளையாடுகிறாரே, இதுபோன்ற விஷயங்கள் தான், தற்போது அதிகம் பேசப்படுகின்றன.

இந்த அளவுக்கு இந்திய மக்களை சொக்கு பொடி போட்டு, அடிமையாக்கி வைத்திருக்கும் கிரிக்கெட் போட்டியில் சமீபகாலமாக, சூதாட்டம், வரி ஏய்ப்பு, பினாமி பெயர்களில் மோசடி, கருப்பு பண புழக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கூறப்பட்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, ஐ.பி.எல்., சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஊழல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இந்த ஊழலுக்கான காரணம் என்ன? இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் யார் என்பது போன்ற கேள்விகள், பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

பி.சி.சி.ஐ., : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான், பி.சி.சி.ஐ., என, அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள செல்வாக்கு மிக்க விளையாட்டு அமைப்புகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முக்கிய இடம் உண்டு. பல ஆயிரம் கோடி ரூபாய் பணம், இந்த அமைப்பிடம் உள்ளது. உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வாரியங்களும், ஏன், சர்வதேச கிரிக்கெட் வாரியம் கூட, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டளைப்படி தான் நடக்கும். அந்த அளவுக்கு பணம் இங்கு குவிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பது தான். இந்த அமைப்பின் தலைவராக சஷாங் மனோகர், செயலராக சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இதன் தலைவராக இருந்த மத்திய அமைச் சர் சரத் பவார், விரைவில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

ஐ.பி.எல்., என்ற மாயாஜாலம் : ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே ஆர்வம் குறையத் துவங்கியது. இதன்காரணமாக, போட்டிகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கியுள்ளது. இதனால், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கஜானா குறையத் துவங்கியது. கஜானா எப்போதும் அமுத சுரபி போல் நிறைந்து வழிய வேண்டும் என்ற காரணத்துக்காக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்காக நிர்வாக குழு உறுப்பினர்கள் போன்றோர் இருந்தாலும், அவர்கள் பெயருக்கு தான் பதவி வகித்தனர். மற்றபடி, ஐ.பி.எல்.,லின் ஏகபோக சக்கரவர்த்தியாக விளங்கினார், லலித் மோடி. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவரான இவர், ஐ.பி.எல்., தலைவராக நியமிக்கப்பட்டார்.

லலித் மோடி :வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் லலித் மோடி. வியாபார திறமை மிக்கவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கஜானாவை நிரப்பியதில் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு. ‘டுவென்டி-20’போட்டிக்கான ஐடியா இவரது மூளையில் உதித்தது தான். போட்டியை மூன்று மணி நேரம் கொண்டதாக மாற்றி, மேலும் சுவாரசியமாக்கி, கோடிகளை குவித்தவர். இவரது அசுர வளர்ச்சி, மத்திய அரசுக்கே சவால் விடும் வகையில் இருந்தது. கடந்தாண்டு பொதுத் தேர்தல் நடந்ததால், இங்கு ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த முடியாது என மத்திய அரசு கை விரித்து விட்டது. ஆனால், இதற்கு சற்றும் அசராத மோடி, தென் ஆப்பிரிக்காவில் வெற்றிகரமாக போட்டிகளை நடத்தி முடித்து, மத்திய அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.

சசி தரூர் பிரச்னை : லலித் மோடியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் வரவு. ஐ.பி.எல்., அமைப்பில் ஏற்கனவே எட்டு அணிகள் இருந்தன. இந்தாண்டு புதிதாக கொச்சி, புனே ஆகிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டன. இதில் கொச்சி அணிக்கு ஆதரவாக களம் இறங்கினார் சசி தரூர். இதற்காக, தனது வெளியுறவு துறை இணை அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தனது தோழியும், பிரபல மாடல் அழகியுமான சுனந்தா புஷ்கருக்கு கொச்சி அணியின் 70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இலவசமாக வாங் கிக் கொடுத்தார்.மிகவும் ரகசியமாக நடந்த இந்த விவரங் களை மீடியாக்கு கசியவிட்டார் லலித் மோடி. இங்கு தான் இவருக்கு பிரச்னை துவங்கியது. சசி தரூர்-சுனந்தா விவகாரம் பார்லிமென்டில் புயலை கிளப்ப, வேறு வழியின்றி தனது அமைச்சர் பதவியை சசி தரூர் ராஜினாமா செய்தார். இதில் கடுப்பான சசி தரூர், ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து விஷயங்களையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

களத்தில் இறங்கிய அரசு :லலித் மோடி விவகாரத்தில் ஏற்கனவே அதிக பட்ச அதிருப்தியில் இருந்த மத்திய அரசு, இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டது. வருமானவரித் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். மும்பையில் உள்ள லலித் மோடியின் அலுவலகம் சோதனையிடப்பட் டது. அங்கு நடந்த சோதனையில், ஐ.பி.எல்., அமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

எது எதில் ஊழல்?* ஐ.பி.எல்., போட்டிகளை ‘டிவி’யில் ஒளிபரப்புவதற்கான உரிமை, வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு 8,200 கோடி ரூபாய்க்கு வழங்கப் பட்டது. இதை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து, மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் லலித் மோடிக்கு பங்கு உள்ளது என்பது முக்கிய குற்றச் சாட்டு.
* ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகளை, புக்கிகளின் விருப்பத் துக்கு ஏற்றவாறு, முன் கூட்டியே தீர்மானிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்ததாகவும், இதில் 5,000 கோடி அளவுக்கு சூதாட் டம் நடந்துள்ளது என்பதும் அடுத்த குற்றச்சாட்டு.
* ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட ஐ.பி.எல்,, அணிகளில், பினாமி பெயர்களில் லலித் மோடி பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு.
* ஐ.பி.எல்., அணிகளுக்கு கோடிக் கணக்கில் வருவாய் கிடைத்தும், சில அணிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொய் கணக்கு காட்டியுள்ளன.
* மொரிஷியஸ், துபாய் போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு பணம், ஐ.பி.எல்., அணிகளுக் காக சட்ட விரோதமாக இந்தியா கொண்டு வரப் பட்டுள்ளது. இதற்காக, முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறப்படவில்லை.
*வெளிநாடுகளில் இருந் தும், சுவிஸ் வங்கிகளில் இருந்தும் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப் பட்டுள்ளதாகவும், இந்த பணம் அனைத்தும் கருப்பு பணம் என்பதும் அடுத்த குற்றச் சாட்டு. இந்த கருப்பு பணத்தை, நல்ல பணமாக்குவதற்காகவே, இவை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சோதனை : வருமான வரித் துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஐ.பி.எல்., அமைப்பில் தோண்ட, தோண்ட ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தினர். கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஐதராபாத் டெக்கான் சார்ஜர் உரிமையாளர்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், ஐ.பி.எல்., போட்டிகளை ‘டிவி’யில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்த மல்டி ஸ்கிரீன் மீடியா, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகியற்றின் அலுவலகங்களும் சோதனைக்கு தப்பவில்லை. இந்த விவகாரத்தில் லலித் மோடி வசமாக சிக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சரத் பவார் போன்ற பெரும் தலைகள் கூட, தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதனால், லலித் மோடியின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், லலித் மோடி கம்பி எண்ணும் நிலை கூட ஏற்படலாம்.

அடுத்தது என்ன? இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு உள்ள மோகத்தை பயன்படுத்தி, கோடி, கோடியாக ஊழல் நடந்துள்ளது, தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுகளில் சில மூத்த அரசியல்வாதிகள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு உள்ள தொடர்புகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரலாம். ஐ.பி.எல்., போட்டிகளுக்கான நிதி, பயங்கரவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப் பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கண்துடைப்பா? ஐ.பி.எல்., அமைப் புக்கு எதிராக தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பது தான், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. தேவைப்பட்டால், கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தலாம் என்பதும் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இந்த விவகாரத்தில் சசி தரூரின் பதவி பறிபோய்விட்டது. இன்னும் சில நாட்களில் லலித் மோடியின் பதவியும் காலியாகி விடும். இதற்கு அடுத்தபடியாக சிக்கப் போகும் வி.ஐ.பி., யார் என்பதும், இந்த ஊழலின் பின்னணியில் உள்ள பண முதலைகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அப்படியில்லாமல், வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை, பரபரப்பை ஏற்படுத்துவதற்காக நடக்கும் கண் துடைப்பாக இருந்து விடக் கூடாது. இந்தியன் பிரிமியர் லீக்., இந்தியன் பினாமி லீக்.,காக செயல்படுகிறது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான பதில் தேவை.

சூதாட்டம் நடப்பது எப்படி? ‘ஐ.பி.எல்., ‘டுவென்டி 20’ போட்டிகளில் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்று ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி முனகூட்டியே திட்டமிட்டு கூறிவிடுவதாகவும், அதன் படி போட்டிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லலித் மோடி இவ்வாறு போட்டி முடிவுகளை கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கோல் கட்டா அணிக்கும் இடையே நடந்த ஐ.பி.எல்., போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது.இந்த போட்டியின் முடிவை லலித் மோடி முன்கூட்டியே தெரிவித்தார். மேலும், நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும். ‘சூப்பர் ஒவர்’ வரை வந்து, ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் என லலித் மோடி தனது நண்பர்களிடம் தெரிவித்தார். அவரது கணிப்பு சரியானது. இவ்வாறு போட்டி முடிவுகளை லலித் மோடி முன்கூட்டியே தெரிவிப்பதால், ஐ.பி.எல்.. போட்டிகளில் சூதாட்டம் நடக்கிறது என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.வருமான வரித்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:லலித் மோடியின் வங்கிக் கணக் குகள், போன் ‘டீலிங்’, மெயில்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டன. இங்கிலாந்து, மொரீசியஸ், அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளில் பதிவு செய்யப் பட்ட, ‘மொபைல்’ எண்களைப் பயன்படுத்தியுள்ளார்.தனது உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம், கிரிக்கெட் சூதாட்டத்தில் மோடி ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நெருக்கடியில் சரத் பவார் கட்சி : ஐ.பி.எல்., அணிகள் தொடர்பான முறைகேடுகளில் தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மருமகன் சதானந்த், மற்றொரு தலைவர் பிரபுல் படேல் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சி அணியின் ஏலம் தொடர்பான விவரத்தை, மத்திய அமைச்சர் பிரபுல் படேல், ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியின் அலுவலகத்தில் இருந்து கேட்டுப் பெற்றுள்ளார். ஐ.பி.எல்., அலுவலகத்தில் பணிபுரியும் பிரபுல் படேலின் மகள் பூர்ணா மூலமாக, இந்த விவரங்கள் இ-மெயிலாக பிரபுல் படேல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.பி.எல்., போட்டிகளை ‘டிவி’யில் ஒளிபரப்பும் மல்டி ஸ்கிரீன் மீடியாவில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் சம்பந்தியும், லோக்சபா எம்.பி., சுப்ரியா சுலேயின் மாமனாருமான பி.ஆர்.சுலேவுக்கு 10 சதவீத பங்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், சரத் பவார் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

யார் இந்த லலித் மோடி? லலித் மோடி, கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கிருஷ்ண குமார் மோடி, ‘மோடி என்டர் பிரைசஸ்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர். சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார், மோடி. பள்ளி படிப்பு ஒத்துவரவில்லை. இதற்கு பின், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள பல்கலையில் சேர்ந்து படித்தார். கடந்த 1999ல் இமாச்சல பிரதேச மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்தார். அப்போது அந்த மாநிலத்தில், கிரிக்கெட் ஸ்டேடியம் எதுவும் இல்லை. ஸ்டேடியம் கட்டித் தருவதாக கூறித் தான், சங்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் குழப்பம் விளைவித்ததால், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்தார். இங்கு தனது பெயரை லலித் குமார் என, கூறிக் கொண்டார். அடுத்தபடியாக, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் மோடிக்கு நெருக்கம் ஏற்பட்டது. சரத் பவார் போன்றோருடன் தொடர்பு வைத்துக் கொண்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் பல மடங்கு அதிகரித்தது.கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் துவங்கப்பட்டது. அதன் தலைவர் பதவியும் மோடிக்கே கிடைத்தது. அப்போது தான்’டுவென்டி-20’போட்டிகளை இவர் அறிமுகப்படுத்தினார். கிடு,கிடு, வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த மோடியின் வாழ்க்கையை, சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., கொச்சி, புனே அணிகளுக்கான ஏலம் புரட்டி போட்டு விட்டது. இந்த விவகாரத்தில் சசி தரூருடன் மோதியதால்,மோடியின் ‘மஸ்தான்’வேலைகள் ஒன்றொன்றாக வெளியில் வரத் துவங்கி விட்டன.

மோடியின் ஆடம்பரம் : ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, ராஜஸ்தானில் மன்னர் களால் கட்டப்பட்ட சிறிய அளவிலான இரண்டு அரண்மனைகளை வாங்கி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானை மையமாக கொண்டு ஆட்சி நடத்திய மன்னர்கள், விடுமுறைக் காலங்களில் வசிப்பதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான அரண்மனைகளை கட்டியிருந்தனர். இவை பழம் பெருமை மிக்கவை. இவற்றில் இரண்டு அரண்மனைகளை, 21 லட்ச ரூபாய்க்கு லலித் மோடி வாங்கியுள்ளார். இந்த அரண்மனைகளின் உண்மையான மதிப்பு 1.5 கோடி ரூபாய். இதுகுறித்து மாநில அதிகாரிகள் தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர். மோடிக்கு சொந்தமாக விமானமும் உள்ளது. மத்திய தரைக் கடல் பகுதியில் ‘ஹாலிடே ஹோம்’ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளார்.

இது யானைகளின் கதை

கம்பீரத்தின் அடையாளம்; காட்டுக்குள் வலம் வரும் பிரமாண்டம்; குழந்தைகளுக்கு குதூகலம்; பெரியவர்க்கு கடவுளின் மறுவுருவம்; காட்டை விளைவிக்கும் விவசாயி; உலகில் வாழும் வன உயிரினங்களில் உருவில் பெரிய மிருகம்; இத்தனை பெருமைகள் அனைத்தும் கொண்ட வன உயிரினம், வேறெது…நம்ம யானையார்தான். யானை மிதித்து ஒருவர் சாவு; மின்சாரம் தாக்கி ஆண் யானை சாவு…என்று தமிழகத்தில் சமீபத்திய செய்திகளில் யானைகள் இடம் பெறாத நாட்கள் குறைவு. இந்தியாவிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடப்பது, கோவை வட்டாரத்தில்தான் என்கிறது, ஒர் ஆராய்ச்சி.கடந்த ஆண்டில், இந்தியாவில் மனித-வன உயிரின மோதலில் 400 பேர் இறந்திருப்பதாக யானைகள் பாதுகாப்புத்திட்ட இயக்குனர் கூறியதை சுட்டிக் காட்டும் அத்தகவல், இவர்களில் 56 பேர் இறந்திருப்பது, கோவை மண்டல வனப்பகுதியில் மட்டும் என்று அதிர்ச்சியையும் கொட்டியுள்ளது.

நடப்பாண்டில் இதே வனப்பகுதியில், யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 என்கிறார் கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன். அடிக்கடி வனத்துறைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. விவசாயிகள் ஒரு புறம் கண்ணீர் விடுகிறார்கள்; மறுபுறம் வன உயிரின ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.என்ன நடக்கிறது காட்டுக்குள்ளே…காட்டு யானைகள் ஏன் நாட்டுக்குள்ளே வருகின்றன…காடுகள் வளர்ப்பில் காட்டு யானைகளின் பங்களிப்பு என்ன என பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடை விரிவானது. இந்த விடையை அறியும் முன், யானைகளைப் பற்றிய மக்களின் பார்வையும், அறிவும் தெளிவாக வேண்டும்.முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் கலைவாணன்(32), கடந்த 9 ஆண்டுகளாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள் பற்றி இவர் பெற்றிருக்கும் அறிவும், அனுபவமும் பெரியது. யானைகள் குறித்து விடிய விடியப் பேசினாலும் முடியாமல் விஷயம் வைத்திருப்பவர்.

அவர் தரும் தகவல்களிலிருந்து இந்த தொகுப்பு:உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா, பாரஸ்ட் என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன.

யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘மொராத்ரியம்’ என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘மாமூத்’ என்ற உயிரினமாக மாறி, இறுதியாக இப்போதுள்ள யானை வடிவம் பெற்றுள்ளன. யானைகள் குடும்பமாகச் சேர்ந்து வாழும் தன்மையுடையவை. இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து (ஹெர்டு) ஒரே பகுதியில் வசிக்கும். சில நேரங்களில் பல குடும்பங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து, குதூகலப்படுவதுண்டு. அந்த கூட்டத்தை ‘கிளான்’ என்று சொல்வார்கள். யானைகளின் கூட்டத்தை எப்போதுமே வயதான பெண் யானைதான் (மேட்ரியாக்) வழி நடத்தும். பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண் யானைகள், தனியாகச் சென்று விடும். இந்த வயதுடைய ஆண் யானைகள், தனிக்கூட்டமாகவும் சேர்ந்து கொள்ளும். ஒவ்வோர் யானைக்கூட்டத்துக்கும் தனித்தனி வாழ்விடம் (ஹோம் ரேஞ்ச்) உள்ளது.யானைகள் தங்களின் வழித்தடத்தையோ, வசிப்பிடத்தையோ மாற்றிக் கொள்வதே இல்லை. தொடுதல், பார்த்தல், ஒலி உணர்வுகளைக் கொண்டு யானைகள், தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.

சில நேரங்களில் 15 கி.மீ., தூர இடைவெளியில் கூட, இவை ஒலிப்பரிமாற்றம் செய்து கொள்வதுண்டு. உணவு, தண்ணீர், சீதோஷ்ண நிலை, நிழல், வளர்ப்பு, பிரச்னைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக, 50 கிலோ மீட்டரிலிருந்து 10 ஆயிரம் கி.மீ., வரை இடம் பெயர்ந்து செல்கின்றன. தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப் பெயர்ச்சி இருக்கும்.சாதாரணமாக ஒரு யானைக் கூட்டம், 650லிருந்து 750 சதுர கிலோ மீட்டருக்குள் தங்கள் வாழ்விடத்தை நிர்ணயித்துக்கொள்ளும். அப்போதுதான், அவற்றுக்குத்தேவையான உணவு கிடைக்கும். யானைகள், தங்களுடைய எடையில் 5 சதவீத அளவுக்கு உணவு உட்கொள்கின்றன. தினமும் 200லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது யானை. யானையின் ஜீரண சக்தி குறைவு. ஒரு நாளுக்கு 14லிருந்து 18 மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும், ஜீரண சக்தி குறைவு என்பதால், ஒரு நாளுக்கு 15லிருந்து 20 முறை சாணமிட்டு வெளியேற்றிவிடும்.போதுமான உணவு கிடைக்காத போது, அது கோபத்துக்கு உள்ளாகிறது. யானை மற்றும் டால்பின் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி (எமோஷனல் சென்டர்) அமைந்துள்ளது. இதனால், கோபம், பாசம், கண்ணீர் என பல விஷயங்களில் யானைகள், மனிதரை ஒத்திருக்கும்.

2 ஸ்பெஷல்: தந்தம், தும்பிக்கை இரண்டும் வேறு எந்த விலங்குக்கும் இல்லாத சிறப்பம்சங்கள், தும்பிக்கையின் மூலமாக 80 சதவீதமும், வாய் வழியாக 20 சதவீதமும் யானை சுவாசிக்கும். ஒரே நேரத்தில் 8லிருந்து 10 லிட்டர் வரை தண்ணீரை, இதில் உறிஞ்சி விடும். யானைகளின் தந்தத்தை கொம்பு என்று பலர் நினைக்கின்றனர்; அது தவறு. யானையின் வெட்டுப் பற்கள்தான், உருமாறி, வளர்ந்து தந்தமாக மாறியுள்ளன. தந்தத்தின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி, வாய்க்குள் இருக்கும். யானையின் பாதுகாப்புக்காக இயற்கை தந்த வரம்தான் இந்த தந்தம்.யானைகளுக்கு கேட்புத் திறன் அதிகமிருந்தாலும், பார்வைத்திறன் ரொம்பவே குறைவு. அதிகபட்சமாக 15 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே, யானைகளால் பார்க்க முடியும். அதிலும், நம்மைப் போல வண்ணங்களைப் பார்க்கும் வாய்ப்பில்லை. எல்லாமே கறுப்பு, வெள்ளைதான்.

காடுகளின் காவலன்: வனங்களை வளர்ப்பதில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றின் சாணத்தால்தான், காடுகளுக்குள் ஏராளமான தாவரங்கள், மறு விதைப்பு செய்யப்படுகின்றன. காடுகளில் புதர்கள், மரங்களை உடைத்து யானைகள் பாதை ஏற்படுத்துகின்றன. இல்லாவிட்டால், பிற விலங்குகள் இடம் பெயர முடியாது.உயரமான மரங்களில் உள்ள இலை, தழைகளை உயரம் குறைவான விலங்குகளால் சாப்பிட இயலாது.  யானைகள் அவற்றை உடைத்துச் சாப்பிட்டு, மிச்சம் விட்டுச் செல்வதை உண்டு ஏராளமான விலங்குகள் உயிர் வாழ்கின்றன. வறட்சி நாட்களில், ஈரப்பதமுள்ள இடங்களைத் தோண்டி, தண்ணீர் எடுப்பதும் யானைகள்தான்.அதேபோல, பாறைகளில் உள்ள தாதுப் பொருட்களை (சால்ட் லிக்ஸ்) கண்டறியும் திறனும் யானைகளுக்கு மட்டுமே உள்ளது. இவற்றை யானைகள் கண்டறிந்து, சாப்பிட்ட பின்பே, மற்ற வன விலங்குகள் அவற்றைச் சாப்பிடும். யானைக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. யானைகளின் தோல், மிகவும் கடினமானவை. அதன் எடை மட்டும், ஒரு டன் இருக்கும். கால்கள், தூண் வடிவில் எந்த மாதிரியான இடத்திலும் நடக்கும் தன்மை கொண்டிருக்கும்.

யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஒருவரின் குரலையோ, உருவத்தையோ மறக்காது.யானைகளுக்கும் மனிதனைப்போல் ஆயுட்காலம் அதிகம். பெண் யானை, 13லிருந்து 15 வயதுக்குள் பருவத்துக்கு வருவதுண்டு. யானையின் கர்ப்ப காலம், 18லிருந்து 22 மாதங்கள். 55 வயது வரை, யானைகள் குட்டி போடும். ஒரு பெண் யானை, தன் வாழ் நாளில் 8லிருந்து 12 குட்டிகளை ஈன்றெடுக்கும். ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒரு முறை, ‘மஸ்து’ உருவாகும். அது 3 மாதங்கள் வரை நீடிக்கும். அந்தக் கால கட்டத்தில், ஒரு விதமான ‘ஹார்மோன்’ அதிகம் சுரக்கும்; அப்போது, விதைப்பை 16 மடங்கு பெரிதாகும். ஆண் யானைகள், ‘மஸ்து’க்கு வராத நாட்களிலும் உறவு கொள்வதுண்டு. ஒவ்வொரு யானைக்கும் குணாதிசயம் வெவ்வேறாக இருக்கும். இதனால்தான், சில யானைகளுக்கு கோபம் அதிகம் வருவதுண்டு. இதை அறியாமல் அவற்றைச் சீண்டும் மாவூத்துகள் (யானைப்பாகன்), பரிதாபமாக செத்துப்போகின்றனர். கேரளாவில் 1974லிருந்து இதுவரை 320 மாவூத்துகள் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆண்-பெண் விகிதம்: நீலகிரி உயிர்க்கோள மண்டலம் எனப்படும் தமிழக, கேரள, கர்நாடக வனப்பகுதிகளில் ஆண், பெண் யானைகளின் விகிதாச்சாரம், 1:20 என்ற விகிதத்தில் இருக்கின்றன. இது, ஆண் யானைகளின் இறப்பைப் பொறுத்து, அவ்வப்போது மாறுவதுண்டு.

அதென்ன அங்குச மந்திரம்: அவ்வளவு பெரிய யானையை, தம்மாத்துண்டு அங்குசத்தில் பாகன்கள் ஆட்டுவிப்பதில் பலருக்கு ஆச்சரியம். இதற்குக்காரணம், யானையின் உடலில் 110 வர்ம இடங்கள் இருப்பதுதான். அந்த இடங்களுக்கு அருகில், எந்த கம்பைக்கொண்டு போனாலும் அவை அடி பணியும்; அடிப்பது அவசியமற்றது.

அச்சுறுத்தல்கள்: காடுகளின் காவலனாக இருக்கும் யானைகளுக்கு பல விதமான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் (காரிடார்) துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன.இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது, அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியாகாது. சிறு கூட்டத்துக்குள் இனப் பெருக்கம் நடப்பதால், அந்த குடும்பமே விரைவில் அழிந்து போகும். வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணம்.

மிரட்டும் மாடுகள்: மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்புவதால், யானைகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த வன உயிரினங்களுக்கும் ஆபத்துள்ளது. இந்த மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி, ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்கள், அவை மேயும் புற்கள், தாவரங்களால் யானைகளுக்குப் பரவி, அவை உயிரிழக்கக்கூடும். மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்த மாட்டின் உரிமையாளர், ஏதாவது சிகிச்சை எடுக்க வாய்ப்புண்டு. ஆனால், காடுகளுக்குள் இருக்கும் பல நூறு வன உயிரினங்களுக்கு இந்த பாதிப்பு பரவினால், அவை ஒட்டு மொத்தமாக அழிந்து, அதனால் காடுகளும் அழிந்து விடும் ஆபத்து காத்திருக்கிறது.இவற்றைத் தவிர்த்து, மனிதர்களால் ஏற்படும் காட்டுத்தீ, விறகு சேகரிப்பதாக யானைகளின் உணவுத்தாவரங்களை அழிப்பது, காடுகளில் விளையும் பொருட்களை சேகரித்து விற்பது, பிளாஸ்டிக் பைகளை காடுகளில் விடுவது என காடுகளுக்கும், காட்டு விலங்குகளுக்குமான அச்சுறுத்தல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காட்டுத்தீ, காடுகளுக்குள் மாடு மேய்ப்பது, விறகு சேகரிப்பு, காடுகளுக்குள் அமைந்துள்ள கிராமங்கள், களைச்செடிகள் என பலவிதமான அச்சுறுத்தல்கள், காட்டு யானைகளுக்கு உள்ளன. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, விவசாயப் பகுதிகளில் விருப்ப உணவுகள் இருப்பதைப் பார்த்து யானைகள் படையெடுக்கின்றன.

வேட்டையே முதலிடம்: இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவீதம் வேட்டையாடப்பட்டவை. விஷ உணவால் 13 சதவீதமும், நோயினால் 10 சதவீதமும், மின்சாரம் தாக்கி 8 சதவீதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவீதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் உயிரிழக்கின்றன.யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும்பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும். மழைக்காடுகள் அழிவதால் மழை குறையும். புல்வெளிகள், சோலைக்காடுகள் அழிவதால், இயற்கை நீரோடைகள் வற்றிப் போகும்; ஆறுகள் மடியும்; இறுதியாக, ஒட்டு மொத்த மனித குலமே மரணத்தை சந்திக்கும். இப்போது சொல்லுங்கள், யானைகள் நமக்குத் தேவையா, இல்லையா?

எடை குறைவு; ஆயுள் அதிகம்! எடை குறைவாக இருப்பவர்களுக்கு நோயும் வராது; ஆயுட்காலமும் அதிகம் என்பது எல்லா மனிதர்களுக்கும் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை. யானைகள் விஷயத்திலும் இதுதான் நடைமுறை. உருவில் பெரிய ஆப்பிரிக்க யானைகளை விட, சிறிதாக இருக்கும் ஆசிய யானைகளுக்கு ஆயுள் அதிகம்.ஓர் ஆப்பிரிக்க ஆண் யானையின் எடை, அதிகபட்சமாக ஆறரை டன் வரை இருக்கும். ஆசிய ஆண் யானையின் எடை, அதிகபட்சமே நாலரை டன் மட்டுமே இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானையின் ஆயுட்காலம் 40லிருந்து 50 ஆண்டுகள் மட்டுமே. ஆசிய யானைகளின் ஆயுட்காலம் 60லிருந்து 70 ஆண்டுகள் வரை. ஆப்பிரிக்க யானைகள், 10லிருந்து 11 அடி வரை வளரும். ஆசிய யானையின் உயரம், 9 அடிதான்.இப்போதே நினைவு படுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாமிசப் பட்சிகளான புலி, சிறுத்தை போன்றவற்றின் அதிகபட்ச ஆயுட்காலம் 20 ஆண்டுகள்தான். ஆனால், தாவர உண்ணிகளான யானை போன்றவற்றின் ஆயுட்காலம் இன்னும் அதிகம். மனிதர்களிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கே ஆயுள் அதிகம் என்பதே நிஜம்.

மறுபடி வருமா ‘மாமூத்?’ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், ‘மாமூத்’ என்ற விலங்கினம் இருந்ததாகவும், அதுவே பரிணாம வளர்ச்சியில் தற்போது யானையாக உருமாறியிருப்பதாகவும் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ‘மாமூத்’ என்ற விலங்கினம், பனிக்கட்டிகள் நிறைந்த குளிர்ப்பிரதேசங்களில்தான் வாழ்ந்துள்ளன.இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்த விலங்கினத்தின் உடல், பனிப்பிரதேசங்களில் புதைந்திருக்க வாய்ப்புண்டு. அவற்றை எடுத்து அதன் அணுக்களில் இருந்து மரபணுவை எடுத்து, ‘க்ளோனிங்’ முறையில் மீண்டும் அதை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன.இந்த முயற்சிகள், வெற்றி பெற்றாலும் தற்போதுள்ள வெப்பமான பூமியில் அவை வாழ்வது கடினம் என்கிறார்கள் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள். அது மட்டுமின்றி, சோதனைக்கு எடுக்கப்படும் ‘செல்’, எந்த விலங்கினத்திலிருந்து எடுக்கப்பட்டதோ, அந்த வயதுள்ள விலங்கினத்தை மட்டுமே ‘குளோனிங்’கில் உருவாக்க முடியும்.இதனால், மீண்டும் ‘மாமூத்’ உருவாக்கப்பட்டாலும் அது எத்தனை ஆண்டுகள் வாழும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. குளோனிங் முறையில் உருவான கன்றுக்குட்டி, 10 ஆண்டுகளில் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இத்தகைய ஆராய்ச்சிகள் தேவையற்றது என்கின்றனர் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள்.

அடையாளம் காண்பது எப்படி?ஆண் யானையையும், பெண் யானையையும் தந்தத்தை வைத்து அடையாளம் கண்டு விட முடியும். ஆனால், ‘மக்னா’ யானைக்கு தந்தம் இல்லாததால் அதை அடையாளம் காண்பது சிரமம். தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் பெரிதாக இருக்கும். வாலுக்குக் கீழே சற்று உப்பிய நிலையில் இருக்கும். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும்.

பிரசவம்… பரவசம்! யானைகளின் பிரசவத்தைப் பார்த்தால், கல் மனதும் கரைந்து விடும். உறவுகளை ஒதுக்கி வாழும் மனிதர்கள் தலை குனிய நேரிடும். ஏனெனில், யானைகள் பிரசவிப்பதே அவற்றின் உறவு யானைகள் தரும் ஆறுதலும், பலத்தினாலும்தான்.பெண் யானைகள் பிரசவிக்கும் போது, மற்ற யானைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும். அதைச் சுற்றிலும் கூட்டமாக நின்று கொண்டு, அதற்கு ஆறுதல் சொல்வது போல, தொட்டுக் கொடுக்கும். ஆனால், பலரும் நினைப்பதைப் போல, குட்டியை வெளியே இழுப்பது போன்றவற்றை யானைகள் செய்வதில்லை.அந்த யானை வலியில் துடிக்கும்போது, அதன் பின் புறத்தைத் தும்பிக்கையால் தொடுவதுண்டு. அதனால், பிரசவிக்கும் யானைக்கு மனோரீதியான தைரியம் ஏற்படும். தொடுதலில் கவனம் திரும்பும். யானைகள் பிறந்த பத்தே நிமிடத்தில் எழுந்து நிற்கும். பால் குடித்தவுடன் அரை மணி நேரத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்து விடும்.

மிஸ்டர் மக்னா!ஆசிய யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானைகளும் இருக்கின்றன. அவை ‘மக்னா’ என்று அழைக்கப்படுகின்றன. இவை, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், சற்று பெரியதாகவும் இருக்கும். இந்த ஆண் யானைகளுக்கு தந்தம் இல்லாததால், அடையாளம் அறியாமல் பெண் யானைகள் உறவு கொள்ள மறுப்பதுண்டு. இதனால், அவை ஆக்ரோஷமடைந்து, பெண் யானைகளைத் தாக்குவது போன்ற வன்முறையும் நடப்பதுண்டு. இத்தகைய ‘மக்னா’ யானைகளை ஆண்மை இல்லாத யானைகள் என்று நினைக்கின்ற அறியாமை இன்னும் உள்ளது.

உடலை குளிர்விக்கும் `பசலை’

பசலை ஒரு கொடிவகைத் தாவரம். இந்த கீரையை வீட்டில், தோட்டத்தில் வளர்க்கலாம். ஆறு அங்குல நீளமுள்ள இதன் கொடித்தண்டை நறுக்கி, வேலி ஓரத்தில் அல்லது மரங்களின் அருகில் நட்டு வைத்தால், விரைவில் துளிர்விட்டு கொடியாக வளரும். பந்தலிலும் படர விட்டு வளர்க்கலாம்.

கொடிபசலைக் கீரையின் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக அரிந்து சமைத்து சாப்பிடலாம். இலைகளை அவித்து, வெள்ளைபூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கடைந்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதில் புரதம், கொழுப்பு, மாவு பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரைபோபிளாவின், நியாசின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

இக்கீரை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், கோடை நோய்கள் நம்மை அண்டாது.

ஏதாவது ஒரு வழியில் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. நன்கு பசி உண்டாகும். இக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த விருத்தி ஏற்படும். இதன் இலைகளை அவித்து, பூண்டு, சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் குடல் கோளாறுகள் சீராகும்.

கொஞ்சம் பசலை இலையோடு மாதுளம் பிஞ்சை வைத்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம், முன்று வேளையும் சாப்பிட்டு வர சீதபேதி நன்கு குணமாகும். இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அரைத்து வேக வைத்துச் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மாறும், குரல் வளம் பெறும்.

மேலும் இக்கீரையில் `வைட்டமின் சி’ சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும். இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர காமம் அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள சாதாரண மலட்டுத் தன்மையை நீக்கும் ஆற்றலும் கொண்டது. சளித் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கவும்.

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

`வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’ என்பது பழமொழி. அதை அறிவியலும் உண்மைதான் என்று நிருபிக்கின்றன.

நாம் சிரிக்கும்போது முளையில் வெளிப்படும் ஒருவகை வேதிபொருட்களுக்கு `என்டார் பின்கள்’ என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாவும் பயன்படுகின்றன. சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரிப்பிகளை உடலில் அதிகம் சுரக்க சிரிப்பு உதவுகிறது. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீன மாக்கும் `ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்’ என்ற நோயால் நார்மன் கசின்ஸ் பாதிக்கபட்ட போது, மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறிப்பதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர். கசின்ஸ் அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, மார்க்ஸ் சகோதரர்கள், விமானம், முன்று அடிமைகள் போன்றவை உள்பட எல்லா சிரிப்பு படங்களையும் வாடகைக்கு வாங்கினார். அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றி லும் குணமானது. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த அற்புதமான அனுபவத்தை அவர் `ஒரு நோயின் கதை’ என்ற நுலில் எழுதினார். இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்ட இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால், புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்பட்டிருக்கிறார்கள்.

அழுகையும், சிரிப்பும் உளவியல் ரீதியாக நெருங்கிய தொடர்புள்ளவை. கடைசியாக எப்போது நீங்கள் யாராவது ஒரு ஜோக் சொல்லி அடக்க முடியாமல் சிரித்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதன் பிறகு எப்படி இருந்தது? உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது இல்லையா? உங்கள் முளையிலிருந்து என்டார்பின்கள் சுரந்ததால் தான் அந்த பரவச உணர்வு ஏற்பட்டது. போதை மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் அனுபவம் தான் இது. வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும், என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.

ஆண்களை விட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைபது ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சி யின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும், சமாதானமும் கொண்டிருபதே இதற்கு காரணம். இதனால் தான் ஆணை போல பெண்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் தான் அதிக கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை பார்த்து நீங்கள் சிரிப்பதால் அவரும் உங்களைக் கண்டு பதிலுக்கு புன்னகைபார். இவ்வாறு தொடர்ந்து புன்னகைத்து பேசி அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால், உங்களது எல்லா சந்திபுகளுமே சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் இருவருக்குள்ளும் நேர்மறை விளைவுகள் ஏற்படும். இதனால் உறவுகள் மேம்படும்.

புன்னகையும், சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நபர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றன.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்று பொருள். அதாவது பாதி திருகிய நிலை ஆசனம் என்பதாகும். யோகி மச்சேந்திரர் இந்த ஆசனத்தை ஹடயோக மாணவர்களுக்கு முதன்முதலாகக் கற்றுக் கொடுத்தார். அதனால் அவனுடைய பெயர் இந்த ஆசனத்திற்கு வைக்கப்பட்டது.
செய்முறை
1. கால்களை முதலில் நேராக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும்.
2. வலது காலை மடக்கிக் கொள்ளவும்.
3. வலது கணுக்காலின் மேல் உட்கார்ந்து கொள்ளவும்.
4. இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்பட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று வைக்கவும். இடது காலை இன்னமும் தரைப்பக்கம் அமர்த்தி பாதத்தைப் பிறப்பு உறுப்புக்குக் கீழே அமைத்துக் கொள்ளவும். இடது முழங்கால் செங்குத்தாய் நிற்பதுபோல் இருக்கவும்.
5. வலது கையின் கை இடுக்கிற்குள் இடது முழங்காலானது போகும் வண்ணம் செய்யவும்.
6. பின்னர் வலது உள்ளங்களையினால் வலது கால் மணிக்கட்டைப் பிடித்துக் கொள்ளவும்.
7. இடது கையை முதுகுப்பக்கம் கொண்டு வரவும்.
8. இடது கையினால் இடது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும்.
9. மூச்சை விட்டுக்கொண்டே இடது பக்கமாக இடுப்பை நன்றாகத் திருப்புங்கள். மார்பை நேராக நிறுத்தி வைக்கவும்.
10. தலையை நன்றாகத் திருப்புங்கள்.
11. அப்போது உங்களின் கண்பார்வை இடது பக்கமாக அமையக் கூடாது. வலது பக்கம் உள்ள பொருட்கள் மீது நிலைபெற வேண்டும்.
12. இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்தபின் சிறிது சிறிதாகப் பிடிகளைத் தளர்த்தி கை, கால்களை விடுவித்து யதார்த்த நிலைமைக்குத் திருப்பவும்.
பலன்கள்
1. நரம்புத்தளர்ச்சி அடைந்தவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறது. முதுகெலும்பினை வளைத்து நெகிழுந்தன்மையானதாக்கி, வளமுடன் செயல்படச் செய்கிறது. வயிற்றுத் தசைகளை வளமாக்குகிறது. முதுகெலும்புப் பகுதி முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. பிடரியில் ஓடக்கூடிய நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.
3. நோய்களை உருண்டு திரளச் செய்கிறது.
4. இடுப்புவலி, முதுகு வலிகளைப் பறந்தோடச் செய்யும்.
5. வயிற்றுக் கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், பசி மந்தத்தையும் இது நீக்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. இளமையுடன் இருக்கச் செய்யும் ஆசனம் இது.