இது யானைகளின் கதை

கம்பீரத்தின் அடையாளம்; காட்டுக்குள் வலம் வரும் பிரமாண்டம்; குழந்தைகளுக்கு குதூகலம்; பெரியவர்க்கு கடவுளின் மறுவுருவம்; காட்டை விளைவிக்கும் விவசாயி; உலகில் வாழும் வன உயிரினங்களில் உருவில் பெரிய மிருகம்; இத்தனை பெருமைகள் அனைத்தும் கொண்ட வன உயிரினம், வேறெது…நம்ம யானையார்தான். யானை மிதித்து ஒருவர் சாவு; மின்சாரம் தாக்கி ஆண் யானை சாவு…என்று தமிழகத்தில் சமீபத்திய செய்திகளில் யானைகள் இடம் பெறாத நாட்கள் குறைவு. இந்தியாவிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடப்பது, கோவை வட்டாரத்தில்தான் என்கிறது, ஒர் ஆராய்ச்சி.கடந்த ஆண்டில், இந்தியாவில் மனித-வன உயிரின மோதலில் 400 பேர் இறந்திருப்பதாக யானைகள் பாதுகாப்புத்திட்ட இயக்குனர் கூறியதை சுட்டிக் காட்டும் அத்தகவல், இவர்களில் 56 பேர் இறந்திருப்பது, கோவை மண்டல வனப்பகுதியில் மட்டும் என்று அதிர்ச்சியையும் கொட்டியுள்ளது.

நடப்பாண்டில் இதே வனப்பகுதியில், யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 என்கிறார் கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன். அடிக்கடி வனத்துறைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. விவசாயிகள் ஒரு புறம் கண்ணீர் விடுகிறார்கள்; மறுபுறம் வன உயிரின ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.என்ன நடக்கிறது காட்டுக்குள்ளே…காட்டு யானைகள் ஏன் நாட்டுக்குள்ளே வருகின்றன…காடுகள் வளர்ப்பில் காட்டு யானைகளின் பங்களிப்பு என்ன என பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடை விரிவானது. இந்த விடையை அறியும் முன், யானைகளைப் பற்றிய மக்களின் பார்வையும், அறிவும் தெளிவாக வேண்டும்.முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் கலைவாணன்(32), கடந்த 9 ஆண்டுகளாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள் பற்றி இவர் பெற்றிருக்கும் அறிவும், அனுபவமும் பெரியது. யானைகள் குறித்து விடிய விடியப் பேசினாலும் முடியாமல் விஷயம் வைத்திருப்பவர்.

அவர் தரும் தகவல்களிலிருந்து இந்த தொகுப்பு:உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா, பாரஸ்ட் என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன.

யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘மொராத்ரியம்’ என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘மாமூத்’ என்ற உயிரினமாக மாறி, இறுதியாக இப்போதுள்ள யானை வடிவம் பெற்றுள்ளன. யானைகள் குடும்பமாகச் சேர்ந்து வாழும் தன்மையுடையவை. இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து (ஹெர்டு) ஒரே பகுதியில் வசிக்கும். சில நேரங்களில் பல குடும்பங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து, குதூகலப்படுவதுண்டு. அந்த கூட்டத்தை ‘கிளான்’ என்று சொல்வார்கள். யானைகளின் கூட்டத்தை எப்போதுமே வயதான பெண் யானைதான் (மேட்ரியாக்) வழி நடத்தும். பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண் யானைகள், தனியாகச் சென்று விடும். இந்த வயதுடைய ஆண் யானைகள், தனிக்கூட்டமாகவும் சேர்ந்து கொள்ளும். ஒவ்வோர் யானைக்கூட்டத்துக்கும் தனித்தனி வாழ்விடம் (ஹோம் ரேஞ்ச்) உள்ளது.யானைகள் தங்களின் வழித்தடத்தையோ, வசிப்பிடத்தையோ மாற்றிக் கொள்வதே இல்லை. தொடுதல், பார்த்தல், ஒலி உணர்வுகளைக் கொண்டு யானைகள், தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.

சில நேரங்களில் 15 கி.மீ., தூர இடைவெளியில் கூட, இவை ஒலிப்பரிமாற்றம் செய்து கொள்வதுண்டு. உணவு, தண்ணீர், சீதோஷ்ண நிலை, நிழல், வளர்ப்பு, பிரச்னைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக, 50 கிலோ மீட்டரிலிருந்து 10 ஆயிரம் கி.மீ., வரை இடம் பெயர்ந்து செல்கின்றன. தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப் பெயர்ச்சி இருக்கும்.சாதாரணமாக ஒரு யானைக் கூட்டம், 650லிருந்து 750 சதுர கிலோ மீட்டருக்குள் தங்கள் வாழ்விடத்தை நிர்ணயித்துக்கொள்ளும். அப்போதுதான், அவற்றுக்குத்தேவையான உணவு கிடைக்கும். யானைகள், தங்களுடைய எடையில் 5 சதவீத அளவுக்கு உணவு உட்கொள்கின்றன. தினமும் 200லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது யானை. யானையின் ஜீரண சக்தி குறைவு. ஒரு நாளுக்கு 14லிருந்து 18 மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும், ஜீரண சக்தி குறைவு என்பதால், ஒரு நாளுக்கு 15லிருந்து 20 முறை சாணமிட்டு வெளியேற்றிவிடும்.போதுமான உணவு கிடைக்காத போது, அது கோபத்துக்கு உள்ளாகிறது. யானை மற்றும் டால்பின் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி (எமோஷனல் சென்டர்) அமைந்துள்ளது. இதனால், கோபம், பாசம், கண்ணீர் என பல விஷயங்களில் யானைகள், மனிதரை ஒத்திருக்கும்.

2 ஸ்பெஷல்: தந்தம், தும்பிக்கை இரண்டும் வேறு எந்த விலங்குக்கும் இல்லாத சிறப்பம்சங்கள், தும்பிக்கையின் மூலமாக 80 சதவீதமும், வாய் வழியாக 20 சதவீதமும் யானை சுவாசிக்கும். ஒரே நேரத்தில் 8லிருந்து 10 லிட்டர் வரை தண்ணீரை, இதில் உறிஞ்சி விடும். யானைகளின் தந்தத்தை கொம்பு என்று பலர் நினைக்கின்றனர்; அது தவறு. யானையின் வெட்டுப் பற்கள்தான், உருமாறி, வளர்ந்து தந்தமாக மாறியுள்ளன. தந்தத்தின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி, வாய்க்குள் இருக்கும். யானையின் பாதுகாப்புக்காக இயற்கை தந்த வரம்தான் இந்த தந்தம்.யானைகளுக்கு கேட்புத் திறன் அதிகமிருந்தாலும், பார்வைத்திறன் ரொம்பவே குறைவு. அதிகபட்சமாக 15 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே, யானைகளால் பார்க்க முடியும். அதிலும், நம்மைப் போல வண்ணங்களைப் பார்க்கும் வாய்ப்பில்லை. எல்லாமே கறுப்பு, வெள்ளைதான்.

காடுகளின் காவலன்: வனங்களை வளர்ப்பதில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றின் சாணத்தால்தான், காடுகளுக்குள் ஏராளமான தாவரங்கள், மறு விதைப்பு செய்யப்படுகின்றன. காடுகளில் புதர்கள், மரங்களை உடைத்து யானைகள் பாதை ஏற்படுத்துகின்றன. இல்லாவிட்டால், பிற விலங்குகள் இடம் பெயர முடியாது.உயரமான மரங்களில் உள்ள இலை, தழைகளை உயரம் குறைவான விலங்குகளால் சாப்பிட இயலாது.  யானைகள் அவற்றை உடைத்துச் சாப்பிட்டு, மிச்சம் விட்டுச் செல்வதை உண்டு ஏராளமான விலங்குகள் உயிர் வாழ்கின்றன. வறட்சி நாட்களில், ஈரப்பதமுள்ள இடங்களைத் தோண்டி, தண்ணீர் எடுப்பதும் யானைகள்தான்.அதேபோல, பாறைகளில் உள்ள தாதுப் பொருட்களை (சால்ட் லிக்ஸ்) கண்டறியும் திறனும் யானைகளுக்கு மட்டுமே உள்ளது. இவற்றை யானைகள் கண்டறிந்து, சாப்பிட்ட பின்பே, மற்ற வன விலங்குகள் அவற்றைச் சாப்பிடும். யானைக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. யானைகளின் தோல், மிகவும் கடினமானவை. அதன் எடை மட்டும், ஒரு டன் இருக்கும். கால்கள், தூண் வடிவில் எந்த மாதிரியான இடத்திலும் நடக்கும் தன்மை கொண்டிருக்கும்.

யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஒருவரின் குரலையோ, உருவத்தையோ மறக்காது.யானைகளுக்கும் மனிதனைப்போல் ஆயுட்காலம் அதிகம். பெண் யானை, 13லிருந்து 15 வயதுக்குள் பருவத்துக்கு வருவதுண்டு. யானையின் கர்ப்ப காலம், 18லிருந்து 22 மாதங்கள். 55 வயது வரை, யானைகள் குட்டி போடும். ஒரு பெண் யானை, தன் வாழ் நாளில் 8லிருந்து 12 குட்டிகளை ஈன்றெடுக்கும். ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒரு முறை, ‘மஸ்து’ உருவாகும். அது 3 மாதங்கள் வரை நீடிக்கும். அந்தக் கால கட்டத்தில், ஒரு விதமான ‘ஹார்மோன்’ அதிகம் சுரக்கும்; அப்போது, விதைப்பை 16 மடங்கு பெரிதாகும். ஆண் யானைகள், ‘மஸ்து’க்கு வராத நாட்களிலும் உறவு கொள்வதுண்டு. ஒவ்வொரு யானைக்கும் குணாதிசயம் வெவ்வேறாக இருக்கும். இதனால்தான், சில யானைகளுக்கு கோபம் அதிகம் வருவதுண்டு. இதை அறியாமல் அவற்றைச் சீண்டும் மாவூத்துகள் (யானைப்பாகன்), பரிதாபமாக செத்துப்போகின்றனர். கேரளாவில் 1974லிருந்து இதுவரை 320 மாவூத்துகள் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆண்-பெண் விகிதம்: நீலகிரி உயிர்க்கோள மண்டலம் எனப்படும் தமிழக, கேரள, கர்நாடக வனப்பகுதிகளில் ஆண், பெண் யானைகளின் விகிதாச்சாரம், 1:20 என்ற விகிதத்தில் இருக்கின்றன. இது, ஆண் யானைகளின் இறப்பைப் பொறுத்து, அவ்வப்போது மாறுவதுண்டு.

அதென்ன அங்குச மந்திரம்: அவ்வளவு பெரிய யானையை, தம்மாத்துண்டு அங்குசத்தில் பாகன்கள் ஆட்டுவிப்பதில் பலருக்கு ஆச்சரியம். இதற்குக்காரணம், யானையின் உடலில் 110 வர்ம இடங்கள் இருப்பதுதான். அந்த இடங்களுக்கு அருகில், எந்த கம்பைக்கொண்டு போனாலும் அவை அடி பணியும்; அடிப்பது அவசியமற்றது.

அச்சுறுத்தல்கள்: காடுகளின் காவலனாக இருக்கும் யானைகளுக்கு பல விதமான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் (காரிடார்) துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன.இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது, அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியாகாது. சிறு கூட்டத்துக்குள் இனப் பெருக்கம் நடப்பதால், அந்த குடும்பமே விரைவில் அழிந்து போகும். வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணம்.

மிரட்டும் மாடுகள்: மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்புவதால், யானைகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த வன உயிரினங்களுக்கும் ஆபத்துள்ளது. இந்த மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி, ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்கள், அவை மேயும் புற்கள், தாவரங்களால் யானைகளுக்குப் பரவி, அவை உயிரிழக்கக்கூடும். மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்த மாட்டின் உரிமையாளர், ஏதாவது சிகிச்சை எடுக்க வாய்ப்புண்டு. ஆனால், காடுகளுக்குள் இருக்கும் பல நூறு வன உயிரினங்களுக்கு இந்த பாதிப்பு பரவினால், அவை ஒட்டு மொத்தமாக அழிந்து, அதனால் காடுகளும் அழிந்து விடும் ஆபத்து காத்திருக்கிறது.இவற்றைத் தவிர்த்து, மனிதர்களால் ஏற்படும் காட்டுத்தீ, விறகு சேகரிப்பதாக யானைகளின் உணவுத்தாவரங்களை அழிப்பது, காடுகளில் விளையும் பொருட்களை சேகரித்து விற்பது, பிளாஸ்டிக் பைகளை காடுகளில் விடுவது என காடுகளுக்கும், காட்டு விலங்குகளுக்குமான அச்சுறுத்தல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காட்டுத்தீ, காடுகளுக்குள் மாடு மேய்ப்பது, விறகு சேகரிப்பு, காடுகளுக்குள் அமைந்துள்ள கிராமங்கள், களைச்செடிகள் என பலவிதமான அச்சுறுத்தல்கள், காட்டு யானைகளுக்கு உள்ளன. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, விவசாயப் பகுதிகளில் விருப்ப உணவுகள் இருப்பதைப் பார்த்து யானைகள் படையெடுக்கின்றன.

வேட்டையே முதலிடம்: இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவீதம் வேட்டையாடப்பட்டவை. விஷ உணவால் 13 சதவீதமும், நோயினால் 10 சதவீதமும், மின்சாரம் தாக்கி 8 சதவீதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவீதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் உயிரிழக்கின்றன.யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும்பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும். மழைக்காடுகள் அழிவதால் மழை குறையும். புல்வெளிகள், சோலைக்காடுகள் அழிவதால், இயற்கை நீரோடைகள் வற்றிப் போகும்; ஆறுகள் மடியும்; இறுதியாக, ஒட்டு மொத்த மனித குலமே மரணத்தை சந்திக்கும். இப்போது சொல்லுங்கள், யானைகள் நமக்குத் தேவையா, இல்லையா?

எடை குறைவு; ஆயுள் அதிகம்! எடை குறைவாக இருப்பவர்களுக்கு நோயும் வராது; ஆயுட்காலமும் அதிகம் என்பது எல்லா மனிதர்களுக்கும் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை. யானைகள் விஷயத்திலும் இதுதான் நடைமுறை. உருவில் பெரிய ஆப்பிரிக்க யானைகளை விட, சிறிதாக இருக்கும் ஆசிய யானைகளுக்கு ஆயுள் அதிகம்.ஓர் ஆப்பிரிக்க ஆண் யானையின் எடை, அதிகபட்சமாக ஆறரை டன் வரை இருக்கும். ஆசிய ஆண் யானையின் எடை, அதிகபட்சமே நாலரை டன் மட்டுமே இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானையின் ஆயுட்காலம் 40லிருந்து 50 ஆண்டுகள் மட்டுமே. ஆசிய யானைகளின் ஆயுட்காலம் 60லிருந்து 70 ஆண்டுகள் வரை. ஆப்பிரிக்க யானைகள், 10லிருந்து 11 அடி வரை வளரும். ஆசிய யானையின் உயரம், 9 அடிதான்.இப்போதே நினைவு படுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாமிசப் பட்சிகளான புலி, சிறுத்தை போன்றவற்றின் அதிகபட்ச ஆயுட்காலம் 20 ஆண்டுகள்தான். ஆனால், தாவர உண்ணிகளான யானை போன்றவற்றின் ஆயுட்காலம் இன்னும் அதிகம். மனிதர்களிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கே ஆயுள் அதிகம் என்பதே நிஜம்.

மறுபடி வருமா ‘மாமூத்?’ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், ‘மாமூத்’ என்ற விலங்கினம் இருந்ததாகவும், அதுவே பரிணாம வளர்ச்சியில் தற்போது யானையாக உருமாறியிருப்பதாகவும் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ‘மாமூத்’ என்ற விலங்கினம், பனிக்கட்டிகள் நிறைந்த குளிர்ப்பிரதேசங்களில்தான் வாழ்ந்துள்ளன.இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்த விலங்கினத்தின் உடல், பனிப்பிரதேசங்களில் புதைந்திருக்க வாய்ப்புண்டு. அவற்றை எடுத்து அதன் அணுக்களில் இருந்து மரபணுவை எடுத்து, ‘க்ளோனிங்’ முறையில் மீண்டும் அதை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன.இந்த முயற்சிகள், வெற்றி பெற்றாலும் தற்போதுள்ள வெப்பமான பூமியில் அவை வாழ்வது கடினம் என்கிறார்கள் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள். அது மட்டுமின்றி, சோதனைக்கு எடுக்கப்படும் ‘செல்’, எந்த விலங்கினத்திலிருந்து எடுக்கப்பட்டதோ, அந்த வயதுள்ள விலங்கினத்தை மட்டுமே ‘குளோனிங்’கில் உருவாக்க முடியும்.இதனால், மீண்டும் ‘மாமூத்’ உருவாக்கப்பட்டாலும் அது எத்தனை ஆண்டுகள் வாழும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. குளோனிங் முறையில் உருவான கன்றுக்குட்டி, 10 ஆண்டுகளில் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இத்தகைய ஆராய்ச்சிகள் தேவையற்றது என்கின்றனர் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள்.

அடையாளம் காண்பது எப்படி?ஆண் யானையையும், பெண் யானையையும் தந்தத்தை வைத்து அடையாளம் கண்டு விட முடியும். ஆனால், ‘மக்னா’ யானைக்கு தந்தம் இல்லாததால் அதை அடையாளம் காண்பது சிரமம். தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் பெரிதாக இருக்கும். வாலுக்குக் கீழே சற்று உப்பிய நிலையில் இருக்கும். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும்.

பிரசவம்… பரவசம்! யானைகளின் பிரசவத்தைப் பார்த்தால், கல் மனதும் கரைந்து விடும். உறவுகளை ஒதுக்கி வாழும் மனிதர்கள் தலை குனிய நேரிடும். ஏனெனில், யானைகள் பிரசவிப்பதே அவற்றின் உறவு யானைகள் தரும் ஆறுதலும், பலத்தினாலும்தான்.பெண் யானைகள் பிரசவிக்கும் போது, மற்ற யானைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும். அதைச் சுற்றிலும் கூட்டமாக நின்று கொண்டு, அதற்கு ஆறுதல் சொல்வது போல, தொட்டுக் கொடுக்கும். ஆனால், பலரும் நினைப்பதைப் போல, குட்டியை வெளியே இழுப்பது போன்றவற்றை யானைகள் செய்வதில்லை.அந்த யானை வலியில் துடிக்கும்போது, அதன் பின் புறத்தைத் தும்பிக்கையால் தொடுவதுண்டு. அதனால், பிரசவிக்கும் யானைக்கு மனோரீதியான தைரியம் ஏற்படும். தொடுதலில் கவனம் திரும்பும். யானைகள் பிறந்த பத்தே நிமிடத்தில் எழுந்து நிற்கும். பால் குடித்தவுடன் அரை மணி நேரத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்து விடும்.

மிஸ்டர் மக்னா!ஆசிய யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானைகளும் இருக்கின்றன. அவை ‘மக்னா’ என்று அழைக்கப்படுகின்றன. இவை, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், சற்று பெரியதாகவும் இருக்கும். இந்த ஆண் யானைகளுக்கு தந்தம் இல்லாததால், அடையாளம் அறியாமல் பெண் யானைகள் உறவு கொள்ள மறுப்பதுண்டு. இதனால், அவை ஆக்ரோஷமடைந்து, பெண் யானைகளைத் தாக்குவது போன்ற வன்முறையும் நடப்பதுண்டு. இத்தகைய ‘மக்னா’ யானைகளை ஆண்மை இல்லாத யானைகள் என்று நினைக்கின்ற அறியாமை இன்னும் உள்ளது.

%d bloggers like this: