இந்தியன் பினாமி லீக்… : நேற்று சசி தரூர், இன்று லலித் மோடி, நாளை…?

Front page news and headlines today

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக, வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, கடைத் தெரு என, எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல்., பற்றித் தான் பேச்சு. சென்னை அணிக்கு கோப்பை கிடைக்குமா, மும்பை தான் இந்த முறை வெற்றி பெறும், சச்சின் இந்த வயதிலும் அசத்தலாக விளையாடுகிறாரே, இதுபோன்ற விஷயங்கள் தான், தற்போது அதிகம் பேசப்படுகின்றன.

இந்த அளவுக்கு இந்திய மக்களை சொக்கு பொடி போட்டு, அடிமையாக்கி வைத்திருக்கும் கிரிக்கெட் போட்டியில் சமீபகாலமாக, சூதாட்டம், வரி ஏய்ப்பு, பினாமி பெயர்களில் மோசடி, கருப்பு பண புழக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கூறப்பட்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, ஐ.பி.எல்., சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஊழல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இந்த ஊழலுக்கான காரணம் என்ன? இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் யார் என்பது போன்ற கேள்விகள், பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

பி.சி.சி.ஐ., : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான், பி.சி.சி.ஐ., என, அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள செல்வாக்கு மிக்க விளையாட்டு அமைப்புகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முக்கிய இடம் உண்டு. பல ஆயிரம் கோடி ரூபாய் பணம், இந்த அமைப்பிடம் உள்ளது. உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வாரியங்களும், ஏன், சர்வதேச கிரிக்கெட் வாரியம் கூட, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டளைப்படி தான் நடக்கும். அந்த அளவுக்கு பணம் இங்கு குவிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பது தான். இந்த அமைப்பின் தலைவராக சஷாங் மனோகர், செயலராக சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இதன் தலைவராக இருந்த மத்திய அமைச் சர் சரத் பவார், விரைவில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

ஐ.பி.எல்., என்ற மாயாஜாலம் : ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே ஆர்வம் குறையத் துவங்கியது. இதன்காரணமாக, போட்டிகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கியுள்ளது. இதனால், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கஜானா குறையத் துவங்கியது. கஜானா எப்போதும் அமுத சுரபி போல் நிறைந்து வழிய வேண்டும் என்ற காரணத்துக்காக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்காக நிர்வாக குழு உறுப்பினர்கள் போன்றோர் இருந்தாலும், அவர்கள் பெயருக்கு தான் பதவி வகித்தனர். மற்றபடி, ஐ.பி.எல்.,லின் ஏகபோக சக்கரவர்த்தியாக விளங்கினார், லலித் மோடி. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவரான இவர், ஐ.பி.எல்., தலைவராக நியமிக்கப்பட்டார்.

லலித் மோடி :வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் லலித் மோடி. வியாபார திறமை மிக்கவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கஜானாவை நிரப்பியதில் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு. ‘டுவென்டி-20’போட்டிக்கான ஐடியா இவரது மூளையில் உதித்தது தான். போட்டியை மூன்று மணி நேரம் கொண்டதாக மாற்றி, மேலும் சுவாரசியமாக்கி, கோடிகளை குவித்தவர். இவரது அசுர வளர்ச்சி, மத்திய அரசுக்கே சவால் விடும் வகையில் இருந்தது. கடந்தாண்டு பொதுத் தேர்தல் நடந்ததால், இங்கு ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த முடியாது என மத்திய அரசு கை விரித்து விட்டது. ஆனால், இதற்கு சற்றும் அசராத மோடி, தென் ஆப்பிரிக்காவில் வெற்றிகரமாக போட்டிகளை நடத்தி முடித்து, மத்திய அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.

சசி தரூர் பிரச்னை : லலித் மோடியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் வரவு. ஐ.பி.எல்., அமைப்பில் ஏற்கனவே எட்டு அணிகள் இருந்தன. இந்தாண்டு புதிதாக கொச்சி, புனே ஆகிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டன. இதில் கொச்சி அணிக்கு ஆதரவாக களம் இறங்கினார் சசி தரூர். இதற்காக, தனது வெளியுறவு துறை இணை அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தனது தோழியும், பிரபல மாடல் அழகியுமான சுனந்தா புஷ்கருக்கு கொச்சி அணியின் 70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இலவசமாக வாங் கிக் கொடுத்தார்.மிகவும் ரகசியமாக நடந்த இந்த விவரங் களை மீடியாக்கு கசியவிட்டார் லலித் மோடி. இங்கு தான் இவருக்கு பிரச்னை துவங்கியது. சசி தரூர்-சுனந்தா விவகாரம் பார்லிமென்டில் புயலை கிளப்ப, வேறு வழியின்றி தனது அமைச்சர் பதவியை சசி தரூர் ராஜினாமா செய்தார். இதில் கடுப்பான சசி தரூர், ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து விஷயங்களையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

களத்தில் இறங்கிய அரசு :லலித் மோடி விவகாரத்தில் ஏற்கனவே அதிக பட்ச அதிருப்தியில் இருந்த மத்திய அரசு, இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டது. வருமானவரித் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். மும்பையில் உள்ள லலித் மோடியின் அலுவலகம் சோதனையிடப்பட் டது. அங்கு நடந்த சோதனையில், ஐ.பி.எல்., அமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

எது எதில் ஊழல்?* ஐ.பி.எல்., போட்டிகளை ‘டிவி’யில் ஒளிபரப்புவதற்கான உரிமை, வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு 8,200 கோடி ரூபாய்க்கு வழங்கப் பட்டது. இதை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து, மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் லலித் மோடிக்கு பங்கு உள்ளது என்பது முக்கிய குற்றச் சாட்டு.
* ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகளை, புக்கிகளின் விருப்பத் துக்கு ஏற்றவாறு, முன் கூட்டியே தீர்மானிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்ததாகவும், இதில் 5,000 கோடி அளவுக்கு சூதாட் டம் நடந்துள்ளது என்பதும் அடுத்த குற்றச்சாட்டு.
* ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட ஐ.பி.எல்,, அணிகளில், பினாமி பெயர்களில் லலித் மோடி பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு.
* ஐ.பி.எல்., அணிகளுக்கு கோடிக் கணக்கில் வருவாய் கிடைத்தும், சில அணிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொய் கணக்கு காட்டியுள்ளன.
* மொரிஷியஸ், துபாய் போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு பணம், ஐ.பி.எல்., அணிகளுக் காக சட்ட விரோதமாக இந்தியா கொண்டு வரப் பட்டுள்ளது. இதற்காக, முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறப்படவில்லை.
*வெளிநாடுகளில் இருந் தும், சுவிஸ் வங்கிகளில் இருந்தும் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப் பட்டுள்ளதாகவும், இந்த பணம் அனைத்தும் கருப்பு பணம் என்பதும் அடுத்த குற்றச் சாட்டு. இந்த கருப்பு பணத்தை, நல்ல பணமாக்குவதற்காகவே, இவை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சோதனை : வருமான வரித் துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஐ.பி.எல்., அமைப்பில் தோண்ட, தோண்ட ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தினர். கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஐதராபாத் டெக்கான் சார்ஜர் உரிமையாளர்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், ஐ.பி.எல்., போட்டிகளை ‘டிவி’யில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்த மல்டி ஸ்கிரீன் மீடியா, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகியற்றின் அலுவலகங்களும் சோதனைக்கு தப்பவில்லை. இந்த விவகாரத்தில் லலித் மோடி வசமாக சிக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சரத் பவார் போன்ற பெரும் தலைகள் கூட, தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதனால், லலித் மோடியின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், லலித் மோடி கம்பி எண்ணும் நிலை கூட ஏற்படலாம்.

அடுத்தது என்ன? இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு உள்ள மோகத்தை பயன்படுத்தி, கோடி, கோடியாக ஊழல் நடந்துள்ளது, தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுகளில் சில மூத்த அரசியல்வாதிகள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு உள்ள தொடர்புகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரலாம். ஐ.பி.எல்., போட்டிகளுக்கான நிதி, பயங்கரவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப் பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கண்துடைப்பா? ஐ.பி.எல்., அமைப் புக்கு எதிராக தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பது தான், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. தேவைப்பட்டால், கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தலாம் என்பதும் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இந்த விவகாரத்தில் சசி தரூரின் பதவி பறிபோய்விட்டது. இன்னும் சில நாட்களில் லலித் மோடியின் பதவியும் காலியாகி விடும். இதற்கு அடுத்தபடியாக சிக்கப் போகும் வி.ஐ.பி., யார் என்பதும், இந்த ஊழலின் பின்னணியில் உள்ள பண முதலைகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அப்படியில்லாமல், வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை, பரபரப்பை ஏற்படுத்துவதற்காக நடக்கும் கண் துடைப்பாக இருந்து விடக் கூடாது. இந்தியன் பிரிமியர் லீக்., இந்தியன் பினாமி லீக்.,காக செயல்படுகிறது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான பதில் தேவை.

சூதாட்டம் நடப்பது எப்படி? ‘ஐ.பி.எல்., ‘டுவென்டி 20’ போட்டிகளில் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்று ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி முனகூட்டியே திட்டமிட்டு கூறிவிடுவதாகவும், அதன் படி போட்டிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லலித் மோடி இவ்வாறு போட்டி முடிவுகளை கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கோல் கட்டா அணிக்கும் இடையே நடந்த ஐ.பி.எல்., போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது.இந்த போட்டியின் முடிவை லலித் மோடி முன்கூட்டியே தெரிவித்தார். மேலும், நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும். ‘சூப்பர் ஒவர்’ வரை வந்து, ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் என லலித் மோடி தனது நண்பர்களிடம் தெரிவித்தார். அவரது கணிப்பு சரியானது. இவ்வாறு போட்டி முடிவுகளை லலித் மோடி முன்கூட்டியே தெரிவிப்பதால், ஐ.பி.எல்.. போட்டிகளில் சூதாட்டம் நடக்கிறது என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.வருமான வரித்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:லலித் மோடியின் வங்கிக் கணக் குகள், போன் ‘டீலிங்’, மெயில்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டன. இங்கிலாந்து, மொரீசியஸ், அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளில் பதிவு செய்யப் பட்ட, ‘மொபைல்’ எண்களைப் பயன்படுத்தியுள்ளார்.தனது உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம், கிரிக்கெட் சூதாட்டத்தில் மோடி ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நெருக்கடியில் சரத் பவார் கட்சி : ஐ.பி.எல்., அணிகள் தொடர்பான முறைகேடுகளில் தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மருமகன் சதானந்த், மற்றொரு தலைவர் பிரபுல் படேல் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சி அணியின் ஏலம் தொடர்பான விவரத்தை, மத்திய அமைச்சர் பிரபுல் படேல், ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியின் அலுவலகத்தில் இருந்து கேட்டுப் பெற்றுள்ளார். ஐ.பி.எல்., அலுவலகத்தில் பணிபுரியும் பிரபுல் படேலின் மகள் பூர்ணா மூலமாக, இந்த விவரங்கள் இ-மெயிலாக பிரபுல் படேல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.பி.எல்., போட்டிகளை ‘டிவி’யில் ஒளிபரப்பும் மல்டி ஸ்கிரீன் மீடியாவில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் சம்பந்தியும், லோக்சபா எம்.பி., சுப்ரியா சுலேயின் மாமனாருமான பி.ஆர்.சுலேவுக்கு 10 சதவீத பங்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், சரத் பவார் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

யார் இந்த லலித் மோடி? லலித் மோடி, கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கிருஷ்ண குமார் மோடி, ‘மோடி என்டர் பிரைசஸ்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர். சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார், மோடி. பள்ளி படிப்பு ஒத்துவரவில்லை. இதற்கு பின், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள பல்கலையில் சேர்ந்து படித்தார். கடந்த 1999ல் இமாச்சல பிரதேச மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்தார். அப்போது அந்த மாநிலத்தில், கிரிக்கெட் ஸ்டேடியம் எதுவும் இல்லை. ஸ்டேடியம் கட்டித் தருவதாக கூறித் தான், சங்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் குழப்பம் விளைவித்ததால், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்தார். இங்கு தனது பெயரை லலித் குமார் என, கூறிக் கொண்டார். அடுத்தபடியாக, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் மோடிக்கு நெருக்கம் ஏற்பட்டது. சரத் பவார் போன்றோருடன் தொடர்பு வைத்துக் கொண்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் பல மடங்கு அதிகரித்தது.கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் துவங்கப்பட்டது. அதன் தலைவர் பதவியும் மோடிக்கே கிடைத்தது. அப்போது தான்’டுவென்டி-20’போட்டிகளை இவர் அறிமுகப்படுத்தினார். கிடு,கிடு, வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த மோடியின் வாழ்க்கையை, சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., கொச்சி, புனே அணிகளுக்கான ஏலம் புரட்டி போட்டு விட்டது. இந்த விவகாரத்தில் சசி தரூருடன் மோதியதால்,மோடியின் ‘மஸ்தான்’வேலைகள் ஒன்றொன்றாக வெளியில் வரத் துவங்கி விட்டன.

மோடியின் ஆடம்பரம் : ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, ராஜஸ்தானில் மன்னர் களால் கட்டப்பட்ட சிறிய அளவிலான இரண்டு அரண்மனைகளை வாங்கி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானை மையமாக கொண்டு ஆட்சி நடத்திய மன்னர்கள், விடுமுறைக் காலங்களில் வசிப்பதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான அரண்மனைகளை கட்டியிருந்தனர். இவை பழம் பெருமை மிக்கவை. இவற்றில் இரண்டு அரண்மனைகளை, 21 லட்ச ரூபாய்க்கு லலித் மோடி வாங்கியுள்ளார். இந்த அரண்மனைகளின் உண்மையான மதிப்பு 1.5 கோடி ரூபாய். இதுகுறித்து மாநில அதிகாரிகள் தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர். மோடிக்கு சொந்தமாக விமானமும் உள்ளது. மத்திய தரைக் கடல் பகுதியில் ‘ஹாலிடே ஹோம்’ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளார்.

%d bloggers like this: