மரகதச் செல்விக்கு மணக்கோலம்! (ஆன்மிகம்)-ஏப்., 25 மீனாட்சி கல்யாணம்!கண் போல் பக்தர்களைப் பாதுகாக்கும் அங்கயற்கண்ணி மீனாட்சிக்கு திருக்கல்யாண திருவிழா மதுரையில் கோலாகலமாக நடக்கிறது. விச்சாவதி எனும் பெண்மணி, அன்னை பராசக்தியின் பக்தையாக விளங்கினாள். அம்பாளை தன் மகளாகக் கருதி, சேவை செய்து வந்தாள். தாயும், தந்தையுமில்லாத, ஆதியும், அந்தமும் இல்லாத அந்த பராசக்தியும் அவளது தாய்மை உணர்வைப் பாராட்டி, அவளுக்கு காட்சி தந்தாள். அவள் வேண்டும் வரம் கேட்டாள்…
‘தாயே! உன்னை இப்பிறவியில் என் கற்பனை மகளாகக் கண்டேன். இன்னொரு பிறவியில் நீ நிஜமாகவே என் மகளாக பிறக்க வேண்டும்…’ என்றாள். அன்னையும் அந்த வரத்தை அருளினாள்.
மறுபிறவியில் விச்சாவதி, சோழமன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாகப் பிறந்தாள். இவளை மலையத்துவஜ பாண்டியனுக்கு மணம் முடித்து வைத்தனர். இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் பாண்டியன். யாக குண்டத்தில் மூன்று வயது குழந்தையாக தோன்றினாள் அம்பாள். அவளுக்கு தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தனர். இவளுக்கு, ‘தடாத நங்கை’ என்று பெயர் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில், ‘தடாதகை’ என மருவியிருக்கலாம். ‘தடா’ என்றால், மாறுபட்டது, வித்தியாசமானது என்று பொருள். ஆம்… தடாதகை மற்ற பெண்களைப் போல் அல்லாமல் மூன்று தனங்களுடன் பிறந்தாள். எனவே, இந்தப்பெயர் அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். அவளது கண்கள் மீன்களைப் போல் நீண்டிருந்தன. எனவே, அவள், ‘அங்கயற்கண்ணி’ என்ற சிறப்பு பெயர் பெற்றாள்.
தங்கள் மகளுக்கு இத்தகைய ஓர் நிலை ஏற்பட்டது கண்டு பெற்றோர் வருந்தினர். ஆனால், அசரீரி தோன்றி, ‘இவளை திருமணம் செய்து கொள்ள யார் தகுதியானவரோ, அவர் இவள் முன்னால் வரும் போது இந்த தனம் மறைந்து விடும்…’ என்றது. இதனால், அவர்கள் திருப்தியடைந்தனர்.
வீரத்திலும், கலைகளிலும் சிறந்து விளங்கிய அவளிடமே ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான் மலையத்துவஜன். மகாராணியான தடாதகை பிராட்டி, மீன் தன் கண்களால் குஞ்சுகளைக் கண்காணிப்பது போல, தன் மக்களைக் கருணையுடன் பாதுகாத்தாள். இதனால், ‘மீனாட்சி’ என்ற திருநாமம் அவளுக்கு ஏற்பட்டது.
பதவியேற்ற மீனாட்சி, உலகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர எண்ணி, எல்லா திசைகளுக்கும் சென்றாள். அப்பகுதியை ஆட்சி செய்தவர்களெல்லாம் தங்கள் ராஜ்யத்தை ஒப்படைத்தனர். பூலோகத்தை தன் ஆளுகைக்கு கொண்டு வந்த அவள், கைலாயத்தை நோக்கி விரைந்தாள். சிவகணங்களையெல்லாம் அடக்கினாள். நந்திதேவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் சிவபெருமானிடம் முறையிட்டார்.
சிவபெருமான் தேரிலேறி அவள் முன் வந்தார். தன் வசீகர பார்வையை அவள் மேல் படரவிட்டார். மற்றவர்களைக் கண்டு மனம் தளராத மீனாட்சி, இவரைக் கண்டதும் ஏனோ நாணமடைந்தாள். அவளது மூன்றாவது தனம் மறைந்தது. மீனாட்சியுடன் சென்ற அமைச்சர் சுமதிக்கு மட்டுமே தனத்தின் ரகசியம் தெரியும். அவர் மீனாட்சியிடம் அதுபற்றி எடுத்துரைத்து, ‘இவரே உங்களைக் கைப்பிடிக்க வந்தவர்!’ என்றார்.
பின்னர் மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தேவலோகமே சூழ சிறப்பாக நடந்தது.
அன்னையின் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசித்து மகிழ்வோம்.

%d bloggers like this: