Daily Archives: ஏப்ரல் 26th, 2010

ஐ.பி.எல்., எனும் அட்சய பாத்திரம்

முதல் விக்கெட் விழுந்துவிட்டது.அடுத்தது எப்போது விழும் என, நகத்தைக் கடித்தபடி ‘டிவி’ ÷ஷாரூம் முன்னால் நிற்கும் ரசிகர்களைப் போல, ஆவலோடு காத்திருக்கிறது இந்தியா.விழுந்தவர் சசி தரூர். விளிம்பில் நிற்பவர் லலித் மோடி.ஒருபுறம், அவரை ‘அவுட்’டாக்க ஏகப்பட்ட பந்து வீச்சாளர்கள் காத்திருக்கின்றனர். மறுபுறம், ‘நம்மையும் ‘அவுட்’டாக்கிவிடுவாரோ’ என்ற பயம் கொண்டவர்கள், அவருக்கு பதிலாக, ‘பை ரன்னராக’ ஓடிக் கொண்டிருக் கிறார்கள்.

அணிகளுக்கான விலை நிர்ணயம், புதிய அணிகளுக்கான கட்டணம், அதிபர்களின் நிதி ஆதாரம், பின்னணி பைனான்சியர்கள் பற்றிய விபரம், ஐ.பி.எல்.,லின் துபாய் தொடர்பு, போட்டிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயத்தில் விளையாடிய பணம் என ஏராளமான விஷயங்கள் சந்திக்கு வந்துவிட்டன.இந்த ஐ.பி.எல்., காமெடியில் எத்தனை ஆயிரம் கோடி பரிமாற்றம் நடந்திருக்கும் என்பது, புலனாய்வுத் துறைக்கே புரியாத புதிராய் இருக்கிறது. விஞ்ஞானப்பூர்வ ஊழல் நடந்திருக்கிறது என்பதில், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதை எப்படி வெளிக்கொணர்வது என்பதில் தான், மத்திய அரசும், வருமான வரித்துறையும் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கின்றன.

மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு, அடிப்படை முகாந்திரங்கள் ஆயிரம் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மையமாக, ஐ.பி.எல்., திகழ்கிறது. வரம்பில்லா பணமும், முடிவில்லா வறுமையும் தானே சமூகத்தின் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகின்றன.ஐ.பி.எல்.,லின் இன்றைய சந்தை மதிப்பு, ஒன்றல்ல… இரண்டல்ல… 18 ஆயிரம் கோடி ரூபாய்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி துவக்கப்பட்ட முதல் போட்டி, மிகச் சரியாக இரண்டே ஆண்டுகளில் இந்த உயரத்தை எட்டியுள்ளது. லாட்டரியில் கூட இப்படி ஒரு பம்பர் பரிசு கிடைத்ததாக பதிவு இல்லை.இதுமட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகள் இந்த விளையாட்டுக்கும், அணிகளுக்கும், வீரர்களுக்கும், டிக்கெட்டுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வரிவிலக்கு அளித்திருக்கின்றன. யார் வீட்டு பணத்துக்கு யார் விலக்களிப்பது?

இத்தனை ஆயிரம் கோடிகள் புரண்டும், இந்த ஐ.பி.எல்.,காரர்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. சாலையில் தூய்மைப் பணி மேற்கொள்வது போல், தொழிலாளர்களுடன் மண் சுமப்பது போல், அரசியல்வாதிகள் ஒப்புக்கு, ‘போஸ்’ கொடுப்பார்கள். ஐ.பி.எல்., அதிபர்கள் அந்த வேலையைக் கூட செய்தது கிடையாது.
விளையாட்டு வீரரின் நெற்றியைத் தவிர, கிடைத்த இடத்தில் எல்லாம் விளம்பரத்தைப் போட்டு, ரசிகனின் பாக்கெட்டில் இருந்து பணம் பறிப்பதையே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.

கடந்த 2009ம் ஆண்டு, இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்த சமயம். ‘கொஞ்சம் ஒத்தி வையுங்கள்’ என மத்திய அரசே கெஞ்சிக் கேட்டது. ‘அதெல்லாம் முடியாது; வட்டிக் கணக்கு என்ன ஆவது?’ என அலட்சியப்படுத்திவிட்டு, அந்த ஆண்டுக்கான போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்கு கடத்திச் சென்றார் லலித் மோடி. அவ்வளவு ஏன்? ஐ.பி.எல்.,லை ஆரம்பித்ததிலேயே நல்ல நோக்கம் கிடையாது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவை முன்னிலைப்படுத்தி, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) ஆரம்பிக்கப்பட்டது. ‘நல்ல வீரர்கள், இளைஞர்கள், இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகின்றனர்; அணிக்கு ஆள் சேர்ப்பதில் பணம் பாதாளம் வரை பாய்கிறது’ என்ற புகாரின் காரணமாக, இளம் வீரர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டும் விதமாக, ஐ.சி.எல்.,லுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

அது நடந்துவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குட்டு உடைந்துவிடுமே. உடனடியாக, அவசரத் தீர்மானம் நிறைவேற்றி ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.பி.எல்.,மொத்த நோக்கமும் பாழ். வீரர்களைச் சேர்க்கும்போது, அதன் முதல் நிபந்தனையே, ‘ஐ.சி.எல்.,லோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்பது தான். அதோடு ஐ.சி.எல்., ஊத்தி மூடப்பட்டது; ஐ.பி.எல்., செழித்து வளர்ந்தது.

அணியைச் சொந்தமாக்கிக்கொள்ள நூற்றுக்கணக்கான கோடிகள் பேரம் பேசப்பட்டன. அந்த அணிகளுக்கான வீரர்கள், ஆடு, மாடுகள் போல் ஏலம் எடுக்கப்பட்டனர். அவர்களது விலையும் கோடிகளில் கொளுத்தியது. கண், மண் தெரியாமல் பணம் விளையாடியது; இன்றைய சர்ச்சையில் வந்து நிற்கிறது.

இப்போது எல்லா விரல்களும், லலித் மோடியை நோக்கி பாய்கின்றன. அத்தனைக்கும் காரணகர்த்தா அவர் தான் என்றாலும், அத்தனையையும் அவரே அள்ளிப் போட்டிருக்க வாய்ப்பில்லை. எந்த இடத்திலாவது ஊழல் நடந்தால், இரண்டு காரணங்களுக்காக அது வெளியில் தெரியும். ஒன்று, நியாயவான்கள் கொதிப்பது. இரண்டு, கூட்டாளிகளுக்கு உரிய பங்கு கிடைக்காதது.

ஐ.பி.எல்.,லில் நியாயஸ்தர்களும் இல்லை; பங்கு கிடைக்காதவர்களும் இல்லை; ‘அத்தனை பேருக்கும் ஆனந்தம்’ என்பது தான் லலித் மோடியின் அடிப்படை தத்துவம். தான் சம்பாதித்தது மட்டுமின்றி, அணி அதிபர்களும், உறவினர்களும், நண்பர்களும், அதிகார வர்க்கத்தினரும், ஆளும்கட்சியினரும் சம்பாதிக்க வழிவகுத்துக் கொடுத்தார் மோடி. அதனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை.

இப்போது இந்த விவகாரம் வெளியில் வந்தது கூட, யாருக்கு எவ்வளவு என்ற மோதல் எழுந்ததால் தான். தன் மூன்றாவது தோழிக்காக சசி தரூர் சண்டை பிடிக்க, லலித் மோடி முரண்டு பிடிக்க, கத்திரிக்காய் முற்றி கடைக்கு வந்துவிட்டது.’பிப்டி பிப்டி’ என்பது வர்த்தகர்களின் வார்த்தை. அவர்கள் அணி திரண்டு அமைத்தது தான் ஐ.பி.எல்., என்பதால், இந்த விளையாட்டுக்கும், ‘டுவென்டி டுவென்டி’ என்றே பெயர் வைத்தனர் போலும்.

அணிகளின் அதிபர் பட்டியலைப் பாருங்கள். ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், ஷாரூக் கான், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி… அத்தனை பேரும் நம்பர் ஒன் கோடீஸ்வரர்கள். அல்லது, அந்த இடத்தை அடையத் துடிப்பவர்கள்.அப்போதே இது, விளையாட்டு என்ற அந்தஸ்தை இழந்து, வர்த்தகமாக பரிணமித்துவிட்டது. வியாபாரம் என்றால், லாபம் – நஷ்டம் தான் அளவீடே தவிர, வெற்றி – தோல்வி அல்ல.

போதாத குறைக்கு, அரசியல்வாதிகளின் நேரடி, மறைமுகத் தலையீடு வேறு. சரத் பவார், பிரபுல் படேல், சசி தரூர், லாலு பிரசாத், நிதிஷ் குமார், நரேந்திர மோடி என மத்திய, மாநில கிரிக்கெட் வாரியங்களின் அரசியல்வாதிகளின் நேரடி அல்லது மறைமுகப் பங்களிப்பு இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தால், விளையாட்டு வினையாகாமல் வேறு என்ன செய்யும்?இன்னொரு கிசுகிசுவும் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘இந்திய கிரிக்கெட் வாரியமே சரத் பவாரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அவருடைய தீவிர ஆதரவாளர் லலித் மோடி. பவார், தேசியவாத காங்கிரஸ்காரர். தரூர், காங்கிரஸ்காரர்.

தரூரை காவு வாங்கிவிட்டார் பவார். ஏற்கனவே ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பவாரின் பவரைப் பிடுங்க இதுவே தருணம் என நினைத்த காங்கிரஸ், புழக்கடை வழியாகப் பாய்கிறது’ என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.’அதற்காகத் தான் லலித் மோடிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது; அடுத்ததாக, மத்திய அமைச்சர் பிரபுல் படேல் சிக்கவைக்கப்படுகிறார்’ என்கின்றனர் அவர்கள். இன்னும் என்னென்ன ரகசியங்கள் எல்லாம் வெளிவரப் போகின்றனவோ!

இவற்றுக்கெல்லாம் தீர்வென்ன?:மோடியை பதவி நீக்கிவிடலாமா? நீக்கலாம்; நீக்காமலும் போகலாம். அது, மோடியின் பையில் எவ்வளவு சரக்கு இருக்கிறது; அது வெளியில் வந்தால் யார் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைப் பொறுத்தது. ஒருவேளை மோடி தொடராவிட்டாலும், மோசடி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கிரிக்கெட் வாரியத்தை தேசிய மயமாக்கிவிடலாமா? எனக்கு அதில் உடன்பாடில்லை. உடனடியாக, ‘அதிலும் இடஒதுக்கீடு வேண்டும்’ என போர்க்கொடி தூக்கிவிடுவர். தலித்களுக்கு ஐந்து, பிற்படுத்தப்பட்டோர் மூன்று, இதர பிற்படுத்தப்பட்டோர் இரண்டு; பழங்குடியினருக்கு ஒன்று; மற்றவர்கள் எல்லாம், ‘சப்ஸ்டிட்யூட்’கள்.

வர்த்தகர்களாவது இரண்டு அணிகளை, நேரடியாக மோதவிட்டு கல்லா கட்டுகின்றனர். காளை மாட்டில் பால் கறக்கும் அரசியல்வாதிகளின் கையில் போய்விட்டால், ‘வீடியோ கேம்சி’லேயே வசூலைப் போட்டுவிடுவர். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கலாகாது.

வீரர்களுக்கும், அணி அதிபர்களுக்கும், ஐ.பி.எல்.,லுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் கடுமையான வரி விதிக்க வேண்டும். அவர்களது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்கு வழங்க வேண்டும். வாரியத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் போல, சுதந்திரமான அமைப்பின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வாரியத்தின் அத்தனை முடிவுகளும், அந்தக் கமிஷனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.இதெல்லாம் நடந்தால், ஒழுங்கான கிரிக்கெட் ஓரளவு சாத்தியம்.

ஆர்.ரங்கராஜ் பாண்டே

– பத்திரிகையாளர் –

தவறு செய்து விட்டீர்களா? மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!

‘சாரி… நான் உங்களை, ‘டீஸ்’ செய்திருக்கக் கூடாது…’ என, நீங்கள் கிண்டல் அடித்த பெண்ணிடம் கூறிப் பாருங்கள்; ‘பரவாயில்லை… ஐ டோன்ட் மைண்ட்’ என, உடனே பதில் வரும். இதே வார்த்தையை, நீங்கள் கிண்டல் அடித்த ஆணிடம் கூறிப் பாருங்கள்… ‘மவனே… இன்னொரு தடவை கிண்டல் பண்ணினே…’ என, மூக்கு விரிய, உங்களை அடிக்க வருவார். அரை மணி நேரத்திற்குப் பிறகு தான், ஆசுவாசப்படுவார்.ஒரு பெண்ணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ நடந்து கொண்டால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அப்பெண் எதிர்பார்ப்பார் எனவும், அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதய பாதிப்பே கூட ஏற்படும் என்றும், பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எனினும், மன்னிப்பு கேட்ட அடுத்த நொடியே, அந்தப் பெண், சாதாரண மனநிலைக்கு வந்து விடுவார்; அவருடைய ரத்த அழுத்தமும் சாதா நிலைக்கு வந்து விடும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதே போல் ஒரு ஆணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ பேசி விட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் லேசில் பணிய மாட்டார். மேலும், அவருடைய ரத்த அழுத்தம் சீரடையவும், கோபம் தணியவும் வெகு நேரம் ஆகும் என்றும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது.மன்னிப்பு கேட்பது, மாத்திரைகள் விழுங்குவதைத் தவிர்க்க சிறந்த மருந்து என்று, அந்த ஆய்வை நடத்திய பிரிட்டன் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடம்பு மெலியணுமா? வெறும் ‘டயட்’ மட்டும் போறாது

குண்டான நீங்கள், ‘ஸ்லிம்ரன்’னாக மாற வேண்டுமா? அதற்கு, ‘டயட்’ மட்டும் போதாது; உடற்பயிற்சியும் வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.அமெரிக்காவின் ஒரேகான் நலவாழ்வு மற்றும் அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். உடம்பு மெலிவதற்கு, உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு உதவுகிறது என்பது தான், ஆய்வின் நோக்கம்.இதற்காக அவர்கள், பெண் குரங்குகளுக்கு, தொடர்ந்து சில ஆண்டுகளாக நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவாக அளித்து வந்தனர். இதனால் அவை நன்றாகக் கொழுத்து விட்டன. பின் அந்த உணவைக் குறைத்து அளவாகக் கொடுத்து வந்தனர்.

கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் எடைக்கும், உணவுக் கட்டுப் பாட்டின் போது இருந்த உடல் எடைக்கும், பெரிய வித்தியாசம் இல்லை என்பதைக் கண் டறிந்தனர்.விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஜூடி கேமரூன், ‘குரங்குகளுக்கு மேலும் உணவைச் சுருக்கினோம். அப்போதும் உடல் எடையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் அவை கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் ரீதியான செயல்கள், உணவைக் குறைக்க ஆரம் பித்ததும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன’ என்கிறார்.

இதையடுத்து, மற்றொரு குரங்குக் குழுவுக்கு இதேபோல் நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவைக் கொடுத்து பின், உணவுக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்தனர். அதோடு, உடற்பயிற்சியும் அவற்றுக்குக் கொடுத்தனர். அப்போது அவற்றின் உடல் எடையில் குறிப் பிடத் தகுந்த மாற்றம் ஏற்பட்டது. உடல் எடை குறைந்தது.’உணவு மட்டுமே மனிதன் மற்றும் விலங்குகளின் உடல் எடையைக் குறைப்பதற்குப் போது மானதல்ல; அதோடு, உடற்பயிற்சியும் சேர்த்து செய்தால்தான், உடல் எடையில் மாற்றம் ஏற்படும் என்பதை இவ்வாய்வு நிரூபித்துள்ளது.குறிப்பாக குண்டான குழந்தைகளுக்கு இம் முறையைப் பயன்படுத்தலாம்’ என்கிறார் ஜூடி கேமரூன்.

குழந்தை இலக்கை தீர்மானியுங்கள்!

குழந்தையை படிக்க வைப்பது ஓர் இலக்கு நோக்கித்தான்.
நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது ஓர் இலக்கு.
பொறியியல், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், நீதிமன்றம், அரசு வேலை, ஆசிரியர் என்று எத்தனையோ இலக்குகள்.
ஒவ்வொரு இலக்குக்கும் ஒவ்வொரு படிப்பு.
குழந்தையை எந்த படிப்பு படிக்க வைப்பது? எந்த தொழிலில் ஈடுபடுத்துவது? போன்ற இலக்குகளை குழந்தைக்காக பெற்றோர்களைகிய நாம்தான் தீர்மானிக்கிறோம்.
அப்படி தீர்மானித்து, அந்த இலக்கை நோக்கி குழந்தையை செலுத்துவது நமது கடமை.
ஆனால், இலக்கை தீர்மானிக்கும்போது அது குழந்தைக்கு பொறுத்தமானதா என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போல தீர்மானிக்க வேண்டும்.
எதை படிக்க வேண்டும் என்பதை தானாக் தீர்மானிக்கும் பக்குவம் வரும் வரையில், குழந்தைக்கு நாம்தான் முடிவெடுக்க உதவ வேண்டும்.
அதேசமயத்தில் அந்த முடிவு குழந்தைகளுக்கு உறுத்தாததாகவும் பிடித்ததாகவும் அமைய வேண்டும் ஏனெனில் உங்களது முடிவை செயல்படுத்தப் போவது குழந்தைதானே.

எங்கே படிக்க வைப்பது?
ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு பின் வரும் கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.
இந்தப்பள்ளி நமது குழந்தையை என்ன மாதிரியான நபராக உருவாக்கும்?
நமது குழந்தையின், சமூக தேவை என்ன, படிப்பு தேவை என்ன, உணர்வு தேவை என்ன அவற்றை இந்தப் பள்ளி பூர்த்தி செய்யுமா?
மேற்கண்ட தேவைகளில் குறுகிய அல்லது நீண்டகால அவகாசத்தில் எந்தெந்த தேவைகளை இந்தப்பள்ளி பூர்த்தி செய்யும்?
நமது குழந்தையின் வளர்ச்சியை இந்தப்பள்ளியில் சூழ்நிலை எந்த அளவுக்கு வளர்க்கும் அல்லது தடுக்கும்?
இந்தப்பள்ளியின் சில முடிவுகள் நம்மோடு ஒத்துப்போகாத சூழ்நிலை வருமானால், அப்போது நமக்கு இருக்கும் மாற்று ஏற்பாடுகள் என்னென்ன?
படிப்பில் நமது குழந்தைக்கு எந்த அளவு ஈடுபாடு அல்லது கவனம் தேவைப்படுகிறது? அந்த கவனத்தை அல்லது ஈடுபாட்டை இந்தப்பள்ளி உருவாக்குமா?
இந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன்? அந்த எதிர்பார்ப்பு சரியானதுதானா?
இந்த கேள்விக்களுக்கான பதில்களைப் பெற சிலநேரங்களில் சிரமம் ஏற்படலாம். ஆனால் பதில்களைப் பெறுவது பலன் தரும். உங்கள் குழந்தைக்கு நல்ல படிப்பை தருவதற்கான முதல் அடி இதுதான்.

பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?

* சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.

* காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோpடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.

* செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.

* சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங் களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறி விடுகிறது.

* உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.

* கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.

* பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.

* குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்.

* செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

* மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.

`பளிச்’ நிறம் பயங்கரம்-உணவில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் வண்ணங்கள் கலப்படம்

எல்லாமே செயற்கையாகிவிட்ட இன்றைய அவசர உலகில், உணவு பொருட்களும் அப்படித்தான். நாமெல்லாம் உணவு பொருட்களில் கலபப்படம் செய்வதை பற்றியே கலங்கிக் கொண்டிருக்க… புதிய அபாயத்தையும் நாம் அறியாமல் இருந்திருக்கிறோம். ஆம்… இன்றைக்கு உணவு பொருட்களில் பளீர் நிறத்துக்காக கலக்கபடும் அனைத்து செயற்கை ரசாயனங்களும் நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பது மட்டுமின்றி, உயிருக்கே ஆபத்தாகவும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, காபித்தூளில் சிக்கரித்தூள் கலப்படம் செய்யபடுகிறது. பொதுவாக எல்லா காபித்தூள் பாக்கெட்டிலும், அதில் கலக்கபட்டிருக்கும் சிக்கரியின் சதவிகிதம் குறிப்பிடபட்டிருக்கும். ஆனால், குறிபிட்ட அந்த அளவுக்கு அதிகமாக சிக்கரியை சேர்த்தால் அது கலப்படம்.

அதேபோல், தேயிலைத் தூளுடன், பளீர் நிறத்துக்காக சாயம் கலக்கப்படுகிறது. கூட்டு பெருங்காயத்துடன் கால்போனி மற்றும் கருவேல மரத்தின் பிசின் ஆகிய பொருட்கள் கலக்கபடுகின்றன.

குளிர்பானங்களில் எத்தலின், கிளிக்கால், பாஸ்பரிக் போன்ற அமிலங்கள் மற்றும் சாபரின் என்னும் போதை பொருட்களும் கலக்கபடுகின்றன. பலவித கலர் இனிப்புகளில் நிறத்துக்காக இப்படி சேர்க்கபடுகின்றன.

டீத்தூளில் சாயம் கலந்ததை கண்டுபிடிக்க வழி உண்டு. அதாவது ஈரமான வடிதாளின் மீது டீத்தூளை தூவும் போது, வண்ணங்கள் தோன்றினால், அது சாயம் கலந்த தூள் என்று அறியலாம். இத்தகைய கலப்படம், கல்லீரல் கோளாறுகளை உண்டாக்கும்.

நன்றாக பொடியாக்கபட்ட ஒரு கிராம் பெருங்காயத்துடன், ரெக்டிபைடு ஸ்பிரிட் சேர்த்துக் குலுக்கி, வடிகட்டி அதை ஐந்து மில்லி எடுத்து, அத்துடன் பத்து சதவிகித பெர்ரிக் குளோரைடு சேர்த்துக் குலுக்கவும். இளம் பச்சை நிறம் தோன்றினால் பெருங்காய துடன் வேறு பிசின்களும் கலந்திருப்பது உறுதி. இதனால் அலர்ஜி, சீதபேதி ஏற்படலாம்.

குளிர்பானங்களில், பொங்கி வழியும் நுரைக் காக, கவர்ந்திழுக்கும் நிறம், குடிக்கும்போது `சுர்’ என்று ஏறும் உணர்வுக்காக சில ஆசிட் கலக்கப்படுகின்றன.

இப்படி கலக்கப்படும் இனிப்பு, ஜாம் மற்றும் பழரசத்தை எடுத்து, அதனுடன் சுடுநீர் சேர்த்து கலக்கினால் வண்ணங்கள் பிரிந்து விடும். அதனுடன் சில துளிகள் ஹெச்.சி.எல். எனப்படும் கெமிக்கலை சேர்த்தால், வெளிர் சிவப்பு நிறம் தோன்றும். இதன் முலம் அதில் கலப்படம் என்பது உறுதியாகும்.

உணவு பொருட்களில் வண்ணங்கள் எந்தளவுக்கு கலக்கலாம். எவையெல்லாம் இருக்கலாம் என்பதற்காக இந்திய அரசில் `ப்ரிவென்ஷன் ஆப் புட் அடல்ட்ரேஷன்’ என்ற சட்டபிரிவின் கீழ் சில கெமிக்கல்கள் அனுமதிக்கபடுகின்றன. இவற்றை `பெர்மிடட் கலர்’ என்பார்கள்.

தரமான கடைகளில் ஸ்வீட் வாங்கும்போது அந்த ஸ்வீட்டில் என்னென்ன கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது என்பதை அட்டை பெட்டியில் குறிபிட்டிருப்பார்கள்.

அனுமதிக்கபடாத வண்ணங்கள் சேர்க்கபட்டிருந்தால், அது உடலுக்கு பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் வரும் `மெட்டானில் யெல்லோ மற்றும் லீட் குரோமேட்’ ஆகியவை கேன்சரை ஏற்படுத்தக்கூடிய கெமிக்கல்கள் ஆகும். ரோடமின் பி எனபடும் கெமிக்கல், குடல் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரஞ்சு டூ கிட்னியை பாதிக்கும். காங்கோ ரெட் என்பது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய கெமிக்கல்களை `கோல் டார் டைஸ்’ என்று சொல்வார்கள்.

சில வகை ஸ்வீட்களில் வெள்ளி ஜரிகைக்கு பதிலாக அலுமினியம் பாயல் கலப்படம் செய்யபடுகிறது. இதை சாப்பிடும்போது அது வயிற்றுக் குழாயை பாதித்து, இரைப்பையில் சேதம் ஏற்படுத்தும். இதனால் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும்.

அதேபோல் வீட்டில் சமைக்கும் கேசரி பவுடர், ஜிலேபி பவுடர் போன்ற பொருட்களிலும் கலப்படம் இருக்கிறதா என்பதை கண்டறிவது நல்லது.

இதயத்தை கவனியுங்கள்!

இதயம் மனித உடலில் உள்ள மிக அத்தியாவசியமான உறுப்பு. நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக நடப்பதற்குத் திருவாளர் இதயமே பொறுப்பு. ஆனால் கவிஞர்களும், மக்களும் சேர்ந்து இதைக் காதலின் அடையாளச் சின்னமாக ஆக்கிவட்டார்கள்.
மனித உறுப்புகளில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள உறுப்பு ஒன்று உண்டென்றால் அது இதயமாகத்தான் இருக்க முடியும். ஏண்டா இப்படி இரக்கமே இல்லாம அரக்கத்தனமா நடந்துக்கிற? உனக்கு இதயமே இல்லையா?
நெஞ்சில பயமே இல்லாம எப்படிப் பேசறான் பாரு?
படிச்சதை எல்லாம் மனசில நல்லா பதிய வச்சுக்கோடா. அப்பதான் எல்லாம் ஞாபகத்தில் இருக்கும்.
அவருக்கு ரொம்ப தாராள மனசுங்க. இல்லேன்னு செல்லாம எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுப்பாரு.
இது போன்ற டயலாக்குகளை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கக்கூடும். படித்தவர்கள்கூட இப்படித்தான் கேட்டிருக்கக்கூடும். படித்தவர்கள் கூட இப்படித்தான் புரியாமல் பேசிவிடுகிறார்கள். காதல், இரக்கம் போன்ற மென் உணர்ச்சிகளும், குணங்களும், நினைவாற்றலும் இதயத்தோடு தொடர்புடையவை என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதயமும், மனசும் ஒன்று என்பதும் நம் தவறான கருத்துகளும் ஒன்று.
உண்மையில் மேலே சொன்னவை எல்லாம் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. நான் இரண்டாம் வரியில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் இதயத்தின் அடிப்படையான வேலை. அதாவது நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு காரணம் இதயம். இதயம் பற்றிய விழிப்புணர்வு இந்த லட்சணத்தில் இருக்கும்போது, அந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது பற்றியும், நோய்கள் தாக்காமல் அதைப் பாதுகாப்பது பற்றியும் எந்த அளவில் நாம் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை.
இப்படி ஒரு அறியாமை நிலவுவதால்தான் இதயம் தொடர்பான நோய்களுக்கு நம் நாட்டு மக்கள் மிக எளிதாக இலக்காகிவிடுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இதய நோய்கள் இந்திய மக்களிடையே பரவும் வேகமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான உண்மையை உறுதிப்படுத்துவதும் வகையில் பெங்களூரைச் சார்ந்த உடல் நல அறிவியல் மையம் சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வெறும் அறிக்கை அல்ல, நாம் விழித்துக் கொள்வதற்காக அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள மொத்த இதய நோயாளிகளின் எண்ணிக்கையில் 60 சதவீதத்தினர் இந்தியாவில்தான் இருப்பார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நம் நாட்டு பொருளாதாரத்துக்கு மிகவும் சவாலாக அமையும் என்பதும் அதில் உள்ள ஆபத்துகளுள் ஒன்று. இன்னொரு புள்ளி விவரத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மற்ற ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் உள்ள இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஜப்பானில் உள்ள மக்களை விட 20 மடங்கு அதிகமாக நம் நாட்டு மக்கள் இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதய நோய்களைப் பொருத்தவரை இன்னும் பல சவாலான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, மாரடைப்பால் (இதயத் தாக்கம்) பாதிக்கப்படும் இளம் வயதினரின் எண்ணிக்கை மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் அதிகமாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்த எண்ணிக்கையும், வித்தியாசமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மேலை நாடுகளில் மாரமைப்பு என்பது முதியவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் நம் நாட்டில் இதயத் தாக்கம் என்பது இளம் வயதினரைத்தான் அதிகமாகப் பாதிக்கிறது.
உலக அளவில் பொருளாதார நிலையில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பெரும்பாலும் இதயத் தமனி நோய்களைத்தான் (Coronary Artery Diseases) இதய நோய்களாகக் குறிப்பிடுவார்கள். அங்கு ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல், இதயத் தமனி தொடர்புடைய நோய்கள்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.
ஆனால் இந்தியாவில் ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்து அவர்களுக்கு ஏற்படும் இதயப் பாதிப்புகளும் வேறுபடுகின்றன. வறுமையில் வாழும் குழந்தைகளுக்கும், ஏழைமையில் உள்ள மக்களுக்கும் இதய வாழ்வுகள் தொடர்புடைய நோய்களும், வசதியானவர்களுக்குப் பெரும்பாலும் இதயத் தமனிகள் தொடர்புடைய நோய்களும் ஏற்படுகின்றன. எனவே இந்த இரண்டு வகையான பாதிப்புகளைச் சமாளிக்க இரண்டு வகையான மருத்துவ முறைகளை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இதுபோன்ற சவால்கள் போதாதென்று பொருளாதார அடிப்படையிலான சிக்கல்களும் நிலைமையின் தீவிரத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்திவிடுகின்றன.
இதய நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவை சாதாரண மக்களால் நினைத்துவிடக்கூட பார்க்க முடியாது என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. அதோடு நோய் குணமாவதற்கான காலமும் அதிகம். காலமும், பணமும் அதிகமாகச் செலவாவதால் ஏற்படும் மன உளைச்சலும் நோயாளியைப் பாதிக்கும்.
இதய நோய்களுக்கான சிகிச்சை முறை ஏன் இவ்வளவு அதிகச் செலவானதாக இருக்கிறது என்பது உங்களின் நியாயமான கேள்வி. ஆனால் அதற்கொரு காரணம் இருக்கிறது. இதய நோய்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள், இதய செயற்கை வால்வுகள் மற்றும் இதய அறுவைச் சிகிச்சை முறைகளுக்குப் பயன்படுத்தப்படும் பலவகையான கருவிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறது. மேலும் இதய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் மிகவும் அதிகம்.
ஓர் இதய நோயாளிக்கு இதயத்துக்கான தீவிர மருத்துவப் பிரிவில் (INTENSIVE CARDIAC CARE UNIT) ஒரு நாள் ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட பல ஆயிரம் ரூபாய். வெளிநாடுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் முனைப்போடு செயல்படுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பெயரளவில் இருக்கின்றனவே தவிர, தீவிரமாகவோ, முழு முனைப்புடனோ அமல்படுத்தப்படவில்லை.
இதனால் நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான இதய நோயாளிகள், தங்கள் வாழ்நாளில் சேமித்து வைத்த பணம், நகைகள், சொத்துகள், வீடுகள் போன்றவற்றைச் சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டு மீதமுள்ள காலத்தை வறுமையில் கழிக்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலையே இப்படியென்றால் சிறிய நிலையில் உள்ள மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிகிச்சைக்கான பணத்தைத் தயார் செய்ய நிலைக்கு அவர்கள் ஆளாகிவிடுகிறார்கள்.
ஆரம்பத்திலேயே என்னன்னவோ சொல்லி பயமுறுத்துகிறீர்களே என்கிறீர்களா? உங்களைப் பயமுறுத்துவது எனது நோக்கமல்ல. எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிய வைத்தால்தான் இதய நலத்தின் மீதான அக்கறையும், எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல் அதைப் பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் உங்களிடத்தில் ஏற்படும் என்பதற்குத்தான்.
விழிப்புணர்வு வந்தால் மட்டும் போதுமா? இதய நலத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் தெரிய வேண்டாமா? என்பது உங்களின் அடுத்த சந்தேகம். அந்த வழிமுறைகளைப் பற்றி சொல்லித்தருவதுதான் இதந்தப் புத்தகத்தின் நோக்கமே.
அதன் அப்படையில் நம் வாழ்நாள் முழவதும் இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது? இதயத்தைப் பாதிக்கக்கூடிய தீய பழக்கவழக்கங்களை எவ்வாறு விலக்குவது? இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகளை எவ்வாறு குறைப்பது? இதயத்துக்கு உகந்த உணவு வகைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது? இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை எவ்வாறு மேற்கொள்வது? போன்ற பல உண்மைகளை நாம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.

2. ரத்தத்தின் இயக்குநர்

மனித உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அற்புதமானது. இதயமும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்றைக்குப் பொறியியல் துறை அபாரமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதன் சிளைவாக பல அற்புதமான கண்டுபிடிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால் அந்தக் கண்டுபிடிப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் இயற்கை இதயத்தை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளது.
பொறியியல் துறையில் பயன்படும் எந்திரங்களுக்குப் பராமரிப்பு அவசியம். அப்போதுதான் அவை நீண்ட காலம் உழைக்கும். ஆனால் எவ்வகையான பராமரிப்பும் தேவையின்றி 70&80 ஆண்டுகள் வரை இதயம் இடைவிடாது உழைக்கக் கூடியது.
நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், இதயம் காதல், இரக்கம், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சிகளின் பிறப்பிடமாகவும், பொறாமை, மூர்க்கம், உதவி செய்தல் போன்ற குணங்களின் அஸ்திவாரமாகவும், நினைவாற்றலின் மையமாகவும் நீண்ட நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்தது.
மருத்துவம் பற்றிய அறிவு அவ்வளவாக வளராததால் ஏற்பட்ட அறியாமை இது. இந்த அறியாமை இன்றளவும் தொடர்வதுதான் வேடிக்கை.
மூளையும், நரம்புகளும் ஒன்றிணைந்த ஓர் அமைப்புதான் உணர்ச்சிகளின் பிறப்பிடமாகவும், நினைவாற்றலின் இருப்பிடமாகவும் விளங்குகிறது. இதயத்துக்கும், மனித உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்பி வைப்பதுதான் இதயத்தின் முக்கியமான பணி. இந்தப் பணியைச் சீராக நிறைவேற்றும் வகையில் ஓர் அருமையான சிஸ்டம் இதயத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதயத்தின் நலனைக் காப்பதற்கான முதல் படி, இந்த சிஸ்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதுதான்.
கவிஞர்கள் மற்றும் ஓவியர்களின் கற்பனைத் திறனால் இதயம் ஓர் அழகான அமைப்பைக் கொண்டது என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல. வலுவான தசைகளால் ஆன இதயம். கரடு முரடான அமைப்பைக் கொண்டது. பழுப்பும், சிவப்பும் கலந்த நிறம் கொண்டது. பேரிக்காயின் வடிவம் உடையது.
இந்த அமைப்புக்குள் உள்ள ஒவ்வொரு நுணுக்கமான அம்சத்தையும் பார்க்கும் முன்பு கருவில் இதயம் எவ்வாறு உருவாகிறது என்பதையும் பார்த்துவிடலாம்.

எது முக்கியம்? (ஆன்மிகம்)

‘சார்… நாளைக்கு எனக்கு 60 வயதாகிறது. சஷ்டியப்தபூர்த்தி சாந்தி நடக்கிறது. நீங்கள் அவசியம் வரவேண்டும்!’
‘ஓ! அப்படியா! ரொம்ப சந்தோஷம். பகவான் தீர்க்காயுசை கொடுக்கட்டும்!’
இப்படி பேசிக் கொள்வதுண்டு. சரி… இந்த 60 வயது என்பது 0கடந்த காலம்; எதிர்காலம் எவ்வளவு என்று தெரியாது. வருடம் போக, போக ஆயுள் நாள் குறைகிறது; வயது கூடுகிறது.
‘இந்த 60 வருஷ காலத்தில் என்ன செய்திருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘இரண்டு பிள்ளைகளை பெற்று, படிக்க வைத்து, நல்ல வேலையில் சேர்த்திருக்கிறேன். இரண்டு பெண்களுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன்!’ என்று பெருமையாக சொல்வர்.
‘அதுசரி… உங்களுக்காக என்ன செய்து கொண்டீர்கள்?’ என்று கேட்டால், ‘ஓ… இங்கே ஒரு வீடு கட்டியிருக்கேன். பாங்க்லே டிபாசிட் இருக்கு. வட்டி வருகிறது. சாப்பாட்டுக்கு கவலையே இல்லை!’ என்கிறார்.
‘நான் அதை கேட்கவில்லை சார்! அதெல்லாம் இந்த லோகத்து சுகத்துக்கானவை; பரலோக சுகத்துக்கு என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டால், ‘பூ! அதுவா… அது இனிமேல் தான்… ஏதாவது தான – தர்மம் செய்து, புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்!’ என்கிறார்.
‘இனிமேல் தான்’ என்பது, எப்போது? இவர் நாள், நட்சத்திரம் பார்த்து தான தர்மம் செய்து, புண்ணியம் சம்பாதிக்கும் வரையில், ‘அவன்’ விட்டு வைப்பான் என்பது என்ன நிச்சயம்?
தன் குடும்பத்துக்கு செய்ததெல்லாம் தன் கடமையை செய்ததாகும். தனக்கு பரலோக சுகத்துக்காக ஏதாவது செய்து, புண்ணியம் சேர்த்திருந்தால், அது உதவும். இந்த புண்ணியத்தை தான் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். புண்ணியம் சம்பாதித்திராவிடினும் பரவாயில்லை; பாவத்தை செய்யக் கூடாது.
இந்த பாவத்தின் பலன்களை, செய்தவனே தான் அனுபவிக்க வேண்டும். புண்ணியத்தை கூட தானம் செய்யலாம். ‘காவிரி ஸ்நான புண்ணியத்தை உனக்கு தானம் செய்கிறேன். கங்கா ஸ்நான நலனை உனக்கு தானம் செய்கிறேன். விரதம் அனுஷ்டித்த பலனை உனக்கு தானம் செய்கிறேன்!’ என்று தானம் செய்யலாம்; ஆனால், பாவம் செய்த பலனை தானம் செய்ய முடியாது.
வாழும் காலத்திலேயே குடும்பத்தை காப்பாற்றுவதுடன், தன் பரலோக சுகத்துக்கும் ஏதாவது புண்ணிய காரியங்களை அவ்வப்போது செய்துவிட வேண்டும். அந்த சின்ன, சின்ன புண்ணியமே ஒரு மலை போலாகி, பரலோகத்தில், காப்பாற்றும். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வயது முக்கியமல்ல; புண்ணியம் தான் முக்கியம்.