Daily Archives: ஏப்ரல் 27th, 2010

பயனுள்ள சில பிரவுசர்கள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாக பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள்தான் உள்ளன என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா மற்றும் சபாரி ஆகிய ஐந்து பிரவுசர்கள் மட்டுமே உள்ளன போன்ற தோற்றம் நம்மில் பலரிடையே உள்ளது. ஆனால் இன்டர்நெட் உலகில் இன்னும் பல பிரவுசர்கள், பிரபலமான பிரவுசர்களைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறப்பாக செயல்படும் வகையில் உள்ளன என்பதே உண்மை. அந்த வகையில் ஆறு பிரவுசர்களைத் தேர்ந்தெடுத்து நம் வாசகர்களுக்குத் தருகிறோம்.

1.அரோரா (Arora) விண்டோஸ், மேக் ஓ.எஸ்., லினக்ஸ் மற்றும் ஹைக்கு ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக் கூடியது. இது ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். பாப் அப் விளம்பரங்களைத் தடுப்பது, பிரைவேட் பிரவுசிங், அப்போதைய பிரவுசிங் தகவல்களைக் கையாள்வது மற்றும் ஒரு பிரவுசருக்குண்டான பல அடிப்படை வசதிகளைக் கொண்டது. குரோம் இயங்கும் அதே தொழில் நுட்பத்தினையே இந்த பிரவுசரும் பயன்படுத்துகிறது. கூகுள் தொடர்பே வேண்டாம் என்பவர்களுக்கு இது ஒரு மாற்று பிரவுசராகும். சென்ற ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்டது. இதன் பைல் சைஸ் 10.2 எம்.பி. இலவசம். இணைய தள முகவரி:http://code.google.com /p/arora/downloads/list

2.கேமினோ (Camino): மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் பிரவுசர். ஜெக்கோ தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. மேக் பிளாட்பாரத்தில் இயங்கும் அனைத்து பிரவுசர்களுக்கும் இது ஒரு மாற்றாகும். எளிமையான, மிகச் சிறிய அளவில் இடம் பிடித்து இயங்கும் பிரவுசர். நாம் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன. கிடைக்கும் தள முகவரி : http://caminobrowser. org/download/

3. பிளாக் (Flock): விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும். பேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ், யு–ட்யூப், ப்ளிக்கர், பிளாக்கர், ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் போன்றவற்றிற்கு நேரடி இணைப்பு தருகிறது. இது பயர்பாக்ஸ் பிரவுசர் அடிப்படையில் இயங்குகிறது. எனவே பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தியவர்கள் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் போல பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தினைத் தருகிறது. போட்டோ ஷேரிங், அப்டேட் நியூஸ், தேடல் இஞ்சின் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் பைல் அளவு 12.8 எம்.பி. கிடைக்கும் தள முகவரி: http://www.flock.com

4. கே–மெலான் (KMeleon): விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டும் இயங்கும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர். இதனை நம் விருப்பத்திற்கேற்றபடி செட் செய்திடலாம். மிகவும் வேகமாக தளங்களைப் பெற்றுத் தருகிறது. ஜெக்கோ தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. ஆங்கிலம் உட்பட ஆறு ஐரோப்பிய மற்றும் ரஷ்ய மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இதன் பைல் அளவு 5.8 எம்.பி. மட்டுமே. கிடைக்கும் இணைய தளம்: http://kmeleon.sourceforge.net/

5. மேக்ஸ்தான் (Maxthon): இது விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. சீனாவில் இது மிகவும் பிரபலமான பிரவுசராகும். இலவசமாய்க் கிடைக்கும் இந்த பிரவுசரின் பைல் அளவு 6.4 எம்.பி. இதன் டேப் வசதி பிரவுசிங் மிக வேகமாக இயங்குகிறது. ஒரு பிரவுசருக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன. கிடைக்கும் தள முகவரி: http://www.maxthon.com /download.htm

6. பேல் மூன் (Pale Moon): விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. ஜெக்கோ இஞ்சினில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. வழக்கமான பிரவுசரைக் காட்டிலும் 25% கூடுதல் வேகம் உடையது என்று இந்நிறுவன அறிக்கை கூறுகிறது. கிடைக்கும் தள முகவரி : :http://www.palemoon.org/ இந்த பிரவுசர் முழுக்க பயர்பாக்ஸ் கட்டமைப்பைக் கொண்டு, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன்ஸ், தீம்ஸ் மற்றும் பெர்சனாஸ் இந்த பிரவுசரிலும் இயங்கும். இதன் பைல் அளவு 7.7 எம்பி.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் உட்பட பல பிரபலமான பிரவுசர்கள், இன்று பலவிதமான வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இது போன்ற அதிக பிரபலமில்லாத சில பிரவுசர்களையும் டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். வைரஸ்கள் தாக்கும் வழிகள் குறைவாகத்தான் இருக்கும்.

தரமான குழந்தை

தரம் என்றால் என்ன?
ஒரு செயலை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் தரம்.
எந்த ஒரு தொழிலிலும் தரம் முக்கியம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் தரம். தரம் மதிக்கப்படும். எதிர்பார்க்கப்படும்.
ஒரு செயல் இப்படித்தான் அமையும்.ஒரு பொருள் இப்படித்தான் இருக்கும் என்னும் இயல்பைக்காட்டிலும் சிறப்பாக அமைவது தரம்.
உங்களது குழந்தையின் நடவடிக்கைகள் தரமாக அமைய நீங்கள் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தரமான நடவடிக்கைகளை கொண்ட குழந்தை சிறந்த மனிதனாக வளரும். வாழ்க்கையில் வெற்றி பெறும்.
அவர்கள் இளமையாக இருக்கும்போதே அவர்களை தரமானவர்களாக பண்படுத்த தொடங்க வேண்டும்.
ஒரு குழந்தை தரமாக வளர்வதற்குப் பள்ளி சூழ்நிலை முக்கியமான காரணியாக விளங்குகிறது.
குழந்தை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைய வேண்டும். உங்களது குழந்தையின் கல்வி தரமாக இருப்பதும், உங்களது குழந்தைக்கு சிறப்பான் ஓர் இலக்கை ஏற்படுத்தி தருவதும் உங்களது கடமை என உணருங்கள்.
கல்வி தரமாக இருப்பதும், சரியான இலக்கும் குழந்தை தான் மேம்படுவதற்குரிய வழிகளை கண்டறியும் திறனை அளிக்கும்.
எது எல்லாவற்றிலும் சிறந்ததோ அதை நோக்கி குழந்தையை உந்தித் தள்ள வேண்டும். இந்த அளவிற்கு இருந்தால் பரவாயில்லை என திருப்திப்பட்டுக் கொள்ளக் கூடாது.
ஒரு பொருளை நீங்கள் வாங்கும்போது தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி அக்கறையுடனும் பொறுமையாகவும் தேர்வு செய்கிறோம்?
குழந்தையின் கல்வியும் நடவடிக்கையும் தரமாக அமைய அதே அளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் செய்யக் கூடிய காரியம் அல்லது உருவாக்கும் பொருள் தரமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் இதை மிகத் தாமதமாகவே புரிந்து கொள்கிறோம்.
நமது குழந்தைகளும் தாமதமாக புரிந்து கொள்ள விடக்கூடாது. இளமையில் இருந்தே குழந்தையின் வேலைகள் நேர்த்தியாக அமையும்படி கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யும்போது கவனியுங்கள்.
அடித்தல் திருத்தலோடு, கிறுக்கலான கையெழுத்தோடும் வீட்டுப்பாடத்தை செய்யலாம்.
அடித்தல் திருத்தல் இல்லாமல், அழகான கையெழுத்திலும் வீட்டுப்பாடத்தை செய்யலாம்.
கடமைக்கு வீட்டுப்பாடத்தை செய்யாமல், அதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.
செல்போன் என்பது பேசுவதற்கும், பேசுவதை கேட்பதற்கும்தான்.
ஆனால், அதற்காக ஏதேனும் ஒரு செல்போனை வாங்கி விடுவதில்லை.
அதன் தரம், நேர்த்தி, வடிவமைப்பு சுருக்கமாக சொன்னால் அதனால் என்ன உபயோகம் என்று பார்ப்பதை விட, எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் அதிக அக்கறையோடு கவனிக்கிறோம்.
சிறப்பான வடிவமைப்பு நம்மை அந்தப் பொருளை வாங்க தூண்டுகிறது.
அப்படித்தான் நமது குழந்தைகளும்.
குழந்தைகளின் நடவடிக்கைகள் அல்லது அதன் செயல்கள் நேர்த்தியாக இருக்கும்போது எல்லோராலும் பாராட்டப்படும்.
அந்த பாராட்டு, குழந்தையின் மனதில் தனது காரியங்களை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உந்துதலை கொடுப்பதோடு, குழந்தைக்குத் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.
இதோ பாருங்கள், எப்படி அழகாக செய்திருக்கிறேன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள அசைப்படும்.
குழந்தை தன்னை சிறந்தவனாக காட்டிக்கொள்ளவே விரும்ப வேண்டும். அத்தகைய விருப்பத்தை குழந்தைக்குப் பயிற்று விக்க வேண்டும். அந்த விருப்பம் குழந்தையின் நடவடிக்கைகளை, செயல்களை தரமாக மாற்றும்.
ஒரு பொருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்தப் பொருள் தயார் செய்யப்படும் விதமும். தயார் செய்யப்படும் விதம் சரியில்லை என்றால் பொருளும் சரியக இருக்காது.
உங்களது குழந்தை வீட்டுப்பாடத்தை சரியாக செய்கிறானா? செய்கிறாளா? என்பதை கவனியுங்கள்.
பரீட்சைக்கு தயாராகும்போது, நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே படிக்க பயிற்றுவியுங்கள். தேர்வுக்கு முதல்நாள் வரை விளையாடிக் கொண்டிருந்து விட்டு, கடைசி நாளில் அவசர அவசரமாக படிப்பது சரியானதல்ல என புரிய வையுங்கள்.
கடைசி நேரத்தில் செய்யும் வேலை தரமாகவும் நேர்த்தியாகவும் அமையாது என உங்கள் குழந்தையை உணர வையுங்கள்.

மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்

நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படியானால் இந்த முக்கியமான வசதியைத் தெரிந்து கொள்ளுங்கள். அதில் உள்ள மீடியா பிளேயரில் உங்கள் சிடி மற்றும் டிவிடியில் டேட்டாவினை எழுதலாம். வீடியோ பைல்கள் மற்றும் படங்களையும் இதில் பதியலாம். எப்படி என்று பார்க்கலாமா!
ஆடியோ சிடியாக மாற்றுகையில், ஆடியோ அல்லது வீடியோ பைல்களின் பார்மட் மாற்றப்படுவதில்லை. தரமும் குறைவதில்லை.
முதலில் Start>All Programs>Windows Media Player எனச் செல்லவும். அதன் பின் பிளேயர் லைப்ரேரியில் Burn என்னும் டேப்பை கிளிக் செய்து பின் Date DVD அல்லது CD என்பதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும். இனி காலியாக உள்ள சிடியை உங்கள் கம்ப்யூட்டரின் சிடி ட்ரேயில் போடவும். Auto Play டயலாக் பாக்ஸ் வந்தால் அதனை குளோஸ் செய்திடவும். சிலரின் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி டிரைவ் இருக்கலாம். இதில் எந்த டிரைவ் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து எந்த பாடல் பைல்களைப் பதிய வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். எழுதப்பட வேண்டிய பாடல்களை Player Library ல் உள்ள Details pane லிருந்து வலது பக்கம் உள்ள List Pane ல் போடவும். இங்கே நீங்கள் விரும்பும் வகையில் பாடல்களின் வரிசையை மாற்றலாம். இந்த லிஸ்ட்டிலிருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றால், இதில் ரைட் கிளிக் செய்து Remove என்பதில் கிளிக் செய்திடவும். லிஸ்ட் அமைப்பது முடிந்த பின் Burn கிளிக் செய்து சிடியில் பதிவதைத் தொடங்கி முடிக்கவும்.

காடுகளை ‘பயமுறுத்தும்’ பாலிதீன் பைகள்

Front page news and headlines today

மதுரை : வன உயிரினங்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் காடுகள் இன்று, பொதுமக்களால் அழிவுப்பாதைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு மூலக்காரணம் பாலிதீன் பைகள்.

குஜராத் முதல் கன்னியாகுமரி வரை 1600 கி.மீ., தூரமுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், பாலூட்டிகள் 63, பறவைகள் 323, ஊர்வன 45, மீன்கள் 38, தவளை 27, வண்ணத்துப்பூச்சிகள் 160, 3800 செடி வகைகள் உள்ளன. இதில் 50க்கும் மேற்பட்டவை இங்கு மட்டுமே காணப்படும் அரிய வகைகள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது சபரிமலை. இங்கு சீசனுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், உணவுப்பொருட்களை பாலிதீன் பைகளில் கொண்டு வருகின்றனர். சாப்பிட்ட பின், அப்படியே போட்டுவிட்டுச் செல்கின்றனர். அதில் ஒட்டியிருக்கும் உணவுப் பொருட்களை உண்ணும் யானை, மான் போன்ற விலங்குகளின் இரைப்பையில் சிக்கி, ஜீரணம் ஆகாமல், மூன்று மாதங்களுள், வயிறு உப்பி இறக்கும் கொடுமை இன்றும் நடக்கிறது.

ஏன் ஆபத்து?: பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது. இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகள், ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகள், இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரி பேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகுமாம். மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.

மனிதர்களுக்கு ஆபத்து : சமீபகாலமாக, ‘கேரிபேக்’கில் சுடச்சுட உணவுகளை பார்சல் பண்ணி கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணித்து, இயற்கை வளங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து இல்லாத, மட்கும் தன்மையுடைய, துணிப்பைகள், பேப்பர் பைகளை பயன்படுத்த இப்போதே உறுதிக்கொள்வோம்.

பக்தர்கள் காப்பாற்றுவார்களா : மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கண்ணகி கோயில் கேரள வனப்பகுதி கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு சித்ரா பவுர்ணமியன்று மட்டும் வனப்பாதை, வழிபாட்டிற்காக திறக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15,000 பேர் வருவர்.இந்தாண்டு சித்ரா பவுர்ணமி, நாளை வருகிறது. பாலிதீன் பைகளில் சாப்பாடு பார்சல்கள், பிளாஸ்டிக் டம்ளரில் குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவற்றை வனப்பகுதியிலும், கோயில் பகுதியிலும் பக்தர்களுக்கு சிலர் விநியோகிப்பது வழக்கம். சாப்பிடுபவர்கள் அங்கேயே பைகளை போட்டுவிட்டு நகருவதால், சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு, விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ‘தங்களையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டுதல் நடத்துவதற்காக வரும் பக்தர்களின் காதுகளுக்கு, ‘எங்களையும் காப்பாற்றுங்கள்’ என்ற விலங்குகளின் கூக்குரல் இந்த முறையாவது கேட்குமா?

கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?

கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?

தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருஉறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது.

தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இந்நிலையில் இதயத்தின்முன்னோடியான முதிரா அமைப்பானது ஒரு தீக்குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந்நிறமருந்தின் அளவில் இருக்கும்.

இதயமாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக இரண்டு மெல்லிய குழல்களாகத் தோன்றுகின்றன. பிறகு, இந்தஇரண்டு மெல்லிய குழல்களும் இணைந்து ஒரே குழலாக உருமாற்றம் பெறுகின்றன. அதன்பிறகு இந்தக் குழலானது நன்கு வளர்ச்சி பெறத்தொடங்குகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பிறகு இந்தக் குழல் போன்ற அமைப்பானது (S) என்ற ஆங்கில எழுத்து வடிவில் உருமாற்றம் அடைகிறது.
கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயம் இந்த நிலையை அடையும். இந்நிலையில் முதிராத குழல் பகுதியின் உடல் பகுதியானது (Truncus)

நன்கு வளரத் தொடங்குகிறது. இதயக் குழலின் உடல் பகுதியானது, முழுமையாக வளர்வதற்கு முன்னரே இதயத்தின் உள் அறைகளைப்பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் (Septal) உருவாகத் தொடங்குகின்றன. முதிர்ச்சி அடையாத இதயக் குழலின் உடல் பகுதியானது நன்கு வளர்ந்து மகா தமனியாகவும் (Aorta) நுரையீரல் தமனியாகவும் தனித்தனியாகப் பிரிக்கின்றன. இதயம் இயங்குவதற்குப் பக்கபலமாக ஓர் மின் அமைப்பும் அதனுள் செயல்படுகிறது. கருவுற்ற ஆறாவது வாரத்தில் இதயத்தின் மின்அமைப்புகள் (Electrical apparatus) உருவாக ஆரம்பிக்கின்றன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இதயத்தின் மின் அமைப்புகள் உருவாதற்கு முன்னரே இதயமாவது துடிக்க தொடங்கிவிடுகிறது. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயத்தின் தடுப்புசுவர்களும் நான்கு வெளிப்புற சுவர்களும் முழுமையாக உருவாகின்றன. இதயம் மற்றும் அதற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சி கருவுற்ற மூன்றாவது வாரம் தொடங்கி ஆறாவது வாரம் வரை நடைபெறுகிறது.

இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் பலவகையான வால்வுகள் அனைத்தும் இதயத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் குழல் தோன்றுதல், குழல்கள் இணைதல், இதயக்குழல் சுழலுதல், தடுப்புச்சுவர்கள் உருவாதல், ரத்தக்குழாய்கள் தோன்றுதல், ரத்தக் குழாய்கள் சுருங்குதல் போன்றவை மிகவும் முக்கியமான கட்டங்களாகக் கருதப்படுகின்றன.

2 ச.மீட்டரில் வாழ்க்கை; சீனாவில் கடும் நெருக்கடி

சென்னை போன்ற இந்திய நகரங்களில் வீட்டு வாடகை கொடுக்கவே நாம் திணறிக் கொண்டிருக் கிறோம். சீனாவில் அதே காரணத்தால், இப்போது, ‘கேப்சூல் அபார்ட்மென்ட்’ கள் பெருகிக் கொண்டிருக் கின்றன.சமீபத்தில் சீன இளம் பெண் ஒருவர், முதன் முதலாக 2 ச.மீ., பரப்பளவே உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் தன் வாழ்க் கையைத் தொடங்கியுள்ளார்.சீனாவின் பல்வேறு கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்புக்காக பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு லட்சக்கணக்கான இளையோர் படையெடுக்கின்றனர்.

இப்படி வரும் இளையோரை, ‘ஆன்ட் டிரைப்’ (எறும்புக் குழு) என்கிறார் பேகிங் பல்கலைப் பேராசிரியர் லியன் சின்.பீஜிங்கில் மட்டும், இப்படி ஒரு லட்சம் பேர் எறும்புக் குழுவினர் இருக் கின்றனர். பிற நகரங்களில் 10 லட்சம் பேர் வரை இருக் கின்றனர்.இவர்களால் பெருநகரங்களில் வீட்டு வாடகை கன்னாபின்னாவென்று ஏறிவிட்டது. வேலைக்கு வந்த இளைஞர்கள் கிடைத்த வேலையைச் செய்து, குறைந்த சம்பளம்தான் வாங்க வேண்டிய நிலை நிலவுகிறது.அந்தச் சம்பளத்தில் வாடகையும் கொடுத்து, குடும்பத்தையும் கவனித்துக் கொள்வது, பெரும் சுமை தான். அதனால், சில நகரங்களில் சேரிப் பகுதிகளில் இவர்கள் குடியிருக்கின்றனர்.

இப்போது அங்கும் வாடகை அதிகரித்து விட்டதால், வேறு சில நகரங் களில், நகருக்கு வெளியே சாலையோரமாக வரிசையாக வைக்கப்பட்டிருக்கும், உபயோகமற்ற, ‘கன்டெய் னர்’களில் குடும்பத்துடன் குடியேறுகின்றனர்.இந்தக் கன்டெய்னருக்கு ஒரு நாள் வாடகை 40 ரூபாய். அட்வான்ஸ் 65 ஆயிரம் ரூபாய்.இந்தக் கன்டெய்னரும் கிடைக்காதவர்கள், பொதுக் கழிவறைகளில் படுக்கை, சமையல் சாமான்களோடு குடியேறி விடுகின்றனர்.ஊடகங்கள் இதுகுறித்து பரபரப்பாக படம் எடுத்துப் போட்டும், இப்பிரச் னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.சீன அரசு, 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து, ‘நலக்குடியிருப்புகள் தொகுப்பு’ கட்டிக் கொடுத்து, குறைந்த வாடகைக்கு விடுவது குறித்துத் திட்டமிட்டது.ஆனால், ரியல் எஸ் டேட் தொழில் முதலைகள், தங்கள் வரும்படியில் மண் விழுந்து விடுமே என்று பதறிப்போய், அந்தத் திட்டத்தையே கைவிடச் செய்தனர்.

இதற்கிடையில், சமீபத் தில், ஜங் கீ (25) என்ற இளம் பெண், 2 சதுர மீட்டர் பரப்பளவே உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் குடியேறியிருக்கிறார். சீனாவிலேயே இவ்வளவு குறைந்த பரப்பளவில் குடியேறிய முதல் சீனக் குடிமகள் ஜங் தான். இதுபோல பல அறைகள் உள்ள அபார்ட் மென்ட்டுக்குத்தான் ‘கேப்சூல் அபார்ட்மென்ட்’ என்று பெயர்.அந்தப் பரப்பளவில் ஒரே ஒரு படுக்கையை மட்டும்தான் போட முடியும். இதற்கு முன்பு இவர், தன் தோழிகளோடு, ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்த போது, இவரது பங்கு வாடகை மட்டுமே ஐயாயிரம் ரூபாய் வந்தது.அதையும் கொடுத்து குடும்பத்தையும் கவனிக்க முடியாததால், இப்போது ‘கேப்சூலு’க்கு வந்து விட்டார். இங்கு வாடகை, 1,600 ரூபாய் மட்டும்தான். இதில் தனிக் கழிவறை கிடையாது. பொதுக் கழிவறையை தான் பயன் படுத்த வேண்டும்.

இந்தக் ‘கேப்சூல் அபார்ட்மென்ட்’டைக் கட்டி வாடகைக்கு விட் டுள்ள ஹூவாங் ரிக் சின் கூறுகையில், ‘அதிக வாடகை கொடுக்க இயலாத சீன கிராமத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை பார்க்கும் இளையோருக்காகத்தான் இதைக் கட்டியுள்ளேன்’ என்கிறார்.இதுகுறித்து, இணையதளங்களில் சீன மக்கள், ‘இதை விட குவான்டன மோ சிறையே மேல்; 96 லட்சம் ச.கி.மீ., பரப்பளவு கொண்ட சீனாவில், அந் நாட்டுக் குடிமகனுக்கு 2 ச.மீ., இடம்தான் இருக் கிறதா? மக்கள் பிரச்னைகளை அரசிடம் முறையாக எடுத்துச் சொல்லாத அதிகாரிகளைத்தான் இதுபோன்ற, ‘கேப்சூல்’களுக் குள் போட வேண்டும்’ என, கொந்தளித்து எழுதித் தள்ளுகின்றனர்.ஆனால் ஜங்கோ, ‘இந்த கேப்சூலில் பல அசவுகரியங்கள் இருந்தாலும் இதில் மிச்சம் பிடிக்கும் பணம் குடும்பத்துக்கு உதவுகிறது’ என்கிறார்.