Monthly Archives: மே, 2010

நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள்

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை.

முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல.

முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம்.

முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.

நன்றி- தினகரன்

குழந்தைகளுக்கு சுயமாக கற்றுக்கொள்ளல்

குழந்தைகளுக்கு சுததம், நன்னடத்தை, கல்வி போன்றவற்றை பெற்றோர்களும், ஆசிரியரும் கற்றுக்கொடுத்தல் அவசியம்.
எதை கற்றுக்கொள்வது? எப்படிக் கற்றுக்கொள்வது? என்பதை கற்றுக்கொடுப்பது அதை விட அவசியம்.
உங்கள் மகன் அல்லது மகளை சுற்றி அன்றாடம் ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன.ஒவ்வொன்றிலும் அவர் கற்றுக்கொள்ள ஏராளமான்

விஷயம் இருக்கிறது. சூழ்நிலைகளில் இருந்து கற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறனை அவருக்குள் வளர்க்க வேண்டும்.
பள்ளியை காட்டிலும் வீட்டில் பெற்றோர்களுக்குத்தான் இந்த திறனை வளர்ப்பதில் அதிக பங்கு உள்ளது.

சில குழந்தைகள் இயல்பாகவே நாம் சொல்லாமலே தனது வேலைகளை செய்வார்கள். அத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும்

ஆற்றல் படைத்தவர்கள். ஆர்வம் உடையவர்கள். பரீட்சை வந்துவிட்டால் சில குழந்தைகள் தாங்களாகவே பாடங்களை எப்படி முடிப்பது என திட்டவிட்டுக் கொண்டு முடித்து விடுவார்கள். சிலருக்கு கடைசி நிமிடம் வரையில் படி படி என நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

இத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும் திறன் குறைந்தவர்கள்.இத்தகைய குழந்தைகளுக்கு சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க வேண்டியது அவசியம்.சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க தேவையானவை.சுயகட்டுப்பாடு, உறுதி, விடாமுயற்சி. உங்கள் குழந்தையை ஓர் இலக்கை தீர்மானிக்க செய்யுங்கள். அந்த இலக்கை நோக்கி செல்லும்போது மனம் அலைபாயக் கூடாது.

தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்ற சுயகட்டுபாடு வேண்டும். இலக்கை அடையும் வரையில் சோர்ந்து போகக்கூடாது. இலக்கை அடையும் வரையில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திப் போடக்கூடாது. எத்தனை நாளில் இலக்கை அடைவது என தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நாளும் என்ன செய்வதால், இலக்கௌ அடையலாம் என தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த தீர்மானத்தின்படி ஒவ்வொருநாளும் உறுதியாக செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.இந்த வழிமுறைப்படி உங்களது மகன் அல்லது மகளை இயக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய கடமைகள் இது இது என தீர்மானிக்கும்போது உங்களது குழந்தையால் ஒரு நாளில் எவ்வளவு வேலையை செய்து முடிக்க முடியும் என அறிந்து, அதற்கேற்றார்போல் வேலைகளை திட்டமிடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சிரமம் இல்லாமல் முடிப்பது குழந்தைகளுக்கு வேலை மீது ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தும். மொத்தமாக ஏராளமான வேலைகளை குழந்தைகளின் தலையில் சுமத்தினால், குழந்தைகளுக்கு மலைப்பு ஏற்படும். அதன் காரணமாக செய்யும் வேலையை அறைகுறையாக செய்ய நேரிடலாம். அல்லது எதையுமே செய்யாமல் ஒதுங்க தொடங்கிவிடலாம்.இது இரண்டுமே ஆபத்தானது. எனவே உங்களது குழந்தையின் சக்திக்கு ஏற்ற கடமைகளை அவர்களது தலையில் சுமத்துங்கள்.குணாவை பற்றி அவனது அம்மா எப்போதும்  கவலைப்படுகிறாள். குணா 7&ம் வகுப்பு படிக்கிறான். அவனது அண்ணன் சிவா 8&ம் வகுப்பு. சிவாவிடம் படிக்க வேண்டும் என்று சொல்லவே வேண்டியதில்லை. அவனே தனது வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து விடுவான். அன்றாட பாடங்களைப் படித்து விட்டுத்தான் விளையாட செல்வான்.

ஆனால், குணா அப்படி இல்லை. ஒவ்வொரு முறையும் அவனது அம்மா படி படி என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மாலை 5 மணிக்கு அம்மா காப்பி போட்டுக்கொடுத்து படிக்க உட்காரச் சொல்வாள். இரண்டு பேரும் ஒரே சமயத்தில்தான் உட்காருவார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் சிவா மட்டும்தான் உட்கார்ந்து படித்துகொண்டுருப்பான். குணா எங்காவது விளையாடப் போய்விடுவான். அம்மா குணாவை அடித்து, மிரட்டி மீண்டும் படிக்க உட்கார வைப்பார்.சிறு சிறு தண்டனைகளுக்குப் பயந்து சில குழந்தைகள் படிக்க தொடங்கும். பிறகு அதுவே பழக்கமாகி ஒழுங்கா படிக்க ஆரம்பித்து விடும். இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தாது. பெரும்பாலும் அம்மாவின் கண்டிப்பில் பயப்படும் குழந்தை காலப்போக்கில் புத்தகத்தைப் பார்த்தே பயப்படும் அளவிற்கு சென்றுவிடும்.

எனவே கண்டிப்பின்போது நாம் கவனமாக் இருக்க வேண்டும். பயமுறுத்தலாம். அதே சமயத்தில் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அண்ணனைப் பார். யாரும் சொல்லாமல் தானாகவே படிக்கிறான். நீயும் அப்படி படிக்க வேண்டும். உனது கடமைகளை யாரும் சொல்லாமல் நீயே

செய்து கொள்ள வேண்டும்.அண்ணன் அப்படி செய்வதால் அப்பாவிடமும் அவனது ஆசிரியர்களிடமும் பாராட்டை பெறுகிறான். உன்னையும்

அண்ணனைபோல அவர்கள் பாராட்ட வேண்டாமா?உன்னுடைய வேலையை நீ சரியாக முடித்து விட்டால் யாருக்கும் பயப்பட வேண்டியது

இல்லை என்று குணாவிடம் அவரது அம்மா கூறுவார்.இது சரியானது. குழந்தைகளை மிரட்டுவது ஓரளவுக்குத்தான் வேலை செய்யும். தங்களது

பொறுப்பை அவர்களே உணரும்படி செய்வதுதான் முழுமையாக அவர்களை வளர்க்கும்.குழந்தைகளை சுயமாக தங்களது வேலைகளை செய்ய

வைப்பது பள்ளிகளால் இயலாது. பள்ளி ஆசிரியரகளுக்கு அதற்கான நேரம் இருப்பதில்லை. அதை பெற்றோர்தான் செய்ய வேண்டும்.
ஒரு குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது எது தெரியுமா?வீடுகள்தான்.

ஜாதிக்காயின் பயன்கள்

குழந்தைகளுக்கு கை முட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு ஜாதிக்காயை நீரில் உரைத்து அந்த இடத்தில்

தடவி வர குணமாகும்.

அம்மை நோய் கண்டவர்கள், ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு, பருத்திப் பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர

கொப்புளங்கள் வாடும்.

ஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

ஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.

ஜாதிப் பத்திரியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சுரம், பெருங்கழிச்சல், நீர் நீராய் ஏற்படுகின்ற பேதி முதலியன குணமாகும்.

நலம் சேர்க்கும் கிரிவலம்

கிரிவலம் என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலைதான். அங்கு, கிரிவலம் செல்லும்போது சில விதிமுறைகளை பின்பற்றினால் இறையருளை எளிதில் பெறலாம்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? பவுர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து கிரிவலம் செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத் தரும். இதேபோல், அமாவாசை அன்றும் கிரிவலம் செல்லலாம். அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டும் அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம். கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது சிறந்தது. அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். இந்த எலுமிச்சம்பழம் எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டது. கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களைத் தடுக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக, அமாவாசை, பவுர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து கிரிவலம் செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் செல்ல வேண்டாம். மேலும், திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். கிரிவலத்தின்போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம். கிரிவலம் வரும்போது வீண் அரட்டை அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும். கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம். பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் ‘பிறவியில்லா பெருவாழ்வு’ என்ற பேரானந்த நிலையை அடையலாம்.

கோவிலுக்குச் செல்வது ஏன்? (ஆன்மிகம்)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று!’ என்று ஒரு வாக்கியம் உள்ளது. நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது.
பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், “பகவானே… நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்!’ என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது. அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும்.
பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.
“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.
பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா?
அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது. கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும்.
கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன.
இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.
இப்பவும், சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், “சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்…’ என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர்.
ஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்.

செய்தி துணுக்குகள் 30.5.2010

காமிக் புத்தகம் விலை ஆறு கோடி ரூபாய்!
சிறுவர்கள் ஆசையாக விரும்பி படிக்கும் காமிக் புத்தகம் ஒன்று ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அந்த புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? காமிக் புத்தக வரிசையில், முதல் முறையாக வெளியான புத்தகம் அது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில், காமிக் கனெக்டட் டாட் காம் என்ற காமிக் புத்தக ஏல வெப்சைட் நிறுவனம், இந்த புத்தகத்தை ஏலம் விட்டது. “ஆக்ஷன் காமிக் நம்பர் ஒன்’ என்ற இந்த புத்தகம், 1938ல் வெளியானது. புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. 10 லட்சம் டாலருக்கு, அதாவது நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த புத்தகத்தின் மூலம் தான், காமிக் உலகில், சூப்பர்மேன் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின், 1939ல் வெளியான புத்தகம் ஒன்று, நான்கு கோடி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இப்போது, 1938ல் வெளியான புத்தகம் ஒன்று ஏலம் விடப்பட்டது. அது, 15 லட்சம் டாலருக்கு, அதாவது, ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. காமிக் புத்தகங்களை விரும்பி சேகரித்து வரும் ஒருவர், இந்த விலை கொடுத்து வாங்கியுள்ளார். அவர் பெயரை வெளியிட வெப்சைட் நிறுவனம் மறுத்து விட்டது.
* * *
கற்பழிப்பு வழக்கில், இடி அமீனின் 43வது மகன்!
ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டை, ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரி இடி அமீன். கொலை, கற்பழிப்பு, ஆடம்பரம், அராஜகம் என்றாலே எல்லாருக்கும் இடி அமீன் நினைவு தான் வரும். 1971 – 79களில் உகாண்டாவில் ஆட்சி செய்தார். அந்த கால கட்டத்தில் மட்டும், நான்கு லட்சம் பேரை கொடூரமாக கொலை செய்தார். புரட்சி மூலம், அவரது ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அவரது வாரிசுகள் உலகின் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இடி அமீனுக்கு பல மனைவிகள். அதில் ஒரு மனைவிக்கு பிறந்தவன், பாசின் வஞ்சிதா; வயது 28. இவன், இடி அமீனீன் 43வது மகன். பிரிட்டனில் தஞ்சம் புகுந்திருந்த இவன், அங்குள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அதே முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தென் அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை, இவன் கற்பழித்தான். பாசினுடன் சேர்த்து எட்டு பேர் இந்த பெண்ணை தாக்கி, கற்பழித்தனர். ஆபத்தான நிலையில், மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். இப்போது, பாசின் மற்றும் எட்டு பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை முடிந்த பின், அவர்கள் நாடு கடத்தப்படுவரா அல்லது சிறைக்கு அனுப்பப்படுவரா என்பது முடிவாகும்.
* * *
நான்கு லட்சம் கார்களை உடைப்பது எப்படி?
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடக்கூடிய, தகுதி வாய்ந்த நல்ல கார்கள், உடைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இப்படி ஒன்று அல்லது இரண்டு கார்கள் அல்ல. புல்டோசர் ஏறுவதற்காக மொத்தம் நான்கு லட்சம் கார்கள் காத்திருக்கின்றன. இது நம் நாட்டில் அல்ல… பிரிட்டனில்.
பிரிட்டன் அரசு புது சட்டம் ஒன்றை, சமீபத்தில் கொண்டு வந்தது. பழைய கார்களை நகரில் ஓட்டக் கூடாது; பழைய கார்கள் ஓடுவதால் காற்று மாசு படுகிறது, எரிபொருள் அதிகமாக செலவாகிறது. பழைய கார்களை மாற்றி விட்டு, புதிய கார்களை வாங்கினால், அதிக அளவு தள்ளுபடி கிடைக்கும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. சலுகைகளை பெற காலக்கெடுவையும் நிர்ணயித்தது. இந்த புதிய சலுகை திட்டப்படி, பழைய கார்களை வைத்திருப்பவர்கள் அதை மாற்ற விரும்பினால், அரசு ஆயிரம் பவுண்டும், கார் தயாரிப்பாளர் ஆயிரம் பவுண்டும் தருவர்; அதாவது, புதிதாக கார் வாங்க விரும்புபவர்களுக்கு; கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
விடுவரா பிரிட்டன்வாசிகள்… உடனே தங்கள் பழைய கார்களை கொடுத்து விட்டு, புதிய கார்களை வாங்க குவிந்தனர். இந்த திட்டப்படி, இதுவரை மொத்தம் நான்கு லட்சம் பழைய கார்கள் குவிந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான கார்களை, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல முறையில் ஓட்ட முடியும்; அந்த அளவிற்கு தகுதியான கார்கள் அவை.
விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ., வால்வோ, பிஜோ ரக கார்கள் உட்பட எல்லா கம்பெனி தயாரிப்பு கார்களும் குவிந்துள்ளன.
படத்தில் காணப்படும் இடம் லண்டன் அருகே பெட்போர்ட்ஷயர் என்ற ஊரில் உள்ள துர்லீக் என்ற பழைய விமான தளம். இந்த விமான தளத்தின் ஓடுபாதையில் மட்டும் இப்போது 14 ஆயிரம் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னமும் இந்த இடத்திற்கு கார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதே போல், பிரிட்டன் முழுவதும் பல நகரங்களில், ஒதுக்குப்புறமான இடங்களில், பழைய கார்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அரசு கொண்டு வந்த சட்டப்படி, இந்த கார்களை பழைய இரும்பாக மாற்றி தான் விற்க வேண்டும்; காராக மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இங்கு நிறுத்தப்பட்டுள்ள கார்களில் உள்ள பெட்ரோல், ஆயில் போன்றவற்றை எடுத்த பின், முக்கிய பாகங்கள் அகற்றப்படும் . பின்னர் அந்த கார்கள் அப்படியே புல்டோசர் மூலம் நசுக்கி, பழைய இரும்பாக மாற்றப்படும். நாடே செல்வச் செழிப்பில் மிதக்கிறது என்றால் இதுதானோ?

நம்பினோர் கெடுவதில்லை! (ஆன்மிகம்)மே 30 – குமரகுருபரர் குருபூஜை!


கடவுள் மேல் நம்பிக்கை வைத்தவர்கள், அதற்குரிய நற்பலனை நிச்சயம் அனுபவிப்பர் என்பதற்கு உதாரணமே குமரகுருபரரின் சரித்திரம்.
வற்றா நதியான தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டம் எனும் நகரில், சண்முகசிகாமணி கவிராயர் – சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியருக்கு, நீண்ட காலமாக குழந்தை இல்லை. அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று, வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றனர்; ஆனால், ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை.
“முருகா… குழந்தை இல்லை எனும் கொடுமையை விட, அவன் பேசவில்லை என்ற கொடுமை பெரிதல்லவா… நீ தான் அவனை பேச வைக்க வேண்டும்!’ என்று வேண்டினர். பலனேதும் இல்லாததால், நம்பிக்கையுடன் திருச்செந்தூர் சென்று, 41 நாட்கள் விரதம் இருப்பதென முடிவு செய்தனர். ஒருவேளை மட்டும் உப்பில்லாத உணவைச் சாப்பிட்டு, விரதம் அனுஷ்டித்தனர். நாட்கள் கடந்தன. இருந்தாலும், அவர்கள் நம்பிக்கையை விடவில்லை.
விரத காலம் முடிந்து விட்டாலும், “எங்கள் குழந்தை பேசும் வரை, இங்கிருந்து ஊருக்குச் செல்லமாட்டோம். நீ என்ன முடிவைத் தந்தாலும் சரி…’ என விரதத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக, 45வது நாள், அவர்கள் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்றனர். ஆண்டவனின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் ஏக்கத்தோடு, மாறி மாறி பார்த்தனர். கண்களில் கண்ணீர் வடிந்தது. அப்போது, குமரகுருபரன் அவர்களிடம் ஏதோ பேசியது போல் தோன்றியது. அடுத்த நிமிடமே, முருகனின் சிலையைப் பார்த்த குமரகுருபரன், மடை திறந்த வெள்ளம் போல் பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலே, “கந்தர் கலிவெண்பா’ எனப்பட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட பக்தர்கள், பரவசமடைந்தனர்; மகிழ்வுடன் ஊர் திரும்பினர்.
இதன்பின் குமரகுருபரன், பெற்றோருடன் அதிக நாள் தங்கவில்லை. இறைப்பணியே செய்வதென முடிவெடுத்து, மதுரை வந்தார். மீனாட்சிஅம்மனைப் புகழ்ந்து பாடினார். இது, “மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!’ எனப்பட்டது.
தன்னைப் பாடிய குமரகுருரபனின் புகழை நாடறியச் செய்ய முடிவெடுத்த மீனாட்சி, திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றி, “மதுரைக்கு என் மகன் குமரகுருபரன் வந்துள்ளான். அவன், என்னைப் பற்றி பாடிய பிள்ளைத் தமிழை, கோவில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்!’ என உத்தரவிட்டாள்.
குமரகுருபரரை வரவேற்று, அரங்கேற்ற ஏற்பாடுகளை செய்தார் நாயக்கர். அப்போது, கோவில் தலைமை அர்ச்சகரின் மகள் வடிவத்தில் வந்த மீனாட்சி, நாயக்கரின் மடியில் அமர்ந்து பாடல் கேட்டாள். அவரது கழுத்தில் இருந்த முத்துமாலையை உரிமையோடு கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்தாள். பின்னர், கருவறை பக்கம் சென்று, மறைந்து விட்டாள். வந்தது மீனாட்சி என்பதை அறிந்த மக்கள், அவளது தரிசனம் கிடைக்கச் செய்த குமரகுருபரரை வாழ்த்தினர்.
காசி சென்ற குமரகுருபரர், அங்குள்ள சுல்தானைச் சந்தித்தார். அவருக்கு இந்தி மொழி மட்டுமே தெரியுமென்பதால், அவருடன் பேசும் வல்லமையைப் பெற கலைவாணியை எண்ணி பாடினார்; அதுவே, “சகலகலாவல்லி மாலை’ எனப்பட்டது. பின், இந்தியில் சுல்தானுடன் பேசி, சைவ மடம் ஒன்று கட்ட இடம் கேட்டார்; சுல்தானும் இடம் கொடுத்தார். அது, “குமாரசுவாமி மடம்’ எனும் பெயரில், இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தெய்வ நம்பிக்கை, ஒருவரை வாழ்வில் பெரிதும் உயர்த்தும் என்பதற்கு, குமரகுருபரரின் வாழ்க்கை சிறந்த உதாரணம்.

செக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது?

உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.

ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் செக்ஸ்  ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.

குழந்தை வேலைக்கும் தரத்திற்கும் தொடர்பு?

ஒரு தரமான பொருள் எப்படி உருவாகிறது?
பொருளின் தரம், பொருளை உருவாக்குவதற்கான வழிமுறைகள், வேலையை செய்யும் விதம் போன்றவை வேலையின் தரத்தைத் தீர்மானிக்கிறது.
சீதாவுக்கு 12வயது. படம் வரைவதில் ஆர்வமான மாணவி. ஒரு அற்புதமான படத்தை வரைவதற்கு அவளுக்கு நல்ல க்ரேயான் பென்சில்கள் தேவை, தரமான கார்ட்போர்டு சீட் தேவை, படம் வரையும்போது அவளுக்கு இடையூறு இல்லாத சூழ்நிலை தேவை.
இவை எல்லாம் அமைந்ததற்குப் பிறகு அவள் பொறுமையாக ஒவ்வொரு வண்ணத்தையும் பொருத்தமாக பயன்படுத்தி ஒரு ரோஜா பூவின் படத்தை வரைந்து விடுவாள். ரோஜா பூவின் இதழ்களில் உள்ள சிறு மடிப்பையும் கூட கோடுகளால் உருவாக்கி விடுவாள்.
அவளது பெற்றோர், அவள் படம் வரையப் போவதாக கூறினால், வேறு எந்த வேலையும் சொல்வதில்லை. அது சாப்பாட்டு நேரமாக இருக்கும் பட்சத்தில் அவளது அம்மா சாப்பிட வா என்று கூட கூப்பிடுவதில்லை.
படத்தை வரைந்து முடியும் வரையில் சீதா தனக்கே உரித்தான ஓர் உலகத்திற்குள் சென்று விடுவாள். அந்த உலகத்தில் அவளது பெற்றோர் நுழைவதில்லை. அந்த உலகத்தில் நுழைய தங்களுக்கு உரிமை இல்லை என்பதை அவர்கள் புரிந்திருந்தனர்.
சீதாவின் பெற்றோரைப் போலத்தான் நாம் இருக்க வேண்டும்.

சின்னச் சின்ன வேலைகள்
வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகள் குழந்தைகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
ராஜாவுக்கு 9 வயது
மாடியில் துவைத்து காயப்போட்டுள்ள துணிகளை எடுத்துவந்து கட்டிலில் போடுவான். அதை அம்மா மடித்து வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க சொல்வான். அப்படி மடிக்கும்போது தப்பாக மடித்தால் அம்மா பொறுமையாக சொல்லித்தருவாள்.
வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும்போது திடீரென்று அந்த வரிசை சரிந்து விழும். அப்போது அம்மா அவனிடம் ஐந்து ஐந்து துணியாக அடுக்கினால் போதும்.
ஒரேயடியாக அடுக்கினால் இப்படித்தான் சரிந்து விழும் என்று எடுத்து சொல்லுவாள்.
கொஞ்ச நாட்கள் கழித்து ராஜா தானாகவே சரியாக அடுக்கி வைக்க ஆரம்பித்து விட்டான். காலப்போக்கில், அவனே பீரோவை திறந்து எந்த துணியை எங்கே வைக்க வேண்டும் என்பது வரையில் கற்றுக்கொண்டான்.

வீட்டுப்பாடம்
ராணிக்கு 9 வயது
4&ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்குத் தினமும் பள்ளியில் இருந்து வீட்டுப் பாடம் கொடுப்பார்கள்.பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தமிழ், ஆங்கிலம். கணக்கு என ஒவ்வொன்றிலும் எத்தனை பாடங்கள் வீட்டில் எழுதவேண்டும் என்பதை அம்மாவிடம் ராணி சொல்வாள்.
மாலை 6 மணிக்கு வீட்டுப்பாடம் செய்ய ராணி உட்காருவாள். 8 மணிக்குள் அனைத்து வீட்டுப்பாடத்தையும் செய்து முடிக்கவேண்டும் என அம்மா அவசரப்படுத்துவாள். இது சரியானது அல்ல, ராணி எந்தப் பாடத்தில் பலவீனம், எந்தப் பாடத்தை நன்றாக செய்வாள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவளது திறனும் ஏற்றவாறு வீட்டுப் பாடங்களை முடிக்க உரிய நேரம் கொடுக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் சோம்பலில்லாமல் பாடங்களை முடிக்க அவளுக்கு உதவ வேண்டும்.

வேலைக்கு பழக்கப்படுத்தல்
ரவி 8&ம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய அப்பா ஒரு ஃபேன்சி ஸ்டோர் வைத்திருக்கிறார்.
பள்ளி விடுமுறை நாட்களில் ரவி அந்த கடைக்கு செல்வான். அப்பாவுக்கு உதவியாக வியாபாரம் பார்ப்பான்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசுவது? அவர்கள் கேட்கும் பொருளை எப்படி எடுத்து தருவது?
பொருட்களை ரேக்கில் எப்படி வரிசையாகவும் அழகாகவும் அடிக்கிவைப்பது?
பொருட்களை வாங்கி பணம் தருபவர்களுக்கு எப்படி மீதி சில்லரை தருவது? போன்ற விஷயங்களை ரவிக்கு அவனுடைய அப்பா சொல்லித்தருவார்.
விளையாட போகாமல் 4 மணி நேரம் கடையில் தொடர்ந்து வேலை பார்த்தால் ரவிக்கு அவனது அப்பா 10 ரூபாய் சம்பளம் கொடுப்பார்.
இது போன்று குழந்தைகளை ஓய்வு நேரத்தில் வாய்ப்புள்ள வேலைகளில் ஈடுப்படுத்துவது நல்லது குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை பார்ப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு

தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது. எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.
பயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.
அநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம்.
பயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.
மொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்.