இணையதளங்களின் கிழக்கு வாசல்

நாம் எத்தனையோ இணைய தளங்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு வகை தகவல் தேடலுக்கும் குறைந்தது 15 முதல் 30 தளங்களை அணுகுகிறோம். சில வேளைகளில் இது போன்ற இணையதளங்களைத் தகவல் வாரியாக வகை பிரித்து ஒரு இணைய தளத்தின் ஒரே பக்கத்தில் லிங்க்குகளாகத் தந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று நமக்கு ஒரு எண்ணம் தோன்றலாம். அப்படி ஓர் இணைய தளமும் உள்ளது என்பதுதான் இன்றைய செய்தி. அதன் பெயரே பிரபலமான தள முகவரிகள் என்பதுதான். ஆம், Popular URLs என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கமாக POPURLS என்று இதன் பெயர் உள்ளது. இதன் இன்டர்நெட் முகவரி: http://popurls.com.

.2006 ஆம் ஆண்டில் தாமஸ் மார்பன் (Thomas Marban) என்பவரால் இது தொடங்கப்பட்டது. இணையத்தில் ஒரு பக்க அளவில் உலக நடப்புகளை உள்ளடக்கி தருவது என்ற வழக்கம், இவரின் முயற்சிக்குப் பின் தான் உருவானது என்று அனைவரும் கூறுவார்கள். அனைத்து இணைய தளங்களுக்கும் ஒரு நுழைவு வாயிலாக இது இயங்குகிறது. யாஹூ, மிகவும் பிரபலமான இணையதளங்களைத் தேர்ந்தெடுக்கையில் ஆயிரக்கணக்கான செய்தி தளங்களை எல்லாம் பார்த்தபின் இதனை முதல் 30 தளங்களில் கொண்டு வந்தது.
இந்த தளத்தில் லேட்டஸ்ட் செய்தி தலைப்புகள், செய்திகள், இணைய தளத்தின் வலைமனைகள் மற்றும் பிரபலமான இணைய தள முகவரிகள், அவை கொண்டுள்ள செய்திகள் ஆகியவை கோடு காட்டப்பட்டு, அவற்றிற்கான லிங்க்குகள் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களைக் கவரும் செய்தி அல்லது தகவல் இருப்பின் அதில் கிளிக் செய்து, சார்ந்த இணைய தளம் சென்று அதனைக் காணலாம்.
இதில் தகவல்களைத் தேட நம்மைப் பதிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பதிய வேண்டும் என விரும்பினால் பதிந்து கொண்டு நம் தேடலை வகைப்படுத்தலாம். அதன் பின் நம் தேவைக்கேற்ற தளங்களின் லிங்க்குகள் நமக்கு நேரடியாகக் கிடைக்கும்.
இதனால் நமக்கு தேடும் நேரம் மிச்சமாகிறது. கூடுதல் தகவல் தளங்களும் ஒரே இலக்கில் கிடைக்கின்றன. ஒரு முறை இந்த தளம் சென்று விட்டால், இந்த தளத்தில் தகவல்கள் எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொண்டு, அடுத்த தேடுதல்களை மிக எளிதாக உங்களால் அமைத்துக் கொண்டு தேட முடியும். எதற்கும் ஒரு முறை சென்று பார்த்துவிடுங்கள்.

%d bloggers like this: