குழந்தைகளின் தரத்தை வரையறுங்கள்?

தரம் என்றால் என்ன என்பதை முதலில் உங்கள் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
ஒரு வேலையை சுத்தமாகவும் திருத்தமாகவும் செய்வது எப்படி என்பதை புரிய வைக்க வேண்டும். அவர்களுக்குத் தரம் எனும் இலக்கை அடைய சிரமம் ஏற்பட்டால், பொறுமையாக அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
உதாரணமாக, ‘‘உனது அறையை சுத்தம் செய்’’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
உங்களது பையனோ பெண்ணோ வீட்டை சுத்தம் செய்கிறார்,
பையனின் கழற்றிப் போட்ட பள்ளி யூனிபார்ம் சேரில் கிடக்கிறது. அதை அவர் எடுத்து கொடியிலோ அல்லது ஹேங்கரிலோ& துவைக்க வேண்டிருந்தால் பாத்ரூமிலோ போடவில்லை. அதேபோல காலையில் அவர் குடித்த காபி டம்ளர் டேபிளிலேயே இருக்கிறது. அதை எடுத்து ஸிங்க்கில் போடவில்லை.
ஆனால், வீட்டை சுத்தம் செய்து விட்டார்.
இந்த நேரத்தில் சேரில் கிடக்கும் துணியை எடுத்து போடும்படியும் காப்பி டம்ளரை ஸிங்க்கில் போடும்படியும் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும். கடுமையாகவோ கோபத்துடனோ அதை சொல்லக் கூடாது.
‘‘கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? வீட்டை கூட்டினாய் சரி. யூனிபார்மை இங்கேதான் கழற்றி போடுவார்களா? இந்த யூனிபார்மை இரண்டு நாட்களாக ஸ்கூலுக்கு போட்டுக் கொண்டு போய் வருகிறாய். எவ்வளவு அழுக்கு. அதை எடுத்துப்போய் பாத்ரூமில் போட வேண்டும் என்பது கூடவா தெரியாது?’’
இப்படி கடுமையாக சொல்லக் கூடாது.
இனிய உளவாக இன்னாத கூறல் கூடாது.
‘‘அந்த துணியை எடுத்து பாத்ரூமில் போடு. அழுக்காக இருக்கிறதல்லவா?’’
‘‘காபி டம்ளரை ஸிங்க்கில் போடு’’
என்று உத்தரவாக இல்லாமல் சாதாரணமாக சொல்லலாம். சாதாரணமாக சொல்லும்போது குழந்தைகள் கேட்கும்.
செய்யும் செயலில் ஒரு பிழைகூட இல்லாமல் சுத்தமாக செய்வதை பாராட்ட வேண்டும்.
குழந்தைக்கு அதுவே பழக்கமாகும்.-
தரமாகவும் திருத்தமாகவும் ஒரு செயலை செய்வது அதற்கு பழக்கமாக வேண்டும். பழகி விட்டால் பிறகு தானே நினைத்தாலும் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது.
தரமான செயல் பாராட்டை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை, தன்மீதே ஒரு மதிப்பு வர வழி வகுக்கும்.
அடுத்து, ஒரு காரியத்தை குழந்தையிடம் ஒப்படைக்கிறீர்கள்.
உதாரணமாக, வீட்டில் உள்ள டி.வி. தூசுபடிந்த நிலையில் இருக்கிறது. அதை துடைக்கும்படி உங்களது பெண்ணிடம் சொல்கிறீர்கள். சாதாரணமாக, நீங்கள் டி.வி.யை துடைத்தால், டி.வி., டி.வி. ஸ்டாண்டு, டிவி ஸ்டாண்டில் கீழே இருக்கும் டிவிடி பிளேயர் எல்லாவற்றையும் சுத்தமாக துரைப்பீர்கள். அதற்கு உங்களுக்கு கால் மணி நேரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஆனால், உங்களது பெண் அதே வேலையை ஐந்து நிமிடத்தில் செய்து விட்டாள் என்றால் அதற்காக குழந்தையை முதலில் வாய் நிறைய பாராட்டுங்கள்.
கால்மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை ஐந்து நிமிடத்தில் செய்யும்போது சரியாக தூசி துடைக்கப்படாமல் இருக்கலாம். டி.வி.யை மட்டும் துடைத்து விட்டு ஸ்டாண்டை துடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது டிவிடி பிளேயரை துடைக்காமல் இருந்திருக்கலாம். மூன்றையுமே சரியாக துடைக்காமல் இருந்திருக்கலாம்.
அதுபோன்ற குறை உங்களது கண்களுக்குப் படும்போது இதோபார் இப்படி துடைக்க வேண்டும் என உங்களது பெண்ணுக்குப் பொறுமையாக சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுபோல இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் போதும் அடுத்து உங்கள் பெண் உங்களை விட சுத்தமாக துடைப்பார்.
வேகம் அல்ல. திருத்தம்தான் முதலில் முக்கியம் என்பதை உங்களது பெண் புரிந்து கொள்வார்.
திருந்தமான வேலையை செய்வதற்குக் குழந்தைகளைப் பழக்க சிறிது காலம் பிடிக்கலாம். அதை பற்றி கவலைப்படக் கூடாது. ஏனெனில் உங்களது குழந்தைகளிடம் மோசமான பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கும். அது வளர்வதற்கும் சிறிது காலம் பிடித்திருக்கும். அவற்றை போக்குவதற்கும் சிறிது காலம் ஆகும் என்பதை நீங்கல் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த வேலையை செய்தாலும் திருத்தமாக செய்வது உங்கள் குழந்தை பிற்காலத்தில் ஒரு வேலைக்கு செல்லும்போது நன்மதிப்பை பெற்றுக்கொடுக்கும் நண்பர்களிடம் மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும் என்பதை குழந்தைகள் உணரும்படி செய்ய வேண்டும்.
இதுபோன்ற பெருமையின் ருசியை குழந்தைகளை உணர செய்ய வேண்டும். எல்லா வேலைகளிலும் தரம் காப்பாற்றப் பட்டால், அது அவர்களது படிப்பிலும் எதிரொலிக்கும். அவர்களது கல்வியும் முழுமையாகவும் சிறப்பாகவும் அமையும்.
குழந்தைகளுடன் உரையாடல் முக்கியம். அவர்கள் செய்த வேலை தொடர்பாக பொறுமையாக உரையாடுங்கள். அது அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே சமயத்தில் இரண்டு வேலைகளுக்கு மேல் செய்யச் சொல்லாதீர்கள். நிறைய வேலைப்பளு குழந்தைகளின் கவனத்தை சிதறடிப்பதோடு, சரியாக செய்யவில்லையானால் தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கும்.
செய்ய வேண்டிய வேலைகளை வரிசை கிரம்மாகவும், தவற விடாமலும் குழந்தைகள் செய்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
அவர்களுடைய வேலையை அவர்களையே கவனிக்கச் செய்யலாம்.
உதாரணமாக,
‘‘நான் இன்று காலை படுக்கையை விட்டு எழுத்தவுடன், படுக்கையை சுருட்டி உரிய இடத்தில் வைத்தேனா?’’
‘‘முகத்தை கழுவி, பல் துலக்கி விட்டு அதற்குப்பிறகு காபி குடித்தேனா? அல்லது எழுந்தவுடன் அப்படியே காபிகுடிதேனா?’’
‘‘காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்து, சாப்பிட்டு, யூனிபார்ம் அணிந்து, உரிய நேரத்தில் பள்ளிக்குக் கிளம்பி விட்டேனா?’’
‘‘உரிய நேரத்தில் கிளம்ப முடியவில்லையானால் அதற்கு காரணம் என்ன?’’
‘‘நாளைக்கு உரிய நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப நான் என்ன செய்ய வேண்டும்?’’
போன்ற கேள்விகளை ஒரு வெள்ளை தாளில் எழுதி, குழந்தைகளின் கண்ணில் படும்படியான இடத்தில் ஒட்டி வைக்கலாம்.
அதை பார்க்கும் உங்களது மகன் அல்லது மகள் அதில் உள்ள கேள்விகளுக்கு விடை சொல்லும் போதே அவர்களுடைய வேலையில் உள்ள குறைபாடுகளை தெரிந்து கொள்வார்கள்.
பின் குறைகளை களைந்து சரியாக செய்ய தொடங்குவார்கள்.
வேலைகளை சரியாகவும் துல்லியமாகவும் எப்படி முடிக்கிறார்கள் என்பதை அவர்களே கவனித்து தங்களுக்குத் தாங்களே மதிப்பெண் போட்டுக் கொள்ளட்டும்.
நீங்களும் மதிப்பெண் போடுங்கள். குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொள்ளும் மதிப்பெண்களை விட நீங்கள் குழந்தைகளுக்கு போட்ட மதிப்பெண்கள் குறைவாக இருக்கலாம்.
எந்தெந்த வேலைகளில் அவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
அந்த வேலைகளை சரியாக செய்ய குழந்தைகளுக்கு என்ன இடையூறு என்பதை பாருங்கள். அந்த இடையூறை களைய அவர்களுக்கு உதவுங்கள்.
உதாரணத்திற்கு மதிப்பெண் அட்டவணை இப்படி அமையலாம்.
இந்த அட்டவணையில் குழந்தைகள் தங்களது வேலையை குறித்து மதிப்பிட்டு இருப்பதற்கும் உங்களது மதிப்பீடுக்கும் பொதுவாக் பெரிய வேறுபாடுகள் இல்லை. குழந்தையின் மதிப்பெண்ணுக்கும் உங்களது மதிப்பெண்ணுக்கும் ஒரு மதிப்பெண்தான் வேறுபாடு.
ஆனால், குறிப்பாக ஒவ்வொரு வேலையிலும் மதிப்பெண்களின் வேறுபாட்டை கவனிக்க வேண்டும். அன்றாட வேலைகளை பொறுத்தவரையில் குழந்தை தனக்கு அளித்துள்ள மதிப்பெண்ணை காட்டிலும் உங்களுடைய மதிப்பெண் குறைவாக உள்ளது.
ஆனால், அதே சமயத்தில் குழந்தை தனக்கு 10&க்கு 10 மதிப்பெண் போட்டுக் கொள்ளவில்லை. இன்னும் முழுமையாகவும் சரியாகவும் அந்த வேலைகளை செய்யவில்லை என்று குழந்தை உணர்கிறது. இது நல்ல அம்சம்.
அதே போல வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவுவதில் பெற்றொரின் மதிப்பெண்ணும் சரி குழந்தையின் மதிப்பெண்ணும் சரி மிகவும் குறைவாக உள்ளது.
ஆனால், அதே சமயத்தில் வீட்டுப்பாடங்களை சரியாக முடிப்பதில் மதிப்பெண் அதிகமாக உள்ளது. இதில் பெற்றோரின் மதிப்பெண்ணும் குழந்தையின் மதிப்பெண்ணும் ஒரே மாதிரி இருக்கிறது.
ஆக, உங்களது குழந்தை படிப்பில் கெட்டி. ஆனால், மற்ற வேலைகளில் சிறிது குறைபாடுகள் உள்ளன. அவற்றை களைவது சுலபம். எல்லாவற்றிலும் அதிக மதிப்பெண் எடுக்க என்ன வழி என்பதை குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள்.
இந்த மதிப்பெண் பட்டியல் மூலம் உங்கள் குழந்தையிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கீறிர்கள் என்பதை குழந்தை உணரும். அதே சமயத்தில் குழந்தைதன்னைப் பற்றி எப்படி மதிப்பிடுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இதேபோல வகுப்பில் ஆசிரியரின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் குழந்தையிடம் கேளுங்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய திறன் குழந்தைக்கு இருக்கிறதா என கவனியுங்கள். அப்படி அந்த திறன் இல்லையெனில் அதை வளர்ப்பதற்கு என்ன செய்யலாம் என யோசியுங்கள்.
உதாரணத்திற்கு, உங்களது மகன் அல்லது மகள் கணக்கு பாடத்தில் நன்றாக மதிப்பெண் பெறலாம். ஆங்கிலம் கடினமாக இருக்கலாம். ஆங்கிலப் பாடத்திலும் கணக்கு பாடத்தை போலவே குழந்தை அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியருக்கு இருக்கலாம்.
அந்த எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது?
குழந்தையின் ஆசிரியரை சந்தியுங்கள். அங்கிலப்பாடத்தில் ஏன் குழந்தை கஷ்டப்படுகிறான் அல்லது படுகிறாள் என கேளுங்கள். எந்த இடத்தில் குழந்தைக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது என ஆசிரியரும் நீங்களும் கலந்து பேசி, தடுமாற்றத்தை களைய முயற்சியுங்கள். பிறகு கணக்கை போலவே ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

குழந்தையைப் பிரதிபலிக்கும் வேலை
உங்கள் குழந்தை தன்னைப்பற்றியும் தனது வேலைகள் பற்றியும் மதிப்பிட்டதற்குப் பின் நீங்கள் அந்தக் குழந்தையின் வேலை குறித்து மதிப்பிடுகிறீர்கள்.
உங்களது மதிப்பீட்டை குழந்தைகளிடம் கூறும்போது உண்மையில் தரமான வேலை என்பது என்னவென்று குழந்தைகள் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்களது வேலைக்கு தாங்களே பொறுப்பு என்பதை உணர்ந்து கொள்கின்றனர்.
இதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் அறிந்து கொள்ளவும் நாம் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
நீங்கள் பொறுமையாகக் கற்றுக் கொடுக்கும் போது தங்களது வேலையில் உள்ள குறை& நிறைகளை அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களது சுயம் அவர்களுக்குத் தெரிகிறது. அவர்கள் யார் என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. அதன்பிறகு அவர்களிடம் குறை இருந்தால் அதை நிவர்த்திக்க முயற்சிக்கிறார்கள்.

%d bloggers like this: