Daily Archives: மே 2nd, 2010

அதிக வேலை மூளையை பாதிப்பு!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, மூளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்!

எப்போதும் எரிச்சல்

“என்னதான் சரியாகச் செய்தாலும், ஒண்ணுமே சரியா வர மாட்டேங்குதே” என்று சிலர் எரிச்சல் படுவதை பார்த்திருப்பீர்கள். செய்யக்கூடிய செயலை பற்றிய முழுமையான விவரம் தெரியாததால் தான் இந்த பிரச்சினை இவர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. அவர்கள் இதை முழுமையாக உணர்வதுமில்லை.

சிலர் தங்களிடம் `அப்படி என்ன தான் குறை?’ என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கு என்ன குறை என்று தெரியாததால் தான் நிறைய பிரச்சினைகளே உருவாகின்றன. தன் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், பிறர் செய்யும் சிறிய தவறு கூட நமக்கு பெரிய குற்றங்களாக தெரிந்துவிடும். இது தான் மனிதர்களின் இயல்பு.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்குரிய பலன் நிச்சயம் உண்டு. இது தான் இயற்கை நமக்கு கற்றுத் தரும் உன்னத பாடம். எண்ணம், சொல், செயல் இவை முன்றிலும் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதற்காக நாம் நாட்கணக்கில் கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு செயலையும் நாம் `கடனே’ என்று செய்யாமல் தன் கடமையாக கருதி செய்து வந்தாலே போதும்.

ஒவ்வொரு முறையும் நமக்கு வரும் சோதனைகளைக் கடந்து நாம் அவற்றை சாதனைகளாக்க முற்படும் போது தான் நாம் ஒவ்வொரு படியாக வளர ஆரம்பிக்கிறோம். இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். பிறரோடு ஒத்து வாழும் சூழ்நிலையை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் போது சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனபான்மை போன்ற நற்குணங்கள் நம்மை வந்து சேர்கிறது.

இதனால், வாழ்க்கையின் பல தளங்களை நம்மால் எளிமையாக கடக்க முடிகிறது. சுயநலம் கருதாமல் பிறருக்கு உதவி செய்வதிலேயே நாம் ஆனந்தபடுகிறோம். இதனால் எப்போதும் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நற்குணங்களை நாம் தொடர்ந்து கடைபிடித்து வரும்போது, நாமே நினைத்தாலும் கூட தீய செயல்களை செய்வதற்கு நம் மனம் அனுமதிக்காது. இதுவே மன அமைதிக்கு அடிபடை.

அறிவு கூர்மையாக வேண்டுமானால், எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் நாம் எந்த ஒரு விஷயத்தை பார்க்கும் போதும் அதை கிரகிக்க முடியும். அதன் பின்பு, நாம் ஒவ்வொன்றையும் வாழ்க்கையில் கடைபிடித்து வரும்போது அதன் பலனை நன்கு உணர முடியும். நற்செயலை நாம் செய்து வரும் போது தான் அதன் பலன்களை அனுபவிக்க முடியும். அதைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் முடியும். நம்பிக்கையுடன் நம் கடமையாக கருதி செய்து வரும்போது, நமக்குள் இருக்கும் அற்புதமான ஆற்றலை நாம் உணர முடியும்.

துன்பம் வருவது இயற்கையாக நடக்கும் ஒரு செயல். அப்போது நமது எண்ணம், சொல், செயல் போன்றவற்றை பயன்படுத்தி துன்பத்திற்கு காரணமான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும். நமது துன்பத்தை போக்க வேண்டும் என்பதற்காக பிறருக்கும், தனக்கும் எந்த நிலையிலும் தீங்கு வராதவாறு செயல்பட வேண்டும். இதை தொடர்ந்து கடைபிடித்து வரும் போது அதுவே, ஒழுக்கமாக மாறிவிடுகிறது.

சைனா டவுனுக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி!

இந்தியாவில், சீனர் களுக்கென தனி நகரம் இருக்கிறது. எங்கு தெரியுமா? மேற்கு வங்க மாநிலம் கிழக்கு கோல்கட்டாவில். பெயர் டோங்க்ரா.
பெண்கள் தங்கள் மூக்கு, உதடு, மார்பகம் உட்பட, உடல் பகுதி களை எடுப்பாக்கிக் கொள்ள, ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்து கொள்கின்றனர். அது போல, இந்த சீன நகரத்துக்கு, ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ (புதுப்பிப்பு பணிகளை செய்ய) செய்து, அழகூட்ட மேற்கு வங்க அரசுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்துள்ளது.
இந்தியாவில் சீனாவை ஒட்டி அமைந்துள்ள மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தில், சீனர்கள் அடிக்கடி ஊடுருவி பிரச்னை செய்வது வாடிக்கை. ‘அந்த பகுதி எங்களுடையது; இந்தியாவின் மாநிலம் அல்ல…’ என்றும் சீனா கொக்கரிப்பது வழக்கம். ஆனால், இந்தியாவில் முழு சுதந்திரம், உரிமைகளுடன் தொழில் செய்து வந்துள்ளனர் சீனர்கள்.
டோங்க்ரா பகுதிக்கு, சீனர்கள் வந்து சேர்ந்ததே தனிக்கதை. 1860ல், சீனாவில் இருந்து வேலை தேடி, இந்தியாவில் நுழைந்தனர். அவர்கள் டோங்க்ரா பகுதியில் குடியேறினர். அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணியாற்ற ஆரம்பித்தனர்.
நூற்றுக்கணக்கில் சீனர்கள் குடியேறியதை அடுத்து, டோங்க்ரா பகுதி முழுவதும் அவர்கள் ஆதிக்கமாகவே இருந்தது. அப்போது, இந்த பகுதியில் குடியேறிய சீனர்களின் முதல் தலைமுறையில் பத்தாயிரம் பேர் இருந்தனர்.
சிலர் தோல் பதனிடும் தொழிலை சொந்தமாக ஆரம்பித்தனர். அடுத்தடுத்த தலைமுறை சீனர்கள் பெரிய தொழிலதிபராயினர்; படித்து பெரிய பதவிகளில் கூட அமர்ந்தனர். இப்போது இருக்கும் ஆறாவது தலைமுறை சீனர்களுக்கு, சீன மொழியை விட, ஆங்கிலம், இந்தியில் பேசுவது தான் விருப்பமாக உள்ளது.
கோல்கட்டாவில், சீன உணவு வகைகளை பரிமாறும் ஓட்டல்கள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. அதில், ‘பிக்பாஸ்’ என்ற ஓட்டலுக்கு தனி மவுசு உண்டு. இதன் உரிமையாளர் திக்சி யிங் ஸ்கிங். 1956ல், எட்டு வயதில் சீனாவில் இருந்து இந்தியா வந்தார்; இப்போது பிரபல ஓட்டல் அதிபர்.
கடந்த 1962ல் இந்தியா – சீனா போர் வந்த பின் தான், இந்த நகரத்தில் உள்ள சீனர்களிடம் பெரும் திருப்பம் ஏற்பட்டது. உளவுத்துறை கண்காணிப்பது அதிகரித்ததால், வெளியேற ஆரம் பித்தனர். அரசு பல வகையில் புறக்கணிக்க ஆரம்பித்ததால், படித்த சீன இளம் தலைமுறையினர், அமெரிக்கா, கனடா என்று பறக்க ஆரம்பித்தனர்.
இப்படி படிப்படியாக குறைந்த இவர்களின் எண்ணிக்கை இப்போது இரண்டாயிரத்தில் வந்து நிற்கிறது.
சீனர்களுக்காக இந்த நகரில் ஆரம்பிக்கப் பட்ட, ‘பெய் மாய்’ என்ற சீன பள்ளி, இந்தாண்டு துவக்கத்தில், சீன மாணவர்கள் வராததால் மூடப் பட்டு விட்டது. சீன குழந்தைகள் பெரும்பாலும், ஆங்கில வழிக் கல்வியை விரும்புகின்றனர்.
வெளிநாட்டுக்கு பறந்த சீன இளைஞர்களில் பலருக்கும் சீன மொழி தெரியாது. சீனாவுக்கு திரும்பிப் போக விரும்பாததால், ஆங்கிலம், இந்தியை கற்று, சிலர் வெளிநாடு பறந்து விட்டனர்; சிலர், டில்லி உட்பட சில மாநிலங்களில் குடியேறிவிட்டனர். இங்கு, சீன கோவில்கள் உள்ளன; அதுபோல, சீனர்களுக்கு தனி கல்லறை உள்ளது. மூன்று மாதத்துக்கு முன் தான், கடைசியாக ஒரு சீனர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
‘ஓவர்சீஸ் சைனீஸ் காமர்ஸ் ஆப் இண்டியா’ என்ற சீன மொழி பத்திரிகையை சீனர்களுக்காக, சாங் என்பவர் நடத்தி வருகிறார். இரண்டாயிரம் பிரதிகள் விற்ற நிலை போய், இப்போது வெறும் 120 பிரதிகள் தான் விற்பனை ஆகிறது.
இந்த சீன நகரத்தை புதுப்பித்து, சுற்றுலா இடமாக்குவதில் மேற்கு வங்க அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக சில கோடிகளை ஒதுக்கியுள்ளது. அமெரிக்காவில், சான்பிரான் சிஸ்கோ நகரில் உள்ள சீன நகரை போல அழகூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் பாதிப்பு நீங்க

கோடை பிறந்து விட்டாலே கொதிக்கும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக்காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பலர் பூங்கா, கடற்கரை என நிழல்தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர்.

இந்த கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனைதான். இந்த ஆண்டு மின்சார வெட்டு அதிகம் இருக்குமென்று இப்போதே பயமுறுத்த ஆரம்பித்து விட்டனர். கோடைக் காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது பலர் அலுவலகங்களிலம், வீடுகளிலும் குளிர் சாதன வசதி செய்துள்ளனர். போக்குவரத்து வாகனங்களிலும் குளிர்சாதன வசதிகள் உள்ளன. இதனால் சிலர் கோடையின் பாதிப்பு நமக்கு ஏற்படாது என்று நினைக்கின்றனர். அது தவறு கோடைக் காலத்தில் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப உடலானது தனது தகவமைப்பை மாற்றிக் கொள்ளும். இக் காலங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதாலும் பலர் பலவிதமான புதிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து வெளியேறும் போது உடலை வெளியில் உள்ள உஷ்ணம் திடீரென்று பாதிக்க ஆரம்பிக்கும். இப்படி கோடைக்காலத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட இயற்கையான வழியே சிறந்ததாகும்.

கோடைக்காலத்தில் உண்டாகும் நோய்கள்

கோடை வெயிலின் தாக்கத்தால் உடல் சூடேறி இரத்தம் உஷ்ணமாகி உடம்பில் பித்த நீர் அதிகமாவதால் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது .

தோலில் உள்ள உப்பு சத்து திடீரென்று உறைந்து விடுவதால் தோலுக்கு கீழே படிந்து கட்டியாக மாறும். சில நேரங்களில் சிறு சிறு கொப்புளங்களாக மாறிவிடும். பொதுவாக கை அக்குள் பகுதிகள், தோள்பட்டை, முகத்தில் மூக்குப் பகுதியிலும் சுண்டு விரலிலும், வயிற்றுப் பகுதியிலும் மேலும் உடற்கூறுக்கு தகுந்தவாறு உடலில் வெளிப்படுத்தும். சில சமயங்களில் வேணல் கட்டி கொப்புளங்களாக மாறும்.

வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த நீரை உடனே அருந்துவதால் தொண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு வறட்டு இருமல் உண்டாகும்.

குடிக்கும் நீரில் மாசுக்கள் இருந்தால் அவை தலைவலி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், இளைப்பு, ஜியார்டியாசிஸ், அமீபியாசிஸ் போன்ற நோய்கள் தோன்றி அடிக்கடி வயிற்றுவலி, வயிற்றோட்டம், பசியின்மை ஏற்படும். அதுபோன்று கோடை வெப்பத்தினால் கண் ஒவ்வாமை உண்டாகி, வெள்ளை நீர் கோர்த்து ஜவ்வு போல் கண் இமைகளைத் திறக்க விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கும்.

வயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு நோயாளிகள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் வெயிலில் அலையக் கூடாது.

சின்னம்மை நோயை, கொசுக்கடி என்று கவனிக்காமல் அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

சொறி, சிரங்கு போன்றவற்றிலிருந்து நீர் வடிந்து அதில் உள்ள கிருமிகளால் மற்ற இடங்களுக்கும் பரவும். இந்தக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அது சிறுநீரகத்தைப் பாதித்துவிடும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு கணுக்கால்களுக்கு மேல் பகுதியில் அக்கிகள் உண்டாகி அரிப்பு ஏற்பட்டு நீர் கசியும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகும். மேலும் வலியோடு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பிறப்புறுப்புகளில் புண்கள் உண்டாகும்.

கோடை வெயிலின் பாதிப்பு நீங்க

· கோடை காலத்தில் அதிகம் நீர் அருந்துவது நல்லது. அதிக நீரை குடிக்கும் போது உடலில் ஏற்படும் உஷ்ணம் தணியும் .

· நீரை கொதிக்கவைத்து அருந்துவது சாலச் சிறந்தது. குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

· மண் பானை நீர் மிகவும் நல்லது . தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் நீரைப் பருகலாம்.

· முடிந்தவரை ஐஸ்கட்டி கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· தர்பூசணி, இளநீர், நீர் பெருக்கிய மோர் அருந்துவது மிகவும் நல்லது . பனை நுங்கு சிறந்தது.

· வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடலாம்.

· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது .

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை இலேசாக கொதிக்க வைத்து அதில் சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக காய்ச்சி, சிவந்து வரும் பதத்தில் இறக்கி ஆறவைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாக தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கால் நகங்களில் அதிக எண்ணெய் விடுவது நல்லது. இவ்வாறு செய்து குளித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், உடல் உறுப்புகளும் சீராக செயல்படும். இரத்தத்தில் உள்ள பித்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

அக்கியால் பாதிக்கப்பட்டவர்கள்

சந்தனத் தூள்

கோரைக் கிழங்கு

சிவப்பு சந்தனம் அகியவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து அக்கியின் மேல் பூசினால் அக்கி குணமாகி கரும்புள்ளிகளும் மாறும். அக்கியை எக்காரணம் கொண்டு நகங்களால் கீறக் கூடாது.

வெண்பூசனி சாறு – 100 மி.லி.

வெள்ளரிச் சாறு – 100 மி.லி.

சோற்றுக் கற்றாழை சாறு – 100 மி.லி.

எடுத்து அதில் 1 ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து கலக்கி உடலெங்கும் பூசி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அக்கி, வேணல் கட்டி ஏற்படாது.

· ஊமத்தை இலையை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்து அரைத்து அதை எருமை வெண்ணெயில் குழைத்து அக்கிமேல் பூசி வந்தால் அக்கி குணமாகி புண்கள் எளிதில் ஆறும்.

உடல் சூடு தணிய

மணத்தக்காளி கீரை – 1கைப்பிடி

கொத்துமல்லிக் கீரை – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – 1 கைப்பிடி

சின்ன வெங்காயம் – 4

சிரகம் – 1 தேக்கரண்டி

பூண்டு பல் – 4

மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

குறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளின் உடல் சூடு தணிவதற்கு வெள்ளரி ஜுஸ் மிகவும் நல்லது.

சாலடாகவும் சாப்பிடலாம். நல்லமிளகு பொடி சின்னவெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடுவது நல்லது.

தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு காலையிலும், மாலையிலும் பழங்கள் கொடுப்பது நல்லது.

பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பால் குடிக்காத குழந்தைகளுக்கு மேலே சொன்ன மணத்தக்காளி கீரை சூப் கொடுப்பது நல்லது.

தினமும் இருவேளை குளிக்க வேண்டும். அதிக வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளையோ, குளிர்பானங்களையோ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலும் நடுப்பகல் அதாவது உச்சி வேளையில் வெயிலில் அலைவதை தவிர்ப்பது நல்லது.

இரவு படுக்கைக்கு செல்லும்முன் சந்தனத் தூளை நிரில் குழைத்து உடலெங்கும் பூசினால் வியர்க்குரு, வியர்வை நாற்றம் நீங்கும்.

அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போது கொதிக்க வைத்த நீர், மோர் இவற்றை கையில் எடுத்துச் செல்வது நல்லது.

பருத்தியினால் ஆன ஆடைகளை அணிவது நல்லது. வெயிலினை உள்வாங்கும் நிறங்கொண்ட வண்ண உடைகளை தவிர்க்க வேண்டும்.

இத்தகைய நடைமுறைகளை கடைப் பிடித்தாலே கோடை வெப்பத்தின் பாதிப்பை தடுக்கலாம்.

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்!

நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.

இன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்குபெரிதாகத் தெரியாது. பலதரபட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி’ ஏற்படாது.

பலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைபட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்க படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்திம் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.

`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ’ என்று கவலைபட வேண்டியது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையபேர் இருக்கிறார்கள். நாம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.

நேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைபட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைபடுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.

நமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை

வீட்டுக்குள் `மிச்சம் பிடிப்பது’ எப்படி?

எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும். வீட்டுக்குள் `இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது?’ என்று நாம் நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக் கூட்டும். `சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.

வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில `டிப்ஸ்’ இங்கே… வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக `காம்பாக்ட் புளோரசன்ட் விளக்கு’களைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும் அணைக்க மறக்காதீர்கள். `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்’ செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது. பாத்ருமில் ஷவரில் குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பாத்ருமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் `டிஸ்யூ பேப்பருக்கு’ பதிலாக துண்டையே பயன்படுத்தலாம். `இங்க் கேட்ரிட்ஜ்’, `சிடிக்கள்’, `டிவிடிக்கள்’ போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்கள் பெரும்பாலானவை மறுபயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், `ஸ்பீக்கர்கள்’ போன்றவற்றுக்கும் இது பொருந்தும். துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் `வாஷிங் மெஷின்’ அல்லது `டிஷ் வாஷரை’ பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், `ஹாப் லோடு’ அல்லது `எகானமி செட்டிங்’கை அமைத்துக் கொள்ளுங்கள். `ஏசி’ இருந்தால் அதன் `ஏர் பில்டரை’ மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள். எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் `பிளக்’கை மாட்டியே வைத்திருக்காதீர்கள். புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான `எனர்ஜி ஸ்டார் லேபிளை’ பார்த்து வாங்குங்கள். மின் சக்தியை அதிகமாகச் `சாப்பிடும்’ பழைய உபகரண ங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள். தண்ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப் பாருங்கள். எங்காவது தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே சரிசெய்யுங்கள்.

தூங்கினால்… ஜலதோஷம் வராது!

குடித்து வரும் வழக்கமான தண்ணீர் மாறுபட்டாலோ, சீதோஷ்ன நிலை சற்று மாறினாலே எளிதில் ஒட்டிக்கொள்வது ஜலதோஷம்தான். மாத்திரை சாப்பிடுவது, ஊசி போட்டுக்கொள்வது, `ஆவி’ பிடிப்பது என்று இதை விரட்ட ஒரு போராட்டமே நடத்துகிறோம்.

அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்களோ, இது சாதாரண விஷயம் என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஜலதோஷம் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலே போதும். தும்மலும் வராது. அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு தகுந்த நிவாரணமும் பெறலாம் என்கிறார்கள் அவர்கள்.

அதேநேரம், தினமும் 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவோருக்கு ஜலதோஷம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.