கோடை வெயிலின் பாதிப்பு நீங்க

கோடை பிறந்து விட்டாலே கொதிக்கும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக்காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பலர் பூங்கா, கடற்கரை என நிழல்தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர்.

இந்த கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனைதான். இந்த ஆண்டு மின்சார வெட்டு அதிகம் இருக்குமென்று இப்போதே பயமுறுத்த ஆரம்பித்து விட்டனர். கோடைக் காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது பலர் அலுவலகங்களிலம், வீடுகளிலும் குளிர் சாதன வசதி செய்துள்ளனர். போக்குவரத்து வாகனங்களிலும் குளிர்சாதன வசதிகள் உள்ளன. இதனால் சிலர் கோடையின் பாதிப்பு நமக்கு ஏற்படாது என்று நினைக்கின்றனர். அது தவறு கோடைக் காலத்தில் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப உடலானது தனது தகவமைப்பை மாற்றிக் கொள்ளும். இக் காலங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதாலும் பலர் பலவிதமான புதிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து வெளியேறும் போது உடலை வெளியில் உள்ள உஷ்ணம் திடீரென்று பாதிக்க ஆரம்பிக்கும். இப்படி கோடைக்காலத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட இயற்கையான வழியே சிறந்ததாகும்.

கோடைக்காலத்தில் உண்டாகும் நோய்கள்

கோடை வெயிலின் தாக்கத்தால் உடல் சூடேறி இரத்தம் உஷ்ணமாகி உடம்பில் பித்த நீர் அதிகமாவதால் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது .

தோலில் உள்ள உப்பு சத்து திடீரென்று உறைந்து விடுவதால் தோலுக்கு கீழே படிந்து கட்டியாக மாறும். சில நேரங்களில் சிறு சிறு கொப்புளங்களாக மாறிவிடும். பொதுவாக கை அக்குள் பகுதிகள், தோள்பட்டை, முகத்தில் மூக்குப் பகுதியிலும் சுண்டு விரலிலும், வயிற்றுப் பகுதியிலும் மேலும் உடற்கூறுக்கு தகுந்தவாறு உடலில் வெளிப்படுத்தும். சில சமயங்களில் வேணல் கட்டி கொப்புளங்களாக மாறும்.

வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த நீரை உடனே அருந்துவதால் தொண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு வறட்டு இருமல் உண்டாகும்.

குடிக்கும் நீரில் மாசுக்கள் இருந்தால் அவை தலைவலி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், இளைப்பு, ஜியார்டியாசிஸ், அமீபியாசிஸ் போன்ற நோய்கள் தோன்றி அடிக்கடி வயிற்றுவலி, வயிற்றோட்டம், பசியின்மை ஏற்படும். அதுபோன்று கோடை வெப்பத்தினால் கண் ஒவ்வாமை உண்டாகி, வெள்ளை நீர் கோர்த்து ஜவ்வு போல் கண் இமைகளைத் திறக்க விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கும்.

வயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு நோயாளிகள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் வெயிலில் அலையக் கூடாது.

சின்னம்மை நோயை, கொசுக்கடி என்று கவனிக்காமல் அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

சொறி, சிரங்கு போன்றவற்றிலிருந்து நீர் வடிந்து அதில் உள்ள கிருமிகளால் மற்ற இடங்களுக்கும் பரவும். இந்தக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அது சிறுநீரகத்தைப் பாதித்துவிடும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு கணுக்கால்களுக்கு மேல் பகுதியில் அக்கிகள் உண்டாகி அரிப்பு ஏற்பட்டு நீர் கசியும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகும். மேலும் வலியோடு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பிறப்புறுப்புகளில் புண்கள் உண்டாகும்.

கோடை வெயிலின் பாதிப்பு நீங்க

· கோடை காலத்தில் அதிகம் நீர் அருந்துவது நல்லது. அதிக நீரை குடிக்கும் போது உடலில் ஏற்படும் உஷ்ணம் தணியும் .

· நீரை கொதிக்கவைத்து அருந்துவது சாலச் சிறந்தது. குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

· மண் பானை நீர் மிகவும் நல்லது . தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் நீரைப் பருகலாம்.

· முடிந்தவரை ஐஸ்கட்டி கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· தர்பூசணி, இளநீர், நீர் பெருக்கிய மோர் அருந்துவது மிகவும் நல்லது . பனை நுங்கு சிறந்தது.

· வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடலாம்.

· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது .

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை இலேசாக கொதிக்க வைத்து அதில் சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக காய்ச்சி, சிவந்து வரும் பதத்தில் இறக்கி ஆறவைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாக தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கால் நகங்களில் அதிக எண்ணெய் விடுவது நல்லது. இவ்வாறு செய்து குளித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், உடல் உறுப்புகளும் சீராக செயல்படும். இரத்தத்தில் உள்ள பித்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

அக்கியால் பாதிக்கப்பட்டவர்கள்

சந்தனத் தூள்

கோரைக் கிழங்கு

சிவப்பு சந்தனம் அகியவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து அக்கியின் மேல் பூசினால் அக்கி குணமாகி கரும்புள்ளிகளும் மாறும். அக்கியை எக்காரணம் கொண்டு நகங்களால் கீறக் கூடாது.

வெண்பூசனி சாறு – 100 மி.லி.

வெள்ளரிச் சாறு – 100 மி.லி.

சோற்றுக் கற்றாழை சாறு – 100 மி.லி.

எடுத்து அதில் 1 ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து கலக்கி உடலெங்கும் பூசி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அக்கி, வேணல் கட்டி ஏற்படாது.

· ஊமத்தை இலையை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்து அரைத்து அதை எருமை வெண்ணெயில் குழைத்து அக்கிமேல் பூசி வந்தால் அக்கி குணமாகி புண்கள் எளிதில் ஆறும்.

உடல் சூடு தணிய

மணத்தக்காளி கீரை – 1கைப்பிடி

கொத்துமல்லிக் கீரை – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – 1 கைப்பிடி

சின்ன வெங்காயம் – 4

சிரகம் – 1 தேக்கரண்டி

பூண்டு பல் – 4

மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

குறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளின் உடல் சூடு தணிவதற்கு வெள்ளரி ஜுஸ் மிகவும் நல்லது.

சாலடாகவும் சாப்பிடலாம். நல்லமிளகு பொடி சின்னவெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடுவது நல்லது.

தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு காலையிலும், மாலையிலும் பழங்கள் கொடுப்பது நல்லது.

பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பால் குடிக்காத குழந்தைகளுக்கு மேலே சொன்ன மணத்தக்காளி கீரை சூப் கொடுப்பது நல்லது.

தினமும் இருவேளை குளிக்க வேண்டும். அதிக வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளையோ, குளிர்பானங்களையோ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலும் நடுப்பகல் அதாவது உச்சி வேளையில் வெயிலில் அலைவதை தவிர்ப்பது நல்லது.

இரவு படுக்கைக்கு செல்லும்முன் சந்தனத் தூளை நிரில் குழைத்து உடலெங்கும் பூசினால் வியர்க்குரு, வியர்வை நாற்றம் நீங்கும்.

அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போது கொதிக்க வைத்த நீர், மோர் இவற்றை கையில் எடுத்துச் செல்வது நல்லது.

பருத்தியினால் ஆன ஆடைகளை அணிவது நல்லது. வெயிலினை உள்வாங்கும் நிறங்கொண்ட வண்ண உடைகளை தவிர்க்க வேண்டும்.

இத்தகைய நடைமுறைகளை கடைப் பிடித்தாலே கோடை வெப்பத்தின் பாதிப்பை தடுக்கலாம்.

One response

  1. This is very usefull…..

%d bloggers like this: