Daily Archives: மே 3rd, 2010

யு-ட்யூப் ஐந்தாவது ஆண்டு விழா

இன்று வீடியோக்களுக்கென தனித் தளமாய் அனைவரின் விருப்ப தளமாக இயங்குவது யு–ட்யூப். இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகப் பதிவு செய்து, தங்களின் வீடியோ காட்சியைப் பதிவு செய்து, உலகம் அறியத்தரலாம்; அல்லது தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பார்க்கத் தரலாம். முதல் முதலில், இதில் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர் யு–ட்யூப் தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவர் கரிம் என்பவர். ‘Me at the Zoo’ என்ற 19 விநாடிகள் ஓடும் வீடியோ பைல் ஒன்றை இந்த தளத்தில் ஏப்ரல் 23 அன்று பதிந்தார். சென்ற வாரம் இதன் ஐந்தாவது ஆண்டுவிழா நிறைவேறியது. தான் சாண்டியாகோ விலங்கியல் பூங்கா சென்று வந்த நிகழ்வினைப் படமாக எடுத்து இத்தளத்தில் பதிந்து, இத்தளத்தின் முதல் பயனாளராகவும் மாறினார். இதன் பின் பல லட்சக்கணக்கான வீடியோ பைல்கள் இதில் பதியப்பட்டு, இன்று பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது யு–ட்யூப் தளம். திரைப்படங்கள் தயாரிப்பவர்கள் கூட இதில் தங்கள் பட பைல்களைப் பதிந்து, இலவசமாகவும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையிலும் தர முன்வந்துள்ளனர். யு–ட்யூப் தளமும் அண்மையில் அமெரிக்கா நாட்டில் மட்டும், கட்டணம் செலுத்தி வீடியோ பைல்களை வாடகைக்கு விடும் திட்டத்தினை இந்த தளத்தில் ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து அனைத்து நாட்டிற்கும் இது விரிவாக்கம் செய்யப்படுமானால், தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் கூட்டம் குறையலாம். ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய யு–ட்யூப் தளத்திற்கு நாமும் வாழ்த்துக்களைக் கூறுவோம்.

நினைவுதிறன் அதிகரிக்க-உளுந்து

உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

உளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.

உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.

விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்.

கோடையில் தொடரும் கடா முடா சப்தம் -வலம்புரிக்காய் மூலிகை கட்டுரை

கோடையில் வெயிலின் தீவிரம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தின் வெப்பநிலை கூடும்பொழுது பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் பல்கி பெருகும். இதனால்தான் சமைத்த உணவும், அரைத்த மாவு புளிக்க ஆரம்பிக்கின்றன.
உணவகங்களில் விற்கும் உணவுகள், பொட்டல உணவுகள், பழைய உணவுகள், நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத தண்ணீர் ஆகியவற்றை கோடையில் உட்கொள்பவர்கள் பலவித வயிற்று உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சாலையோரங்களில் விற்கப்படும் மோர், கூழ், குளிர்பானங்கள், பழச்சாறுகள், பழங்கள், திண்பண்டங்கள் போன்ற சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் வயிறு பல பிரச்னைகளை சந்திக்கிறது.
கோடையில் சாலையோர உணவுகள், உணவகங்களில் விற்கப்படும் பொட்டல உணவுகளை தவிர்க்க வேண்டும். தேங்காய், பருப்பு, நெய், டால்டா, வெண்ணெய், மாமிச உணவுகள் போன்றவற்றால் தயாரான உணவு உண்ண தாமதம் ஏற்படும்பொழுது புளித்து, உண்பவர்களின் வயிற்றையும் கெடுத்துவிடுகிறது. அதுமட்டுமின்றி துரித உணவுகள், ஜங்க் உணவுகள் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுவதால் அவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் வெயிலினால் கெட்டுப்போய், செரிமானத்தன்மையை மாற்றி, என்சைம்களின் செயல்பாட்டைக் குறைத்து, கழிச்சலை உண்டுபண்ணுகின்றன. கோடையில் சமைத்த உணவை தாமதம் செய்யாமல் உடனே சாப்பிட வேண்டும். பொட்டல உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரயாணங்களின்போது வெளி உணவுகளை தவிர்த்து, பழங்களை உட்கொள்வது நல்லது.
கெட்டுப்போன உணவுகளால் ஏற்படும் வயிற்று உபாதைகளை நீக்கி, செரியாமை மற்றும் கழிச்சலை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை வலம்புரிக்காய். வலது பக்கம் திருகலாக இருப்பதால் வலம்புரிக்காய் என்றும், இடது பக்கம் திருகலாக இருப்பதால் இடம்புரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹெலிட்ரஸ்சோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஸ்டெர்குலியாசியே குடும்பத்தைச் சார்ந்த வலம்புரிக்காயில் குயினோலோன், மலாட்டையமின் போன்ற பொருட்கள் உள்ளன. இவை உணவு கெடுதியால் ஏற்பட்ட வயிற்று உபாதைகளை நீக்கி கழிச்சலை தடுக்கின்றன. ஆகையால்தான் யாகம், பெரும்பாலும் சித்திரை, வைகாசி மாதங்களில் மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களில் எரிக்கப்படும் வலம்புரிக்காய் மறைமுகமாக காற்று மண்டலத்தை சுத்தம் செய்து, காற்று மற்றும் நீர் மூலம் பரவும் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்து மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கிறது. இதுவே ஹோமங்களின் உண்மை நிலையாகும்.
வலம்புரிக்காயை உலர்த்தி, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராமளவு தேனுடன் குழப்பி சாப்பிட வயிற்று உபாதைகள் நீங்கும். கழிச்சல் கட்டுப்படும். வலம்புரிக்காயை ஒன்றிரண்டாக இடித்து, 500 மில்லி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 125 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு சாப்பிட கழிச்சல் நீங்கும். வயிற்றில் தோன்றிய கடா முடா சத்தம் குறையும்.

புற்று செல்களை கொல்லும் தாய்ப்பால்!

தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறியாததில்லை. தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட தாதுக்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை உடையவை என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் சத்துமிக்க ஆகாரம் என்பதோடு நோய் எதிர்ப்புத் தன்மை உடையது என்பதும் நாம் அறிந்ததே. தாய்ப்பாலில் இருக்கும் ஆல்பா லாக்டால்புமின் என்ற தாதுப்பொருள் புற்றுக்கட்டி களையும், புற்று செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. இதற்கு காம்லெட் என்று பெயரிட்டுள்ளனர். `ஹியூமன் ஆல்பாலேக்டால்புமின் மேடு லெத்தல் டூ டியூமர்’ என்பதன் சுருக்கம்தான் `காம்லெட்’.

ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பாலில் உள்ள தாதுப்பொருளை புற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் புற்று செல்கள் அழிக்கப்பட்டு சிறுநீருடன் வெளித்தள்ளப்படுகிறது. இதனால் புற்றுநோய் தீவிரம் குறைகிறது. ஆனால் புதிதாக புற்றுநோய் தாக்குதல் ஏற்படும்போது இந்த தாதுக்கள் உடலை பாதுகாப்பது இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது தற்காலிகமாக நிகழ்ந்த கண்டுபிடிப்பாகும். தாய்ப்பாலில் பாக்டீரியா எதிர்ப்பொருள் இருக்கிறதா என்ற நோக்கில்தான் ஆய்வு நடத்தப்பட்டது. இடையில் 40 வகையான புற்று செல்களை அழிக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

துணுக்கு செய்திகள்

விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்!
புகாடி நிறுவனம் தயாரித்துள்ள, ‘விரான்’ என்ற கார் தான், உலகில் மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார். இந்த காரின் சிறப்பம்சம், விலை மட்டுமல்ல… உலகில் மிகவும் அதிவேகமாக செல்லும் கார் என்பதும் தான். மணிக்கு 370 கி.மீ., வேகத்தில் பறக்கும் இந்த கார், வடிவமைப்பிலும் மிக நவீனமானது. 1001 குதிரை சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த காரின் விலை என்ன தெரியுமா? ஒன்பது கோடி ரூபாய். இவ்வளவு விலை கொடுத்தாலும், இந்த காரை வாங்க முடியாது. காரணம், இந்த வகையில் ஒரே ஒரு கார் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
* * *

தொடர்ந்து 29 ஆண்டாக 50 லட்சம் ரூபாய்!
உலகில் மெகா கோடீஸ்வரர், தொழிலதிபர், வாரிக் கொடுக்கும் வள்ளல் என்று பல முகங்களை கொண்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பபெட். பல தொழில்களை செய்து வரும் இவரது, ‘பெர்க்ஷயர் ஹாத்வே இன்கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தின் மொத்த வர்த்தக முதலீடு ஒரு லட்சம் கோடி ரூபாய்.
பபெட் தான் உரிமையாளர் என்றாலும், பங்குகளை எல்லாம் தன்னிடமே வைத்துக் கொள்ளவில்லை. அவரும், சம்பளம் வாங்கும் கம்பெனி தலைவர் தான். அவருக்கு 29 ஆண்டாக ஒரே அளவில் தான் சம்பளம். ஆம்… ஆண்டு சம்பளம் 50 லட்சம் ரூபாய். மற்ற செலவுகள் எது செய்தாலும், அதை கம்பெனி ஏற்பதில்லை. இதை விட குறிப்பிடத்தக்க விஷயம், அலுவலகப் பணி முடிந்ததும், கம்பெனி காரை அங்கேயே விட்டு விடுவார்; தன் சொந்த காரை தான் அதன் பின் பயன்படுத்துவார்.
* * *
மின்சார சைக்கிளை, ‘சார்ஜ்’ செய்ய… சோலார் பார்க்கிங்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பிரபல எலக்ட்ரானிக் நிறுவனம், ‘சான்யோ’ புதுமையான முறையில், ‘சோலார் பார்க்கிங்’ மையத்தை அமைத்துள்ளது. இதில், மின்சாரத்தில் இயங்கும் 100 சைக்கிள்களை நிறுத்தும் வசதி உள்ளது.
‘பார்க்கிங்’கில் நிறுத்தி விட்டுச் சென்றால், சைக்கிள் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார பேட்டரி, ‘சார்ஜ்’ ஆகி விடும். சான்யோ நிறுவன தயாரிப்பான மின்சார சைக்கிள் வாங்கிய வாடிக்கையாளர் களுக்காக இந்த, ‘பார்க்கிங்’ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் ஏறி ஒரு முறை, ‘பெடல்’ செய்தால் போதும், பேட்டரி இயங்கி சைக்கிளை மிதிக்காமலேயே ஓட்டலாம்.
* * *

அப்பார்ட்மென்ட் கல்லறை!
மனிதர்கள் வாழும் போது வசிக்கத்தான், ‘அப்பார்ட்மென்ட்’ (பல மாடிக் குடியிருப்பு) என்பதல்ல; இறந்த பின்னும் கூட பல மாடிக் குடியிருப்பு போல கல்லறையை கட்டலாம் என்று பீகார் கத்தோலிக்க கல்லறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, பெட்டையா என்ற இடத்தில் பல அடுக்கு கல்லறை கட்டப்பட்டுள்ளது. இடப் பிரச்னையை தீர்க்கவே, இப்படி கட்ட முடிவு செய்ததாக நிர்வாகம் கூறியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இது போல, ‘அப்பார்ட்மென்ட்’ கல்லறைகள் கட்டப்படும் என்றும் கத்தோலிக்க நிர்வாகிகள் கூறினர். ஹூம்… மனிதர்கள் உயிருடன் இருக்கும் போது தான் இடமில்லை; போன பின்பும் கூட இடப்பற்றாக்குறை வந்துவிட்டது.
* * *
மீண்டும், ‘ரிங்கு’க்கு வருகிறார் மைக் டைசன்!
உலக குத்துச்சண்டை சேம்பியன் மைக் டைசன். எந்த நாட்டிலும், இவரை, ‘பாக்சிங் ரிங்’கில் அடித்துக் கொள்ள ஆளில்லை; அந்த பெருமை எல்லாம் 2005ல், கெவின் மெக் ப்ரைடுடன் மோதி தோற்றதுடன் போய் விட்டது.
இன்னொரு உலக சேம்பியனான இவான் ஹோலிபீல்டுடன் ஏற்கனவே இரு முறை மோதிய டைசன், அவரின் காதை கடித்ததால், சர்ச்சையிலும் சிக்கினார். ஐந்தாண்டுக்கு பின், மீண்டும் போட்டியில் பங்கேற்க தயாராகிவிட்டார். 43 வயதான டைசன், போட்டிகளில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பதால், அவரை வைத்து போட்டிகளை நடத்த பிரபல போட்டி அமைப்பாளர் டான் கிங் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
‘மீண்டும் ஹோலிபீல்டுடன் டைசன் மோதுவாரா?’ என்று கேட்டதற்கு, ‘அதை உறுதிப்படுத்த முடியாது; ஆனால், வேறு சிலருடன் அவர் மோதுவார்…’ என்று சொன்னார் கிங்.
* * *

சியர்ஸ்’ நாடுகள் பட்டியலில் இந்தியா நெம்பர் 10!
‘சியர்ஸ்’ சொல்லி குடிக்கும் மது வகையான ஒயின் குடிப்பதில், இந்தியா படுவேகத்தில் முன்னேறி வருகிறது. கடந்தாண்டு ஆரம்பித்து, 2013 வரை உள்ள காலகட்டத்தை கணக்கில் கொண்டு, ‘ஒயின் குடிப்பதில் பத்து நாடுகள் வரிசையில் இந்தியா நுழைந்து விடும்!’ என்று, ‘இன்டர்நேஷனல் ஒயின் அண்ட் ஸ்பிரிட்ஸ் ரெகார்ட்ஸ்’ அமைப்பு மேற்கொண்ட சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இந்த வகையில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அடுத்து வரிசையாக சீனா (ஹாங்காங் சேர்த்து), கனடா, ரஷ்யா, பிரேசில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவீடன் ஆகியவை உள்ளன. பத்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.
வரும் 2013ம் ஆண்டுக்குள் இந்தியாவில், ‘குடி’மகன்கள் ஒன்பது லிட்டர் மது கொண்ட, 148 கோடி கேஸ்கள் வரை குடித்திருப்பர் என்று சர்வேயில் கணிக்கப்பட்டுள்ளது.

வெறிநாய் கடி விபரீதம்…

இப்படி நடந்துகொண்டால் மிருகத்துக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் பார்த்து பலர் இவ்வாறு கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

மிருகங்களைப் பார்த்து இந்த அளவு பயப்படும் மனிதர்கள், நாயை மட்டும் செல்லப் பிராணியாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுதான் இன்றுவரை தொடரும் வியப்பு. நன்றியுணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகவும், அதனைக் கூறி பெருமிதப் படுகிறார்கள்.

ஆனால், அந்த நாய்களுக்கு வெறிபிடித்து விட்டால் அவையே மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறுகின்றன.

நாய்களுக்கு வெறி பிடித்தால்..?

வெறிநாய் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தள்ளியிருக்கும். எச்சில் ஒழுகும். இதர நாய்கள் அந்த வெறிநாயைக் கடிக்காது. அந்த நாய்தான் எதிரில் தென்படும் மனிதன், ஆடு, மாடு, என எதைவும் விட்டுவைக்காமல் கடிக்கும். இதே நிலைதான் வெறி நாய் கடித்து நோய் பரவிய மற்ற உயிர்களுக்கும் ஏற்படும். அந்த வெறிநாய் போலவே அலைந்து திரிந்து மற்றவர்களைக் கடிக்கும்.

வெறிநாய் கடித்த ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை கூட எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. பின்னர் 90 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த கொடூரமான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அப்போது சிகிச்சை அளிப்பதற்கான காலம் தாண்டி, சித்திரவதைப் பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

வாயில் எச்சில் ஒழுக, நாயைப் போலவே இரைத்து, குரைத்து, தண்ணீரைக் கண்டால் அலறித்துடித்து, இறுதியில் வெறி கொண்ட நாயாகவே மாறி இறக்கும் கொடூரம் எந்த மனிதனுக்கும் நேரக்கூடாத ஒன்று.

ஆனால் இந்த கொடுமைகள் கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் கூட இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது தான் வேதனை.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் வெறிநாய் கடியால் இறந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயதுக் குட்பட்ட சிறுவர், சிறுமியர் என்பதுதான் பரிதாபம்.

சாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி?

கோடைக்கால கடும் வெயிலில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வெறிபிடிக்கும்.

தற்போது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிராய்லர் கோழிக்கழிவுகளை உட்கொள்ளும் நாய்களுக்கு வெறிபிடிப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த கழிவுகள் எந்தப் பாதுகாப்பும் இன்றி பல இடங்களில் கொட்டப்படுகின்றன. பராமரிப்பின்றித் திரியும் தெருநாய்கள் இந்த கழிவுகளைத் தின்பதால், வெறித்தன்மை ஏற்படுகிறது. கோழிகளைச் சுத்தம் செய்யும்போது, அவற்றில் இருக்கும் நஞ்சுப் பகுதியை முதலில் அகற்றுவதைப் பார்த்திருக்கிறோம். இதில், ஆளைக் கொல்லும் கொடும் நச்சுத்தன்மை உள்ளது. கோழிக் கழிவுகளைத் தின்னும் நாய்கள் இவற்றையும் சேர்த்துத் உட்கொள்ளும் போது, அந்த நாய்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதாவது ரேபீஸ் ((Rabies) என்ற இந்த வைரஸ் அதனுடைய உடலுக்குள் சென்று பல்கிப் பெருகுகிறது. உமிழ்நீர் அதிகம் சுரக்க ஆரம்பிக்கிறது.

இந்த ரேபீஸ் நோயால் தாக்கப்பட்ட ஒரு நாய் மனிதனைக் கடிக்கும்போதோ காயம் உள்ள இடத்தில் அதன் உமிழ்நீர் படும்போதோ ரேபீஸ் என்ற கொடும் வியாதி மனிதனை தாக்குகிறது. நாய் கடித்த 30 – 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால் தடுப்பு முறையைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.

வெறிநாய் கடிக்கான தடுப்பூசி மருந்து அவ்வளவு மலிவானதல்ல என்பதுதான் இதில் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது.

ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களைச் சேர்ந்த வளரும் நாடுகளில்தான் வெறிநாய்க் கடியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தின் விலை 40 முதல் 49 அமெரிக்க டாலர் வரை செலவாகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..

ஆனால், இங்கு அதிக அளவில் வெறிநாய் கடிக்கு ஆளாவது கிராமப்புற ஏழை எளிய மக்கள்தான். இவர்களின் ஒருநாள் சராசரி வருமானம் 1 டாலருக்கும் குறைவுதான் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் 60 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருவதாகவும், நாளொன்றுக்கு அவர்களின் சராசரி வருமானம் 20 ரூபாய் மட்டுமே என்றும், நமது நாட்டின் மத்திய தணிக்கைக் குழுவின் ஆய்வு சொல்கிறது.

இந்த 60 சதவீத மக்கள்தான், அதிக அளவில் வெறிநாய்களிடம் கடிபட்டு, முறையான சிகிச்சை யின்றி, கோரமான நிலைக்கு ஆளாகி தங்களின் உயிரை இழக்கிறார்கள்.

இவ்வளவு பயங்கரத்தையும், கொடூரத்தையும் விளைவிக்கும் வெறிநாய்களைக் கொல்வதற்கு, விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் தடையாக இருப்பதாக கூறப்படுவதுதான் இங்கு விந்தையான வேதனை.

முன்பெல்லாம், நகராட்சிகளில் மட்டுமின்றி, ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் கூட தொல்லை தரும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களைப் பிடித்துச் செல்லும் நடைமுறை இருந்தது. தெருநாய்களைப் பிடித்துச் சென்று அவற்றின் இனவிருத்தியைத் தடுப்பதற்கான அறுவை சிகிச்சைகளும் கூட செய்யப்படுவதுண்டு. ஆனால் தற்போது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி, எந்த விலங்குகளையும் பிடிக்கவோ கொல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

மனிதர்களைக் கொன்றுவிட்டு, வெறிபிடித்த விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லாது என்பதே உண்மை. ஏனென்றால், அந்த சட்டத்தை உருவாக்கியது மனிதர்கள்தானே!

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏழை மனிதர்களையும், குழந்தைகளையும் குறி வைத்து குதறும் வெறிநாய்களை ஒழித்துக்கட்ட அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

வெறிநாய்க் கடி குறித்து சில விழிப்புணர்வுக் குறிப்புகள்

வெறிநாய் கடிக்கும்போது மேல் தோல் கிழியாவிட்டால் மேல் தோலுக்கு கீழாக காணப்படும் தசை, டெண்டான் (தசைநார்), லிகாமெண்ட் (தசையை எலும்புகளோடு இணைக்கும் தசைநார்), எலும்புகள் மற்றும் நரம்புகள் போன்ற உறுப்பகள் நசுங்குதல் மற்றும் கிழியக்கூடிய நிலைமைகள் ஏற்படலாம். ஒருவேளை கடிக்கும்போது மேல் தோல் கிழிந்தாலும் மேற்கூறிய நிலைமைகளுடன் வெறி நோய் தொற்றக்கூடும்.

நோய் தொற்றியதற்கான அடையாளங்கள்

· காயத்தைச் சுற்றிலும் வெதுவெதுப்பாக இருத்தல்.

· காயத்தைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுதல்

· வலி தோன்றுதல்

· சீழ் வெளியேறுதல்

· காயத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமாக காணப்படுதல்

· நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் (நெறிகட்டுதல்)

· காய்ச்சல்

· விரல்களை நீட்டவோ அல்லது மடக்கவோ இயலாமை.

· விரல் நுனிகளில் உணர்வுகள் இழத்தல்,

·மேற்கண்ட அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி

மேலான காயங்கள்

மேலான காயங்களை சோப்பு போட்டு சுடுநீரால் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அல்லது ஹைட்ரஜன் பெர்ராக்ஸைடு, ஆல்கஹால், டெட்டால் எனப்படும் கிருமி நாசினியைக் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து அல்லது பூசும் களிம்பினை வைத்து ஒட்டும் தன்மை இல்லாத கட்டுப் போடும் துணியைக் கொண்டு காயத்தை மூட வேண்டும். காயம் பட்ட இடத்திலுள்ள நரம்புகள் மற்றும் தசை நார்களில் சிதைவு ஏற்பட்ட தற்கான அடையாளங்கள் உள்ளனவா என கவனமாக பார்த்தறிய வேண்டும். சில சமயம் உள்காயம் அல்லது ஊமைக் காயங்கள் ஏற்படும். கடிபட்ட இடம் அல்லது காயம் 10 நாட்களுக்குள் குணமாக வேண்டும். அப்படி ஆறாத பட்சத்தில் அல்லது நோய் தொற்று தலுக்கான அறி குறியோ நரம்பு மற்றும் தசை நார் சிதைவோ காணப் படின் கண்டிப்பாக மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

இரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருப்பின் அந்த இடத்தை சுத்தமாக நன்கு உலர்ந்த துணியினைக் கொண்டு நேரடியான அழுத்தத்தை செலுத்தி அந்த இடம் மற்ற பகுதிகளை விட உயர எழும்பச் செய்ய வேண்டும். அந்த இடத்தில் இரத்தக் கசிவு ஏற்படவில்லையெனில், அந்த இடத்தை சுத்தம் செய்ய தேவையில்லை. காயத்தை நோய் தன்மையை உண்டுபண்ணாத பாதுகாப்பான சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மற்றும் மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

ராபீஸ் எப்படி பரவுகிறது.

ராபீஸ் வைரஸினால் பாதிக்கப்பட்ட விலங்கினம் ஒருவரை நாக்கினால் நக்குவதினால் அல்லது கடிப்பதினால் கடிபட்ட நபருக்குப் பரவுகிறது.

அனைத்து வெப்ப ரத்தப் பிராணிகளும் ராபீஸ் வைரஸினால் பாதிக்கப் படக்கூடும். மேலும் இந்நோயினைப் பரப்பவும் செய்யும்.

கடிபட்ட பகுதியில் ராபீஸ் வைரஸ் படிந்தவுடன், தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அப்படிப்பட்ட காரணிகளாவன.

· கடிபட்ட இடம்

· கடிபட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு

· வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை

· கடிபட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை

மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

ஏன் ரேபீஸ் எப்போதும் மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது?

பொதுவாக ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர் தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.

ரேபீஸ் வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்ன?

ராபிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று. எனவே கீழ்காணும் வழிமுறைகளை கடைப்பிடித்து அவசியம் தடுக்க வேண்டும்.

வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் நாய்க்கு ரேபீஸ் தடுப்பு ஊசியை கட்டாயம் போட வேண்டும். மேலும் வீட்டு நாய் தெரு நாய்களுடன் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்ந்தும், எல்லோரையும் கடித்துக்கொண்டும், சாப்பிடாமலும் இருந்தால் அதனை கட்டிப்போட வேண்டும். கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் அந்த நாய் இறந்துவிட்டால் ரேபீஸ் நோய்க்கான தடுப்பூசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

தெருநாய் கடித்தாலும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நாய் கடித்தால் அது வெறிநாயா இல்லையா என்பதை கண்டறிவது மிகவும் கடினம். அதனால் வெறிநாய் கடியிலிருந்து தப்ப தெருநாய்களை ஒழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. மனித உயிர் வெறிநாய் கடித்து சித்திரவதைப்பட்டு இறப்பதைத் தவிர்க்க சுற்றித் திரியும் தெருநாய்களை ஒழித்தே ஆகவேண்டும்.

கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? (ஆன்மிகம்)

மனிதனை உயர்த்திக் காட்டுவது அருட்செல்வமும், பொருட்செல்வமும் தான். பொருட்செல்வம் என்பது ஐஸ்வர்யம்; அருட்செல்வம் என்பது தெய்வத்தின் அருள் அல்லது சிற்சில தேவதைகளின் அருள். இந்த இரண்டு செல்வங்களும் ஒருவனிடம் அமையும்போது, இவைகளுக்கு இவன் தர்மகர்த்தா போன்றவன்.
எதற்கெல்லாம் செலவிடலாம் என்று யோசித்து, அளவோடுதான் செலவு செய்ய வேண்டும். ஐஸ்வர்யம் செலவு செய்யச் செய்ய, திரும்பவும் நிரம்பப் பெறுவதற்காகவே அறிவும், பலமும் பயன்பட வேண்டும். அறிவும், பலமும் பிறரை ஏமாற்றவோ, அடித்துத் துன்புறுத்தவோ அளிக்கப்பட்டதல்ல; இவைகளை தான் மட்டுமே சம்பாதித்து, தனக்கே சொந்தம் என்று, உரிமை கொண்டாடவும் கூடாது.
அருட்செல்வம் என்பதும் அப்படித்தான். தவசிகளிடம் வந்தடையும் சித்திகளைக் கூட, அவர்கள் தர்மகர்த்தா முறையில்தான் கையாள வேண்டும் என்றனர். இப்படிப்பட்ட சித்திகளை அவர்கள் தனி ஒருவராக, யாருடைய கூட்டும் இன்றி, பசி, தாகம், சோர்வு, தூக்கமின்றி தன்னையே வருத்தி அடைந்தனர்.
ஆனாலும், இந்த சித்திகளை தன்னுடையது என்றோ அல்லது அவைகளுக்கு தானே எஜமானன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. இதை பிற ருக்குத் தேவையான போது அளவுடன் செலவிடுவதற்காகத் தான் கிடைத்தது என்று எண்ணுவர்.
யாருக்கு உண்மையாகக் குறை தீர வேண்டுமோ, சத்தியத்தின் அடிப்படையில் தகுதி உண்டோ, அவர்களுக்கு மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் பயன்படுத்துவரே தவிர, ‘நான் பெரிய சித்தர், எல்லாமே என் சொல்படி நடக்கும்…’ என்று விளம்பரம் செய்வதில்லை.
எவ்வளவு பெரிய பண மூட்டையானாலும், அவனுக்கு வந்துள்ள கன்ம நோயை, அவனது குணத்தின் தரத்துக்குத் தக்கபடி, அந்நோயை தீர்த்தோ, குறைத்தோ உதவுவர்.
தனக்கு எல்லா தேவதைகளும் அடக்கம்தான்; எது சொன்னாலும் நடக்கும் என்று அகம்பாவம் கொண்டு, மக்களை மயக்கி அல்லது ஏமாற்றி, பொருள் சேர்க்கும் சிலரும் உண்டு. இதே போன்ற மற்றொரு அரைகுறை சித்த புருஷனைக் காணும் போது, ‘யார் பெரியவன்…’ என்ற சர்ச்சையும், சண்டையும் மூளுவதுண்டு.
இவனுக்கு உதவி செய்து வந்த தேவதைகள், இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காகவே எதிர்பார்த்திருந்து, அந்த சமயமே இவனைக் கைவிட்டுப் போய்விடும். அதன் பிறகு இவன் என்ன தான் கூச்சல் போட்டாலும், பிரயோஜனப்படாது.
அதனால், உண்மையான சித்த புருஷர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; ஆடம்பர, அதிகாரம் இல்லாமல், எளிமையுடன் இருந்து உதவி செய்வர். மற்றவர்கள், கிடைத்துள்ள சித்தியை பணம் பண்ணவும், புகழ் பெறவும் பயன்படுத்தி, கடைசியில் வீழ்ச்சியடைவர்!