Advertisements

துணுக்கு செய்திகள்

விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்!
புகாடி நிறுவனம் தயாரித்துள்ள, ‘விரான்’ என்ற கார் தான், உலகில் மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார். இந்த காரின் சிறப்பம்சம், விலை மட்டுமல்ல… உலகில் மிகவும் அதிவேகமாக செல்லும் கார் என்பதும் தான். மணிக்கு 370 கி.மீ., வேகத்தில் பறக்கும் இந்த கார், வடிவமைப்பிலும் மிக நவீனமானது. 1001 குதிரை சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த காரின் விலை என்ன தெரியுமா? ஒன்பது கோடி ரூபாய். இவ்வளவு விலை கொடுத்தாலும், இந்த காரை வாங்க முடியாது. காரணம், இந்த வகையில் ஒரே ஒரு கார் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
* * *

தொடர்ந்து 29 ஆண்டாக 50 லட்சம் ரூபாய்!
உலகில் மெகா கோடீஸ்வரர், தொழிலதிபர், வாரிக் கொடுக்கும் வள்ளல் என்று பல முகங்களை கொண்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பபெட். பல தொழில்களை செய்து வரும் இவரது, ‘பெர்க்ஷயர் ஹாத்வே இன்கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தின் மொத்த வர்த்தக முதலீடு ஒரு லட்சம் கோடி ரூபாய்.
பபெட் தான் உரிமையாளர் என்றாலும், பங்குகளை எல்லாம் தன்னிடமே வைத்துக் கொள்ளவில்லை. அவரும், சம்பளம் வாங்கும் கம்பெனி தலைவர் தான். அவருக்கு 29 ஆண்டாக ஒரே அளவில் தான் சம்பளம். ஆம்… ஆண்டு சம்பளம் 50 லட்சம் ரூபாய். மற்ற செலவுகள் எது செய்தாலும், அதை கம்பெனி ஏற்பதில்லை. இதை விட குறிப்பிடத்தக்க விஷயம், அலுவலகப் பணி முடிந்ததும், கம்பெனி காரை அங்கேயே விட்டு விடுவார்; தன் சொந்த காரை தான் அதன் பின் பயன்படுத்துவார்.
* * *
மின்சார சைக்கிளை, ‘சார்ஜ்’ செய்ய… சோலார் பார்க்கிங்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பிரபல எலக்ட்ரானிக் நிறுவனம், ‘சான்யோ’ புதுமையான முறையில், ‘சோலார் பார்க்கிங்’ மையத்தை அமைத்துள்ளது. இதில், மின்சாரத்தில் இயங்கும் 100 சைக்கிள்களை நிறுத்தும் வசதி உள்ளது.
‘பார்க்கிங்’கில் நிறுத்தி விட்டுச் சென்றால், சைக்கிள் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார பேட்டரி, ‘சார்ஜ்’ ஆகி விடும். சான்யோ நிறுவன தயாரிப்பான மின்சார சைக்கிள் வாங்கிய வாடிக்கையாளர் களுக்காக இந்த, ‘பார்க்கிங்’ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் ஏறி ஒரு முறை, ‘பெடல்’ செய்தால் போதும், பேட்டரி இயங்கி சைக்கிளை மிதிக்காமலேயே ஓட்டலாம்.
* * *

அப்பார்ட்மென்ட் கல்லறை!
மனிதர்கள் வாழும் போது வசிக்கத்தான், ‘அப்பார்ட்மென்ட்’ (பல மாடிக் குடியிருப்பு) என்பதல்ல; இறந்த பின்னும் கூட பல மாடிக் குடியிருப்பு போல கல்லறையை கட்டலாம் என்று பீகார் கத்தோலிக்க கல்லறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, பெட்டையா என்ற இடத்தில் பல அடுக்கு கல்லறை கட்டப்பட்டுள்ளது. இடப் பிரச்னையை தீர்க்கவே, இப்படி கட்ட முடிவு செய்ததாக நிர்வாகம் கூறியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இது போல, ‘அப்பார்ட்மென்ட்’ கல்லறைகள் கட்டப்படும் என்றும் கத்தோலிக்க நிர்வாகிகள் கூறினர். ஹூம்… மனிதர்கள் உயிருடன் இருக்கும் போது தான் இடமில்லை; போன பின்பும் கூட இடப்பற்றாக்குறை வந்துவிட்டது.
* * *
மீண்டும், ‘ரிங்கு’க்கு வருகிறார் மைக் டைசன்!
உலக குத்துச்சண்டை சேம்பியன் மைக் டைசன். எந்த நாட்டிலும், இவரை, ‘பாக்சிங் ரிங்’கில் அடித்துக் கொள்ள ஆளில்லை; அந்த பெருமை எல்லாம் 2005ல், கெவின் மெக் ப்ரைடுடன் மோதி தோற்றதுடன் போய் விட்டது.
இன்னொரு உலக சேம்பியனான இவான் ஹோலிபீல்டுடன் ஏற்கனவே இரு முறை மோதிய டைசன், அவரின் காதை கடித்ததால், சர்ச்சையிலும் சிக்கினார். ஐந்தாண்டுக்கு பின், மீண்டும் போட்டியில் பங்கேற்க தயாராகிவிட்டார். 43 வயதான டைசன், போட்டிகளில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பதால், அவரை வைத்து போட்டிகளை நடத்த பிரபல போட்டி அமைப்பாளர் டான் கிங் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
‘மீண்டும் ஹோலிபீல்டுடன் டைசன் மோதுவாரா?’ என்று கேட்டதற்கு, ‘அதை உறுதிப்படுத்த முடியாது; ஆனால், வேறு சிலருடன் அவர் மோதுவார்…’ என்று சொன்னார் கிங்.
* * *

சியர்ஸ்’ நாடுகள் பட்டியலில் இந்தியா நெம்பர் 10!
‘சியர்ஸ்’ சொல்லி குடிக்கும் மது வகையான ஒயின் குடிப்பதில், இந்தியா படுவேகத்தில் முன்னேறி வருகிறது. கடந்தாண்டு ஆரம்பித்து, 2013 வரை உள்ள காலகட்டத்தை கணக்கில் கொண்டு, ‘ஒயின் குடிப்பதில் பத்து நாடுகள் வரிசையில் இந்தியா நுழைந்து விடும்!’ என்று, ‘இன்டர்நேஷனல் ஒயின் அண்ட் ஸ்பிரிட்ஸ் ரெகார்ட்ஸ்’ அமைப்பு மேற்கொண்ட சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இந்த வகையில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அடுத்து வரிசையாக சீனா (ஹாங்காங் சேர்த்து), கனடா, ரஷ்யா, பிரேசில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவீடன் ஆகியவை உள்ளன. பத்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.
வரும் 2013ம் ஆண்டுக்குள் இந்தியாவில், ‘குடி’மகன்கள் ஒன்பது லிட்டர் மது கொண்ட, 148 கோடி கேஸ்கள் வரை குடித்திருப்பர் என்று சர்வேயில் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisements

One response

%d bloggers like this: