Advertisements

சர்க்கரை நோயால் வரும் இதய நோய்கள்


இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 40 சதவீதம் பேர், சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர்.
ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒருவர், 18 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோயாளியாக உள்ளார். திடீரென்று மாரடைப்பு ஏற் பட்டு, மருத்துவமனையில் இரண்டு வாரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவருக்கு, இதயத்தின் செயல்திறன் 40 சதவீதமாகக் குறைந்து விட்டது. மூச்சு இரைப்பு, படபடப்பு, நீர் சேர்ந்து விட்ட நிலை, வயிறு வீக்கம் ஏற்பட்டது. ஒரு மாதம் கழித்து, திரும்பவும் வேறு மருத்துவமனைக்கு சென்று, அதே வைத்தியம் செய்யப்பட்டது. ஓரளவு சரியானது; வீடு திரும்பினார்.
சில நாட்களில், அதே போல மூச்சு திணறல், படபடப்பு, வயிறு, ரத்தசோகை. ஹீமோகுளோபின் அளவு 9 சதவீதமாகக் குறைந்திருந்தது. இதய பம்ப் வேலை, 32 சதவீதம். திரும்பவும் மருத்துவமனையில் சேர்த்து சரி செய்ய வேண்டும்.
ஐ.சி.யு.,வில் அனுமதி, திரும்பவும் தீவிர சிகிச்சை முறை; இதனால் ஏகப்பட்ட பணம் செலவு. இந்த நிலை தொடர்ந்து கொண்டு இருக்கும். இதுபோல நோயாளிகள் வரும்போது மனம் வேதனையடைகிறது. காரணம், இது முழுமையாக குணமாக்க முடியாது. இதய தசைகள் செயலிழந்து, ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் 35 சதவீதத்திற்கு குறைவாகி விடுவது தான் காரணம்.
சர்க்கரை நோயால் வரும் இதய நோய்கள்
முதல் வகை: சர்க்கரையின் அளவு தாறுமாறாக ஏறி விடுவது. இந்த தாறுமாறான சர்க்கரை அளவு, எல்.டி.எல்., (டிரைகிளரிரைடு) என்ற கெட்டக் கொழுப்பாக மாற்றப்பட்டு, இரண்டு, மூன்று மி.மீட்டர் உள்ள குழாய்களில் ஒட்டி அடைப்பை ஏற்படுத்துகிறது. ஒரு ரத்தக் குழாயோ, பல ரத்தக் குழாய்களோ, இப்படி பாதிக்கப்படலாம்.
இரண்டாம் வகை: கண்ணுக்கு தெரியாமல் ஒரு மி.மீ.,க்கு குறைவாக மைக்ரான் அளவுள்ள (இந்த அளவு ரத்தக் குழாய்களை, மைக்ராஸ் கோப் மூலம் தான் பார்க்க முடியும்) குழாய்களில் அடைப்பு ஏற்படுவது. இந்த வியாதியை மைக்ரோ ஆஞ்சியோபதி என்பர். இதன் விளைவுகள் ஏராளம்.
மைக்ரோ ஆஞ்சியோபதியால் இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைக்காமல் இதயத் தசைகள் வலுவிழந்து, இதய வீக்கம் ஏற்படுத்தும். இதயத் தசை செயல் 40 சதவீதத்திற்கு குறைந்தால், நமது அன்றாட செயல் பாடுகள் நடத்தல், குளித்தல், சாப்பிடுவது போன்ற வேலைகள் கடினமாகிவிடும். இந்த இதயத் தசை அழிவதை தான், ‘டயபிடிக் கார்டியோ மையோபதி’ என்று அழைக்கிறோம். இந்த நிலை, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரே ஆண்டில் வந்து விடுவதில்லை. பல ஆண்டுகளாக உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி, இறுதி நிலைக்கு கொண்டு வருகிறது.
முதல் வகையால் ஏற்படும் அடைப்புகளை, ‘ஆஞ்சியோகிராம்’ செய்து கண்டு பிடித்து, ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ அல்லது ‘பை-பாஸ்’ செய்து சரி செய்யலாம்.
இரண்டாம் வகையான, ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ ஏற்படுவதால், முதலில் இதயத் தசை பாதிக்கப்படுகிறது. பிறகு கண், மூளை, சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் யார் யாருக்கு, இதய நோய் வரும்?
இதை எளிதில் கண்டறியலாம். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதம் ஒரு முறையாவது வெறும் வயிற்றிலும், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்தும், ரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு பரிசோதனை அளவுகளின் வித்தியாசம். 40க்கு மேல் இருந் தால், இதய நோய் வரலாம். உதாரணம், வெறும் வயிற்றில், பாஸ்டிங் சுகர் (Fasting suger) 90 சதவீதமும், போஸ் பிரான்டியல் (Post Prandial suger) அதாவது சாப்பிட்ட பின் சுகர் 160 சதவீதம் இருந்தால் வித்தியாசம் 40க்கு மேலாகிறது. இது இதய நோயை வரவழைக்கும். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இந்த வித்தியாசம், ஏன் அதிகமாகிறது?
நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைடிரேடு என்ற மாவு சத்து அதிகமாக இருந்தால், சாப்பிட்டவுடனே ரத்தத்தின் சர்க்கரை அளவு, ‘சுர்’ என ஏறி விடுகிறது. உதாரணம், இட்லி மாவில், அரிசி மூன்று பங்கும், உளுந்து ஒரு பங்கும் இருக்கும்.
இந்த இட்லியைச் சாப்பிடும்போது, உடலில் சர்க்கரை அளவு, மிதமாக ஏறும். ஓட்டல்களில் இதுபோல இருப்பதில்லை. ஐந்து பங்கு அரிசி, ஆறு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து போடுகின்றனர். தொட்டுக் கொள்வதற்கென போடப்படும் மசாலாக்களின் அளவும் வேறுபட்டு, வயிற்று கோளாறும் ஏற்படும்.
அரிசி, மைதா, கோதுமை ஆகியவற்றில், கார்போ ஹைடிரேடு அளவு மாறுபடுகிறது. மேலும், கிரைண்டரில் அரைத்த அரிசி மாவு, மிகவும் ‘நைசாக’ இருந்து, அதில் பலகாரம் செய்து சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும்.
மைதாவில் செய்த பரோட்டா சாப்பிட்ட உடனேயே, சர்க்கரை அளவு அதிகரித்து விடும். நன்கு குழைந்த அரிசி, பொங்கல் இவைகள் சாப்பிட்டவுடன், உடலில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும். சாப்பிட்டவுடன், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு கூட, சுகர் நிலையை தீர்மானிக்கும்.நாம் உட்கொள்ளும், சர்க்கரையை குறைக்கும் மருந்து பொதுவாக வேலை செய்தால், சுகர் அளவும் குறைந்து காணப்படும். மருந்தின் வேலையைப் பொறுத்து தான் சுகர் நிலை மாறுபடும். ஒருவருக்கு சுகரை குறைக்கும் மருந்து, மற்றவருக்கு சுகரின் அளவை குறைக்காது; ஏற்றும்.

பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்., இதய ஊடுருவல் வல்லுனர்

Advertisements

One response

  1. enn kanavarukku charkarai noi ullathu pinbu 2 natkalaka ithayam valikuradu how can save my husband
    please reply me immd

    thank you
    by Razia

%d bloggers like this: