Daily Archives: மே 5th, 2010

ஆன்லைன் பல்கலைகள்

நீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா? அல்லது திறந்த வெளி பல்கலைக் கழகம், அஞ்சல் வழியில் ஏதேனும் பட்ட வகுப்பில் சேர்ந்து பயில்கிறீர்களா? வீட்டிற்கு வந்த பின்னும், ஆசிரியர் ஒருவரின் வகுப்பறைப் பாடம் போல கேட்டு உங்கள் பாட அறிவை வளர்த்துக் கொள்ள ஆசையா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் Academic Earth. இந்த தளத்தில் பல பிரபலமான வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் ஆன் லைன் பாடத்திட்டங்களுக்கான வகுப்பறை ஆசிரியர் விளக்க உரைகள் தரப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களுக்கு மான வீடியோ உரைகள் உள்ளன. அப்படியே வகுப்பில் தரப்படும் காட்சியையும், வீடியோ பாடங்களையும் கண்டு, குறிப்பெடுக்கலாம். பாடங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், பின் அந்த பாடப் பிரிவின் கீழ் உள்ள துணைப் பாடப் பிரிவுகள் தரப்படுகின்றன. இங்கும் நமக்கு தேவைப்படும் பாடத்தைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள அனைத்து வீடியோக்களும், பாடக் குறிப்புடன் காட்டப்படுகின்றன. இந்த பல்கலைக் கழகங்கள் இவ்வாறு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது நமக்கும் பயனளிக்கிறது. இதன் பாடப்பிரிவுகள் எதனையும் விட்டு வைக்கவில்லை. அவை: Architecture, Astronomy, Biology, Chemistry, Computer Science, Economics, Engineering, Environmental Studies, History, International Relations, Law, Literature, Mathematics, Media Studies, Medicine, Philosophy, Physics, Psychology, , மற்றும் Religious Studies! இந்த வகுப்பறைகளில் உள்ள வெளிச்சத்தைக் குறைத்து வைத்து, ஆசிரியரின் கருத்துரை மீது நம் முழுக்கவனத்தையும் செலுத்தி கேட்கவும் வசதி தரப்பட்டுள்ளது.
ஆசிரியரின் விரிவுரையைக் கேட்டபின் அவருக்கு மார்க் போடும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. வீடியோ காட்சியின் மேலாகத் தரப்பட்டுள்ள A முதல் F வரையிலான ஸ்கேலைப் பயன்படுத்தி, இதற்கான மதிப்பெண்ணை வழங்கலாம்.
கற்றுக் கொள்ளவும், தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான தளம். ஒருமுறை சென்ற பின் தினந்தோறும் பல மணி நேரம் இதில் செலவிடுவீர்கள் என்பதுவும் உறுதி.
இந்த தளம் http://www.academicearth.org/ என்ற முகவரியில் இயங்குகிறது.

வெண்ணையின் கதை

பழங்காலத்தில் வெண்ணை பீப்பாய்களை ஈரமான, மென்மையான நிலத்தில் புதைத்து வைப்பது பல நாடுகளில் வழக்கமாக இருந்தது. வெண்ணையை பாதுகாக்கவும், அதன் சுவையைக் கூட்டவும் இவ்வாறு செய்தனர். அவ்வாறு புதைத்து வைக்கபட்ட 17-ம் நுற்றாண்டைச் சேர்ந்த வெண்ணையை தொல்லியல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பழங்காலத்தில் வெண்ணை தயாரிக்க, பாலை அகன்ற தட்டுகளில் ஊற்றி பல நாட்களுக்கு வைத்திருந்தனர். மிதந்து வந்த வெண்ணையைச் சேகரித்தனர்.

வெண்ணையுடன் ஒட்டியிருக்கும் தண்ணீர் நீக்கபட்டு, அது புளிப்படையும் வரை வைத்தி ருக்கபட்டது. அது பின்னர் கெட்டியாக, பயன்படுத்தத் தகுதியானதாக ஆனது.

இன்று பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறை களில் வெண்ணை தயாரிக்கபடுகிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பெரிய பீப்பாய்களில் பால் சேகரித்து வைக்க படுகிற து. அதிலிருந்து வெண்ணை உருவாகும்வரை அப்படியே விடப்படுகிறது. ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள், பை போன்ற வெள்ளாட்டுத் தோலில் பாலைக் கட்டி குச்சிகளில் தொங்கவிட்டு வெண்ணை தயாரிக்கின்றனர். இன்றும் நமது இந்தியக் கிராமங்களில் பெண்கள் தயிரைக் கடைந்து வெண்ணை எடுக்கிறார்கள்.

வெண்ணை… சில விஷயங்கள்! உலகிலேயே அதிகமாக வெண்ணை தயாரிக்கும் நாடு இந்தியாதான். `அராக்கிபுட்டிரோபோபியா’- உச்சரிப்பதற்குச் சற்றுச் சிரமமான இந்த வார்த்தை, `நிலக்கடலை வெண்ணை’யைச் சாப்பிட்டால் அது வாயின் மேலன்னத்தில் ஒட்டிக் கொள்ளும் என்ற பயத்தைக் குறிக்கிறது. 1869-ம் ஆண்டில் பிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி ஒருவர், வெண்ணைக்கு பதிலாக `மார்கரைன்’ என்ற பொருளை உருவாக்கினார். அதற்காக அவருக்கு பிரெஞ்சு பேரரசர் முன்றாம் நெப்போலியன் பரிசு வழங்கினார். பண்ணைகளில் இருந்து வெண்ணையைத் திருட சூனியக்காரிகள் பட்டாம் பூச்சியாக மாறியதாக ஒரு பழங்காலக் கதை கூறபடுகிறது. அதிலிருந்துதான் `பட்டர்பிளை’ என்ற வார்த்தை பிறந்தது. வெண்ணையானது அதில் உள்ள இயற்கை நிறமி `கரோட்டினின்’ காரணமாக இளமஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த கரோட்டின், `வைட்டமின் ஏ’-யின் ஆதாரமாகும். அமெரிக்காவின் வெர்மான்ட் செயின்ட் அல்பீன்ஸில் 19-ம் நுற்றாண்டில் உலகிலேயே பெரிய வெண்ணை ஆலை இருந்தது. அங்கு ஒருநாளைக்கு 25 ஆயிரம் `பவுண்டு’ வெண்ணை உற்பத்தி செய்யபட்டது.   ஆரோக்கியம் காக்கும் வெண்ணை

பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்பார்கள். ஆனால் வெண்ணையிலும்
சத்துகள் அடங்கிள்ளன. மலை பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணை ஈடுகட்டுகிறது.

வெண்ணையில் உள்ள `ஆன்டி ஆக்சிடன்ட் கள்’ ரத்த நாளங்களை பலபடுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொடுள்ளது. அத்தியாவசிய தாது உப்பு களை உடம்பு கிரகித்துக்கொள்ள வெண்ணை உதவுகிறது. வெண்ணையில் உள்ள `கொலஸ் ட்ரால்’, முளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள `வைட்டமின் ஏ’, கண்கள், தோலின் ஆரோக்கியம் காக்கிறது.      வெண்ணைக் கலை

உப்பிடாத வெண்ணையால் செய்யபட்ட, எகிப்து நாட்டின் 12-வது பாரோ மன்னனான `டுட்டன்காமுனின்’ சிலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலக் கண்காட்சியில் வைக்கபட்டுள்ளது. அதன் எடை 800 `பவுண்டுகள்’ ஆகும். அதேபோல, `ஹேய் டிடில் டிடில்’ என்ற நர்சரி பாடலின் அடிப்படையில் ஒரு காட்சி உருவாக்கபட்டுள்ளது. அதில், நிலவைத் தாண்டும் ஒரு பசு, ஒரு குட்டி நாய், ஒரு உணவு பதார்த்தம், ஒரு `ஸ்பூன்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவில் வெண்ணை சிற்பக் கண் காட்சிகள் வருடாவருடம் நடத்தபட்டு வரு கின்றன. அந்த வழக்கம் 1900 ஆண்டுவாக் கில் தொடங்கியது. வெண்ணையில் சிற்பம் வடிக்கும் கலை முதலில் திபெத்தில் தோன்றி யதாகக் கருதபடுகிறது.

`டாங்’ அரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசி வென்சாங் திபெத்திய அரசர் சோங்ஸ்டான் காம்போவை மணந்தபோது அவள் `சக்யமுனி’ என்ற தெய்வத்தின் சிலையைத் தன்னுடன் எடுத்து வந்தாள். அது பின்னாளில் `லாஸா’வின் ஜோகாங் கோவிலில் வைத்து வழிபடப்பட்டது. இன்று திபெத்திய மடாலயங்களை வெண்ணைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.

இந்து மத புராணத்தின்படி, கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் வெண்ணையை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். கிருஷ்ணரும், அவரது சிநேகிதர்களும் அக்கம்பக்கத்து பெண்களை ஏமாற்றி வெண்ணை திருடிச் சாப்பிட்ட கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

உணவும்… மருந்தும்..!

நம்மிடம் ஒரு வழக்கம் உண்டு… நோய்க்கான மருந்தை சாப்பிட்டுவிட்டு, அதற்கு எதிர்மாறான உணவுகளையும் சாப்பிடுவோம். இதனால் மருந்து, மாத்திரையின் தாக்கமும் குறைந்து போய், நோயின் விளைவுகளும் அதிகமாகும். ஆதலால், நோயை தீர்க்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிடும்போது, அதற்கேற்ப உணவுகளையும் சாப்பிட வேண்டும். இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம், நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். மருந்து சாப்பிடும் அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுகிறீர்களா? வேண்டாம். வைட்டமின்களும், தாதுக்களும் சில மருந்துகளின் செயல்வேகத்தை குறைத்து விடும். மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் கூறினால் ஒழிய அவ்வாறு செய்ய வேண்டாம். அது, மருந்து செயல்படும் விதத்தை மாற்றலாம். மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம். வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறீர்களா? வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு’களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுப்போக்கை அவை மோசமாக்கவே செய்யும். ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள். ஞாபகத்தில் கொள்ளுங்கள்- புரதங்கள், குறிப்பாக விலங்கு புரதங்கள் ஒவ்வாமையைத் தூண்டவே செய்யும். நீங்கள் தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ், போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். அப்படியே சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

வீடியோ பைல் பார்மட் மாற்றிட

வீடியோ பைல்களை நாம் நம்முடைய பல நிகழ்வுகளில் அமைக்கிறோம். இமெயில்களில் கூட வீடியோ காட்சிகளைப் பதிந்து அனுப்புகின்றனர். வீடியோ காட்சிகளின் பைல்கள் பல்வேறு பார்மட்களில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில இணைய தளங்களில், அல்லது கம்ப்யூட்டர் பைல்களில், கம்ப்யூட்டர் செட் அப்பில் சில வீடியோ பார்மட்களை மட்டுமே இயக்க முடியும். எனவே அடிக்கடி வீடியோ பைல்களின் பார்மட்டினை நாம் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். இந்த வீடியோ பார்மட் மாற்றத்திற்கு, இணையத்தில் பல புரோகிராம்களைக் காண நேர்ந்தாலும், அண்மையில் பார்த்த ஒரு புரோகிராம் மிகச் சிறப்பானதாக, அனைத்து பார்மட்டிற்கான வசதிகளைக் கொண்டதாக உள்ளது. AVI, FLV, MOV, MP4, MPG, M2TS, MTS, RM, RMVB, QT, மற்றும் WMV ஆகிய பார்மட்களைக் கொண்ட வீடியோக்களை தேவைப்படும் இன்னொரு பார்மட்டிற்கு மாற்றிக் கொடுக்கிறது. இதன் பெயர் Any Video Converter. பார்மட் மாற்றம் மட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ பைல்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் கட் செய்து இணைக்க உதவுகிறது.
யு–ட்யூப் வீடியோக்களைக் கையாள்கையில் இந்த புரோகிராம் அதிக வசதிகளைத் தருகிறது. யு–ட்யூப் வீடியோக்களை ஏதேனும் புரோகிராம் மூலம் டவுண்லோட் செய்திடுகையில், அது FLV அல்லது MP4 பார்மட்களில் தரப்படுகிறது. ஆனால் இவற்றை விண்டோஸ் மீடியா பிளேயரால் இயக்க முடிவதில்லை. இந்த எனி வீடியோ கன்வெர்டர் புரோகிராம் மூலம் இந்த சிக்கலுக்குத் தீர்வு காணலாம். முதலில் யு–ட்யூப் வீடியோ தளத்திற்குச் செல்லுங்கள். பின் உங்களுக்குப் பிடித்த வீடியோவினைக் கிளிக் செய்து அந்த தளத்திற்குச் செல்லவும். அங்கே கிடைக்கும் யு.ஆர்.எல். முகவரியைக் காப்பி செய்திடவும். பின் எனி வீடியோ கன்வர்டர் புரோகிராமினை இயக்கி, அதில் காணப்படும் யு–ட்யூப் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அங்கு காப்பி செய்த யு.ஆர்.எல். முகவரியினை பேஸ்ட் செய்திட வேண்டும். மேலாக வலது புறம் உள்ள கீழ் விரி மெனுவினை இயக்கி, அதில் வின்டோஸ் மீடியா பிளேயரின் முகப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யு.ஆர்.எல். பட்டியலிட்ட பின், ‘Convert’ பட்டனை அழுத்தவும். உடனே அந்த வீடியோ பைல் டவுண்லோட் ஆகிறது. இறுதியில் விண்டோஸ் மீடியா பிளேயருக்கான பார்மட்டிலும், ஒரிஜினல் எம்பி4 பார்மட்டிலும் இந்த வீடியோ பைல் டவுண்லோட் ஆகிறது. இந்த புரோகிராமின் வீடியோ பிரிவியூ ஏரியாவினைப் பயன்படுத்தி, ஸ்நாப் ஷாட் எடுக்க முடிகிறது. வீடியோ பிளேபேக் செய்து, திரையில் காட்டப்படும் ஸ்நாப் ஷாட் என்ற பட்டனைக் கிளிக் செய்தால், காட்சி படமாகக் கிடைக்கிறது.
இது ஒரு இலவசப் புரோகிராம். இதனைத் தயாரித்தவர் சில மாதங்கள் கழித்து, நீங்கள் ஏன் இதனை வாங்கிக் கொள்ளக் கூடாது என்ற செய்தியை பாப் அப் விண்டோவாகக் கிடைக்கும் வகையில் அமைத்துள்ளார். ஆனால் விலை கொடுத்து வாங்கிடாமல், தொடர்ந்து இலவச புரோகிராமாகவே பயன்படுத்தலாம்.

http://www.any-video-converter.com/products/for_video_free/

தைராய்டு

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு உன்னத படைப்பாகும். பல கோடி நரம்புகள், எலும்புகள், தசைகள் பிண்ணிப் பிணைந்து உருவாக்கப்பட்டது தான் மனித உடல். இந்த மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புகளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது.

இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை நாளமில்லாச் சுரப்பிகள்(Endocrine glands) நம் உடலில் பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, அட்ரீனல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் (Harmone) என்று அழைக்கிறோம்.

நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும்.

கருவில் குழந்தை உருவாகும்பொழுது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந்திருக்கும். சுமார் 15 முதல் 25 கிராம் எடையுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொண்டது. வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள், நடுவில் இணைப்பு திசுவால் (Isthumus) இணைக்கப் பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணைக்கப் பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங்கும்போது குரல் வளையோடு தைராய்டு சுரப்பியும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும். தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகிற தென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையை விட மிகுதியாய் இருக்கிறது என்பதை அறியலாம்.

தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவாகி இரண்டு வார காலத்தில் இருந்தே துவக்கிவிடுகிறது. சுரக்கும் ஹார்மோனின் பெயர் தைராக்சின். தைராக்சின் தைராய்டு செல்களால் சுரக்கப்படுகிறது. தைராய்டு செல்களிடையே செழிப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற மூலத்தை இந்த செல்கள் கவர்ந்தெடுத்து தைரோஸின் என்னும் அமைனோ அமிலத்துடன் இணைத்து தைராக்சின் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட ஹார்மோன் தைரோகுளோபுலின் சேமித்து வைக்கப்படுகிறது. தேவையான பொழுது இவை இரத்தத்தில் கலக்கப்படுகிறது இந்த தைராக்சின் உருவாகும் செல்கள் அனைத்தும் தைராய்டு ஊக்கி ஹார்மோன் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது. தைராய்டு ஹார்மோன்கள் என்று நாம் கீழ்கண்டவற்றை அழைக்கிறோம்.

T3 – Triiodothyronin

T4 – Thyroxine

TSH – Thyroid stimulating hormone (தைராய்டு ஊக்கி ஹார்மோன்)

தைராய்டு ஹார்மோனின் வேலைகள்

உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், தைராய்டு ஹார்மோன்கள் பெரிதும் உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் உதவுகிறது. செல் மற்றும் திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலில் வெப்பம் உண்டாக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

· புரதப் பொருள்களை (Protein) சிதைவுப்படுத்தி செல்களின் வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் உதவுகிறது. குளுகோஸ் (Glucose)உறிஞ்சப் படுவதை தூண்டுகிறது.

· கிளைக்கோஜன் (Glycogen) சிதைவுபட உதவுகிறது.

· கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளில் இருந்து அதிக அளவில் விடுபட வைக்கிறது. வைட்டமின் அ உருவாக ஏதுவாக உள்ளது.

· குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

· இதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது. குடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப் படுத்துகிறது.

· இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற உதவுகிறது. பால் சுரப்பு கோளங்களை தூண்டி அதிக அளவில் பாலை சுரக்க வைக்கிறது.

தைராய்டு சுரப்பியின் இயக்கக் குறைவினாலோ, மிகுதியாலோ நோய்கள் ஏற்படலாம். தைராய்டு இயக்க குறை நோயை (Hypothyroidism) என்றும் தைராய்டு இயக்க மிகை நோய் (Hyper thyroidism) என்றும் அழைக்கின்றனர்.

தைராய்டு இயக்க குறை நோய்  ( Hypothyroidism)

குழந்தை கருவிலிருக்கும் போதே தைராய்டின் இயக்கம் குறைந்திருந்தால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையில் குழந்தை சுறுசுறுப்பாக உலாவவில்லை என்ற அறிகுறியின் மூலம் அறியலாம். அப்படிப்பட்ட குழந்தைகள். குழந்தை பிறந்த உடனேயே வீறிட்டு அழுவதில்லை. உடனே மலம் கழிப்பதில்லை, மூச்சு எடுத்து விடக் காலம் கடத்தும். மற்றும் வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கத்துடன் காணப்படும். இக்குழந்தைக்கு இயல்பாக பிறந்தவுடன் ஏற்படும் மஞ்சள் காமாலை நெடுநாள் வரை நீடிக்கும். பிறந்தது முதல் குழந்தையின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் மற்ற குழந்தைகளை விட பின் தங்கியே இருக்கும்.

வயதாக வயதாக குழந்தையின் அறிவு முதிர்ச்சி பின்தங்கத் துவங்கும். பெற்றோர்கள் இப்பருவத்தில் இதனை உணரத் துவங்குவார். கற்பதில் குறைபாடுகள், நினைவுக் குறைபாடுகள் ஆகியன தெரிய ஆரம்பிக்கும்.

பிறந்த சில ஆண்டுகளுக்குப் பின் தைராய்டு குறை ஏற்பட்டால், இக்குழந்தைகளின் செயல் வேகம் குறைந்து இருப்பதைக் காண முடியும். பருவ வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தக்க சமயத்தில் பருவம் எய்துவதில்லை.

இதுவே வயது வந்தவர்களுக்கு தைராய்டுக் குறை ஏற்படின் அதைக் கண்டு பிடிப்பதற்கே மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

தலை முடி கொட்டுதல், புருவங்களில் இருந்து முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். முகம் எப்பொழுது பார்த்தாலும் தூங்கி வழிந்தது போலவே இருக்கும். கண்ணைச் சுற்றி ஒரு வீக்கம் இருக்கும். பேச்சு ஏற்றத் தாழ்வில்லாமல், மெதுவான வேகத்தில் இருக்கும். குரல் தடித்திருக்கும். மலச்சிக்கல், நீர் பிரியாமை, உடல் முழுவதும் வீக்கம் ஆகிய பிற அறிகுறிகள் தோன்றலாம். ஆண்மைக் குறைவு, மாத சுழற்சியின் போது உதிரம் அதிகம் போதல், மலட்டுத்தன்மை ஆகியவையும் தைராய்டு இயக்க குறையால் ஏற்படலாம்.

முதுமையில் தைராய்டு இயக்க குறைவு ஏற்பட்டால், அது நரம்புகள் பலம் இழப்பு, நரம்புகள் தடித்துப் போவதால் கைகளிலும், கால்களிலும் மதமதப்பு போன்றவை ஏற்படலாம். கைகால் வலிப்பு உண்டாகலாம். சிறு மூளை, பாதிக்கப்பட்டு தள்ளாட்டமும் நடுக்கமும் ஏற்படலாம்.

தைராய்டு இயக்க மிகை நோய் ( Hyperthyroid)

வளர்சிதை மாற்றம் அதிக அளவில் நடப்பதால் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். அதிக அளவு வெப்பத்தை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

வயிற்றுப் போக்கு அதிகம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உதிரம் குறைவாகவே வெளியேறும்.

ஒரு நாளில் பலமுறை மலம் கழிப்பதுண்டு. மனதில் இனம் புரியாத பயம், படபடப்பு ஏற்படும். கைகள் நடுங்கும், இதயம் படபடக்கும். உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டும். எளிதில் சோர்வு ஏற்படும். சரியான உறக்கம் ஏற்படாது.

வயதானவர்களுக்கு இந்த நோய் ஆண்மை குறைவை ஏற்படுத்தும். மாத சுழற்சி சிலசமயம் நின்றுவிடலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புண்டு இதயத்தின் இயக்கம் சீர் கெடும். நாடித்துடிப்பு 200க்கு மேலாகவும் சீரில்லாமலும் இருக்கும்.

பரிசோதனைகள்

தைராய்டு நோய் ஒருவருக்கு இருக்கின்றதா என்று ஆராயும்போது இரண்டு செய்திகள் கவனிக்கப்படுகின்றன.

· தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாகவா, சரியாகவா அல்லது மிகுதியாகவா என்பது.

· தைராய்டு சுரப்பியின் வடிவம் எவ்வாறு உள்ளது என்பது.

உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை பரிசோதிப்பது தைராய்டு செயல்படும் நிலையை அறிய உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை அளப்பது, அடிப்படை வளர் சிதை மாற்ற விகிதத்தைக் கணிப்பது, இரத்தத்தில் கூ3, கூ4, கூகுஏ ஆகியவற்றின் அளவை அளப்பது போன்றவை மற்ற பரிசோதனை முறைகள் ஆகும்.

இதய மின் வரைபடங்களில் (ECG) ஏற்படும் மாறுதல்கள் கூட தைராய்டு செயல்படு நிலையில் உள்ள மாறுபாடுகளை எடுத்துக்காட்டும்.

தைராய்டு சுரப்பியின் வடிவத்தை அறிய எக்ஸ் – கதிர் படம், கணினி அச்சு வெட்டுப்படம், காந்த அதிர்வு படம் மற்றும் நுண் ஒலித் துருவு படங்கள் உதவுகின்றன. கதிரியக்க அயோடின், டெக்னீஷியம் 99-எம், தாலியம் ஆகிய மூலகங்களைத் தைராய்டு சுரப்பி கவரும் தன்மை கொண்டது. இத்தன்மையை பயன்படுத்தி சில துருவுப் படங்கள் எடுப்பதன் மூலம் தைராய்டின் வடிவம் மட்டுமின்றி எந்தப் பகுதி மிகுதியாக வேலை செய்கிறது, எந்தப் பகுதி குறைவாக வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்.

மருத்துவம்

தைராய்டு இயக்க கோளாறுகளால் ஏற்படும் நோயை தக்க மருத்துவரின் உதவியுடன் அறிந்து அதற்கு உகந்த மருந்துகளை உட்கொள்வது சாலச் சிறந்தது. மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதால் அயோடின் சத்து நம் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது. இதனால் தைராய்டு நோய்கள் முளையிலேயே தடுக்கப் படுகிறது.

இந்திய மருத்துவ முறைகளில் தைராய்டு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்துகள் உள்ளன.