உணவும்… மருந்தும்..!

நம்மிடம் ஒரு வழக்கம் உண்டு… நோய்க்கான மருந்தை சாப்பிட்டுவிட்டு, அதற்கு எதிர்மாறான உணவுகளையும் சாப்பிடுவோம். இதனால் மருந்து, மாத்திரையின் தாக்கமும் குறைந்து போய், நோயின் விளைவுகளும் அதிகமாகும். ஆதலால், நோயை தீர்க்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிடும்போது, அதற்கேற்ப உணவுகளையும் சாப்பிட வேண்டும். இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம், நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். மருந்து சாப்பிடும் அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுகிறீர்களா? வேண்டாம். வைட்டமின்களும், தாதுக்களும் சில மருந்துகளின் செயல்வேகத்தை குறைத்து விடும். மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் கூறினால் ஒழிய அவ்வாறு செய்ய வேண்டாம். அது, மருந்து செயல்படும் விதத்தை மாற்றலாம். மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம். வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறீர்களா? வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு’களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுப்போக்கை அவை மோசமாக்கவே செய்யும். ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள். ஞாபகத்தில் கொள்ளுங்கள்- புரதங்கள், குறிப்பாக விலங்கு புரதங்கள் ஒவ்வாமையைத் தூண்டவே செய்யும். நீங்கள் தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ், போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். அப்படியே சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

%d bloggers like this: