Daily Archives: மே 11th, 2010

ஹாட் 10 படிப்புகள்

ஆண்டுதோறும் அறிமுகமாகும் புதிய படிப்புகளில், ஒரு சில இரண்டு மூன்று வருடங்களிலேயே நிறுத்தப்பட்டுவிடும். மாறாக, வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தோடு நீண்ட காலம் நீடித்திருப்பவற்றில் டாப் 10 புதிய படிப்புகள் இங்கே…
* 1. ஸ்பேஸ் டெக்னாலஜி (எம்.இ.)
அறிமுகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆர்யபட்டா முதல் அக்னி ஏவுகணை வரை அனைத்தையும் பிரித்தறியும் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் உண்டு.
* 2. அட்வான்ஸ்டு ஆர்க்கிடெக்சர் (முதுநிலை கட்டடக்கலை)
வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்றது டிஸைனிங், கட்டுமானப் பிரிவுகளில் ஜொலிக்கலாம். சென்னை அண்ணா பல்கலையின் இந்த அறிமுகம் கட்டடக்கலையின் சிறப்பு நிலையைப் பற்றியது.
* 3. நானோ சயின்ஸ் (எம்.டெக்)
திருச்சி அண்ணா பல்கலையின் அறிமுகம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு உலகை ஆளப்போகும் அதிநவீன நானோ! தொழில்நுட்பம்தான் பிரதானம். சென்னை அண்ணா பல்கலை நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ‘சீட்’ கிடைக்கும். மொத்த இடங்கள் 25.
* 4. எம்.எஸ்சி. வைராலஜி
பி.எஸ்ஸி உயிரியல் விலங்கியல் முடித்தவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் மனுசெய்யலாம். மொத்த இடங்கள் இருப்பத்தொன்று. வைரஸ் நோய்களைக் கண்டறிவது சிகிச்சைக்கு சிபாரிசு செய்யும் தகுதி இந்த கோர்ஸ் முடித்தவர்களுக்குக் கிடைக்கும்.
* 5. பி.காம் வித் ஐடி.
சற்றே புருவம் உயர்த்த வைக்கும் இந்த காம்பினேஷன் இன்றைய இளைஞர்களின் அபிமான தேர்வு +2 பாஸ் செய்தவர்கள் ‘அப்ளை’ செய்யலாம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்தப் படிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.
* 6. பி.எஸ்சி., – பி.பி.ஓ. கால்சென்டர். மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்.
கோவை பாரதியார் பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றுக்கெல்லாம்கூட இளங்கலைப் படிப்பு இருக்கிறதா என்கிற ஆச்சரியம் விழி விரிய வைக்கும். ஐடி சார்ந்த துறைகள் என்பதால் வேலை வாய்ப்புக்குப் பஞ்சமிருக்காது.
* 7. எம்.எஸ்.ஸி. ரோடியோ பிஸிக்ஸ்
சென்னை மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்துடன் ரேடியோ கதிர்வீச்சு பற்றிய படிப்பு மருத்துவம் சாராத துறைதான் என்றாலும் கதிர்வீச்சின் தன்மை அளவு உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெறலாம். மொத்த இடங்கள் பத்து.
* 8. எம்.பி.ஏ., ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட்
மருத்துவமனை, நோயாளிகள் சார்ந்த நிர்வாகவியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. தமிழ்நாடு அரசு பொதுநுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம் இரண்டு வருடப் படிப்பு.
* 9. பி.எஸ்.ஸி, கெமிஸ்ட்ரி வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்.
கோவை பாரதியார் பல்கலை அறிமுகம் பொதுவாக பிஎஸ்ஸி. கெமிஸ்ட்ரி முடித்து ஆய்வக வேலைக்கு முயற்சிப்பவர்கள் கூடவே கம்ப்யூட்டரையும் படிப்பதால் வேலை வாய்ப்பு அமோகம்.
* 10. எம்.டெக். கிளினிக்கல் இன்ஜினியரிங்
சென்னை ஐ.ஐ.டி.யின் அங்கீகாரம் உண்டு. காலம், இரண்டு ஆண்டுகள். மருத்துவ உபகரணங்களைப் பராமரிப்பது, இயக்குவது உள்ளிட்ட நடைமுறைகள் கற்றுத் தரப்படுகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 கூடுதல் தகவல்கள்

கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது. சிறிய, பெரிய நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள் என எங்கும் எம்.எஸ்.ஆபீஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புதிய பதிப்பு 2010 பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இதன் வளர்ச்சி குறித்து தொடர்புள்ளவர்களுக்கு மட்டும், (மைக்ரோசாப்ட் டெக்நெட் மற்றும் எம்.எஸ்.டி.என். சந்தாதாரர்களுக்கு மட்டும்) இது டவுண்லோட் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வரும் மே 12, நாளை மறுநாள், இத்தொகுப்பின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வர்த்தக ரீதியாக, பொது மக்களுக்கு வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து என இன்னும் அறிவிப்பு வரவில்லை.
இத்தொகுப்பு குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஆபீஸ் 2010, மிக ஆழமாக மேற்கொள்ளப்பட்ட சிந்தனையில், நுண்மையாக வடிவமைக்கப்பட்டு, பல சாப்ட்வேர் புரோகிராம்கள் இணைப்பாக அமைக்கப் பட்ட ஒரு பெருந் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் மையமாகத் தரப்படும் வேர்ட், எக்ஸெல், அவுட்லுக் மற்றும் பிரசன்டேஷன் புரோகிராம்கள், இன்றைய தேவைகளின் அடிப்படையில் புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆபீஸ் தொகுப்புகளுடன் ஒப்பிடுகையில், இத்தொகுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சிறப்பினைக் காணலாம். ஆபீஸ் 2007 தொகுப்பில் ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் முழுமையாக அனைத்து தொகுப்புகளுடனும் தரப்படவில்லை. அவுட்லுக், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் தொகுப்புகளில், ஆபீஸ் 2003ல் இருந்த மெனுவே தொடர்ந்தது. ஆனால் ஆபீஸ் 2010ல் அனைத்துமே ரிப்பன் இன்டர்பேஸுக்கு மாறிவிட்டன. குறிப்பாக அவுட்லுக் தொகுப்பில் முன்பு புதைக்கப்பட்டிருந்த சில வசதிகள் அனைத்தும், ரிப்பன் இன்டர்பேஸில் எளிமையாகப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆபீஸ் 2010ல் பைல் மெனு மீண்டும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007 தொகுப்பில் ஓப்பன் அண்ட் சேவ் டயலாக் பாக்ஸ், பிரிண்ட் பங்சன் போன்றவை ஆபீஸ் மெனுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை இப்போது மிகத் தெளிவாக, வண்ணக் கலவையில் காட்டப்படுகின்றன. ரிப்பன் மெனுவில் இடது ஓரம் அனைத்தும் பைல் ஆப்ஷனாகத் தரப்பட்டுள்ளன.
மேலும் இந்த ரிப்பன் இன்டர்பேஸ் இணைந்து டெவலப்பர்கள் பல டேப்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவாக்கி அமைக்கலாம். ஆப்ஜெக்ட், கிராபிக்ஸ் போன்றவற்றை எடிட் செய்வது, மாற்றி அமைப்பது போன்றவை, ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து புரோகிராம்களில் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் டெக்ஸ்ட் எடிட் செய்வதில், இந்த புரோகிராம்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன.
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் ஒன்றில் சொற்களைத் தேடுவதற்கு பைண்ட் அண்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். வேர்ட் 2010ல் நேவிகேஷன் பேனில் தரப்பட்டிருக்கும் மூன்றாவது டேப்பில் இந்த தேடல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சர்ச் பாக்ஸில் ஒரு சொல்லை டைப் செய்கையில், அந்த சொல் இருக்கும் அனைத்து இடங்களும் ஹைலைட் செய்யப்படுகின்றன. இதனால், நாம், சொல் உள்ள அடுத்தடுத்த இடங்களை தொடர் முயற்சி இன்றி அறியலாம்.
எக்ஸெல் தொகுப்பில் அனைத்து பங்ஷன்களும் மீண்டும் துல்லிதமாகவும் வேகமாகவும் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளன. டேட்டா பேஸ் தனியே அமைத்து, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இணைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த தொகுப்பில் பல வசதிகள் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன.
அவுட்லுக் 2010ல், மெனுவிற்குப் பதில் ரிப்பன் இன்டர்பேஸ் தந்திருப்பது ஒரு முக்கிய மாற்றமாகும். புதியதாக தரப்பட்டுள்ள இரண்டு வசதிகளை இங்கு குறிப்பிட வேண்டும். குயிக் ஸ்டெப்ஸ் (Quick Steps) என்ற ஒரு டூல் உள்ளது. இதில் கட்டளைகளை லிஸ்ட்டிலிருந்து எடுத்து, அவற்றைச் செயல்படுத்தும் வரிசைப்படி அமைக்கலாம். பின்னர் இதனை ஹோம் டேப்பில் உள்ள பட்டன் ஒன்றுக்கு இணைக்கலாம். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்தலாம்.
அடுத்ததாக மெசேஜ்களை குழுவாக அமைக்கும் டூல் செயல்படும் விதத்தினைக் குறிப்பிடலாம். மெசேஜ் சப்ஜெக்ட் அடிப்படையில், அவை குழுவாக அமைக்கப்படுகின்றன. இதில் புதியதாக இக்னோர் (Ignore) ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜ் அல்லது கான்வர்சேஷன் மற்றும் அதன் பின்னணியில் வரப்போகும் அனைத்து மெசேஜ்களும் தானாகவே நீக்கப்படுகின்றன. ஒருவருக்கு காப்பி செய்யப்படும் தேவையற்ற மெசேஜ்களை நீக்க இது பயன்படும். இந்த டூல் சப்ஜெக்ட் தலைப்பின் அடிப்படையில் செயல்படுவதால், அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இந்த வசதி செயல்படாமல் போய்விடும். இந்த பிரச்னை வரும்காலத்தில் தீர்க்கப்படலாம்.
அடுத்ததாக ஆபீஸ் 2010 தொகுப்பு எவற்றை எல்லாம் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். அனைத்து எடிஷன்களும் Word, Excel, PowerPoint, மற்றும் OneNote ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளன. இவை 32 பிட் மற்றும் 64 பிட் வகைகளில் கிடைக்கின்றன.
ஹோம் எடிஷன் (Home Edition) : இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது. Microsoft Office Home and Student 2010 – இந்த தொகுப்பினைப் பெறும் ஒருவர், தன் வீட்டில் மூன்று பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இதனை நிறுவிக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு அடிப்படை தொகுப்புகள் மட்டுமே உள்ளன. இதனை எந்த வர்த்தக நிறுவனத்திலும், லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளிலும் பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்துவது, ஒப்பந்தப்படி தடை செய்யப்படுகிறது.
Microsoft Office Home and Business 2010: இது சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கென வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட நான்கு தொகுப்புகளுடன், அவுட்லுக் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Microsoft Office Professional Academic 2010: இந்த தொகுப்பில் அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் (Outlook, Publisher, and Access) உள்ளன. – – @__.edu என்ற இமெயில் முகவரியைக் கொண்டுள்ள எவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தாட்சி பெற்ற கல்வி சார்ந்த அமைப்புகள் வழியாகவே இதன் விற்பனை மேற்கொள்ளப்படும்.
பிசினஸ் எடிஷன் (Business Edition): இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது.
Microsoft Office Standard 2010: இந்த தொகுப்பில், அடிப்படையான நான்கு புரோகிராம்களுடன், அவுட்லுக் மற்றும் பப்ளிஷர் இணைக்கப் பட்டுள்ளன. மொத்த வால்யூம் லைசன்ஸ் முறையில் இது விற்பனை செய்யப்படும்.
Microsoft Office Professional 2010: சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் இணைக்கப்பட்டுள்ளன.
Microsoft Office Professional Plus 2010: அடிப்படை தொகுப்புகளுடன் Outlook, Publisher, Access, SharePoint Workspace (formerly Groove), Communicate, and InfoPath ஆகியவை இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. வால்யூம் லைசன்ஸ் முறையில் வாங்கலாம்.
ஆபீஸ் 2010 ஐ இயக்க உங்கள் சிஸ்டம் எந்த கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.3 இணைப்புடன்), விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.1 அல்லது பின் வந்த இணைப்புடன் ( 32 அல்லது 64 பிட்) விண்டோஸ் 7 (32 அல்லது 64 பிட்) விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008.
ஹார்ட் டிஸ்க் குறைந்தது 3 ஜிபி இதற்கென இருக்க வேண்டும். வழக்கம்போல, ஒரு ஆபீஸ் 2010 தொகுப்பு, ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பதிந்து இயக்க லைசன்ஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக பதிவதற்கென, ஒரு சில தொகுப்புகள் மட்டும் சில வரையறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிட்டவை அல்லாமல் ஆபீஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் கிடைக்கிறது. ஆனால் இவை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. வெளியே தனியே சில்லரை விற்பனையில் வாங்க முடியாது. இதில் வேர்ட் ஸ்டார்ட்டர் மற்றும் எக்ஸெல் ஸ்டார்ட்டர் ஆகியவை மட்டும் உள்ளன. இதனைப் பெற்றவர்கள், கூடுதலாகப் பணம் செலுத்து முழுமையான ஆபிஸ் 2010 தொகுப்பாகத் தங்கள் ஸ்டார்ட்டர் எடிஷனை மாற்றலாம்.
இந்தியாவில் இந்த பல்வேறு தொகுப்புகளின் விலை, வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் போது தெரியவரும்.

நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா?வேண்டாம் விபரீதம்!

நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா? ஒரு நாளைக்கு சராசரியாக 100 முறைக்கு மேல், விரல்களால், ‘டைப்’ அடித்து எஸ்.எம்.எஸ்., அனுப்புபவரா?
அப்படியானால், முதலில் விழிச்சுக்குங்க… வேண்டாம் விபரீதம்! இதே எண்ணிக்கையில் எஸ்.எம்.எஸ்., செய்த அமெரிக்க பள்ளிச் சிறுமி, ஆனீஸ் லெவிட்சுக்கு மணிக்கட்டு மரத்துப்போய், கடைசியில், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கையில் பிடிக்கவே முடியாமல் போய் விட்டது.
உங்களுக்கு மட்டுமல்ல, இப்படி 100, ‘கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவோருக்கும், எஸ்.எம்.எஸ்., பார்ப்போருக்கும் கோளாறு வரும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மருத்துவ ரீதியாக வாய்ப்பு உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
இந்த பாதிப்புக்கு, ‘கார்பல் டன்னல் சின்ட்ரோம்’ என்று பெயர். கம்ப்யூட்டரில், கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி வேலை செய்வோருக்கும், அதிகமாக, ‘மவுஸ்’ பிடித்து வேலை செய்வோருக்கும் இந்த கோளாறு வரும்.
நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்பவராக இருந்தால், இந்த அனுபவம் புரியும். எப்போதும் கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி, ‘டைப்’ செய்தும், ‘மவுஸ்’ பிடித்தும் கொண்டிருந்தால், கை விரல்களில் உள்ள நரம்புகள் பாதிக்கும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
முழங்கையில் இருந்து கை விரல்களில் நடுப்பகுதியில் ஒரு நரம்பு போகும். அதாவது, சாலையின் நடுவே எப்படி தடுப்பு போடப்பட்டுள்ளதோ, அப்படி இந்த நரம்பு போகும்.
அடிக்கடி கம்ப்யூட்டர், ‘மவுஸ்’ பிடிப்பதால், மொபைல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதால் இந்த நரம்பு பலவீனம் அடையும். ரத்த ஓட்டம் பாதித்து, திடீரென மரத்துப் போகும். இதனால், கை விரல்களில் உணர்ச்சியே இருக்காது; அப்புறம், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கை விரல்களால் பிடிக்கவே முடியாமல் போய் விடும்.
இதற்கு தீர்வு என்ன? அறுவை சிகிச்சை ஒன்று தான். அறுவை சிகிச்சை செய்த பின், மொபைல் போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டால், இந்த பிரச்னைகள் எல்லாம் வராது. மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,களில் வரம்பு மீறும் போது, கை விரல்களில் ஒரு வித நமைச்சல் ஏற்படும். உள்ளங்கை அரிக்கும்; போகப் போக ஒரு வித தடிப்பு உணர்வு ஏற்படும். கடைசியில் உணர்ச்சியே இல்லாமல் போய் விடும். கை விரல்கள் ஏதோ சம்பந்தம் இல்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை போல, எதற்கும் பயன்படாமல் போய்விடும்.
எஸ்.எம்.எஸ்., மூலம் கைவிரல் மரத்துப் போய், அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆனீஸ் லெவிட்ஸ் தன் அனுபவத்தை கூறுகிறார்:
எனக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., தருவது என்றால் மிகவும் பிடிக்கும். என் தோழிகள் எல்லாரும் தகவல் பரிமாறுவதே அதில் தான். போனில் பேசாமல், இப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தோம்.
நான் ஒரு நாளைக்கு 100,’கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்ப, விரல்களால், ‘டைப்’ செய்வேன். அப்படி செய்த நான், ஒரு நாள், காலை எழுந்ததும் கைவிரல்களில் ஒருவித நமைச்சல் காணப்பட்டது. போகப் போக, விரல்களில் உணர்ச்சியே இல்லாமல் போய் விட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டபோது, விரல்களில் சூடு பட்டும், எதுவும் உணர்வே தெரியவில்லை. டாக்டரிடம் காட்டியதற்கு, உடனே அறுவை சிகிச்சை செய்து, கை விரல் நரம்பில் உணர்ச்சியூட்ட முடியும் என்று கூறினார்.
அறுவை சிகிச்சை செய்த பிறகு தான், என்னால், மொபைல் போனை கைவிரல்களால் பிடிக்க முடிகிறது.
— இவ்வாறு கூறிய ஆனீசிடம், ‘இப்போது எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடிகிறதா?’ என்று கேட்டது தான் தாமதம், ‘எஸ்.எம்.எஸ்.,சா… அதை மறந்து ரொம்ப நாளாச்சு; எதுவாக இருந்தாலும், தோழிகளிடம் போனில் சில நொடிகள் பேசுவேன்…’ என்று, ‘பளீச்’சென சொன்னார்.
என்ன… நீங்க எஸ்.எம்.எஸ்., விரும்பியா? அப்படீன்னா, எச்சரிக்கையாக இருங்க!

தண்ணீர்… தண்ணீர்..!

தாகம் ஏற்பட்டால், உடனே நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். இது ஓரளவு உண்மை என்றாலும் கூட… உடம்பின் தண்ணீர் பற்றாக்குறைக்கு மேலும் சில அறிகுறிகளை உடம்பு வெளிப்படுத்தும்.

இந்த அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாவிட்டால், பல பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக இப்போதைய வெயில் காலத்திற்கு முடிந்தளவுக்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிகமிக நல்லது.

உடல் நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுதவிர, பல்வேறு இயற்கையான நிவாரணத்தில் பெரும்பங்கு தண்ணீருக்குத் தான் உண்டு.

உடலின் மொத்த எடையில் எழுபது சதவீதம் தண்ணீர்தான். உடலின் அனைத்துப் பாகங்களிலும் பரவியிருப்பதால், முளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், ரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

நமக்கு இரண்டு வழிகளில் தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீர்(கடின நீர்), மழைநீர், மேற்பரப்பு நீர்(மென்னீர்) ஆகிய இரண்டில், மென்னீர் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால் மென்னீர் தூய்மையாக இல்லாவிட்டால் அதுவே உடலில் பிரச்சினைகளை உருவாக்கிவிடும். ஆதலால்தான் குடிப்பதற்கும், மருத்துவத்திற்கும் சுத்தமான குடிநீரை பயன்படுத்துகிறோம்.

நோயின்றி நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முளை மற்றும் நினைவாற்றலில் சிக்கல் ஏற்படாது.

அதிகளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள் ஆகியவை நோயற்ற வாழ்வுக்கு உத்தரவாதமாக கூறப்படுகின்றன. இப்படி உணவில் கட்டுப்பாடு இருந்தாலும், தண்ணீர் என்பது மிகவும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.