Daily Archives: மே 12th, 2010

கூகுள் காலண்டர்

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது. இணைய தளம் மூலமாக, நாம் இணையத் தொடர்பில் இருந்தவாறே, புரோகிராம்களைப் பயன்படுத்தி, நம் செயல்பாடுகளை மேற்கொள்வதே கிளவுட் கம்ப்யூட்டிங். இந்த வசதிகளை நமக்குத் தருவதற்கு, சர்வர்களை நிறுவி சேவை செய்திடும் நிறுவனங்கள், நம்மிடம் கட்டணம் பெறுகின்றன. சிறிய சில உதவிகளை, சேவைகளைத் தருவதற்குப் பல நிறுவனங்கள் நம்மிடம் கட்டணம் வாங்காமலேயே இயங்குகின்றன. ஆன்லைன் ஸ்டோரேஜ், ஆன்லைன் கன்வர்டர்கள் போன்றவை இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் வகையைச் சேர்ந்தவை தான்.
இந்த வகையில் கூகுள் வெகு நாட்களாக பல சேவையினைத் தந்து வருகிறது. அவற்றில் மிகவும் பயனுடையதும், இன்றைய காலத்திற்குத் தேவையானதுமான ஒன்று, கூகுள் காலண்டர். இது வெறும் நிகழ்வுகளைக் குறித்து வைத்துச் செயல்படும் காலண்டர் மட்டுமின்றி, இதன் சேவை இப்போது மொபைல் போனையும் இணைத்து நமக்குக் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்த இலவச சேவையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.
1. இதற்கு முதல் தேவை ஜிமெயிலில் ஒரு அக்கவுண்ட். பின் இதனைப் பயன்படுத்தி கூகுள் காலண்டர் தளத்திற்குச் செல்லவும். அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அதன்பின் அங்கு கிடைக்கும் டேப்களில் மொபைல் செட் அப் டேப்பில் (Setup) கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் மொபைல் எண்ணை என்டர் செய்திட வேண்டும். அதன் பின் Send Verification Code என்பதில் கிளிக் செய்து காத்திருங்கள். உங்கள் மொபைல் போன் எண் சோதனை செய்யப்பட்டு அந்த போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும். சில நொடிகளில் கிடைக்கும் இந்த செய்தியில் Your Google calendar verification code is என ஒரு எண் தரப்படும். இதுதான் உங்கள் கூகுள் காலண்டர் அக்கவுண்ட்டுக்கான பாஸ்வேர்ட்.
அடுத்து கூகுள் காலண்டரில் வரும் நாட்களுக்கான நிகழ்வுகளை முன் கூட்டியே குறித்து வைக்கலாம். எடுத்துக் காட்டாக மே மாதம் 22 அன்று, மாலை 5 மணிக்கு ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அதனைச் சுருக்கமாக எழுதி வைக்கலாம். இது குறித்த செய்தி உங்களுக்கு அந்த நாளில், நிகழ்ச்சிக்கு எவ்வளவு நேரம் முன்னால் உங்கள் போனுக்கு எஸ்.எம்.எஸ். ஆகவும், இமெயிலுக்கு செய்தியாகவும் அனுப்பப்பட வேண்டும் என்பதனைக் குறிக்கலாம். 30 நிமிடத்திற்கு முன் அல்லது ஒரு நாளுக்கு முன் எனக் குறித்தால், சரியான அந்த நேரத்திற்கு உங்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்தி கிடைக்கும். ஜிமெயிலுக்கு இமெயில் செய்தி அனுப்பப்படும்.
உங்கள் கூகுள் காலண்டரில் குறித்து வைத்த தகவல்களை நீங்கள் மட்டும் பார்க்குமாறு வைக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிந்துகொள்ளுமாறும் செட் செய்திடலாம்.
இதனால் உங்கள் நாட்குறிப்பினை நீங்கள் எங்கிருந்தாலும், இணையத்தில் மூலம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒன்றும், வர்த்தக மற்றும் அலுவலக நடவடிக்கைகளுக்கு ஒன்றும், நண்பர்களுக்காக ஒன்றும் என எத்தனை காலண்டர்களை வேண்டுமானாலும் வடிவமைத்து வைத்துக் கொள்ளலாம். இந்த காலண்டரிலேயே தேடல் வசதி தரப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி என்று நடைபெற உள்ளது என மறந்து விட்டால், இதன் மூலம் தேடி அறியலாம்.
இது ஒரு இணைய வழிச் செயல்பாடு என்பதால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் இதனைக் காணலாம். அதே போல எந்த பிரவுசர் வழியாகவும் பெறலாம்.
இந்த சேவை முழுவதும் இலவசமே. கட்டணம் இல்லை என்பது இதன் சிறப்பு. இதனை ஒரு முறை பயன்படுத்தினால், தொடர்ந்து உங்கள் அன்றாட வாழ்க்கையில், உங்களை வழி நடத்தும் நம்பிக்கையான நண்பனாக கூகுள் காலண்டர் மாறுவதனைக் காணலாம். கூகுள் காலண்டர் செட்டிங்ஸ் அமைப்பில் லேப்ஸ் என்பதைக் கிளிக் செய்து, இன்னும் என்ன வழிகளில், கூகுள் காலண்டரை நம் உற்ற வழிகாட்டியாக மாற்றலாம் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

தண்டவாளத்தில் ஒரு தங்கரதம்!


கார்பெட் விரித்த தரை; கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட கட்டில் ; அதில் வண்ணமயமான சில்க் விரிப்பு; அட்டாச்டு பாத்ரூம்; பொழுதுபோக்க பிளாஸ்மா டீ.வி. விதம்விதமாக சினிமா மற்றும் இதர நிகழ்ச்சிகளைக் காண டிவிடி சேனல்கள்; உபரியாக டீ.வி. சேனல்கள்; எழுதப்படிக்க சௌகரியமான மேஜை, நாற்காலி, இருபத்துநாலு மணி நேரமும் மென்மையான இசை, உடற்பயிற்சி செய்ய ஜிம், அவசியமானால் நோய் தீர்க்க ஆயுர்வேத சிகிச்சை மையம்; நீராவிக் குளியல் வகையறா வேண்டுமென்றால் இருக்கிறது ஸ்பா.
இது எந்த நட்சத்திர ஓட்டல் அறை என்று கேட்கிறீர்களா? நட்சத்திர ஓட்டல் எதுவுமில்லை; இந்த வசதிகளுடன் அறைகள் இருப்பது ஒரு ரயிலில். பெயர்; தங்கரதம்! இந்திய ரயில்வேயும், கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நட்சத்திரச் சுற்றுலா ரயில். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் வலம்வந்து கொண்டிருக்கிறது.
ஒரு பெட்டியில் நான்கு சொகுசு அறைகள், இது போல 11 பெட்டிகள். மற்ற பெட்டிகளில் உணவகங்கள், கிச்சன், ஜிம் என்று மொத்தம் 18 பெட்டிகள் தங்க ரதத்தில் இருக்கின்றன; வடக்கே ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தை டூரிஸ்ட்கள் சுற்றிப்பார்க்க டெல்லியிலிருந்து புறப்படும் பேலஸ் ஆன் வீல்ஸ் என்ற சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் முதல் டூரிஸ்ட் சொகுசு ரயில் கோல்டன் சாரியட் என பெயரிடப்பட்டுள்ள தங்க ரதம்தான். இதன் ஒவ்வொரு பெட்டிக்கும் சாளுக்கியா, ஹொய்சாளா, பாமினி, கடம்பா, ராஷ்டிர கூடா, விஜயநகரா என்று வரலாற்றில் இடம்பெற்ற சாம்ராஜ்ஜியங்களின் பெயர்கள “சூட்டப்பட்டிருக்கின்றன. நாற்பது கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தச் சுற்றுலா ரயில்.
இந்த ரயில் இரண்டு வழித்தடங்களில் பயணிக்கிறது. பிரைடு ஆஃப் சௌத் என்று ஏழு நாள் டூரில் பெங்களூரிலிருந்து புறப்பட்டு, மைசூர், கபினி, பேலூர், ஹளேபீடு, சிரவணபெல்குளா, ஹம்பி, பாதாமி என்று கர்நாடகாவில் சுற்றிவிட்டு, கோவாவுக்குப் போய், அங்கிருந்து பெங்களூரூ திரும்பலாம். இன்னொரு சுற்றுலாவுக்குப் பெயர் சதர்ன் ஸ்பௌண்டர். இதுவும் ஏழு நாள் டூர் தான். இதில் பெங்களூரூவில் புறப்பட்டால் தெற்காகப் பயணித்து சென்னை, மகாபலிபுரம், புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, திருவனந்தபுரம், கோவளம், ஆலப்புழா, கொச்சி பார்த்துட்டு மீண்டும் பெங்களூரூ.
பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலுக்கு இந்தியாவுக்கு வருகிற அயல்நாட்டு டூரிஸ்ட்கள் மற்றும் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்புதான். எங்களை இப்படி ஒரு சொகுசு ரயில் சுற்றுலாவைத் திட்டமிடத் தூண்டியது இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய கர்நாடக மற்றும் இந்திய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்துகிறோம். இந்த தங்கரத ரயிலில், எங்கள் ராஜோபசாரத்தில் நீங்கள் ஒருமுறை பயணம் செய்தால், அது உங்கள் ஆயுசுக்கும் மறக்காது என்கிறார் தங்கரத ரயிலின் இயக்குனரான ஸ்ரீனிவாஸ்.
அதெல்லாம் சரி’ கட்டணம் எவ்வளவு என்கிறீர்களா? ஹி… ஹி… இந்தியப் பிரஜைகளுக்கு என்றால் ஏழுநாள் டூருக்கு தனியறை வசதியுடன் ஒருவருக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்தான்(!); அயல்நாட்டு டூரிஸ்ட் எனில் ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரம்.

வெயிலில் சென்றால் கண் எரிகிறதா?

சிலருக்கு வெயிலில் சென்றாலே கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சி என பாடாய்படுத்தும். கோடை காலத்தில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம் தலை சுத்தமாக… சுகாதாரமாக இல்லாமையே! தலையை சுத்தமாக வைத்துக் கொண்டால் கண்களை எப்போதும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம்.

அதேபோல், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். தலையில் பொடுகு மற்றும் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளவும். அப்படி தலை சுத்தமில்லாமல் இருக்கும்பட்சத்தில் கண் இமை, புருவம் ஆகியவற்றில் படிந்து, இமையின் அருகில் இருக்கும் சுரப்பிகளில் சீழ் பிடித்து, வெயிலில் அரிக்க ஆரம்பிக்கின்றன. ஆகையால் தலையை, முகத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும்.

நலம் தரும் நாகலிங்கம்- மூலிகை கட்டுரை

கோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கு தோன்றும் நோய்களின் நிலைக்கேற்ப பல கடவுள் உருவங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மூலிகையை வழிபாட்டு மூலிகையாக பயன்படுத்தி, இறைவனின் பெயரால் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பு செய்யப்பட்டன. இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும்.
இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

சோஷியல் நெட்வொர்க் தளங்கள்

நண்பர்கள் வட்டங்களை உருவாக்கி, கருத்துக்களையும், ஆடல், பாடல் பைல்களையும், படங்களையும் பகிர்ந்து கொள்ள இன்று பல சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இணையத்தில் இயங்குகின்றன. இந்த தளங்கள் மூலம் அரசியல் முதல் ஆன்மிகம் வரையிலான பல கருத்து யுத்தங்கள் நடந்து வருகின்றன. அதே போல நண்பர்கள் வட்டங்களில் ஒருவருக்கொருவர் உதவிகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. வாழ்க்கையில் இணைந்து கொள்ளும் சுபமான திருமணங்களும் இவை மூலம் நடந்தேறுகின்றன.
இந்த சோஷியல் தளங்களில் எவை மக்களிடையே பிரசித்தி பெற்றவை என்ற ஆய்வு மேற்கொள்ள இயலவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு தளமும் ஒரு வகையில் புகழும் பயனும் உள்ளவையாய் உள்ளன. ஆனால் இன்றைய அளவில் பதிந்துள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், கீழே கண்டுள்ளபடி இந்த தளங்கள் இடம் பிடித்துள்ளதாக, அண்மையில் மேற்கொண்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு விக்கிபீடியாவினால் மேற்கொள்ளப்பட்டது.
1. Facebook: ஏறத்தாழ 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இதன் பதிந்துள்ள வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
2. Qzone: இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்த தளம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளவில்லையே என்று கவலைப் பட வேண்டாம். இது சீன மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய தளம். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கும் மேல்.
3. Habbo: இந்த தளத்தை இந்த செய்தி எழுதும்போதுதான் கவனித்தேன். தளம் சென்று பார்த்த பின்னரே, இது முற்றிலும் இந்தக் கால இளைஞர்களுக்கு என்று தெரிந்தது. இதில் 31 கம்யூனிட்டி பிரிவுகள் உள்ளன. ஏற்கனவே 16 கோடியே 20 லட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிந்து உள்ளனர்.
4. My Space: பேஸ்புக் பிரபலமடையும் முன்னர் மை ஸ்பேஸ் தளம் தான் பலரின் விருப்ப சோஷியல் தளமாக இருந்தது. இன்னும் இதற்கென பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இசையை ரசிக்கும், அது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்களுக்கு இது மிகவும் பிடித்த தளம். 13 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இதில் பதிந்துள்ளனர்.
5. Window Livespaces: இது ஒரு பிளாக் கொண்ட சோஷியல் நெட்வொர்க் தளமாகும். 12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கொண்ட இந்த தளத்திற்கு, உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனை இந்த சோஷியல் நெட்வொர்க் பட்டியலில் சேர்த்து கணக்கிடுகையில், வேர்ட் பிரஸ் போன்ற பிளாக்கர்களின் தளத்தை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறுகின்றனர் என்று தெரியவில்லை.
6. Orkut: பிரேசில் மற்றும் இந்தியாவில் மிக அதிகமாகப் பேசப்படும் மற்றும் பயன்படுத்தும் தளம். மற்ற நாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலிருந்து அவ்வளவாக தீவிர உறுப்பினர்கள் இதில் இல்லை. இதனை எழுதுகையில் இத்தளத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டி இருந்தது.
7. Friendster: ஒரு காலத்தில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் என்றால், இதுதான் என்றிருந்தது. இதில் உள்ள 9 கோடிக்கும் மேலான பதிந்த வாடிக்கை யாளர்கள், இன்னும் இதில் செயல்படுகின்றனரா என்பது கேள்விக் குறியே.மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பலர், பேஸ்புக் மற்றும் மை ஸ்பேஸ் தளங்களுக்குத் தாவி விட்டதால் இந்த சந்தேகம் எழுகிறது. ஆனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், இத்தளத்தின் வாடிக்கையாளர்கள் இன்னும் இதன் ரசிகர்களாக உள்ளனர்.
8. hi5: இதன் 8 கோடி உறுப்பினர்கள், பெரும்பாலும் இந்தியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளனர். தாய்லாந்து, ரொமானியா மற்றும் போர்ச்சுகள் நாடுகளில் இது மிகவும் புகழ் பெற்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் இது அவ்வளவாகப் பரவவில்லை.
9. Twitter: இந்த சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் குறித்த தகவல்கள், ஆய்வு குறித்து படிக்க அமர்கையில், இதில் முதல் இடம் பெற்ற தளமாக ட்விட்டர் தான் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் முடிவுகள் வேறுவிதமாக இருந்தன. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில், இந்த தளம் முதல் இடத்தைப் பெறலாம். இத்தள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 8கோடி இருக்கிறார்கள்.
10. VkonTakte: இந்த தளத்தையும் நாம் அறிந்திருக்க முடியாது. ஏனென்றால் இது ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடியே 22 லட்சம். இது தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. சோஷியல் நெட்வொர்க் தளங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், யு–ட்யூப் தளம் ஏன் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று தெரியவில்லை. சேர்த்துக் கொள்ளப் பட்டிருந்தால், அந்த தளம் நிச்சயமாய் இந்த பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும்.