தண்டவாளத்தில் ஒரு தங்கரதம்!


கார்பெட் விரித்த தரை; கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட கட்டில் ; அதில் வண்ணமயமான சில்க் விரிப்பு; அட்டாச்டு பாத்ரூம்; பொழுதுபோக்க பிளாஸ்மா டீ.வி. விதம்விதமாக சினிமா மற்றும் இதர நிகழ்ச்சிகளைக் காண டிவிடி சேனல்கள்; உபரியாக டீ.வி. சேனல்கள்; எழுதப்படிக்க சௌகரியமான மேஜை, நாற்காலி, இருபத்துநாலு மணி நேரமும் மென்மையான இசை, உடற்பயிற்சி செய்ய ஜிம், அவசியமானால் நோய் தீர்க்க ஆயுர்வேத சிகிச்சை மையம்; நீராவிக் குளியல் வகையறா வேண்டுமென்றால் இருக்கிறது ஸ்பா.
இது எந்த நட்சத்திர ஓட்டல் அறை என்று கேட்கிறீர்களா? நட்சத்திர ஓட்டல் எதுவுமில்லை; இந்த வசதிகளுடன் அறைகள் இருப்பது ஒரு ரயிலில். பெயர்; தங்கரதம்! இந்திய ரயில்வேயும், கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நட்சத்திரச் சுற்றுலா ரயில். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் வலம்வந்து கொண்டிருக்கிறது.
ஒரு பெட்டியில் நான்கு சொகுசு அறைகள், இது போல 11 பெட்டிகள். மற்ற பெட்டிகளில் உணவகங்கள், கிச்சன், ஜிம் என்று மொத்தம் 18 பெட்டிகள் தங்க ரதத்தில் இருக்கின்றன; வடக்கே ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தை டூரிஸ்ட்கள் சுற்றிப்பார்க்க டெல்லியிலிருந்து புறப்படும் பேலஸ் ஆன் வீல்ஸ் என்ற சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் முதல் டூரிஸ்ட் சொகுசு ரயில் கோல்டன் சாரியட் என பெயரிடப்பட்டுள்ள தங்க ரதம்தான். இதன் ஒவ்வொரு பெட்டிக்கும் சாளுக்கியா, ஹொய்சாளா, பாமினி, கடம்பா, ராஷ்டிர கூடா, விஜயநகரா என்று வரலாற்றில் இடம்பெற்ற சாம்ராஜ்ஜியங்களின் பெயர்கள “சூட்டப்பட்டிருக்கின்றன. நாற்பது கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தச் சுற்றுலா ரயில்.
இந்த ரயில் இரண்டு வழித்தடங்களில் பயணிக்கிறது. பிரைடு ஆஃப் சௌத் என்று ஏழு நாள் டூரில் பெங்களூரிலிருந்து புறப்பட்டு, மைசூர், கபினி, பேலூர், ஹளேபீடு, சிரவணபெல்குளா, ஹம்பி, பாதாமி என்று கர்நாடகாவில் சுற்றிவிட்டு, கோவாவுக்குப் போய், அங்கிருந்து பெங்களூரூ திரும்பலாம். இன்னொரு சுற்றுலாவுக்குப் பெயர் சதர்ன் ஸ்பௌண்டர். இதுவும் ஏழு நாள் டூர் தான். இதில் பெங்களூரூவில் புறப்பட்டால் தெற்காகப் பயணித்து சென்னை, மகாபலிபுரம், புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, திருவனந்தபுரம், கோவளம், ஆலப்புழா, கொச்சி பார்த்துட்டு மீண்டும் பெங்களூரூ.
பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலுக்கு இந்தியாவுக்கு வருகிற அயல்நாட்டு டூரிஸ்ட்கள் மற்றும் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்புதான். எங்களை இப்படி ஒரு சொகுசு ரயில் சுற்றுலாவைத் திட்டமிடத் தூண்டியது இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய கர்நாடக மற்றும் இந்திய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்துகிறோம். இந்த தங்கரத ரயிலில், எங்கள் ராஜோபசாரத்தில் நீங்கள் ஒருமுறை பயணம் செய்தால், அது உங்கள் ஆயுசுக்கும் மறக்காது என்கிறார் தங்கரத ரயிலின் இயக்குனரான ஸ்ரீனிவாஸ்.
அதெல்லாம் சரி’ கட்டணம் எவ்வளவு என்கிறீர்களா? ஹி… ஹி… இந்தியப் பிரஜைகளுக்கு என்றால் ஏழுநாள் டூருக்கு தனியறை வசதியுடன் ஒருவருக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்தான்(!); அயல்நாட்டு டூரிஸ்ட் எனில் ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரம்.

%d bloggers like this: