Advertisements

Daily Archives: மே 18th, 2010

கோடையில் உடம்பை குளிர வையுங்கள்

கோடையின் பாதிப்பால் எளிதாக சில நோய்களும் வந்து விடுகின்றன. கோடைக்கேற்ற உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைபடும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளை போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.

காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டிவிடும். அப்புறம் என்ன… அரிப்பு தான்! வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள `குவர்சடின்’ என்று வேதிபொருள் அதற்கு உதவுகிறது.

இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. அதனால், இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

காய்கறிகளைக் கொண்டு `சூப்’ தயார் செய்து, அதை குளிர வைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள், அமெரிக்க டாக்டர்கள். வாழைபழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். வெயிலின் தாக்கம் தாங்காமல் நாம், குளிராக எது கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடுவோம். நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டுதான் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரி தான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. ஆரோக்கியம் கருதி இவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்பது இன்னொரு ஆரோக்கிய ரகசியம்.

வெளியில் வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால் சுத்தமான குடிநீரை கையோடு கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கபடும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.

தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். வெயிலின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான உங்கள் வறண்ட சருமம் பொலிவு பெறும்.

தினமும் காலை, மாலை இருவேளை குளியுங்கள். காலைக்குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, நன்றாக ஊறவிட்டு, அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறையும். மாலையில் எண்ணைக்குளியல் ஆகவே ஆகாது.

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி விளக்கெணெயை தடவி விடுங்கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.

Advertisements

நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்

13 1/2 கோடி பரிசு அறிவிப்பு மனிதன் நிலவில் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு எத்தனையோ விண்வெளி ஓடங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

தற்போது ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ஒரு ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான ரோபோ தயாராகிவிட்டது. காஸ்டல்டிபெல்ஸ் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி பள்ளி மாணவர்கள் குழு இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது.

`பிக்கோ ரோவர்’ என்பது இந்த ரோபோவின் பெயராகும். இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இருக்கும்.

இந்த ரோபோவானது கோளவடிவில் இருந்தாலும் பூமிபோல 33 டிகிரி சாய்வாக இருக்கும். இதன் மேல் அரைக்கோளத்தில் இருக்கும் கேமரா சுழன்று படம் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்பாகமும், சக்கரங்களும் ரோபோ எடையை சமநிலைப்படுத்தும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பி வைக்கும். இந்த ரோபோ எப்போது நிலவுக்கு கிளம்புகிறது என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதற்கு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? 131/2 கோடி ருபாய்.

ரோபோ நிலவுக்குச் சென்று வெற்றிகரமாக செயல்பட்டு அது அனுப்பும் புகைப்படம் மற்றும் தகவல்கள் பூமிக்கு கிடைத்துவிட்டால் பரிசுத்தொகை மாணவர் குழுவுக்கு வழங்கப்படும். `கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ்’ என்று இந்த பரிசுத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அரசுசாரா அமைப்பும் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.