Daily Archives: மே 25th, 2010

கழுத்து வலி…

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.

முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில்  ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ்  என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.

இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

சலிப்பு தட்டாமல் படிக்கலாம்!

படிப்பு என்றாலே மாணவப் பருவத்தில் லேசாக சலிப்பு எட்டிப் பார்க்கிறது. பெற்றோர்களின் அதீத அக்கறையால் நீண்ட நேரம் புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவர்கள் எளிதில் சோர்வடைந்து விடுகிறார்கள்.

அதே நேரத்தில் ஆர்வத்துடன் படித்த பாடங்களும் சிறிது நேரத்தில் மறந்து அவதிப்படும் மாணவர்களும் இருக்கிறார்கள். பாடங்கள் மறக்காமல் இருக்கவும், சலிப்புத் தட்டாமல் படிக்கவும் புதிய வழி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுதான் `தூங்கிக் கொண்டே படிக்கும்’ வழி.

`தூங்காமல் படித்தால்தானே முன்னேற முடியும் என்று நாம் நினைக்கிறோம். அது என்ன, தூங்கிக் கொண்டே படிப்பது’ என்று கேட்கிறீர்களா?

ஆசிரியர் சொல்லித் தரும் பாடங்களை `ரெக்கார்டிங்’ செய்து வைத்துக் கொண்டு தூங்கும் நேரத்தில் கேட்டுக் கொண்டே படுத்தால் நன்றாக மனப்பாடம் ஆகிறது என்று புதிய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் எளிதாக மீண்டும் நினைவுபடுத்தவும் வசதியாக இருக்கிறதாம்.

அத்துடன் மெல்லிசையும் சேர்ந்து கொண்டால் அருகில் படுத்திருப்பவரின் இடைஞ்சல் தரும் குறட்டை சத்த தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியான தூக்கமும் கிடைக்கிறது. பரீட்சைக்காக மாணவர்கள் விழுந்துவிழுந்து மனப்பாடம் செய்வதை தவிர்க்க இது உதவும் என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். இங்கிலாந்தில் இந்தக் கருவி விற்பனைக்கு கிடைக்கிறது.

இன்று செல்போனில் பாடல் கேட்டுக் கொண்டே தூங்கும் பழக்கம் பலருக்கு ஒட்டிக் கொண்டுவிட்டது. அந்த நேரத்தில் பாடங்களை ரெக்கார்டிங் செய்து கேட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படுமே!

எக்ஸெல் டிப்ஸ்-பைலை மறைக்கும் டிப்ஸ்

பைலை மறைக்கும் டிப்ஸ்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மிக முக்கிய ரகசியமான ஒர்க் புக் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அதைப் பார்க்கக் கூடாத ஒருவர் உங்கள் அருகே வருகிறார். உடனே என்ன செய்வீர்கள்? பைலை மினிமைஸ் செய்வீர்களா? அவரும் எக்ஸெல் புரோகிராமில் பணியாற்ற முயன்றால் இந்த பைல் அங்கிருப்பது தெரிய வருமே. அப்படியானால் அவர் கண்களில் இருந்து எப்படி பைலை மறைப்பது? இதற்கு ஓர் எளிய வழி உள்ளது. உடனே மெனு பாரில் Window என்ற பகுதியில் தட்டி அதில் கிடைக்கும் மெனுவில் Hide என்பதனைக் கிளிக் செய்திடுங்கள். உடனே அந்த ஒர்க்புக் மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். சரி, அதன் பின்னர் நீங்கள் தனியாக இருக்கையில் அந்த பைல் வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்? மீண்டும் விண்டோ மெனு பெற்று Unhide என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். உங்களுக்கு வேண்டிய மறைக்கப்பட்ட பைல் எதிரே டிக் செய்து திறக்கப்பட்டு நீங்கள் பணியாற்றலாம்.
இப்போது உங்கள் மனதில் ஒரு சந்தேகம் தோன்றலாம். மறைத்து வைத்த பைலை மீண்டும் திறக்காமல் எக்ஸெல் புரோகிராமையும் கம்ப்யூட்டரையும் மூடிவிடுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் மறைக்கப்பட்ட பைல் என்னவாகும் என்றுதானே கேள்வி எழுகிறது? பைலைத் திறக்க கட்டளை கொடுத்தவுடன் அந்த பைல் திறக்கப்பட்டு உடனே மறைக்கப்படும். இந்நிலையில் மெனு பாரில் Window பெற்று Unhide என்பத னைக் கிளிக் செய்தால் மீண்டும் பைல் பணியாற்றக் கிடைக்கும்.
ஆப்ஜெக்ட் கலர் மாற்றம்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் ஒன்றை அமைத்த பின்னர், அல்லது எக்ஸெல் ட்ராயிங் டூல்ஸ் பயன்படுத்தி ஓர் உருவை அமைத்த பின்னர், அதன் கோடுகளின் வண்ணத்தை மாற்ற நீங்கள் திட்டமிடலாம். இதனை வேர்ட் தொகுப்பில் உள்ளது போல எளிதாக மேற்கொள்ள முடியாது எனப் பலர் எண்ணுகிறார்கள். எக்ஸெல் தொகுப்பிலும் இது மிக மிக எளிது. இந்த வசதி எங்கே, எப்படி தரப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பைப் பொறுத்தவரை, அனைத்து கிராபிக்ஸ் படங்களிலும் கோடுகளைத் தெளிவாகவும், வேகமாகவும் பயன்படுத்தலாம். ஓர் உருவை அமைக்க, அதன் வெளிப்புற அளவை நிர்ணயம் செய்திட அவை பயன்படுகின்றன. இவற்றை வைத்து பலர் அம்புக் குறிகளைக் கூட அமைக்கின்றனர். இவற்றை அமைக்கையில் உருவங்களின் கோடுகள் அல்லது அமைப்புகளை, நீங்கள் விரும்பும் வண்ணத்தைத் தந்திட, எக்ஸெல் வழி தருகிறது. அதே போல உங்களுக்கு திருப்தி ஏற்படும் வரை, இந்தக் கோடுகளின் வண்ணங்களை மாற்றி மாற்றி அமைக்கலாம். அதற்கான வழிகளைக் காணலாம். நீங்கள் எக்ஸெல் 2007க்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.
1. முதலாவதாக, ட்ராயிங் டூல்பாரினை ஒர்க் ஷீட் மேலாகக் கொண்டு வரவும்.
2. எந்த ஆப்ஜெக்ட்டுக்கான கோடுகளின் வண்ணங்களை மாற்ற வேண்டுமோ, அந்த ஆப்ஜெக்ட் மீது ஒரு முறை கிளிக் செய்திடவும். இப்போது அந்த ஆப்ஜெக்ட் செலக்ட் செய்யப்பட்டிருக்கும்.
3. இனி, ட்ராயிங் டூல்பார் மீது கிளிக் செய்திடவும். கீழாக உள்ள லைன் கலர் டூலில் என்ன கலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதோ, அந்த கலரில் இந்த கோடுகள் இருப்பதனைப் பார்க்கலாம்.
4. வேறு ஒரு கலர் இந்த கோடுகளுக்கு அமைக்க எண்ணினால், டூலின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் வண்ணக் கலவைகளில், நீங்கள் விரும்பும் கலரைத் தேர்ந்தெடுக்கவும். கோடுகளின் வண்ணம் மாறுவதனைக் காணலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எக்ஸெல் 2007 தொகுப்பில், ட்ராயிங் டூல்பார் தரப்படவில்லை. எனவே இத்தொகுப்பில் வேறு வழியில் இதற்கு முயற்சிக்க வேண்டும்.
1. மேலே சொன்ன வகையில், முதலில் ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில், பார்மட் டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
3. ரிப்பனில் உள்ள ஷேப் ஸ்டைல்ஸ் (Shape Styles) குரூப்பில், ஷேப் அவுட்லைன் டூலை அடுத்து உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும்.
4. கீழாக வரும் வண்ணக் கட்டங்களில் உள்ள வண்ணங்களில், உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால், கோடுகளின் வண்ணங்கள் மாறுவதனைக் காணலாம்.
டூல்பார் பைல்
எக்ஸெல் தொகுப்பில், நாம் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கான தேவைகளுக்கேற்ப பார்மட்டிங் வசதிகளை மேற்கொள்ளலாம். மெனுக்கள், டூல்பார்கள் மற்றும் பிற யூசர் இன்டர்பேஸ்களை தேவைக்கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால், எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் பொதுப்படையான தோற்றத்தினையே மாற்றும் அளவிற்கு நமக்கு எக்ஸெல் சுதந்திரம் அளிக்கிறது.
இத்தொகுப்பில், நாம் மேற்கொள்ளும் அனைத்து பார்மட்டிங் மாற்றங்களையும் Excel.xlb என்ற பைலில் எழுதி வைக்கிறது. இந்த பைலின் பெயர், உங்களிடம் உள்ள எக்ஸெல் தொகுப்பின் பதிப்புக்கேற்ப மாறும். எக்ஸெல் 2002 தொகுப்பில், இது Excel10.xlb எனவும், எக்ஸெல் 2003 தொகுப்பில் இது Excel11.xlb எனவும் இருக்கும். ஆனால் பைல் எக்ஸ்டன்ஷன் பெயர் .xlb என்றவாறே இருக்கும். ஒவ்வொரு முறை நீங்கள் எக்ஸெல் தொகுப்பினை விட்டு வெளியேறுகையில், இந்த பைல் அப்டேட் செய்யப்படும். மீண்டும் தொடங்குகையில் அனைத்து மாற்றங்களும் இயக்கப்பட்டுத் தயாராக இருக்கும். இந்த துணைப் பெயரில் வேறு எந்த பைலும் உருவாக்கப்படமாட்டாது என்பதால், இதனை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதனால், பிற்காலத்தில் எப்போதாவது இந்த பார்மட்டிங் மாற்றங்களை உள்ளடக்கிய பைல் கரப்ட் ஆகிப் போனால், இதன் பேக் அப் காப்பியை மீண்டும் பதிவு செய்து, நம் ஒர்க்ஷீட்களை பழைய நிலையிலேயே இயக்கலாம்.
இன்னொரு பயனுள்ள டிப்ஸ் தரட்டுமா! நீங்கள் வேறு ஒரு நண்பரின் கம்ப்யூட்டரில் எக்ஸெல் பயன்படுத்தப் போகும்போது, இந்த பைலை அதில் காப்பி செய்து பயன்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் போலவே அது இயங்கும். அதற்கு முன் அந்த கம்ப்யூட்டரில் உள்ள இந்த பைலை, வேறு ஒரு டைரக்டரியில் காப்பி செய்துவிட்டு, பணி முடித்த பின், மீண்டும் அதனைக் காப்பி செய்வது நல்லது. அப்போதுதான் நண்பர்களுக்குள் பிரச்னை வராமல் இருக்கும். இதற்கு இன்னொரு முன்னெச்சரிக்கையும் தேவை. இரண்டு கம்ப்யூட்டர்களில் இருக்கும் எக்ஸெல் தொகுப்பும் ஒரே பதிப்பாக இருக்க வேண்டும்.
புதிய போல்டரில் ஒர்க்ஷீட் சேவ் செய்திட
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்று உருவாக்கிய பின், அது மற்ற வழக்கமான ஒர்க்ஷீட்களிலிருந்து வேறுபட்டு இருப்பதனால், அதனை புதிய போல்டர் ஒன்றில் சேவ் செய்திட திட்டமிடுகிறீர்கள். இதற்கு தனியே விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, தனி போல்டர் ஒன்றை உருவாக்கிப் பின்னர், அந்த போல்டரில் இதனை சேவ் செய்திட வேண்டியதில்லை. ஒர்க்ஷீட்டை சேவ் செய்திட முயற்சிக்கையில், முதலில் கண்ட்ரோல் + எஸ் (Ctrl+S) கொடுக்கவும். அடுத்து பட்டனில் கிளிக் செய்திடவும்; அல்லது ஆல்ட் + 5 (Alt+5) அழுத்தவும். இங்கு புதிய போல்டர் பெயரினை டைப் செய்திடவும். அடுத்து ஒர்க்ஷீட்டிற்கான புதிய பைல் பெயரை டைப் செய்து, என்டர் அழுத்தினால், அந்த ஒர்க்ஷீட் புதிதாக உருவாக்கப்பட்ட போல்டரில் பதியப்படும்.

ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன்

இருதய நோய் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த நோய்க்கு புதிய புதிய சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.

இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய `பைபாஸ் ஆபரேஷன்’ நடத்தப்படுகிறது. இதுதவிர இருதய துடிப்பு சீராக இல்லாமல் இருப்பவர்களுக்கும் சிக்கலான ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன.

குறிப்பாக இருதய துடிப்பு சிலருக்கு குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும். இதை சரிசெய்யவும், இருதயத்துக்கு சீராக ரத்தம் செல்லவும் மிகச்சிறிய குழாய் போன்ற மருத்துவ உபகரணத்தை இருதயத்தில் பொருத்துவார்கள்.

ஆபரேஷன் நடக்கும் போது இந்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை எக்ஸ்ரே படம் பிடித்து பார்ப்பார்கள். அதாவது எக்ஸ்ரே கருவி முலம் இந்த ஆபரேஷனை தொடர்ச்சியாக படம் பிடித்து கண்காணிப்பார்கள். அப்போது சுமார் 250 க்கும் மேற்பட்ட எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படும். இதனால் இந்த ஆபரேஷனை செய்யும் டாக்டர் மற்றும் நர்சுகள் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

இதை தவிர்க்க ரிமோட் கண்ட்ரோல் முலம் இந்த ஆபரேஷனை செய்ய எந்திரக் கை ஒன்றை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வடிமைத்துள்ளனர். `ரிமோட் கேதீட்டர் மேனிபுலேசன் சிஸ்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எந்திரக் கை இங்கிலாந்தில் உள்ள ஜிலன் பீல்டு மருத்துவமனையில் உள்ளது. இங்கு இந்த எந்திரக்கையை பயன்படுத்தி உலகிலேயே முதன்முதலில் 70 வயதான கென்னத் குராக்கர் என்பவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

நோயாளி ஆபரேஷன் தியேட்டரில் இருக்க, அவர் அருகில் எந்திரக்கை தயாராக இருந்தது. டாக்டர் ஆன்ட்ரே தலைமையிலான குழுவினர் பக்கத்து அறையில் இருந்தபடி எந்திரக்கையை ரிமோட் முலம் இயக்கி ஆபரேஷன் செய்தனர். இந்த எந்திரக்கையில் உள்ள கருவிகள் முலம் நோயாளின் உடலில் மிகச்சிறிய அளிவில் துளையிடப்பட்டு உடலுக்குள் சிறிய கேமிரா, மின்விளக்கு, அறுவை சிகிச்சை செய்யும் கத்தி மற்றும் பிற உபகரணங்கள் செலுத்தப்பட்டன. உடலுக்குள் செலுத்தப்பட்ட கேமிரா முலம் உறுப்புகளுக்குள் இருக்கும் பாதிப்பை டெலிவிஷன் திரையில் டாக்டர் பார்த்தபடியே ஆபரேஷன் செய்தார். இருதயத்தை சுற்றி இருந்த ஜவ்வுப்படலம் காரணமாக இருதயதுடிப்பு ஒழுங்கற்ற நிலையில் இருந்ததை ஆபரேஷன் முலம் சரிசெய்தனர்.

தலைவலிக்கு தலையாய காரணி!

`நோய் நாடி நோய் முதல் நாடி….’ என்று கூறுகிறார் வள்ளுவர். அதாவது நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுத்தால், நோயை முற்றிலும் நீக்கலாம் என்பதே அதன் அர்த்தம். அப்படி பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கும் தலைவலியின் காரணியை அறிந்து கொண்டால் அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். மலச்சிக்கல் இருந்தால் தலைவலி உண்டாகும். மன உளைச்சல், உறக்கமின்மை, படபடப்பு இருந்தால் வரும். காது, முக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற்றுக்களாலும் தலைவலி வரும். தலையில் ஏதாவது அடிபட்ட காயம் இருந்தாலும் தலை வலிக்கும். கண்ணின் குறைபாடுகளும் தலை வலியாய் பிரதிபலிக்கும். தொடர்ந்து மது மற்றும் போதை மருந்துகளை உபயோகித்தால் கடுமையான தலைவலி ஏற்படும். நோய்க்காக நாம் சாப்பிடும் மருந்துகளின் ஒவ்வாமையால் தலைவலி வரும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், கருவுற்ற போதும் தலைவலி ஏற்படும். கருத்தடை மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகித்தாலும் தலைவலி உண்டாகும். பட்டினி கிடப்பது, உடம்பில் சர்க்கரை சத்து குறைந்தாலும் தலைவலி ஏற்படும்.

வெப்பம் தணிக்கும் வெண்டை


வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.
கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது. மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் நீர்ச்சத்து விரயமாவது தடுக்கப்படுகிறது. செல்களிலுள்ள திரவமும், செல்லைச் சுற்றியுள்ள திரவமும் சமச்சீரான நிலையை அடைவதால் உடலின் வெப்பம் தணிந்து, எப்பொழுதும் குளுமையாக உணர்கிறோம்.
உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.
இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.
ஏபிலோமோசஸ் எஸ்குலன்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பிஞ்சு வெண்டைக்காயே, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.
கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும். பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபகசக்தியை நீடிக்கச் செய்யலாம்

பயனுள்ள இலவச புரோகிராம்கள்

ஒரு குறிப்பிட்ட வகை வேலையை, கம்ப்யூட்டரில் மேற்கொள்ள, நாம் ஒரே புரோகிராமினையே பயன்படுத்துகிறோம். அதற்குப் பழகிப் போனதால், மற்ற புரோகிராம்களை, அவை கூடுதல் வசதி,எளிமை மற்றும் வேகம் ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில்லை. சில வேளைகளில், பல புரோகிராம்களை, விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதே புரோகிராம் செய்து முடிக்கும் வேலையை, இலவசமாய்க் கிடைக்கும் சில புரோகிராம்கள் செய்கின்றன என்று அறியாமல் இருக்கிறோம். இந்த கட்டுரையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கு இணையான, இலவச புரோகிராம்களும், அவற்றின் தன்மைகளும் பட்டியலிடப்படுகின்றன. இந்த புரோகிராம்களை அவற்றின் மூலம் மேற்கொள்ளும் வேலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு தரப்படுகின்றன.

1. ஆபீஸ் சாப்ட்வேர்: இந்த தலைப்பு மிக எளிமையாக இருந்தாலும், ஆபீஸ் சாப்ட்வேர் மூலம் எந்தவிதமான கற்பனைத் திறன் கொண்ட பணியையும், மேற்கொள்ளலாம் என்பது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். டெக்ஸ்ட் அமைக்கலாம்; நம் கற்பனைக்கேற்ப ஆப்ஜெக்ட்களைப் பதிக்கலாம்; கிராபிக்ஸ் மூலம் நம் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்; இன்னும் பல சிக்கலான பணிகளை மிக எளிதாக மேற்கொள்ளலாம். மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு நாம் வாங்கும் பதிப்பின் அடிப்படையில் ரூ.3,000 முதல் ரூ. 12,000 வரையிலான விலையில் உள்ளது. இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம்தான் முன்னோடி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பிரிவில் உள்ள இலவச சாப்ட்வேர்களைப் பார்க்கலாம்.

1.1 ஓப்பன் ஆபீஸ் (Open Office) : மிக அருமையான இலவச அப்ளிகேஷன் புரோகிராம். வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன், கிராபிக்ஸ், டேட்டா பேஸ் மற்றும் இன்னும் பல வகையான வேலைகளை இதிலும் மேற்கொள்ளலாம். இது பல மொழிகளில் கிடைக்கிறது. அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் செயல்படுகிறது. லினக்ஸ் இயக்கத்திலும் செயல்படும். சன் சாப்ட்வேர் நிறுவனம் தயாரித்து அளிக்கும் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்தால், நிச்சயம் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தும் எண்ணம் வரும். இதில், டேட்டா, இன்டர்நேஷனல் பார்மட்டில் அமைக்கப்படுவதால், அவற்றை அப்படியே மற்ற புரோகிராம்களிலும் பயன்படுத்தலாம். பல ப்ளக் இன் புரோகிராம்களும் இந்த தொகுப்பிற்குக் கிடைக்கின்றன. இவற்றிற்கான தகவல்களுக்கு http://extensions.services. openoffice.org// என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

1.2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி (IBM Lotus Symphony) : ஓப்பன் ஆபீஸ் தொழில் நுட்பத்தில் உருவான மிகச் சிறப்பான வசதிகளைத் தரும் இன்னொரு ஆபீஸ் சாப்ட்வேர். இதனை உருவாக்கித் தருவது ஐ.பி.எம். நிறுவனம். ஆனால் ஓப்பன் ஆபீஸ் பயன்படுத்தப் படுவது போல இது பயன்படுத்தப்படுவதில்லை. தரும் வசதிகளில் எந்த விதத்திலும் இது குறைந்ததில்லை. அடிப்படையில் இது Lotus Symphony Documents, Lotus Symphony Spreadsheets, Lotus Symphony Presentations ஆகிய மூன்று வசதிகளைத் தருகிறது. மேலும் தகவல்களுக்கு இணையத்தில் http://symphony .lotus.com/software/lotus/symphony/ plugin.nsf// என்ற முகவரிக்குச் செல்லவும்.

1.3. நியோ ஆபீஸ் (Neo Office) : இது மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மட்டுமே. மேக் சிஸ்டத்தில் வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் பிரசன்டேஷன் புரோகிராம்கள் ஆகியவற்றை இந்த தொகுப்பு தருகிறது. இது ஓப்பன் ஆபீஸ் கட்டமைப்பில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. போட்டோ எடிட்டிங்: மொபைல் போன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் இந்நாளில், மொபைல் போன் கேமராக்களினால், போட்டோக்கள் எடுப்பது சிறுவர்களுக்குக் கூட ஒரு கலை ஆர்வம் தரும் விஷயமாகிவிட்டது. இதனால், போட்டோ எடிட்டிங் மற்றும் அவற்றை நிர்வகிப்பது ஓர் அன்றாடத் தேவை ஆகிவிட்டது. போட்டோ எடிட்டிங் என்று வருகையில், கம்ப்யூட்டர் உலகில் அடோப் போட்டோ ஷாப் தன்னிகரில்லாத ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேராக இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கான விலை ரூ.7,000 மற்றும் மேலாக உள்ளது. இந்த இடத்தில் பதிலியாக இருக்கக் கூடிய இலவச புரோகிராம்களைப் பார்க்கலாம்.

2.1. பெயிண்ட் டாட் நெட் (Paint.net): மைக்ரோசாப்ட் தரும் பெயிண்ட் புரோகிராமிற்கு இணையான வசதிகளை தரும் புரோகிராம் இது என்று கூறலாம். தொடக்கத்தில் இதனை மைக்ரோசாப்ட் ஆதரித்து, உருவாவதற்கு உதவி அளித்தது. போட்டோ எடிட்டிங் மேற்கொள்ள தேவையான அனைத்து ப்ளக் இன் வசதிகளையும் தருகிறது. பெயிண்ட் டாட் நெட் இயங்க, மைக்ரோசாப்ட் தரும் டாட் நெட் புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கும், புரோகிராமிற்கும் http://www.getpaint.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தை நாடவும்.

2.2 ஜிம்ப் (GIMP): இந்த சுருக்குச் சொல் GNU Image Manipulation Program என்பதன் சுருக்கமாகும். போட்டோ டச் செய்வதற்கும், இமேஜ்களை எடிட் செய்வதற்கும் வெளியான முதல் இலவச புரோகிராம் இதுதான். அதிக செலவில் போட்டோ எடிட்டிங் டூல்களை வாங்க முடியாமல், மக்கள் தவித்த போது, இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு, பலரால் பயன்படுத்தப்பட்டது. இந்த புரோகிராமில் வழங்கப்பட்ட டூலான “Content Aware Fill” என்பதுதான், பல ஆண்டுகள் கழித்து, இப்போது அடோப் சி.எஸ். 5 சாப்ட்வேர் தொகுப்பில் “Resynth” ப்ளக் இன் டூலாகத் தரப்பட்டுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க எண்ணினால் http://www.vizworld.com /2010/05/comparingphotoshopcs5contentawarefillgimpresynth/ என்ற முகவரியில் உள்ள தளத்தைப் படிக்கவும். ஜிம்ப் புரோகிராம் பெற http://www.gimp.org/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

2.3. பிகாஸா (Picasa): உங்களுடைய நோக்கம் போட்டோ எடிட்டிங் என்றால், நிச்சயம் இந்த புரோகிராமினை உங்கள் பார்வையில் இருந்து நீங்கள் தவறவிடக்கூடாது. http://www.picasa.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். மிக எளிமையான, அதிகத் திறன் கொண்ட புரோகிராம். இந்த புரோகிராம் கூகுளின் பிகாஸா ஆன்லைன் போட்டோ ஷேரிங் புரோகிராமுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிகாஸா புரோகிராம் மூலம், எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை நேரடியாக இணைய தளத்தில் ஏற்றலாம்.

2.4. இர்பான் வியூ (Irfanview): http://www.irfanview.com/ என்ற முகவரியில் கிடைக்கும் இந்த புரோகிராம் மூலமும் போட்டோ எடிட்டிங் பணியை மேற்கொள்ளலாம். பிகாஸா மூலம் மேற்கொள்ள முடியாத சில போட்டோ எடிட்டிங் பணிகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.