Daily Archives: மே 26th, 2010

40 கிலோ எடையில் மொபைல் போன்!

இன்று, அனைவரது கை களிலும், சில மில்லி கிராம் எடையில், தவழும் மொபைல் போன்கள், ஆரம்ப காலத்தில், தூக்க முடியாத அளவிற்கு, “வெயிட்’டாக இருந்தது என்றால், நம்ப முடி கிறதா?
ஆரம்ப காலத்தில் டாக்சிகள், போலீஸ் வாக னங்கள், ஆம்புலன்ஸ்களில் மட்டுமே, “மொபைல் போன்’களின் முன்னோடியாக கருதப்படும், “ரேடியோ போன்கள்’ பொருத்தப்பட்டன; ஆனால், அவற்றில் இருந்து, பிற போன்களை தொடர்பு கொள்ள முடியாது.
“லார்ஸ் மேக்னஸ் எரிக்சன்’ என்பவர், தன் காரில் டெலிபோனை 1910ல் பொறுத்தினார். ஆனால், இது, “ரேடியோ போன்’ அல்ல. காரில் எங்காவது செல்வார்; டெலிபோன் இணைப்பு ஒயர்கள் இருக்கும் இடத்தில், தன் காரை நிறுத்தி, “நேஷனல் டெலிபோன் நெட்வொர்க்’ உடன் தொடர்பு கொண்டு, தான் பேச வேண்டிய இடத்திற்கு பேசுவார்.
ஐரோப்பாவில், பெர்லின்-ஹம்பர்க் நகரங்களுக்கிடையில் இயங்கிய பாசஞ்சர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில், ரேடியோ போன் 1926ல் அமைக்கப்பட்டது; அதே ஆண்டில், ஆகாய விமானங்களிலும் பொருத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மன் டேங்க்குகளிலும், 1950ம் வாக்கில், “ரைன்’ என்ற கப்பலிலும், ரேடியோ டெலிபோன்கள் பொருத்தப்பட்டன.
காரில் இருந்தபடியே மற்ற போன்களுக்கு தொடர்பு கொள்ளக் கூடிய வகையில், முழுமையான, “ரேடியோ போன்கள்’ 1956ல் ரஷ்ய இன்ஜினியர்கள் ஷாப்ரோ, சகார்ஷென்கோ ஆகியோர் கண்டுபிடித்தனர். இவற்றிலிந்து 20 கி.மீ., சுற்றளவில் தொடர்பு கொள்ள முடியும்.
தற்போதைய மொபைல் போன்களின் முன்னோடி, 1947ல் கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் எச் ரிங், ரே யெங், பெல் லேப்ஸ் ஆகிய இன்ஜினியர்கள், அறுகோண மொபைல் போன்களை வாகனங்களில் பொருத்தினர். இதற்காக, தனி டவர்களை அமைத்து, “சிக்னலை’ வாகனங்களில் பெறும் வகையில் வடிவமைத்திருந்தனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஜினியராக, லியோனிட் குப்ரியானோவிச், மாஸ்கோவில், போர்டபிள் மொபைல் போனை 1957ல் அமைத்தார். பின்னர் இது, “எல்கே-1 ரேடியோ போன்’ என்றழைக் கப்பட்டது. முன்னர் வடிவமைத்ததை விட, கையடக்கமான மொபைல் போனாக இருந்ததுடன், பிற போன்களை தொடர்பு கொள்ளும் டயலிங் வசதியும் இருந்தது. இதன் மொத்த எடை மூன்று கிலோ; 20 முதல் 30 முதல் கி.மீ., வரை, இதிலிருந்து தொடர்பு கொள்ள முடியும். தொடர்ந்து 30 மணி நேரம் பேச முடியும். 1958ல், பாக்கெட் சைஸ் மொபைல் போன்களை தயாரித்தார்; இதன் எடை 500 கிராமாக இருந்தது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 1950ல் மொபைல் போன்கள் வந்தன. எரிக்சன் உருவாக்கிய, “எம்.டி.ஏ., மொபைல் போன், 1956ல் ஸ்வீடன் நாட்டில் அறிமுகப்படுத்தப் பட்டது; இதன் எடை 40 கிலோ. பின்னர், 1965ல் ஒன்பது கிலோ எடையாக குறைக்கப்பட்டது. கார்களில் மட்டுமே பொருத்தப்பட்டதால், எடை ஒரு பிரச்னை யாக இருந்ததில்லை.
ஐரோப்பாவில் முதன் முதலில் மொபைல் போன் உபயோகித்தவர் என்ற பெருமையை இங்கிலாந்து மன்னர் பிலிப் பெற்றார். 1957ல் தன் ஆஸ்டன் மார்டின் காரில் பொருத்தி, மகாராணி யுடன் பேசு வதற்காக பயன்படுத்தினார். அப்போதே காதலியுடன் பேச, மொபைல் போன் பயன்பட்டுள்ளது!
நவீன மொபைல் போன்களுக்கான தொழில்நுட்பம் 1970ல் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டது. இதுவரை கார்களில் மட்டுமே பொருத்தப்பட்ட மொபைல் போன்களை, கைகளில் எடுத்துச் செல்லும் வகையில், மோட்டராலோ கம்பெனி ஆராய்ச்சியாளர் மார்ட்டின் ஹூப்பர் உருவாக்கினார். முதல் அழைப்பை, ஏப்ரல் 3, 1973ல், தன் சக போட்டியாளர் களான ஜோயல் ஏஞ்சல் மற்றும் பெல் லேப்ஸ் ஆகியோரிடம் பேசினார்.
பொதுமக்கள் பயன் பாட்டிற்கான முதல் ஜென ரேஷன் (1ஜி) மொபைல் போன் 1979ல் ஜப்பானில், என்.டி.டி., நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் பின், படிப்படியாக, மொபைல் போன்கள் உலகம் முழுவதும் பரவி, தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று கம்ப்யூட்டரையே கையில் கொண்டு சேர்க்கும் சாதனமாக, பிர மாண்ட வளர்ச்சி பெற்றுள் ளது.
இன்று, மொபைல் போனில் சினிமா பார்க் கலாம்; கேம்ஸ் ஆட லாம்; “மொபைல் பேங்கிங்’ வசதி உள்ளது. பிடித்தமானவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்; தலைமறைவு குற்றவாளி களையும் கண்டறியலாம்; இவ்வளவு ஏன்… காதலர்களுக்கு தூது செல்லும் நவீன, “புறா’வாகவும் மாறி விட்டதே!

மகிழ்ச்சிக்கு 8

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பிங்கள். அது உங்களுக்கு புத்துயிர்பையும், புத்துணர்வையும் ஊட்டும். வாழ்க் கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்து பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங் கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ் க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே…
1.சரியான சாப்பாட்டு நேரம்

ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.

2.போதுமான உறக்கம்

தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தே வை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.

3.தூய்மை நேரம்

தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்’ மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மை பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக் குங்கள்.

4.அன்றாட வேலைகள்

அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடி யாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையை பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்’ செய்யபட வேண்டும்.

5.உங்கள் விருப்பத்துக்கு…

நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலேயே ழுழ்கி போய் விடுங்கள்.

6.ஆதரவுக் கரங்கள்

நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.

7.தனிப்பட்ட நேரம்

உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.

8.இந்தக் கணம் முக்கியம்

நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என் றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.

கற்பக மூலிகை துளசி…

கற்பம் என்பது உடலை கல் போல ஆக்குவது. அப்படிப்பட்ட மூலிகைகள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் துளசி பற்றி தெரிந்துகொள்வோம்.

துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.

· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் – 5 கிராம்

கீழாநெல்லி – 10 கிராம்

ஓமம் -5 கிராம்

மிளகு – 3

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

கொய்யா… மாதுளை..விளாம்பழம்,பிருன்ஸ் பழம்..!

கத்திரி வெயில் சருமத்திற்கு இஸ்திரி போட்டது போல் உடம்பில் சூடு பறக்கிறது. இந்த சமயத்தில் நாம் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பழங்கள் தான். இதை திரவ உணவாக ஜூஸாக சாப்பிட்டாலும் நல்லது. அல்லது பழமாக சாப்பிட்டாலும் நல்லது. உடல் சூடும் குறையும். வயிற்றுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும், சில பழங்களை தவிர்ப்பதும் அவசியம்.

தற்போது மாம்பழ சீசன் என்பதால் ஆசைபட்டு அதிகம் சாப்பிடவேண்டாம். அளவோடு மாம்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நமது ரத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். மாம்பழம் அதிகம் சாப்பிட்டாலோ உடல் சூடு அதிகமாகும்.

தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு வாழைபழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், அவர்களுக்கு தினசரி ஒரு செவ்வாழை பழம் கொடுத்து வந்தால் கண்பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். கோடை காலம் அடிக்கடி வயிற்றுபோக்கையும் உண்டாக்கும். ரஸ்தாளி வாழை பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து முன்று வேளை கொடுத்தால் வயிற்று போக்கு நின்று விடும்.

கொய்யாபழத்தை குழந்தைகள் அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் சி உயிர்ச்சத்து அதிகம். வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் சி, எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கிறது. தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

எப்போதும் கிடைக்கக் கூடிய பழம் பப்பாளி. இதில் வைட்டமின் ஏ நிறைய உள்ளதால் பல் சம்பந்தமான குறைபாடு நீங்கும். சிறுநீர் பையில் உண்டாகும் கல்லை கரைக்கும். ஆனாலும் சூடு அதிகம் என்பதால் அளவோடு சாப்பிடவும். அடிக்கடி பப்பாளி சாப்பிடுபவர்களை தொற்று நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.

அன்னாசிபழத்தில் வைட்டமின் பி அதிகளவில் உள்ளதால் ரத்தம் விருத்தியாகி உடல் பலம் பெறும். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்னாசி பழம் பயன்படுகிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசி பழம் ஒரு சிறந்த டானிக். அடிக்கடி அன்னாசி பழம் சாப்பிடுபவர்களுக்கு பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழத்தில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளன. பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை, கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, ருசியின்மை ஆகிய பிரச்சினைகளை குணபடுத்தும் ஆற்றல் விளாம்பழத்திற்கு உண்டு. ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதியிழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம்பழத்தை தொடர்ந்து முன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். அதே போல் முன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். பித்தம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும். இதயம், குடல், சிறுரகம் ஆகிய உறுப்புகள் நன்றாக இயங்க மாதுளம் பழச்சாறு மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் குளுகோஸ் சக்தி அதிகம் இருப்பதால் உடல் சோர்வை உடனடியாக நீக்கும் தன்மை கொண்டது.

தினமும் வழக்கமாக உண்ணும் உணவை குறைத்து, பழங்களை அதிகமாக சேர்த்துக் கொண்டால் வெயில் காலத்தில் நம் உடல் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் வராது. அதுமட்டுமின்றி, இந்த பழங்கள் உடலுக்கு பலமும் சேர்க்கும்.

புதிய பழம்

கருவுற்ற பெண்கள், முதல் முன்று மாதங்களுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, போலிக் அமிலம், கால்சியம் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பேறுகாலத்தில், இரும்புச்சத்து (18மில்லி கிராம் முதல் 27 மில்லி கிராம் வரை) அதிகமாகத் தேவைபடும். அதனால், இந்த சத்துள்ள உணவு பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

பேறு காலத்தின் முதல் முன்று மாதத்தில் அனைத்து பெண்களுக்கும் வாந்தி ஏற்படுவது இயல்பு. உடலின் செரிமான பணிகள் அனைத்தும் ஹார்மோன் மாற்றங்களின் கட்டுபாட்டில் இயங்குவதால், கருவுற்ற பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

பேறுகாலத்தில் கரு முழுமையாக வளர, ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியாகும். அதே சமயம், இந்த ஹார்மோன்கள் குடல் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து விடுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படுகிறது. தசைகளைத் தளர்த்துவதன் முலம் ஹார்மோன்களில் ஒன்றான புரோஜெஸ்ட்ரான் செயல்படும். தசைகளால் ஆன குடலின் வெளிபுறச் சுவர் தளர்வதால் உணவு மற்றும் மலத்தின் வேகம் குறைகிறது.

சில நேரங்களில் இரைப்பை, குடல் உறுத்தல்கள் ஏற்படும். பேறுகாலத்தில் இயல்பாகவே, தவிப்பும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். பிருன்ஸ் பழத்தில் உள்ள சத்துக்கள் இதுபோன்ற சிக்கலான நேரத்தில், குடல்களின் இயக்கத்திற்குத் தேவையான நார்ச்சத்தை வழங்குகிறது. குடல்களின் வேகமான செயல்பாடுகளுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் முக்கியம். பிருன்ஸ் பழங்கள் நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொள்வதால், மலச்சிக்கலை போக்குகிறது. பிருன்ஸ் பழங்கள் சுவையாக இருப்பதுடன், தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆரோக்கியமான குழந்தையை பெற, இரும்புச்சத்து முக்கியமான ஊட்டச்சத்து. பிருன்ஸ் பழங்களில் உள்ள இந்த ஊட்டச்சத்து தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான ஹீமோகுளோபினை அளிக்கிறது. இது ரத்தசோகையைத் தடுத்து, உடலில் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது. பிருன்ஸ் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தைத் குறைக்கும் திறன் கொடது. இதில் கொழுப்புச்சத்துக்கள் இல்லாததால், எப்போது பசித்தாலும் சாப்பிடலாம்.

6 மாத குழந்தையின் புத்திசாலித்தனம்!

குழந்தைகள் சூதுவாது அறியாதவை. நல்லது கெட்டது தெரியாமல் பல தவறுகளை செய்துவிடும். உதாரணமாக நெருப்பு சுடும் என்று அறியாமல் தீபத்தின் அருகே நெருங்கிச் செல்வதை குறிப்பிடலாம். ஆனால் குழந்தைகளுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று பகுத்தறியும் பண்பு 6 மாதத்திலேயே வந்துவிடுகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.

6 மாதம் முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. யேல் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின்போது 6 மாத குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டது. பொம்மையில் நல்லவிதமான, வாசனையுள்ள பொம்மைகள் கொடுக்கப்பட்டன. சில முறை அச்சுறுத்தும் பொம்மை மற்றும் துர்நாற்றமுடைய பொம்மைகள் வழங்கப்பட்டன.

அப்போது குழந்தைகள் நல்லபொம்மை எது என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்வது தெளிவானது. கெட்ட பொம்மையைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்வது, வேறெங்கோ பார்ப்பது, சிலவேளைகளில் இவற்றையெல்லாம் மீறி தலையால் பொம்மையை மோதி தள்ளிவிடுவது போன்ற செயல்களிலும் 6 மாதம் முதல் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈடுபட்டன.

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைக் காட்சிகளைக் காட்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது எந்தப் பொம்மை தங்களுக்கு உதவி செய்கிறது, எது தனது செயலுக்கு தடையை ஏற்படுத்தி தீமை செய்கிறது என்று நன்றாக தெரிந்து கொண்டன. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தீய பொம்மைகளை தாக்கவும் குழந்தைகள் தவறவில்லை.

இந்த ஆய்வில் இருந்து குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே நன்மை, தீமையை அறியும் பண்பு வந்துவிடுவது தெளிவானது!

விண்வெளி பழமாகிறது `ஸ்ட்ராபெர்ரி’

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சிறப்பு அதன் சுவைதான். தக்காளி போன்று இனிப்பும், லேசான புளிப்பும் கலந்த வினோத சுவையுடையது. தோற்றத்திலும் கொஞ்சம் கொல்லாம்பழம், கொஞ்சம் ஆப்பிள் கலந்ததுபோல் இருக்கும். தற்போது ஸ்ட்ராபெர்ரிப் பழத்துக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.

விண்வெளி என்பது விசித்திர சூழல் கொண்டது. அங்கு உயிரினங்கள் வசிக்கவோ, தாவரங்கள் செழிக்கவோ வழியில்லை. ஆனால் விண்வெளியில் செயற்கை சூழலில் தாவரங்களை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானம் நீண்டகாலமாக முயன்று வந்துள்ளது. தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காட்டாமணக்கு என்று பல தாவரங்களை வளர்த்து சோதிக்கப்பட்டு உள்ளது. அதில் தாவரங்களுக்கு நல்ல வளர்ச்சியும், விளைச்சலும் கிடைப்பதுடன் கூடுதல் சுவையும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வரிசையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை விண்வெளியில் வெகுசுலபமாக வளர்க்கலாம் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எளிதான பராமரிப்பு, குறைந்த ஆற்றல் செலவிலேயே ஸ்ட்ராபெர்ரி செடியை விண்வெளியில் வளர்க்க முடியும். அமெரிக்காவைச் சேர்ந்த பெர்டியு பல்கலைக்கழக ஆய்வாளர் கேரி மிட்செல் பல்வேறு வகை தாவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இதை கண்டுபிடித்துள்ளார்.

`சீஸ்கேப்` வகை ஸ்ட்ராபெர்ரி பழம் விண்வெளியில் வளர்க்க ஏற்றதாக தெரிகிறது. எதிர்காலத்தில் விண்வெளி (உணவுப்) பழவகை என்றால் அது `ஸ்ட்ராபெர்ரி’ என்ற சிறப்பு கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

நீங்கள் குறட்டை விடுபவரா…?!

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே… அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை முச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.

ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

ஆபீஸ் 2010, வரும் ஜூன் மாதம் சில்லரை விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த தொகுப்பிற்கு நாம் கட்டாயம் மாற வேண்டுமா? இருக்கிற ஆபீஸ் தொகுப்புகள் போதாதா? அப்படி என்ன கூடுதல், அடிப்படை வசதிகள் இதில் கிடைக்கப் போகிறது?
இன்னும் முழுமையான ஆபீஸ் 2010 தொகுப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தியதிலிருந்து சில கூடுதல் வசதிகளை அறிய, அனுபவிக்க முடிந்தது. அவற்றின் சில அம்சங்களை இங்கு தருகிறோம். இவை வேண்டுமா? இவற்றுக்காக 2010 தொகுப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டுமா என்பதற்கான பதிலை வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

1. போட்டோ எடிட்: வேர்ட் 2010 அல்லது பிரசன்டேஷன் 2010 புரோகிராம்களில், புதியதாக போட்டோ எடிட்டர் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் டாகுமெண்ட்களையும் பிரசன்டேஷன் காட்சிகளையும், இன்னும் அழகாகவும், பார்ப்பவர் மனதில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைக்க முடியும். போட்டோக்களை கிராப் செய்வது, கலர் காண்ட்ராஸ்ட் அமைப்பது, பிரைட்னெஸ் கொடுப்பது, தோற்றத்தினை ஷார்ப் ஆக அல்லது மிதமாக அமைப்பது, கலை நுணுக்கான எபக்டுகளை அமைப்பது போன்ற வேலைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

2.வீடியோ எடிட்டிங்: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் வீடியோக்களை இணைக்கலாம். அத்துடன் அவற்றை எடிட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீளமான வீடியோ கிளிப்களைத் தேவையான அளவிற்கு நறுக்கி அமைப்பது. இதன் மூலம் பைல் அளவைச் சுருக்குவது, எடுத்துச் செல்லும் வகையில் அளவைக் குறைப்பது ஆகியவற்றை இதில் மேற்கொள்ளலாம். மேலும் ஸ்லைடுகளையும் அனிமேஷன்களையும் இயக்குவதில் புதிய பல வழிகள் தரப்பட்டுள்ளன.

3. எங்கிருந்தும் எடிட் செய்திடலாம்: ஆபீஸ் 2010 தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களை விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவில் போஸ்ட் செய்து, பின் எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டர் வழியாகவும் எடிட் செய்து அப்டேட் செய்திடலாம். இதற்கு ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. வேகமான இன்டர்நெட் இணைப்பும், உயர்ந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.

4. ஒன் நோட் 2010: அனைத்து வகை தகவல்களையும், ஒன் நோட் 2010 (OneNote 2010) தொகுப்பில் வைத்துக் கையாளலாம். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் இவற்றை எடிட் செய்து, பின் இறுதியில் இணைத்துக் கொள்ளலாம். டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ என எதனை வேண்டுமானாலும் இதில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். பதிந்தவற்றை எந்த இடத்திலிருந்தும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

5.பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா: பவர்பாய்ண்ட் தொகுப்பில் உள்ள பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா (Broadcast Slide Show) பயன்படுத்தி, ஒரு பிரவுசர் வழியாக எந்த ஒரு இடத்தில் உள்ளவர்களுக்கும் காட்டலாம். அவர்களிடம் இதனைக் காண பிரசன்டேஷன் பேக்கேஜ் தேவையில்லை.

6. இமெயில்களைக் கையாளுதல்: அவுட்லுக் 2010 தரும் கான்வர்சேஷன் வியூவினைப் பயன்படுத்தி, உங்கள் இமெயில்களை சுருக்கலாம், வகைப்படுத்தலாம் மற்றும் பலவகைகளில் அவற்றைக் கையாளலாம்.

7. நிதி ஆளுமை: எக்ஸெல் 2010 தொகுப்பு தரும் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்பதன் மூலம் சிறிய சார்ட்களை ஏற்படுத்தி, உங்கள் நிதி நிலையினை அவ்வப்போது கண்காணிக்கலாம். அனைத்து வகை டேட்டாவிற்கும் இதே போல் தோற்றங்களை ஏற்படுத்தி கவனிக்கலாம்.

8. நெட்வொர்க் தொடர்பு: அவுட்லுக் 2010 தரும் சோஷியல் கனக்டர் மூலம் நாம் பயன்படுத்தும் சோசியல் மற்றும் வர்த்தக நெட்வொர்க்குகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட், விண்டோஸ் லைவ் மற்றும் பிற தர்ட் பார்ட்டி நெட்வொர்க்குகளுடனும் தொடர்பு கொள்ள முடியும்.

9. கட்டளைகள் கை வசம்: ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளை ரிப்பன் ஒன்றின் மூலம் விரைவாக மேற்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.
இது ஒரு முன்னோட்டம் தான். இன்னும் பல புதிய வசதிகள் தொகுப்பு நமக்கு முழுமையாகக் கிடைக்கும் போது தெரியவரும். எனவே இதற்கு மாறலாமா என்பது குறித்து நம் தேவைகள் அடிப்படையிலும், புதிய வசதிகளுக்கு மாறினால் நாம் பெறும் உயர்வுகள் அடிப்படையிலும் முடிவெடுக்கலாம்.

மே 27- வைகாசி விசாகம்-வண்ண வடிவேலன் பிறந்த நாள்! (ஆன்மிகம்)


வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்’ எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார்.
முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய,ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, “குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையே, காளிதாசருக்கு தலைப்பாக கிடைத்து விட்டது.
பத்மாசுரன் என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கிவிட்டான்.
பிறகென்ன… இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம் முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார் சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
சிவன், உடனடியாக விநாயகரை அனுப்பியிருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார்.
இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. “ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது.
முருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை.
பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
முருகப்பெருமானின் அவதார நன்னாளில், அவர் குடிகொண்டுள்ள மலைக் கோவில்களுக்குச் சென்று, நல்லருள் பெற்று வருவோம்.