கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில்

பழங்காலத்தில், விஜயநகர பேரரசு ஆட்சியில் அரசர் அச்சுதராயரின் கஜானா பொறுப்பாளராக இருந்த விருபணா, லேபாக்ஷியில் ஒரு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டினார். கோவில் கட்டும் ஆர்வத்தில் அவர் அச்சுதராயரின் அனுமதி யின்றி கஜானா முழுவதையும் காலி செய்துவிட்டார். விஷயத்தை அறிந்து கடுங்கோபம் கொண்ட அச்சுதராயரர், விருபணாவின் கண்களைக் குருடாக்கும்படி உத்தர விட்டார். அதனால் வேதனை அடைந்த விருபணா, தானே தனது கண்களைத் தோண்டி பாறை மீது வீசியெறிந்துவிட்டார். அதன் அடையாளமாக அக்கோவிலில் இரண்டு கரும்புள்ளிகள் இடம்பெற்றன. இன்றும் அந்தச் சிவன் கோவிலானது இந் தியக் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் பெருமையாக விளங்கும் ஆனந்தபூரில் உள்ள லேபாக்ஷி கோவிலில் சிவனின் ஆக்ரோஷ வடிவமான `வீரபத்திரர்’ குடி கொண்டுள்ளார்.

தென்னிந்தியாவின் சிறந்த சிற்ப மற்றும் ஓவியக் கலையை இக்கோவில் எடுத்துக் காட்டுகிறது. அத்துடன், நாட்டிலேயே பெரிய, ஒரே கல்லாலான நந்தி சிலையைம் (8.25 மீட்டர் நீளம்- 4.60 மீ. உயரம்), ஒரு பெரிய `ஏழு தலை’ நாகத்தின் சிலையையும் கொண்டுள்ளது.

`குர்மாசைலா’ (`ஆமைக் குன்று’) என்ற குன்றின் மீது விஜயநகரக் கட்டிடக் கலை பாணியில் இக்கோவில் கட்டபட்டுள்ளது. இந்த மாபெரும் கோவிலில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், விமானங்கள் அமைந்துள்ளன.

இதன் முன்று பிரதான பகுதிகளாக `நிருத்ய மண்டபம்’, `கரப்பக்கிரகம்’, `கல்யாண மண்டபம்’ ஆகியவை அமைந்துள்ளன. இவை முழுவதும், நுணுக்கமும், அழகும் கொஞ்சும் ஆளுயரச் சிற்பங்கள், ஓவியங்களால் அலங்கரிக்கபட்டுள்ளன. இவற்றில், கடவுள்கள், பெண் தெய்வங்கள், ஓவிய, சிற்பக் கலைஞர்கள், இக்கோவிலைக் கட்டிய வர்களின் உருவங்கள், புராணங்கள், ராமாயண, மகாபாரதக் காட்சிகள், சிவபெரு மானின் பல்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் உட் கருவறை யின் மேற்கூரையில் `வீரபத்திரரின்’ பெரிய ஓவியம் ஒன்று காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே பெரியது என்றும் கருதபடுகிறது.

இங்குள்ள கல்யாண மண்டபத்தில் சிவன்- பார்வதியின் திருமணம் நடைபெற்றது என்று செவிவழிக் கதைகளில் கூறப்படுகிறது. நிறைவு பெறாமல் உள்ள இந்த மண்டபத்தில், ஒரே கல்லால் ஆன 38 மாபெரும் தூண்கள் அமைந்துள்ளன. முன்பு இக்கோவிலில் ஒரு தொங்கும் தூணும் இருந்தது. அதன் அடிபுறத்தில் ஒரு துணியை நுழைத்து எடுக்க முடிந்தது.

%d bloggers like this: