Daily Archives: மே 28th, 2010

`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்!

ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.

இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்’கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்’களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.

தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.

இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் அழகிய தலைநகரம் வாஷிங்டன்

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்க நாட்டின் அழகிய தலைநகரம் வாஷிங்டன். இது பொதுவாக `வாஷிங்டன் டி.சி.’ என்று அழைக்கப்படுகிறது. `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா’ என்பதன் சுருக்கமே `டி.சி’.

1790-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதியன்று இந்நகர் நிறுவபட்டது.

தொடக்கத்தில் கொலம்பியா பகுதியில் தனி நகரசபையாக இருந்த வாஷிங்டன், 1871-ம் ஆண்டு ஒரு சட்டத்தின் முலம் `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா’ என்று ஒரே பகுதியாக மாற்றப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 68.5 சதுர மைல்கள் ஆகும். நகரத்தின் மக்கள்தொகை 6 லட்சம்தான். தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியிலிருந்து இங்கு வந்து பணிபுரிகின்றனர்.

`போடோமாக்’ நதிக் கரையில் வாஷிங்டன் நகரம் அமைந்துள்ளது. தென்மேற்கில் `விர்ஜினியா’ மாநிலமும், மற்ற பகுதிகளில் `மேரி லாண்ட்’ மாநிலமும் வாஷிங்டனின் எல்லைகளாக அமைந்துள்ளன.

விண்ணை விசாரிக்கும் உயர்ந்த கட்டிடங்களோடு பரபரப்பும் நெரிசலுமாக இருக்கும் பிற அமெரிக்க நகரங்களோடு ஒப்பிடுகையில் வாஷிங்டன் ஓர் அமைதியான நகரமாகும். இது அமெரிக்காவின் 9-வது பெரிய நகரமாகத்தான்
விளங்குகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டு அரசுத் தலைமையகம் அமைந்துள்ள இடமான வாஷிங்டனில், பல புகழ்பெற்ற தேசிய நினைவுச் சின்னங்களும், அருங்காட்சியகங்களும் அமைந்துள்ளன.

மேலும், 174 வெளிநாட்டுத் தூதரகங்களுடன், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலகளவில் முக்கியமான அமைப்புகளும் இங்கு அமைந்துள்ளன.

13 உறுப்பினர்கள் கொண்ட நகர அவைக்குத் தலைமை தாங்கும் மேயரால் வாஷிங்டன் நகரம் நிர்வகிக்கபடுகிறது. ஆனால் இங்கு எந்தச் சட்டத்தையும் மாற்றும் அதிகாரம் அமெரிக்க `காங்கிரஸுக்கு’ உண்டு.

பதினேழாம் நுற்றாண்டில் ஐரோப்பியர்கள் இங்கு வந்து குடியேறியபோது `நகோட்சாங்’ என்ற பூர்வகுடி மக்கள் இங்கு வசித்து வந்தனர். 18-ம் நுற்றாண்டில் அவர்கள் பெருமளவில் ஐரோப்பியர்களால் இடம்பெயரச் செய்யபட்டனர். அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனை கவுரவபடுத்தும் விதமாக இந்நகருக்கு `வாஷிங்டன்’ என்று பெயர் சூட்டபட்டது.

வாஷிங்டனின் முக்கிய அடையாளம், அமெரிக்க ஜனாபதியின் அதிகாரபூர்வ இருப்பிடமான `வெள்ளை மாளிகை’ ஆகும். 1814-ம் ஆண்டு படையெடுத்து வந்த பிரிட்டீஷ் படைகளால் எரித்துச் சேதபடுத்தபட்ட இம்மாளிகை, மீண்டும் புதுபொலிவு பெறச் செய்யபட்டது. இன்றும் அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளால் ஆர்வத்துடன் கண்டு களிக்கபடுகிறது `வெள்ளை மாளிகை’.

பிரவுசர்களுக்கான ஆட் ஆன் தொகுப்புகள்

நாள்தோறும் உருவாக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இந்த பழக்கத்தினை, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொடங்கி வைக்க, இப்போது அனைத்து பிரவுசர்களுக்கும் கூடுதல் வசதி தரும் இந்த தொகுப்புகள் வெளியாகி வருகின்றன. அவற்றோடு இணைந்து ஆபத்துக்களும் வரத் தொடங்கி உள்ளன. ஆட் ஆன் தொகுப்பு என்ற பெயரில், நம் கம்ப்யூட்டரில் மறைந்திருந்து,பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் பதிக்கப்பட்டு, நம் தகவல்கள் திருடப்படுகின்றன. அல்லது நேரடியாக வைரஸ் புரோகிராம்கள் இந்த போர்வையில், கம்ப்யூட்டரில் இறங்கி, நம் செயல்பாட்டினை முடக்குகின்றன.
இந்த சூழ்நிலையில் மொஸில்லா, கடந்த மே 11 அன்று, இந்த ஆட் ஆன் தொகுப்புகள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் நோக்கம் கொண்டவையா என்று அறிய ஓர் டூலினை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த டூலினை, மொஸில்லாவின் போட்டி பிரவுசர்களான இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், சபாரி, ஆப்பரா போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
“Plugin Check” என அழைக்கப்படும் இந்த டூலினை ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரான சபாரி தொகுப்பு 4, கூகுள் குரோம் தொகுப்பு 4, ஆப்பரா 10.5, ஆகிய தொகுப்புகளில் பயன்படுத்தி குயிக் டைம், அடோப் பிளாஷ், அடோப் ரீடர் ஆகியவற்றிற்கான அப்டேட் ப்ளக் இன் புரோகிராம்கள் என்று வருவதனைச் சோதனை செய்து, அவற்றின் உண்மைத் தன்மையினைக் கண்டறியலாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பொறுத்தவரை, பதிப்பு 7 மற்றும் பதிப்பு 8 ஆகியவற்றில் மட்டும் இதனைப் பயன்படுத்தலாம். மற்ற பிரவுசர்களுக்கான ஆட் ஆன் ப்ளக் இன் புரோகிராம்கள் பலவற்றைச் சோதனை செய்திடும் இந்த டூல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பொறுத்தவரை, குறைந்த எண்ணிக்கையிலான ஆட் ஆன் புரோகிராம்களையே சோதனை செய்கிறது. ஏனென்றால், இதற்கான ஆட் ஆன் ப்ளக் இன்கள் ஒவ்வொன்றுக்கும் தனி குறியீடு எழுதப்பட வேண்டும் என்பதால், அனைத்திற்குமான சோதனை டூல் தர இயலவில்லை என்று மொஸில்லா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஜொனாதன் நைட்டிங்கேல் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு http://blog.mozilla.com/security/2010/05 /11/plugincheckforeveryone/ என்ற முகவரியில் உள்ள மொஸில்லாவின் தளத்தினைக் காணவும்.