Daily Archives: மே 30th, 2010

செய்தி துணுக்குகள் 30.5.2010

காமிக் புத்தகம் விலை ஆறு கோடி ரூபாய்!
சிறுவர்கள் ஆசையாக விரும்பி படிக்கும் காமிக் புத்தகம் ஒன்று ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அந்த புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? காமிக் புத்தக வரிசையில், முதல் முறையாக வெளியான புத்தகம் அது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில், காமிக் கனெக்டட் டாட் காம் என்ற காமிக் புத்தக ஏல வெப்சைட் நிறுவனம், இந்த புத்தகத்தை ஏலம் விட்டது. “ஆக்ஷன் காமிக் நம்பர் ஒன்’ என்ற இந்த புத்தகம், 1938ல் வெளியானது. புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. 10 லட்சம் டாலருக்கு, அதாவது நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த புத்தகத்தின் மூலம் தான், காமிக் உலகில், சூப்பர்மேன் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின், 1939ல் வெளியான புத்தகம் ஒன்று, நான்கு கோடி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இப்போது, 1938ல் வெளியான புத்தகம் ஒன்று ஏலம் விடப்பட்டது. அது, 15 லட்சம் டாலருக்கு, அதாவது, ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. காமிக் புத்தகங்களை விரும்பி சேகரித்து வரும் ஒருவர், இந்த விலை கொடுத்து வாங்கியுள்ளார். அவர் பெயரை வெளியிட வெப்சைட் நிறுவனம் மறுத்து விட்டது.
* * *
கற்பழிப்பு வழக்கில், இடி அமீனின் 43வது மகன்!
ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டை, ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரி இடி அமீன். கொலை, கற்பழிப்பு, ஆடம்பரம், அராஜகம் என்றாலே எல்லாருக்கும் இடி அமீன் நினைவு தான் வரும். 1971 – 79களில் உகாண்டாவில் ஆட்சி செய்தார். அந்த கால கட்டத்தில் மட்டும், நான்கு லட்சம் பேரை கொடூரமாக கொலை செய்தார். புரட்சி மூலம், அவரது ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அவரது வாரிசுகள் உலகின் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இடி அமீனுக்கு பல மனைவிகள். அதில் ஒரு மனைவிக்கு பிறந்தவன், பாசின் வஞ்சிதா; வயது 28. இவன், இடி அமீனீன் 43வது மகன். பிரிட்டனில் தஞ்சம் புகுந்திருந்த இவன், அங்குள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அதே முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தென் அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை, இவன் கற்பழித்தான். பாசினுடன் சேர்த்து எட்டு பேர் இந்த பெண்ணை தாக்கி, கற்பழித்தனர். ஆபத்தான நிலையில், மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். இப்போது, பாசின் மற்றும் எட்டு பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை முடிந்த பின், அவர்கள் நாடு கடத்தப்படுவரா அல்லது சிறைக்கு அனுப்பப்படுவரா என்பது முடிவாகும்.
* * *
நான்கு லட்சம் கார்களை உடைப்பது எப்படி?
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடக்கூடிய, தகுதி வாய்ந்த நல்ல கார்கள், உடைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இப்படி ஒன்று அல்லது இரண்டு கார்கள் அல்ல. புல்டோசர் ஏறுவதற்காக மொத்தம் நான்கு லட்சம் கார்கள் காத்திருக்கின்றன. இது நம் நாட்டில் அல்ல… பிரிட்டனில்.
பிரிட்டன் அரசு புது சட்டம் ஒன்றை, சமீபத்தில் கொண்டு வந்தது. பழைய கார்களை நகரில் ஓட்டக் கூடாது; பழைய கார்கள் ஓடுவதால் காற்று மாசு படுகிறது, எரிபொருள் அதிகமாக செலவாகிறது. பழைய கார்களை மாற்றி விட்டு, புதிய கார்களை வாங்கினால், அதிக அளவு தள்ளுபடி கிடைக்கும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. சலுகைகளை பெற காலக்கெடுவையும் நிர்ணயித்தது. இந்த புதிய சலுகை திட்டப்படி, பழைய கார்களை வைத்திருப்பவர்கள் அதை மாற்ற விரும்பினால், அரசு ஆயிரம் பவுண்டும், கார் தயாரிப்பாளர் ஆயிரம் பவுண்டும் தருவர்; அதாவது, புதிதாக கார் வாங்க விரும்புபவர்களுக்கு; கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
விடுவரா பிரிட்டன்வாசிகள்… உடனே தங்கள் பழைய கார்களை கொடுத்து விட்டு, புதிய கார்களை வாங்க குவிந்தனர். இந்த திட்டப்படி, இதுவரை மொத்தம் நான்கு லட்சம் பழைய கார்கள் குவிந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான கார்களை, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல முறையில் ஓட்ட முடியும்; அந்த அளவிற்கு தகுதியான கார்கள் அவை.
விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ., வால்வோ, பிஜோ ரக கார்கள் உட்பட எல்லா கம்பெனி தயாரிப்பு கார்களும் குவிந்துள்ளன.
படத்தில் காணப்படும் இடம் லண்டன் அருகே பெட்போர்ட்ஷயர் என்ற ஊரில் உள்ள துர்லீக் என்ற பழைய விமான தளம். இந்த விமான தளத்தின் ஓடுபாதையில் மட்டும் இப்போது 14 ஆயிரம் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னமும் இந்த இடத்திற்கு கார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதே போல், பிரிட்டன் முழுவதும் பல நகரங்களில், ஒதுக்குப்புறமான இடங்களில், பழைய கார்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அரசு கொண்டு வந்த சட்டப்படி, இந்த கார்களை பழைய இரும்பாக மாற்றி தான் விற்க வேண்டும்; காராக மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இங்கு நிறுத்தப்பட்டுள்ள கார்களில் உள்ள பெட்ரோல், ஆயில் போன்றவற்றை எடுத்த பின், முக்கிய பாகங்கள் அகற்றப்படும் . பின்னர் அந்த கார்கள் அப்படியே புல்டோசர் மூலம் நசுக்கி, பழைய இரும்பாக மாற்றப்படும். நாடே செல்வச் செழிப்பில் மிதக்கிறது என்றால் இதுதானோ?

நம்பினோர் கெடுவதில்லை! (ஆன்மிகம்)மே 30 – குமரகுருபரர் குருபூஜை!


கடவுள் மேல் நம்பிக்கை வைத்தவர்கள், அதற்குரிய நற்பலனை நிச்சயம் அனுபவிப்பர் என்பதற்கு உதாரணமே குமரகுருபரரின் சரித்திரம்.
வற்றா நதியான தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டம் எனும் நகரில், சண்முகசிகாமணி கவிராயர் – சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியருக்கு, நீண்ட காலமாக குழந்தை இல்லை. அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று, வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றனர்; ஆனால், ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை.
“முருகா… குழந்தை இல்லை எனும் கொடுமையை விட, அவன் பேசவில்லை என்ற கொடுமை பெரிதல்லவா… நீ தான் அவனை பேச வைக்க வேண்டும்!’ என்று வேண்டினர். பலனேதும் இல்லாததால், நம்பிக்கையுடன் திருச்செந்தூர் சென்று, 41 நாட்கள் விரதம் இருப்பதென முடிவு செய்தனர். ஒருவேளை மட்டும் உப்பில்லாத உணவைச் சாப்பிட்டு, விரதம் அனுஷ்டித்தனர். நாட்கள் கடந்தன. இருந்தாலும், அவர்கள் நம்பிக்கையை விடவில்லை.
விரத காலம் முடிந்து விட்டாலும், “எங்கள் குழந்தை பேசும் வரை, இங்கிருந்து ஊருக்குச் செல்லமாட்டோம். நீ என்ன முடிவைத் தந்தாலும் சரி…’ என விரதத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக, 45வது நாள், அவர்கள் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்றனர். ஆண்டவனின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் ஏக்கத்தோடு, மாறி மாறி பார்த்தனர். கண்களில் கண்ணீர் வடிந்தது. அப்போது, குமரகுருபரன் அவர்களிடம் ஏதோ பேசியது போல் தோன்றியது. அடுத்த நிமிடமே, முருகனின் சிலையைப் பார்த்த குமரகுருபரன், மடை திறந்த வெள்ளம் போல் பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலே, “கந்தர் கலிவெண்பா’ எனப்பட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட பக்தர்கள், பரவசமடைந்தனர்; மகிழ்வுடன் ஊர் திரும்பினர்.
இதன்பின் குமரகுருபரன், பெற்றோருடன் அதிக நாள் தங்கவில்லை. இறைப்பணியே செய்வதென முடிவெடுத்து, மதுரை வந்தார். மீனாட்சிஅம்மனைப் புகழ்ந்து பாடினார். இது, “மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!’ எனப்பட்டது.
தன்னைப் பாடிய குமரகுருரபனின் புகழை நாடறியச் செய்ய முடிவெடுத்த மீனாட்சி, திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றி, “மதுரைக்கு என் மகன் குமரகுருபரன் வந்துள்ளான். அவன், என்னைப் பற்றி பாடிய பிள்ளைத் தமிழை, கோவில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்!’ என உத்தரவிட்டாள்.
குமரகுருபரரை வரவேற்று, அரங்கேற்ற ஏற்பாடுகளை செய்தார் நாயக்கர். அப்போது, கோவில் தலைமை அர்ச்சகரின் மகள் வடிவத்தில் வந்த மீனாட்சி, நாயக்கரின் மடியில் அமர்ந்து பாடல் கேட்டாள். அவரது கழுத்தில் இருந்த முத்துமாலையை உரிமையோடு கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்தாள். பின்னர், கருவறை பக்கம் சென்று, மறைந்து விட்டாள். வந்தது மீனாட்சி என்பதை அறிந்த மக்கள், அவளது தரிசனம் கிடைக்கச் செய்த குமரகுருபரரை வாழ்த்தினர்.
காசி சென்ற குமரகுருபரர், அங்குள்ள சுல்தானைச் சந்தித்தார். அவருக்கு இந்தி மொழி மட்டுமே தெரியுமென்பதால், அவருடன் பேசும் வல்லமையைப் பெற கலைவாணியை எண்ணி பாடினார்; அதுவே, “சகலகலாவல்லி மாலை’ எனப்பட்டது. பின், இந்தியில் சுல்தானுடன் பேசி, சைவ மடம் ஒன்று கட்ட இடம் கேட்டார்; சுல்தானும் இடம் கொடுத்தார். அது, “குமாரசுவாமி மடம்’ எனும் பெயரில், இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தெய்வ நம்பிக்கை, ஒருவரை வாழ்வில் பெரிதும் உயர்த்தும் என்பதற்கு, குமரகுருபரரின் வாழ்க்கை சிறந்த உதாரணம்.

செக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது?

உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.

ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் செக்ஸ்  ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.

குழந்தை வேலைக்கும் தரத்திற்கும் தொடர்பு?

ஒரு தரமான பொருள் எப்படி உருவாகிறது?
பொருளின் தரம், பொருளை உருவாக்குவதற்கான வழிமுறைகள், வேலையை செய்யும் விதம் போன்றவை வேலையின் தரத்தைத் தீர்மானிக்கிறது.
சீதாவுக்கு 12வயது. படம் வரைவதில் ஆர்வமான மாணவி. ஒரு அற்புதமான படத்தை வரைவதற்கு அவளுக்கு நல்ல க்ரேயான் பென்சில்கள் தேவை, தரமான கார்ட்போர்டு சீட் தேவை, படம் வரையும்போது அவளுக்கு இடையூறு இல்லாத சூழ்நிலை தேவை.
இவை எல்லாம் அமைந்ததற்குப் பிறகு அவள் பொறுமையாக ஒவ்வொரு வண்ணத்தையும் பொருத்தமாக பயன்படுத்தி ஒரு ரோஜா பூவின் படத்தை வரைந்து விடுவாள். ரோஜா பூவின் இதழ்களில் உள்ள சிறு மடிப்பையும் கூட கோடுகளால் உருவாக்கி விடுவாள்.
அவளது பெற்றோர், அவள் படம் வரையப் போவதாக கூறினால், வேறு எந்த வேலையும் சொல்வதில்லை. அது சாப்பாட்டு நேரமாக இருக்கும் பட்சத்தில் அவளது அம்மா சாப்பிட வா என்று கூட கூப்பிடுவதில்லை.
படத்தை வரைந்து முடியும் வரையில் சீதா தனக்கே உரித்தான ஓர் உலகத்திற்குள் சென்று விடுவாள். அந்த உலகத்தில் அவளது பெற்றோர் நுழைவதில்லை. அந்த உலகத்தில் நுழைய தங்களுக்கு உரிமை இல்லை என்பதை அவர்கள் புரிந்திருந்தனர்.
சீதாவின் பெற்றோரைப் போலத்தான் நாம் இருக்க வேண்டும்.

சின்னச் சின்ன வேலைகள்
வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகள் குழந்தைகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
ராஜாவுக்கு 9 வயது
மாடியில் துவைத்து காயப்போட்டுள்ள துணிகளை எடுத்துவந்து கட்டிலில் போடுவான். அதை அம்மா மடித்து வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க சொல்வான். அப்படி மடிக்கும்போது தப்பாக மடித்தால் அம்மா பொறுமையாக சொல்லித்தருவாள்.
வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும்போது திடீரென்று அந்த வரிசை சரிந்து விழும். அப்போது அம்மா அவனிடம் ஐந்து ஐந்து துணியாக அடுக்கினால் போதும்.
ஒரேயடியாக அடுக்கினால் இப்படித்தான் சரிந்து விழும் என்று எடுத்து சொல்லுவாள்.
கொஞ்ச நாட்கள் கழித்து ராஜா தானாகவே சரியாக அடுக்கி வைக்க ஆரம்பித்து விட்டான். காலப்போக்கில், அவனே பீரோவை திறந்து எந்த துணியை எங்கே வைக்க வேண்டும் என்பது வரையில் கற்றுக்கொண்டான்.

வீட்டுப்பாடம்
ராணிக்கு 9 வயது
4&ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்குத் தினமும் பள்ளியில் இருந்து வீட்டுப் பாடம் கொடுப்பார்கள்.பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தமிழ், ஆங்கிலம். கணக்கு என ஒவ்வொன்றிலும் எத்தனை பாடங்கள் வீட்டில் எழுதவேண்டும் என்பதை அம்மாவிடம் ராணி சொல்வாள்.
மாலை 6 மணிக்கு வீட்டுப்பாடம் செய்ய ராணி உட்காருவாள். 8 மணிக்குள் அனைத்து வீட்டுப்பாடத்தையும் செய்து முடிக்கவேண்டும் என அம்மா அவசரப்படுத்துவாள். இது சரியானது அல்ல, ராணி எந்தப் பாடத்தில் பலவீனம், எந்தப் பாடத்தை நன்றாக செய்வாள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவளது திறனும் ஏற்றவாறு வீட்டுப் பாடங்களை முடிக்க உரிய நேரம் கொடுக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் சோம்பலில்லாமல் பாடங்களை முடிக்க அவளுக்கு உதவ வேண்டும்.

வேலைக்கு பழக்கப்படுத்தல்
ரவி 8&ம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய அப்பா ஒரு ஃபேன்சி ஸ்டோர் வைத்திருக்கிறார்.
பள்ளி விடுமுறை நாட்களில் ரவி அந்த கடைக்கு செல்வான். அப்பாவுக்கு உதவியாக வியாபாரம் பார்ப்பான்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசுவது? அவர்கள் கேட்கும் பொருளை எப்படி எடுத்து தருவது?
பொருட்களை ரேக்கில் எப்படி வரிசையாகவும் அழகாகவும் அடிக்கிவைப்பது?
பொருட்களை வாங்கி பணம் தருபவர்களுக்கு எப்படி மீதி சில்லரை தருவது? போன்ற விஷயங்களை ரவிக்கு அவனுடைய அப்பா சொல்லித்தருவார்.
விளையாட போகாமல் 4 மணி நேரம் கடையில் தொடர்ந்து வேலை பார்த்தால் ரவிக்கு அவனது அப்பா 10 ரூபாய் சம்பளம் கொடுப்பார்.
இது போன்று குழந்தைகளை ஓய்வு நேரத்தில் வாய்ப்புள்ள வேலைகளில் ஈடுப்படுத்துவது நல்லது குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை பார்ப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு

தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது. எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.
பயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.
அநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம்.
பயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.
மொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

வியர்க்குருவை விரட்ட வெள்ளரி

ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.

* கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

* வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

* வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

* அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது.

* மூலிகைகளின் சாறுகளால் தயாரிக்கப்பட்ட தன்வந்த்ரம் தைலத்தை உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் வியர்க்குரு மறைந்து விடும்.