குழந்தை வேலைக்கும் தரத்திற்கும் தொடர்பு?

ஒரு தரமான பொருள் எப்படி உருவாகிறது?
பொருளின் தரம், பொருளை உருவாக்குவதற்கான வழிமுறைகள், வேலையை செய்யும் விதம் போன்றவை வேலையின் தரத்தைத் தீர்மானிக்கிறது.
சீதாவுக்கு 12வயது. படம் வரைவதில் ஆர்வமான மாணவி. ஒரு அற்புதமான படத்தை வரைவதற்கு அவளுக்கு நல்ல க்ரேயான் பென்சில்கள் தேவை, தரமான கார்ட்போர்டு சீட் தேவை, படம் வரையும்போது அவளுக்கு இடையூறு இல்லாத சூழ்நிலை தேவை.
இவை எல்லாம் அமைந்ததற்குப் பிறகு அவள் பொறுமையாக ஒவ்வொரு வண்ணத்தையும் பொருத்தமாக பயன்படுத்தி ஒரு ரோஜா பூவின் படத்தை வரைந்து விடுவாள். ரோஜா பூவின் இதழ்களில் உள்ள சிறு மடிப்பையும் கூட கோடுகளால் உருவாக்கி விடுவாள்.
அவளது பெற்றோர், அவள் படம் வரையப் போவதாக கூறினால், வேறு எந்த வேலையும் சொல்வதில்லை. அது சாப்பாட்டு நேரமாக இருக்கும் பட்சத்தில் அவளது அம்மா சாப்பிட வா என்று கூட கூப்பிடுவதில்லை.
படத்தை வரைந்து முடியும் வரையில் சீதா தனக்கே உரித்தான ஓர் உலகத்திற்குள் சென்று விடுவாள். அந்த உலகத்தில் அவளது பெற்றோர் நுழைவதில்லை. அந்த உலகத்தில் நுழைய தங்களுக்கு உரிமை இல்லை என்பதை அவர்கள் புரிந்திருந்தனர்.
சீதாவின் பெற்றோரைப் போலத்தான் நாம் இருக்க வேண்டும்.

சின்னச் சின்ன வேலைகள்
வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகள் குழந்தைகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
ராஜாவுக்கு 9 வயது
மாடியில் துவைத்து காயப்போட்டுள்ள துணிகளை எடுத்துவந்து கட்டிலில் போடுவான். அதை அம்மா மடித்து வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க சொல்வான். அப்படி மடிக்கும்போது தப்பாக மடித்தால் அம்மா பொறுமையாக சொல்லித்தருவாள்.
வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும்போது திடீரென்று அந்த வரிசை சரிந்து விழும். அப்போது அம்மா அவனிடம் ஐந்து ஐந்து துணியாக அடுக்கினால் போதும்.
ஒரேயடியாக அடுக்கினால் இப்படித்தான் சரிந்து விழும் என்று எடுத்து சொல்லுவாள்.
கொஞ்ச நாட்கள் கழித்து ராஜா தானாகவே சரியாக அடுக்கி வைக்க ஆரம்பித்து விட்டான். காலப்போக்கில், அவனே பீரோவை திறந்து எந்த துணியை எங்கே வைக்க வேண்டும் என்பது வரையில் கற்றுக்கொண்டான்.

வீட்டுப்பாடம்
ராணிக்கு 9 வயது
4&ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்குத் தினமும் பள்ளியில் இருந்து வீட்டுப் பாடம் கொடுப்பார்கள்.பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தமிழ், ஆங்கிலம். கணக்கு என ஒவ்வொன்றிலும் எத்தனை பாடங்கள் வீட்டில் எழுதவேண்டும் என்பதை அம்மாவிடம் ராணி சொல்வாள்.
மாலை 6 மணிக்கு வீட்டுப்பாடம் செய்ய ராணி உட்காருவாள். 8 மணிக்குள் அனைத்து வீட்டுப்பாடத்தையும் செய்து முடிக்கவேண்டும் என அம்மா அவசரப்படுத்துவாள். இது சரியானது அல்ல, ராணி எந்தப் பாடத்தில் பலவீனம், எந்தப் பாடத்தை நன்றாக செய்வாள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவளது திறனும் ஏற்றவாறு வீட்டுப் பாடங்களை முடிக்க உரிய நேரம் கொடுக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் சோம்பலில்லாமல் பாடங்களை முடிக்க அவளுக்கு உதவ வேண்டும்.

வேலைக்கு பழக்கப்படுத்தல்
ரவி 8&ம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய அப்பா ஒரு ஃபேன்சி ஸ்டோர் வைத்திருக்கிறார்.
பள்ளி விடுமுறை நாட்களில் ரவி அந்த கடைக்கு செல்வான். அப்பாவுக்கு உதவியாக வியாபாரம் பார்ப்பான்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசுவது? அவர்கள் கேட்கும் பொருளை எப்படி எடுத்து தருவது?
பொருட்களை ரேக்கில் எப்படி வரிசையாகவும் அழகாகவும் அடிக்கிவைப்பது?
பொருட்களை வாங்கி பணம் தருபவர்களுக்கு எப்படி மீதி சில்லரை தருவது? போன்ற விஷயங்களை ரவிக்கு அவனுடைய அப்பா சொல்லித்தருவார்.
விளையாட போகாமல் 4 மணி நேரம் கடையில் தொடர்ந்து வேலை பார்த்தால் ரவிக்கு அவனது அப்பா 10 ரூபாய் சம்பளம் கொடுப்பார்.
இது போன்று குழந்தைகளை ஓய்வு நேரத்தில் வாய்ப்புள்ள வேலைகளில் ஈடுப்படுத்துவது நல்லது குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை பார்ப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

%d bloggers like this: