செய்தி துணுக்குகள் 30.5.2010

காமிக் புத்தகம் விலை ஆறு கோடி ரூபாய்!
சிறுவர்கள் ஆசையாக விரும்பி படிக்கும் காமிக் புத்தகம் ஒன்று ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அந்த புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? காமிக் புத்தக வரிசையில், முதல் முறையாக வெளியான புத்தகம் அது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில், காமிக் கனெக்டட் டாட் காம் என்ற காமிக் புத்தக ஏல வெப்சைட் நிறுவனம், இந்த புத்தகத்தை ஏலம் விட்டது. “ஆக்ஷன் காமிக் நம்பர் ஒன்’ என்ற இந்த புத்தகம், 1938ல் வெளியானது. புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. 10 லட்சம் டாலருக்கு, அதாவது நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த புத்தகத்தின் மூலம் தான், காமிக் உலகில், சூப்பர்மேன் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின், 1939ல் வெளியான புத்தகம் ஒன்று, நான்கு கோடி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இப்போது, 1938ல் வெளியான புத்தகம் ஒன்று ஏலம் விடப்பட்டது. அது, 15 லட்சம் டாலருக்கு, அதாவது, ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. காமிக் புத்தகங்களை விரும்பி சேகரித்து வரும் ஒருவர், இந்த விலை கொடுத்து வாங்கியுள்ளார். அவர் பெயரை வெளியிட வெப்சைட் நிறுவனம் மறுத்து விட்டது.
* * *
கற்பழிப்பு வழக்கில், இடி அமீனின் 43வது மகன்!
ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டை, ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரி இடி அமீன். கொலை, கற்பழிப்பு, ஆடம்பரம், அராஜகம் என்றாலே எல்லாருக்கும் இடி அமீன் நினைவு தான் வரும். 1971 – 79களில் உகாண்டாவில் ஆட்சி செய்தார். அந்த கால கட்டத்தில் மட்டும், நான்கு லட்சம் பேரை கொடூரமாக கொலை செய்தார். புரட்சி மூலம், அவரது ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அவரது வாரிசுகள் உலகின் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இடி அமீனுக்கு பல மனைவிகள். அதில் ஒரு மனைவிக்கு பிறந்தவன், பாசின் வஞ்சிதா; வயது 28. இவன், இடி அமீனீன் 43வது மகன். பிரிட்டனில் தஞ்சம் புகுந்திருந்த இவன், அங்குள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அதே முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தென் அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை, இவன் கற்பழித்தான். பாசினுடன் சேர்த்து எட்டு பேர் இந்த பெண்ணை தாக்கி, கற்பழித்தனர். ஆபத்தான நிலையில், மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். இப்போது, பாசின் மற்றும் எட்டு பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை முடிந்த பின், அவர்கள் நாடு கடத்தப்படுவரா அல்லது சிறைக்கு அனுப்பப்படுவரா என்பது முடிவாகும்.
* * *
நான்கு லட்சம் கார்களை உடைப்பது எப்படி?
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடக்கூடிய, தகுதி வாய்ந்த நல்ல கார்கள், உடைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இப்படி ஒன்று அல்லது இரண்டு கார்கள் அல்ல. புல்டோசர் ஏறுவதற்காக மொத்தம் நான்கு லட்சம் கார்கள் காத்திருக்கின்றன. இது நம் நாட்டில் அல்ல… பிரிட்டனில்.
பிரிட்டன் அரசு புது சட்டம் ஒன்றை, சமீபத்தில் கொண்டு வந்தது. பழைய கார்களை நகரில் ஓட்டக் கூடாது; பழைய கார்கள் ஓடுவதால் காற்று மாசு படுகிறது, எரிபொருள் அதிகமாக செலவாகிறது. பழைய கார்களை மாற்றி விட்டு, புதிய கார்களை வாங்கினால், அதிக அளவு தள்ளுபடி கிடைக்கும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. சலுகைகளை பெற காலக்கெடுவையும் நிர்ணயித்தது. இந்த புதிய சலுகை திட்டப்படி, பழைய கார்களை வைத்திருப்பவர்கள் அதை மாற்ற விரும்பினால், அரசு ஆயிரம் பவுண்டும், கார் தயாரிப்பாளர் ஆயிரம் பவுண்டும் தருவர்; அதாவது, புதிதாக கார் வாங்க விரும்புபவர்களுக்கு; கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
விடுவரா பிரிட்டன்வாசிகள்… உடனே தங்கள் பழைய கார்களை கொடுத்து விட்டு, புதிய கார்களை வாங்க குவிந்தனர். இந்த திட்டப்படி, இதுவரை மொத்தம் நான்கு லட்சம் பழைய கார்கள் குவிந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான கார்களை, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல முறையில் ஓட்ட முடியும்; அந்த அளவிற்கு தகுதியான கார்கள் அவை.
விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ., வால்வோ, பிஜோ ரக கார்கள் உட்பட எல்லா கம்பெனி தயாரிப்பு கார்களும் குவிந்துள்ளன.
படத்தில் காணப்படும் இடம் லண்டன் அருகே பெட்போர்ட்ஷயர் என்ற ஊரில் உள்ள துர்லீக் என்ற பழைய விமான தளம். இந்த விமான தளத்தின் ஓடுபாதையில் மட்டும் இப்போது 14 ஆயிரம் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னமும் இந்த இடத்திற்கு கார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதே போல், பிரிட்டன் முழுவதும் பல நகரங்களில், ஒதுக்குப்புறமான இடங்களில், பழைய கார்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அரசு கொண்டு வந்த சட்டப்படி, இந்த கார்களை பழைய இரும்பாக மாற்றி தான் விற்க வேண்டும்; காராக மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இங்கு நிறுத்தப்பட்டுள்ள கார்களில் உள்ள பெட்ரோல், ஆயில் போன்றவற்றை எடுத்த பின், முக்கிய பாகங்கள் அகற்றப்படும் . பின்னர் அந்த கார்கள் அப்படியே புல்டோசர் மூலம் நசுக்கி, பழைய இரும்பாக மாற்றப்படும். நாடே செல்வச் செழிப்பில் மிதக்கிறது என்றால் இதுதானோ?

%d bloggers like this: