நம்பினோர் கெடுவதில்லை! (ஆன்மிகம்)மே 30 – குமரகுருபரர் குருபூஜை!


கடவுள் மேல் நம்பிக்கை வைத்தவர்கள், அதற்குரிய நற்பலனை நிச்சயம் அனுபவிப்பர் என்பதற்கு உதாரணமே குமரகுருபரரின் சரித்திரம்.
வற்றா நதியான தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டம் எனும் நகரில், சண்முகசிகாமணி கவிராயர் – சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியருக்கு, நீண்ட காலமாக குழந்தை இல்லை. அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று, வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றனர்; ஆனால், ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை.
“முருகா… குழந்தை இல்லை எனும் கொடுமையை விட, அவன் பேசவில்லை என்ற கொடுமை பெரிதல்லவா… நீ தான் அவனை பேச வைக்க வேண்டும்!’ என்று வேண்டினர். பலனேதும் இல்லாததால், நம்பிக்கையுடன் திருச்செந்தூர் சென்று, 41 நாட்கள் விரதம் இருப்பதென முடிவு செய்தனர். ஒருவேளை மட்டும் உப்பில்லாத உணவைச் சாப்பிட்டு, விரதம் அனுஷ்டித்தனர். நாட்கள் கடந்தன. இருந்தாலும், அவர்கள் நம்பிக்கையை விடவில்லை.
விரத காலம் முடிந்து விட்டாலும், “எங்கள் குழந்தை பேசும் வரை, இங்கிருந்து ஊருக்குச் செல்லமாட்டோம். நீ என்ன முடிவைத் தந்தாலும் சரி…’ என விரதத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக, 45வது நாள், அவர்கள் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்றனர். ஆண்டவனின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் ஏக்கத்தோடு, மாறி மாறி பார்த்தனர். கண்களில் கண்ணீர் வடிந்தது. அப்போது, குமரகுருபரன் அவர்களிடம் ஏதோ பேசியது போல் தோன்றியது. அடுத்த நிமிடமே, முருகனின் சிலையைப் பார்த்த குமரகுருபரன், மடை திறந்த வெள்ளம் போல் பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலே, “கந்தர் கலிவெண்பா’ எனப்பட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட பக்தர்கள், பரவசமடைந்தனர்; மகிழ்வுடன் ஊர் திரும்பினர்.
இதன்பின் குமரகுருபரன், பெற்றோருடன் அதிக நாள் தங்கவில்லை. இறைப்பணியே செய்வதென முடிவெடுத்து, மதுரை வந்தார். மீனாட்சிஅம்மனைப் புகழ்ந்து பாடினார். இது, “மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!’ எனப்பட்டது.
தன்னைப் பாடிய குமரகுருரபனின் புகழை நாடறியச் செய்ய முடிவெடுத்த மீனாட்சி, திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றி, “மதுரைக்கு என் மகன் குமரகுருபரன் வந்துள்ளான். அவன், என்னைப் பற்றி பாடிய பிள்ளைத் தமிழை, கோவில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்!’ என உத்தரவிட்டாள்.
குமரகுருபரரை வரவேற்று, அரங்கேற்ற ஏற்பாடுகளை செய்தார் நாயக்கர். அப்போது, கோவில் தலைமை அர்ச்சகரின் மகள் வடிவத்தில் வந்த மீனாட்சி, நாயக்கரின் மடியில் அமர்ந்து பாடல் கேட்டாள். அவரது கழுத்தில் இருந்த முத்துமாலையை உரிமையோடு கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்தாள். பின்னர், கருவறை பக்கம் சென்று, மறைந்து விட்டாள். வந்தது மீனாட்சி என்பதை அறிந்த மக்கள், அவளது தரிசனம் கிடைக்கச் செய்த குமரகுருபரரை வாழ்த்தினர்.
காசி சென்ற குமரகுருபரர், அங்குள்ள சுல்தானைச் சந்தித்தார். அவருக்கு இந்தி மொழி மட்டுமே தெரியுமென்பதால், அவருடன் பேசும் வல்லமையைப் பெற கலைவாணியை எண்ணி பாடினார்; அதுவே, “சகலகலாவல்லி மாலை’ எனப்பட்டது. பின், இந்தியில் சுல்தானுடன் பேசி, சைவ மடம் ஒன்று கட்ட இடம் கேட்டார்; சுல்தானும் இடம் கொடுத்தார். அது, “குமாரசுவாமி மடம்’ எனும் பெயரில், இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தெய்வ நம்பிக்கை, ஒருவரை வாழ்வில் பெரிதும் உயர்த்தும் என்பதற்கு, குமரகுருபரரின் வாழ்க்கை சிறந்த உதாரணம்.

%d bloggers like this: