நலம் சேர்க்கும் கிரிவலம்

கிரிவலம் என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலைதான். அங்கு, கிரிவலம் செல்லும்போது சில விதிமுறைகளை பின்பற்றினால் இறையருளை எளிதில் பெறலாம்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? பவுர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து கிரிவலம் செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத் தரும். இதேபோல், அமாவாசை அன்றும் கிரிவலம் செல்லலாம். அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டும் அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம். கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது சிறந்தது. அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். இந்த எலுமிச்சம்பழம் எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டது. கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களைத் தடுக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக, அமாவாசை, பவுர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து கிரிவலம் செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் செல்ல வேண்டாம். மேலும், திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். கிரிவலத்தின்போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம். கிரிவலம் வரும்போது வீண் அரட்டை அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும். கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம். பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் ‘பிறவியில்லா பெருவாழ்வு’ என்ற பேரானந்த நிலையை அடையலாம்.

%d bloggers like this: