சுயமாக கற்றுக்கொண்டால் தேவைகள் தெரியும்

ஒரு குழந்தை தனது தேவை என்ன என்பதை தானாக தெரிந்து கொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
ராஜாவுக்கு இரண்டு வயது. தினமும் காலையில் அம்மா அவனை குளிப்பாட்டுவாள். தானாக சோப்பு போட கற்றுக்கொடுத்தாள். குளித்து முடித்தததும், ட்ரவுசர் சட்டையை மாட்டி விடுவாள். எந்த ட்ரவுசர் எந்த சட்டை என்பதை சொல்லிக் கொடுத்து மாட்டி விடுவாள்.
கொஞ்சநாட்கள் கழித்து அவனாகவே தனக்கு உரிய சட்டை ட்ரவுசரை தேர்வு செய்ய ஆரம்பித்தான்.காலையில் எழுந்ததும் குளித்துவிட்டுத்தான் சாப்பிடுவது என்ற பழக்கம் அவனுக்குள் உருவானது. ஒரு நாள் கூட அவன் குளிப்பதற்கு சோம்பேறித் தனப்பட்டதை இல்லை.10 வயது ஆனபோது அவன் படிக்க வேண்டிய புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி பழக்கப்படுத்தினாள் அம்மா. புத்தகம் படிக்கும் பழக்கம் உருவாக ஆரம்பித்தது.

இப்படி ஒவ்வொரு வயதிலும் நாம் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருந்தால், அது அவர்களது தேவையாக மாறிவிடும்.
பிறகு, யாருடைய கட்டாயமும் இன்றி அவர்களது கடமையை செய்வார்கள். அவர்களது தேவையை அவர்கள் அறிவார்கள். அதை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள முயற்சிப்பார்கள்.தேவிக்கு வயது 9. அவளது அம்மாவுக்கு ஒரு நாள் திடீரென்று தலைவலி வந்தது. தலைவலி தைலத்தை எடுத்து கொடுக்குமாறு தேவியிடம் சொன்னாள். தேவி அலமாரியில் இருந்த தைலத்தை எடுத்து கொடுத்தாள்.
தைலத்தை நெற்றியில் தேய்த்து விடு என்று தேவியிடம் அம்மா சொன்னாள். எப்படி தேய்ப்பது என்று தேவி கேட்டாள். தைலம் பாட்டில் வைத்திருந்த சிறு அட்டை பெட்டியில் ஒரு துண்டுக்காகிதம் இருந்தது. அதை எடுத்து தேவியிடம் படிக்கச் சொன்னாள் அம்மா.

அந்த துண்டுக்காகிதத்தில் தைலத்தை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம்? ஜலதோஷம், தலைவலி, கால் வலி என்று எத்தனை நோய்களை அந்த தைலம் போக்கும் என்பதெல்லாம் விபரமாக எழுதி இருந்தது.அதற்கு பிறகு தேவி பெரிய பெண்ணானதும், செல்போன், கம்ப்யூட்டர், சிடி, பிளேயர், டி.வி. பெட்டி என எந்த பொருள் புதிதாக வீட்டிற்கு வாங்கினாலும், அந்த பொருட்களுடன் கொடுக்கும் குறிப்புகளை (கேட்லாக்) ஒரு வரி விடாமல் படித்து விடுவாள்.அந்த குறிப்புகளின்படி பொருட்களை இயக்குவாள். ஒவ்வொன்றிலும் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் உள்ளன. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் நமக்கு முக்கியம். அந்த ஆர்வத்தைத்தான் தேவியின் அம்மா அவளுக்கு 9 வயதில் வளர்த்தாள். அது வாழ்நாள் முழுவதும் தேவிக்கு உதவியாக இருந்தது.

தேவிக்கு இப்படி ஒர் ஆர்வத்தை வளர்த்ததற்குக் காரணம் இருந்தது. தேவியின் அம்மாவை அவர்களது அம்மா இப்படித்தான் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.அதே பழக்கத்தில் வளர்ந்த அம்மா தனது மகளையும் வளர்த்தாள். தேவியும் நாளைக்கு அவளது குழந்தையை இப்படித்தான் வளர்ப்பாள். எனவே, நீங்கள் உங்களது குழந்தைக்கு ஒன்றை கற்றுக்கொடுத்தால், ஒரு பரம்பரைக்கே அதை கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.குழந்தைகளுக்கு டிக்ஷனரி பார்க்க கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க எளிமையான ஒரு வழி. ராதாவின் அம்மா நிறைய கதைகள் படிப்பார். ஆங்கிலமும் அவருக்கு நன்றாக தெரியும். ராதா நான்காம் வகுப்பு படிக்கும்போது சில ஆங்கில வார்த்தைகளுக்கு அம்மாவிடம் அர்த்தம் கேட்பாள். ஆனால் நீயே டிக்ஷனரி பார்த்து தெரிந்துக்கொள் என்று அம்மா சொல்லிவிடுவாள்.

ஆரம்பத்தில் ராதாவுக்கு இது எரிச்சலாக இருந்தாலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தானே டிக்ஷனரி பார்க்க கற்றுக்கொண்டாள். ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் பொழுதும் ராதாவுக்கு அளவிட முடியாத ஆனந்தமாய் இருக்கும், யாருடைய உதவியும் இல்லாமல் நானே கண்டுபிடித்தது என்ற நினைப்பு அவளுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்தது, புதிய விஷயங்களை தன்னால் சுயமாக கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
புதிய விஷயங்களை தன்னால் சுயமாக கற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தை சின்ன வயதில் குழந்தைகளுக்கு உருவாக்குவது அவசியம். அவர்கள் பிற்காலத்தில் தங்களுக்குப் பொருத்தமான வேலை, சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்ய ஆந்த எண்ணம் உதவும்.

மூத்த குழந்தைகள் பொறுப்பானவர்கள்
வீட்டிற்கு மூத்த குழந்தைகள் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். இரண்டாவது மூன்றாவது குழந்தைகளைக் காட்டிலும் மூத்த குழந்தைகள் தங்களது வேலைகளை சுயமாக செய்ய சுலபமாக கற்றுக்கொள்வார்கள் என்பது பொதுவான விதி.
தம்பியை பார்த்துக்கொள் என்று பொறுப்பை அக்கா விடமோ அண்ணனிடமோ ஒப்படைப்பதை எத்தனையோ வீடுகளில் நம்மால் பார்க்க முடியும்.

9வயது அக்கா 4 வயது தம்பியை பொறுப்பாக பள்ளிக்கு அழைத்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். சின்ன வயதில் இருந்து மூத்தகுழந்தைகளிடம் இத்தகைய பொறுப்புகள் கொடுக்கப்படுவதால், அவர்கள் மற்ற குழந்தைகளை விட மிகவும் பொறுப்பு வாய்ந்தார்களாக வளர்கிறார்கள்.இதனால் படிப்பு, வேலை போன்ற ஒவ்வொன்றிலும் அவர்கள் அதிக கவனமுடையவர்களாக இருக்கிறார்கள். இதனால் இரண்டாவது மூன்றாவது குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களும் படிப்பார்கள்.
ஆனால், பொதுவாக மூத்த குழந்தைகளை காட்டிலும் அடுத்தடுத்த குழந்தைகள் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் சுயமாக தங்களது கடமைகளை செய்ய நமது கூடுதல் வழிகாட்டுதல் அவர்களுக்குத் தேவையாக இருக்கும்.

%d bloggers like this: