இளமையை பாதுகாக்கலாம்..!

இயற்கைக்கு எதிராக மனிதனால் அணை போட முடியாது. `வயது’ விஷயத்திலும் அப்படித்தான். வயதை மறைப்பதற்காக `பிளாஸ்டிக் சர்ஜரி’, `போட்டாக்ஸ்’ போன்ற தொடர் தொல்லை தரும் சிகிச்சைகளை மேற்கொள்வது புத்திசாலித்தனம் கிடையாது.

`அப்படியானால், வயதாவதை ஏற்றுக்கொள்ள மனதைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டுமா? இல்லை’ வயதாவதை `இயற்கை வழியிலேயே’ தள்ளி போடலாம்.

இளமைக்கான ஆலோசனை நிபுணர் தீபக் சதுர்வேதியும், உடல் தகுதி ஆலோசகர் திலீப்பும், வயதாவதை தள்ளி போட சில யோசனைகளைக் கூறுகிறார்கள்…

ஆரோக்கியமான உணவு

வயதாவதை எதிர்த்து போராட, நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு முதலில், எது ஆரோக்கியமான உணவு என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். `முழுத் தானிய’ உணவுகள் எப்போதும் உங்களுக்கு நன்மை பயக்கும். ஆரோக்கியமற்ற நடைமுறைகள் உங்களின் உடல்நலத்தை வெகுவாக பாதித்து, விரைவாக வயதான தோற்றத்தைத் தரும். எந்த ஒரு முதலீட்டையும் போல, ஆரோக்கியத்தில் செலுத்தப்படும் கவனமும் உரிய பலன் தரும்.

உணவுக் கட்டுபாடு

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பதற்கு உணவுக் கட்டுபாடு அவசியம். ஆனால் உடம்புக்குத் தேவையான கலோரி அளவை மட்டும் கணக்கிட்டு உண்ணுவது பெரும் தவறாகி விடும். சுற்றுபுறச் சூழலையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் கோடை காலத்தில் சாப்பிடும் உணவும், மற்ற பருவங்களில் சாப்பிடும் உணவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். உங்களின் வாழ்க்கை முறையும், செய்யும் வேலையும் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி முக்கியம்

வாரம் முன்று முறையாவது திறந்த வெளியிடங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள். `ஜிம்’முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது என்றால், வாரத்துக்கு நான்கு நாளாவது பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உடம்பின் வெவ்வேறு பகுதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். வயதான தோற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணம் மனஅழுத்தம். உடற்பயிற்சியானது உங்கள் உடம்பைக் கச்சிதமாக வைப்பதோடு மட்டுமின்றி, மனஅழுத்தத்தையும் தகர்க்கும்.

ஊட்டச்சத்துகள்

இயற்கை உணவுகளில் காணப்படும் அளவற்ற ஊட்டச்சத்துகள், இளமையை நீட்டிக்க உதவும். ஆனால் உணவுபொருட்களிலேயே அதிகமான வேதிபொருட்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தபடும் காலம் இது. எனவே நமக்குத் தேவையான வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஈ ஆகியவற்றை நாம் வேறு உணவு முலம் ஈடுசெய்ய வேண்டும். அதற்கு மீனும், எலுமிச்சை வகை பழங்களும் ஏற்றவை. முழுத் தானியங்களையும் மறந்துவிடாதீர்கள்.

நள்ளிரவு `பார்ட்டி’ கூடாது

பார்ட்டி கலாசாரம் தற்போது பரவி வருகிறது. பெரும்பாலும் பார்ட்டிகள் நள்ளிரவு தாண்டியும் நீள்கின்றன. நாம் இரவு நேர பிராணிகள் இல்லை, இரவில் பார்க்கும் ஆற்றலையும் இயற்கை நமக்குக் கொடுக்கவில்லை. இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு எதிராக போக வேண்டாம். சூரிய வெளிச்சத்துடன் இயைந்து போகும் வகையில்தான் நமது `உடல் கடிகாரம்’ அமைந்துள்ளது. இரவு நேரம் கடந்த பார்ட்டி பழக்கம் அல்லது இரவில் நெடுநேரம் விழித்திருப்பது நமது உடம்புக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வதாகும். நமது உடல் சுரப்பிகள், சூரியோதயத்துக்கு பின் ஓய்வெடுப்பதே இயற்கை. இரவில் கண் விழித்திருபதன் முலம், சுரப்பிகளை `ஓவர் டைம்’ பணிபுரிய நாம் நிர்பந்திக்கிறோம். அது, வயதாவதைத் துரிதபடுகிறது. எனவே இரவில் நல்லபிள்ளையாய் சீக்கிரமாகத் தூங்கி விடுங்கள்!

%d bloggers like this: